அன்புள்ள ஜெ,
சொல்வனம் இதழில் வெளியாகிய சுசித்ராவின் புதிய சிறுகதையான ‘ஒளி’ படித்தேன். சமீபத்தில் வெளியாகிய சிறுகதைகளில் நல்லதொரு சிறுகதை என்று நினைக்கிறேன்.
ஃபிலோமினாவில் இருக்கும் ஒருவித சீர்மையின்மையை ஆரன் வரைந்து கொடுக்கும் ஓவியம் ஊடாக களையவைக்கும் தருணம் அபாரமானது. சட்டென்று அவள் அதைக் கண்டுகொள்வது, அவளுக்குள் உள்ளிருக்கும் ஒளியை அவளுக்கே காட்டிக்கொடுப்பது என்று மிகக்கவித்துவமாக கதையில் நிகழ்ந்துள்ளது. ஓவியங்களுக்கான ஒளியை வரைபவர் எங்கிருந்தும் எடுத்துக் கொள்ளலாம்; ஆரன் வறண்ட நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறான். ஆரன் வரைந்த ஓவியங்கள் ஃபிலோமினா பார்த்த பூமியை விட இன்னும் அழகாக இருக்கின்றன. அவன் கண்டடைந்து உருவாக்கிக் கொடுத்த ஒளி.
ஃபிலோமினாவின் அழகின்மையை அவளுக்குள் இருக்கும் ஒளியூடாகக் களைந்து கண்டடைய முடியும் என்பது, ஓவியர் ஆரன் ஊடாக உணர்த்திச் சொல்லப்பட்டு இருப்பது இக்கதையின் முக்கிய அழகியல் வெற்றி என்று நினைக்கிறேன்.
கதையிலிருக்கும் புனைவு மொழியும், காட்சி சித்தரிப்புகளும் நல்ல வளத்துடன் கூடியுள்ளது.
சுசித்ராவுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்
ஒளி சுசித்ரா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
அ.முத்துலிங்கம் எழுதிய ‘வேதாகமத்தின் முதல் பாவம் ‘ என்ற சிறுகதையை விகடனில் வாசித்தேன். அ.முத்துலிங்கம் அவர்களுக்கே உரிய, அவரால் மட்டுமே சாத்தியமான அழகிய சிறுகதை . அதில் ஒரு வர்ணனை ‘கதவை சாத்தி அடித்தது போல் முகம் ‘. இதை என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. எப்படி இருக்கும் அந்த முகம். இதைப் போல் நீங்கள் படித்த வித்தியாசமான, திகைக்க வைக்கும் வர்ணனைப் பற்றி சொல்லுங்களேன் .
நன்றி
ஆ .கந்தசாமி .
புனே