ஆரோக்கிய நிகேதனத்தின் கண்ணீர்

ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம்
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
ஆரோக்கியநிகேதனம்

அன்பின் ஜெ,

 

நலம்தானே?

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் விஜயா பதிப்பகத்தின் சிறிய கடை ஒன்றிருக்கும். ஒவ்வொரு முறையும் மல்லிகா வீட்டிற்குப் (பல்லடம் லட்சுமி மில்ஸ்) போகும்போதும் வரும்போதும் அங்குதான் ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கி வருவது. அந்த முறை பாம்பேயிலிருந்து வந்தது, மல்லிகாவின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனதால். இராமநாதபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, அருகில் கவனித்துக்கொள்ள மல்லிகாவை விட்டுவிட்டு தனியே பாம்பே திரும்ப வேண்டியிருந்தது. மனது டாக்டரின் வார்த்தைகளையே அசைபோட்டு (மல்லிகாவிடம் சொல்லவில்லை) பாரமாகியிருந்தது. இனம் புரியாத பயம் ஒன்றும் அவ்வப்போது எட்டிப்பார்த்து ஏதேதோ எதிர்மறை எண்ணங்களை சங்கிலித் தொடராய் பின்னிக் கொண்டிருந்தது. பஸ் விட்டிறங்கி புத்தகக் கடையில் நுழைந்து, வரிசையாய் பார்த்துக்கொண்டிருந்தபோது ஜெ-வின் “கண்ணீரைப் பின் தொடர்தல்” கண்ணில் பட்டது. அப்போதிருந்த மனநிலைக்கு அந்தத் தலைப்பே சட்டென்று மனதில் நுழைந்து அலைகள் உண்டாக்கியது. வாங்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறி, ரயில் நிலையம் வந்து இரண்டாவது ப்ளாட்ஃபார்மில் குர்லா-விற்காக காத்திருந்தபோது, வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்தில் கண்ட மல்லிகாவின் நீர் நிரம்பிய கண்கள் ஞாபகம் வந்து மனது தவித்தது. புத்தகத்தை நடுவில் திறந்தேன். அங்குதான் “ஆரோக்ய நிகேதனம்” அறிமுகமாயிற்று எனக்கு.

 

****

 

வெகு நாட்களாகத் தேடி கிடைக்காமல், முகநூலில் யதேச்சையாய் பரிசல் பதிவைப் பார்த்து, ஆர்டர் செய்து,

​மே-யில் வாங்கி இங்கு கொண்டுவந்தேன்​

. முகப்பே கதைக்குப் பொருத்தமாயிருந்தது; முன்னட்டை மேல் வலது மூலையில் தொங்கும் இலைகள் (துளசி?); கீழே நவீன மருத்துவத்தின் மாத்திரைகளும், கேப்ஸ்யூல்களும். நாவலின் முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1972 – நான் பிறந்த வருடம். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் கைகளில் வந்துசேர்ந்திருக்கும் அந்த கிளாஸ்ஸிக்கை, ஆவலுடன் புரட்டினேன். 2015-ல் இரண்டாம் பதிப்பு

​.​

வெளியிட்ட சாகித்ய அகாடமிக்கு நன்றி.

 

****

 

ஜீவன் மஷாய், கவிராஜர் பரம்பரையில் வந்த வைத்தியர். வங்காளத்தின் நவக்ராமத்தில் ”ஆரோக்ய நிகேதனம்”​ வைத்தியசாலை நடத்துகிறார். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. நாடி பார்த்து நோய்களை அறிவதிலும், அது எத்தனை நாட்களில் நோயாளிக்கு அடங்கும் சமிஞ்ஞை காண்பிக்கிறது அல்லது நோயிலிருந்து விடுதலை பெறும் கணிப்பு தெரிகிறதா என்பதை அறிவதிலும் நிபுணர். கொஞ்சம் கொஞ்சமாய் நவீன மருத்துவம் அக்காலகட்டத்தில் உள் நுழைகிறது. பாரம்பரிய மருத்துவத்திற்கும், நவீன மருத்துவத்திற்கும் இடையிலான உரசல்களாலும், ”அடிப்படை” வித்தியாச முரண்களாலும், ஜீவன் மஷாயின் நினைவோடையில் விரிகிறது நாவல்.

