வணக்கம். நான் யாழன் ஆதி. நலமாக இருக்கின்றீர்களா? உங்களிடம் ஒரு ஆலோசனைக் கேட்க வேண்டும். நான் மிகவும் குறைவாக எழுதக் கூடியவனாக இருக்கின்றேன். அதிகமாக எழுத வேண்டும் என்னும் ஆவல் உள்ளது. அதற்கு உங்கள் ஆலோசனை தேவை
யாழன் ஆதி
http://yaazhanaathi.blogspot.com
அன்புள்ள யாழன் ஆதி,
முக்கியமான எல்லா எழுத்தாளர்களும் ஒரு காலகட்டத்தில் மிக அதிகமாக எழுதியவர்கள்தான். நிறைய எழுதுவது எழுத்தின் தொழில்நுட்பங்களைச் சாதாரணமாக ஆக்கி வெறும் கைப்பழக்கமாக ஆக்குகிறது. மனம் எழுந்து சென்றால்போதும் கலை கூடவே நிழலாகச் செல்லும் என்ற நிலை வருகிறது. அதுவே பெரிய கலைஞர்களின் இயல்பு. அவர்களுக்கு எழுத்து ஒரு பொருட்டல்ல, மனம் எழுவதே அவர்களின் தவமாக இருக்கும். ஆகவே நிறைய எழுதுவது அவசியம் என நான் நினைக்கிறேன்.
நிறைய எழுதுவதற்குக் காரணமாக அமையும் மனநிலை என்பது ஒன்றுதான். எழுத்தினூடாக எதைத் தேடுகிறோமோ அது சார்ந்த தீவிரமான ஈடுபாடு. அதைச்சுற்றியே மனம் சுழன்றுகொண்டிருக்கும் நிலை. ஒன்றில் இருந்து இன்னொன்றாகத் தாவி அந்த மையத்தை அறியவும் அடையவும் முயன்றபடியே இருக்கிறோம். அந்நிலையில் ஓய்வே இருப்பதில்லை. மனம் துழாவிக்கொண்டே இருக்கிறது. எழுத வேண்டிய கருக்கள் வந்தபடியே இருக்கின்றன. ஆகவே நிறைய எழுதுகிறோம்.
அந்தவகையான அடிப்படையான தேடல் என்ன என்பதை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் முக்கியமானது. எதை அறிய எதைச் சொல்லிவிட நினைக்கிறீர்கள்? ஒரு கதவை திறக்கும் வரை தட்டுவது போல? ஒரு குழியில் இருந்து பிறர் கேட்கும்வரை கத்துவது போல?
இதற்குமேல் நிறைய எழுதுவதற்கு தடையாக உள்ள சில மனத்தடைகளை கடந்தாகவேண்டும். அது நாமே நம்மை பயிற்றுவிப்பது மட்டுமே
நிறைய எழுதக்கூடாது என்ற மனநிலை சிற்றிதழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுந்தர ராமசாமி உருவாக்கினார். அவர் அதிகம் எழுதக்கூடியவரல்ல. மேலும் சிற்றிதழ்ச் சூழலில் இயல்பாகவே அதிகம் எழுதமுடியாது. பக்கங்கள் குறைவு.
உலக இலக்கியத்தின் பெரும்பாலும் எல்லா பெரும்படைப்பாளிகளும் எழுதிக்குவித்தவர்கள்தான். புனைவும் புனைவல்லாமலும். பாரதியும் புதுமைப்பித்தனும் கூட அவர்கள் எழுதிய குறுகிய கால அளவை வைத்துப் பார்த்தால் மிக அதிகமாக எழுதியவர்கள்தான்
ஆகவே அதிகமாக எழுதுவது இயல்பானது, தேவையானது என்ற மனநிலையை உருவாக்கிக்கொள்ளலே முதலில் தேவையானது. எழுத்துஎன்பது ஒரு சலிக்காத தேடல், அடிப்படை உயிராற்றலின் தொடர் வெளிப்பாடு என நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
இரண்டாவதாக எழுதுவதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்வது. இதை எழுத்துக்கு தடையாக உள்ள புறக்காரணிகளைக் களைவது என்றே எடுத்துக்கொள்ளலாம்.