 

ஜீவனின் தந்தையும் மிகப்பெரும் கவிராஜர். ஆனால் நவீன மருத்துவம் அப்போது பிரபலமாகத் தொடங்கியிருந்ததால், அதைக் கற்க ஜீவனை கல்லூரியில் சேர்க்கிறார். கல்லூரியில் வகுப்புத் தோழன் பங்கிமின் தங்கை மஞ்சரியை முதல்முறை பார்த்ததுமே காதல் வயப்படுகிறார் ஜீவன் (#பெண்ணின் பெயர் மஞ்சரி. மஞ்சரி நல்ல ஆரோக்கியம் வாய்ந்தவள். இன்று காலேஜில் படிக்கும் நொய்ந்த பதினாறாட்டை மகளிரை விட ஆரோக்யத்திலும் உடல் உறுதியிலும் சிறந்து விளங்கினாள் பன்னிரெண்டு வயதான மஞ்சரி#). அது அவர் வாழ்க்கையையே திசைதிருப்பி விடுகிறது. அவர் மஞ்சரியை முதன்முதலில் பார்க்கும் காட்சியை தாராஷங்கரின் வரிகளில் படிக்கும்போது பெரும்புன்னகை எழுந்தது.

 

#மஞ்சரி அப்போது முற்றத்தில் தன் சிறிய தம்பியுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். ஜீவனை அழைத்துக்கொண்டு பங்கிம் உள்ளே நுழைந்தபோது மஞ்சரி தட்டாமலை ஆடிக்கொண்டே யார்மீதோ விழ வருகையில் அந்தச் சுழற்சி வேகத்தால் தன் அண்ணனைத் தாக்க எண்ணி ஜீவனின் மார்புக்கு நேராக இடித்தாள். தலையை அந்த அசைவில் அவளே கீழே சாய்ந்துபோய்க் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள். ஜீவன் திடுக்குற்று நின்றார். அண்ணன் என்று நினைத்து யார்மீதோ மோதிவிட்ட தன் தவறு புரிந்ததும் மஞ்சரி சிரிப்பை நிறுத்தி வெட்கம் மேலிட முகம் நிமிராமலே தரையிலிருந்து எழுந்து உட்புறம் ஓட்டம் பிடித்தாள். உள்ளே அவள் மறுபடி சிரிப்பது கேட்டது. ஜீவன் பிரமை பிடித்ததுபோல் நின்றார்.

 

அந்தக்காலத்தில் இதுவே போதுமே!#

 

உடன்படிக்கும் காந்தி ஜமீந்தாரின் பிள்ளை பூபியும் மஞ்சரியை காதலிப்பதால், போட்டி உருவாகிறது. தன்னை மஞ்சரியின் முன்னால் நிரூபிக்க பூபிக்கு போட்டியாக ஆடம்பரமாய் செலவு செய்கிறார். ஜீவனின் தந்தை அவ்வூரின் ஜமீன் நிலத்தை கொஞ்சம் வாங்குகிறார். மஞ்சரி பூபியை விரும்புவது தெரியாமல், அப்பாவியாய் மஞ்சரியை கவர்வதற்கான ஜீவனின் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு அசந்தர்ப்பமான சூழலில் பூபியை அவர் தாக்க நேர்கிறது; பூபியை தாக்கிவிட்டு பயத்தில் கல்லூரியை விட்டு வீட்டுக்கு வந்து விடுகிறார். ஜீவனின் தந்தை, ஜீவனிடம் இனிமேல் கல்லூரிக்குப் போகவேண்டாமென்றும் தன்னிடமே பரம்பரை வைத்தியத்தைக் கற்றுக்கொள்ளுமாறும் சொல்லிவிடுகிறார். மஞ்சரியின் தந்தை, மஞ்சரிக்கு ஜீவனைத் திருமணம் முடிக்க முயலும்போது, மஞ்சரி, தந்தைக்குத் தெரியாமல், அம்மாவின் உதவியோடு, பூபியைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

 