என் அனுபவத்தில் முக்கியமானது எளிய, தீவிரமற்ற விஷயங்களில் நேரம் செலவிடாமலிருத்தல். சாதாரணமான அன்றாட அரட்டைகள், தொலைக்காட்சி பார்ப்பது, மேலோட்டமான விஷயங்களை அதிகமாக வாசிப்பது எதையுமே நான் செய்வதில்லை. அவை சாம்பல் மூட்டம் போல உள்ளே இருக்கும் நெருப்பை அணையச்செய்துவிடுகின்றன.
என்னைப்பொறுத்தவரை நான் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பேன். அல்லது பயணத்தில் இருப்பேன். சாதாரணமான, அன்றாடத்தனம் கொண்ட நாட்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.
கலையூக்கமும் அறிவுவீச்சும் கொண்ட நூல்களில் எப்போதும் ஈடுபட்டிருப்பது முக்கியம். அவை மேலும் மேலும் நம்மைப் படைக்கத் தூண்டுகின்றன. நாமிருக்கும் இடம் சிறியது, மேலே செல்ல வேண்டிய தூரம் அதிகம் என எப்போதும் அவை சொல்லிக்கொண்டிருக்கின்றன. எப்போதும் ஏதேனும் இரு முக்கியமான நூல்களில் இருந்துகொண்டிருப்பது கடந்த இருபத்தைந்து வருடங்களாக என்னுடைய வழக்கம்.
அதற்கு மறுபக்கமாக ஒருபோதும் சில்லறை விவாதங்களை வாசிக்காமல், கவனிக்காமல் இருப்பதும் என் வழக்கம் . எழுதவந்த காலம் முதல் நான் எப்போதும் பலரால் வசைபாடப்பட்டுக்கொண்டே இருப்பவன். ஏதேனும் இலக்கிய அரசியலில் பேசப்பட்டுக்கொண்டே இருப்பவன் .ஆனால் ஆரம்பகாலத்திற்குப் பிறகு அவற்றில் மிகப்பெரும்பாலான கட்டுரைகளை நான் வாசித்ததே இல்லை- இன்றுவரை. பலசமயம் என் தரப்பை திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு முற்றாக ஒதுங்கி விடுவேன். இருபதாண்டுகளில் நான் எழுதியவற்றை கவனித்தாலே இது தெரியும். என் தரப்பில் என்குரல் மட்டுமே இருக்கும்.
இதை எல்லா இளைய எழுத்தாளர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். ஒருபோதும் வம்புகளை வாசிக்காதீர்கள். வம்புகளில் தலையிட்டு ஏதேனும் சொல்ல நேர்ந்தால்கூட உங்கள் தரப்பை மட்டும் சொல்லிவிட்டு விலகிவிடுங்கள். அந்தச் சில்லறை விவாதங்கள் அன்று நிகழ்ந்து மறுநாள் மறையக்கூடியவை. அந்தந்த நாட்களுக்கு அப்பால் எந்த முக்கியத்துவமும் இல்லாத எளிய மனிதர்களுக்கானவை. எழுத்தாளர்களுக்கானவை அல்ல.
அந்த வகையான வம்புகளில் மனம் ஈடுபடுவது இலக்கிய ஊக்கத்தை பெரிதும் இல்லாமலாக்கும். நம்மை அறியாமல் நம் நாட்களை நம்மிடமிருந்து பறித்துவிடும். அப்படி ஏதேனும் வம்புகளில் மனம் சிக்கினால் உடனே அவற்றை உள்ளே கொண்டு வரும் எல்லா வழிகளையும் மூடிவிடுங்கள். சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள், இணையப்பக்கங்கள், நண்பர்கள் எல்லாவற்றையும் முற்றாகத் தவிருங்கள். தீவிரமான எழுத்தில் வாசிப்பில் மூழ்குங்கள்.