மஞ்சரியை திருமணம் செய்யும் கனவிலிருந்த ஜீவன் உடைந்துபோகிறார். அவர் கவனம் தந்தையிடம் பரம்பரை வைத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் திரும்புகிறது. அவருக்கு மஞ்சரியுடன் மணம் குறித்திருந்த நாளில், ஆத்தர் அவருக்கு மனைவியாகிறாள். ஆத்தருக்கு, மஞ்சரியைப் பற்றியும் ஜீவனின் காதலைப் பற்றியும் தெரியும்; அதனால் ஜீவனிடமிருந்து தனக்கு என்றைக்கும் தூய்மையான அன்பு கிடைக்கப்போவதில்லை என்று அவளாகவே முடிவுசெய்து கொள்கிறாள். அவளின் உரத்த குரலையும், ஆதங்க சுடுசொற்களையும் ஒவ்வொரு முறையும் நிதானத்துடனும், மௌனத்துடனுமே கடக்கிறார் ஜீவன்.

 

ஆத்தர் ஒருசமயம் சண்டையின்போது, “சிரிக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன காண்டாமிருகத்தின் தோலா உடம்பில்?” என்கிறாள். ஜீவன் சிரிப்பதைப் பார்த்து கோபம் அதிகமாகியது அவளுக்கு. ஜீவன் சிரித்தவாறு “அதைத் தவிர என்ன செய்வது நான்? அழவேண்டுமா?” என்கிறார். “அழவேண்டுமா?” என்றதும் ஆத்தருக்கு கோபாக்னி பற்றிக்கொண்டது. “அழவேண்டுமா? நீயா? உன் கண்ணில் பிரம்மா நீரே வைக்கவில்லயே? எப்படி அழுகை வரும்?” என்கிறாள். ஜீவன் “நிறுத்து ஆத்தர்! தயவு செய்து நிறுத்து! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என்னைச் சற்று நிம்மதியாக இருக்கவிடு” என்கிறார். நாண் அறுந்த வில்லென துள்ளியெழுந்து “இது அநியாயம்! எனக்கு இந்த வீட்டில் பேசவோ, எது செய்யவோ உரிமை ஏது?; அப்பா, அம்மாவை பறிகொடுத்து என் மாமா வீட்டில் வயிறு வளர்த்தேன். இரக்கம் கொண்டு பணம் வாங்காமல் உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள் – வேலைக்காரியாய் உழைப்பதற்கு. அந்த உரிமையைத் தவிர எதைக் கண்டேன்?” ஆங்காரத்தில் அவளுக்கு கண்ணீர் வருகிறது. (படிக்கும்போது நினைத்துக்கொண்டேன் இந்த அறுபது வருடங்களில் இந்த காட்சியில் ஏதும் மாற்றமிருக்குமா என!)

 

ஆத்தரைச் சொல்லிக் குற்றமில்லை என்று நினைக்கிறது அவர் மனம். ஆத்தரை, நகைகளால் அலங்கரித்து ஒருமுறையேனும், மஞ்சரியும் பூபியும் வசிக்குமிடத்திற்குப் போய், அவர்களிடம் தான் எவ்வளவு சந்தோஷமாய் ஓர் உயர் வாழ்க்கை வாழ்வதாய் காட்டிவிட்டு வரவேண்டுமென்று நினைத்துக்கொள்கிறார். கடைசிவரை அது அவரால் முடியாமல்தான் போகிறது.

 

காலம் உருண்டோடுகிறது. ஆத்தருக்கும், அவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. “ஆரோக்ய நிகேதனம்” நன்றாகச் செயல்படுகிறது. ஜீவன் பஞ்சாயத்துத் தலைவராகவும் ஆகிறார். பிள்ளைகள் வளர்கிறார்கள். மகன் வளர்ந்து இளவயதை தொட்டவுடன், தவறான சேர்க்கைகளால் நோயுற்று படுக்கையில் விழுகிறான். அவன் நாடியைப் பார்க்கும் ஜீவன் அவன் முடிவு நெருங்கி விட்டதென்றும், மனதை தைரியப்படுத்திக் கொள்ளுமாறும் ஆத்தருக்குச் சொல்கிறார். ஆத்தர் அலறி அவரைத் திட்டுகிறாள் “நீரெல்லாம் வைத்தியனா” என்று. ஜீவன் கணித்தது போலவே அந்த அகால வயதில் வனவிஹாரி மரணிக்கிறான்.