இந்த வம்புகளுக்கு கொஞ்சமேனும் செவிகொடுத்திருந்தால் நான் இத்தனை தீவிரமாக எழுதியிருக்க முடியாதென்பதை நீங்களே உணர முடியும். நல்ல எழுத்தாளன் வாழும் காலமும் வெளியும் வேறு. கலாப்ரியா சொன்னதுபோல ‘என் நதியும் உங்கள் நதியும் மட்டும்தான் ஒன்று’ . அந்த அபாரமான தன்னுணர்ச்சியே எழுத்தாளனை எழுதச்செய்யும்.
எழுதுவதற்குரிய புறச்சூழல்களில் முக்கியமானது லௌகீகமான செயல்களை அதிகமாக வைத்துக்கொள்ளாமலிருப்பது. வாழ்க்கைக்கு அவசியமான சிலவற்றை செய்தாகவேண்டும். நான்கூட நெடுநாள் அரசூழியன். தொழிற்சங்க நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால் அவற்றை மிகுந்த எல்லைக்குள் வைத்திருந்தேன். அவற்றிற்கு முடிந்தவரை குறைவாகவே நேரத்தையும் கவனத்தையும் கொடுத்தேன்.
நான் வேலைக்குச்சேரும்போதே அடிபப்டைகுமாஸ்தா என்ற என் பதவிக்குமேலே செல்வதில்லை என்று முடிவு எடுத்திருந்தேன். அதை என் மனைவியிடம் சொன்னபின்னரே அவளை மணந்துகொண்டேன். என் துறையில் நவீனமயமாக்கம் வந்து குமாஸ்தாக்களே தேவையில்லை என்றாகி என் தோழர்கள் அனைவருமே அதிகாரிகள் ஆனபின்னரும் நான் அந்த எளிய வேலையிலேயே இருந்தேன். முடிந்தவரை குறைவாக லௌகீக விஷயங்களுக்கு நேரம் செலவிட்டு முடிந்தவரை அதிகமாக இலக்கியத்தில் ஈடுபடுவதையே செய்து வந்தேன். இப்போது திரைப்படத்துறைக்கு வந்தபின் முன்னைவிடவும் மிகமிக குறைவான நேரமே லௌகீக விஷயங்களுக்கு செலவிடுகிறேன்
வீடு கட்டுதல், சீட்டு போடுதல், உறவினர்களுடனான பிரச்சினைகள் போல லௌகீகமான எதையும் நான் செய்ததில்லை. என் மனைவியும் அண்ணாவும்தான் அவற்றை எனக்காகச் செய்தார்கள். இந்த சுதந்திரம் எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது
கடைசியாக அன்றாட வாழ்க்கை. எழுதுவதற்கு வாழ்க்கை அதற்கேற்ப அமைய வேண்டியிருக்கிறது. இதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். காகிதத்தில் பென்சிலால் கவிதை எழுதுபவருக்கு பேனாவால் எழுதினால் கவிதை வராது. ஏன் என்ற கேள்விக்கு அர்த்தமில்லை. வராது, அவ்வளவுதான்.
ஆக, எழுத்து வரக்கூடிய எல்லா புறச்சூழல்களையும் அமைத்துக்கொள்ளுதல் முக்கியமானது. இடம், நேரம், கருவிகள் சூழல் என. அவற்றை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாமலிருப்பது. என்னைப்பொறுத்தவரை எனக்கான நேரத்தில் எனக்கான இடத்தில் அமர்ந்துகொண்டாலே போதும், எழுத வரும்.
படைப்பூக்கம் சம்பந்தமான சில பிழையான எண்ணங்களும் எழுத்தின் அளவை பாதிக்கின்றன. ஒரு கதை மனதில் முழுக்க உருவானபின்னரே எழுதவேண்டும் என நினைப்பவர்கள் உண்டு. அவர்கள் மாதக்கணக்காக அக்கதையை போட்டு உருட்டிக்கொண்டிருப்பார்கள். அப்படி அல்ல. ஒரு கருவுக்கு எழுதுவதற்கான ஒரு தொடக்கம் அமைந்தாலே போதும், எழுத ஆரம்பிக்கலாம். சிறுகதைக்கு என்றால் முடிவு கண்ணுக்கு தெளிவில்லாமலாவது தெரிந்தால் போதும். கவிதைக்கு நல்ல தொடக்கம் போதும். நாவலுக்கு மையப்படிமம் தோன்றினால் போதும்.
எழுதுவது ஒரு தீவிர நிலை. அந்நிலையில் இலக்கிய ஆக்கம் தானாகவே விரிந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளும். அந்நிலைக்குச் செல்லாமல் அதை வெறுமே யோசித்துக்கொண்டே இருந்தால் அது முளைக்காமல் கூழாங்கல்லாகவே கிடக்கும். நாட்கள் வீணாகக் கழியும் மனதில் கிடக்கும் எல்லா கருக்களையும் எழுதிவிடுங்கள். கருக்களை எழுதி முடித்து மனம் காலியாவதில்லை. ஒரு நல்ல கதை காய்த்து நிறைய புதிய கதைகளுக்கான விதைகளை மனதில் பரப்பி வைக்கும்.
படைப்பூக்கத்துக்கு பரவலான உலகக் கவனிப்பு உதவும். பயணங்கள் என அதை நான் சொல்வேன். பயணங்களில் எது நமக்குள் வந்து விழும் என்றே சொல்லமுடியாது. அதேபோல பலதுறைகளைச் சேர்ந்த முக்கியமானவர்களுடனான உறவுகள். அவர்களின் பேச்சு நம்மை பலசமயம் சொடுக்கி எழுப்பும்.
அதேபோல பலதுறை நூல்கள். சோதிடமோ வரலாறோ நாட்டாரியலோ. சிறு தகவல்கள்கூட நம்மை எங்கோ தூண்டி எழுதச்செய்ய முடியும்.
கடைசியாக ஒன்று. பெரிய சவால்களை நாமே உருவாக்கிக்கொள்ளுதல் முக்கியமானது. நான் உங்கள் கவிதைகளை கவனித்து வருகிறேன். இன்றைய புதுக்கவிதை ஒரு சிக்கலான பொறி. ஓர் அனுபவத்தை எளிமையான சில சொற்களால் சொல்லிவிட அது நம்மைத் தூண்டுகிறது. பலசமயம் அனுபவத்தை அப்படியே சொல்லி வைப்பதில் அது முடிகிறது. அந்த அனுபவம் முளைத்து வளர்ந்து உணர்ச்சிகளும் கவித்துவமும் தரிசனமும் கூடி, ஒரு கலைப்படைப்பாக ஆகி வாசகனுக்கு அவன் அனுபவமாக ஆகாமல் நின்று விடுகிறது.
அத்துடன் புதுக்கவிதைக்கு ஒரு சிறிய வடிவ இலக்கணம் வேறு வந்துவிட்டது. ஓர் அனுபவத்தில் ஒரு சிறிய முரண்பாட்டை கண்டுவிட்டால் போதும். அந்த அனுபவத்தை சில வரிகளில் சொல்லி அந்த முரண்பாட்டை கடைசிவரிகளாக ஆக்கி நாம் புதுக்கவிதையாக ஆக்கிவிடுகிறோம். இந்த எளிமையான செயல் நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது, படைத்துவிட்டோம் என்று. ஆனால் வாசகனை அது உள்ளே இழுப்பதில்லை. இன்றைய புதுக்கவிதைகளில் அவ்வப்போது பல அரிய அனுபவங்கள் பளிச்சிடுகின்றன. அவை உதிரி மின்னல்களாக நின்று விடுகின்றன
பெரிய சவால்களை, ஒட்டுமொத்த வாழ்க்கையைச் சொல்லிவிட எத்தனிக்கும் நாவல்களை, தீவிரமான அக அனுபவங்களாக ஆகும் சிறுகதைகளை, இலக்காக்குங்கள். அது நிறைய எழுதச்செய்யும்
நிறைய எழுதுங்கள். காலம் காத்திருக்கிறது
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் ஜூலை 2011