 

****

 

நவீன மருத்துவமனையில், டாக்டர்கள் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். இளவயது ப்ரத்யோத் டாக்டர், மனைவி மஞ்சுளாவுடன் அங்கு பணிபுரிய வருகிறார். மஞ்சுளா சைக்கிள் ஓட்டுவதையும், ப்ர்த்யோத் டாக்டருடன் வெகு சகஜமாய் இணைந்து பேசிச் சிரித்து விளையாடுவதையும் அக்கிராமம் வியப்போடு பார்க்கிறது.

 

ப்ரத்யோத்திற்கு ஆரம்பம் முதலே முந்தைய தலைமுறை ஜீவன் மஷாயின், வைத்திய முறைகள் பிடிப்பதில்லை. குறிப்பாய் ஜீவன் மஷாய் நோயாளிகளின் நாடி பார்த்து அவர்கள் முடிவு நெருங்கினால் வெளிப்படையாய் அவர்களிடமே சொல்லிவிடுவது. இது விஷயமாய் அவர், ஜீவன் மஷாயுடன் மறுபடியும் மறுபடியும் முரண்பட்டும் உரசிக் கொண்டுமேயிருக்கிறார். ஜீவன் மஷாய் நாடி பார்த்து நாள் குறித்த நோயாளிகளை, தன்னால் குணப்படுத்த முடியுமென்று சவால் விட்டு பெரும் முயற்சிகள் எடுக்கிறார்.

 

நாவல் முழுதும் நோயாளிகளின் நாடி பார்த்துக்கொண்டேயிருக்கிறார் ஜீவன். எத்தனை விதமான குணாதிசயங்கள் கொண்ட நோயாளிகள்!

 

உணவிற்கு அடிமையாகி, உணவினாலேயே தன் மரணத்தை தேடிக்கொண்ட தாந்து. மூன்றாம் மனைவியாக ஃப்ரானை மணமுடித்து, தனக்கு நோயிருப்பதாய் கற்பனை செய்துகொண்டு வாழ்வைத் தள்ளி, கடைசியில் விஷம் குடிக்கும் பீபீ. வேலை வேலை என்று ஓடி ஓடி, அந்த வேலையினாலேயே நோயுற்று இறக்கும் ரத்தன் பாபுவின் மகன் விபின். படகோட்டும் ஏழை பிராமணன் ரானா; கட்டுமஸ்தாக இருக்கும் ரானா, கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம் நடந்தபோது குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாழாக்கப்பட்டு, ஒரு முஸ்லிமிற்கு விற்கப்பட்ட இந்து பெண்ணைக் காப்பாற்றி அடைக்கலம் தருகிறான்; அவளுக்கு ரோகமிருப்பது அவளுக்கும் தெரியவில்லை; அவளிடமிருந்து அந்நோய் அவனுக்கும் வருகிறது. அவளையே திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து, அந்நோயினாலேயே உருக்குலைந்து இறக்கிறான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 

தனது வயது அதிகரிக்க அதிகரிக்க, தனக்குத்தானே நாடி பார்த்துக் கொள்கிறார் ஜீவன், தனக்கு முடிவு நெருங்குகிறதா என்று. நவீன மருத்துவத்தின் அதிசயங்கள் கண்டு வியக்கிறார். பெனிசிலினும், ஸ்ட்ரெப்டோமைஸினும், குளோரோமைஸிடினும், நரம்பு மூலம் க்ளுகோஸ் செலுத்தும் முறையும், எக்ஸ்ரேயும் அப்போதுதான் அறிமுகமாகிறது. புதிதாய் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்தகங்கள் முளைக்கின்றன. ப்ரத்யோத்தும் நாட்கள் செல்லச் செல்ல ஜீவன் மஷாயையும், அவரின் மருத்துவ முறையையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்.

 

ஜீவன் மஷாய் முதுமைப் பிராயத்தில் மஞ்சரியை மறுபடியும் சந்திக்கிறார், ஒரு எதிர்பாரா தருணத்தில், ப்ரத்யோத்தின் வீட்டில். மஞ்சரியின் பேத்திதான் ப்ரத்யோத்தின் மனைவி மஞ்சுளா. அச்சந்திப்பை மிகவும் நாடகீயமாக்கவில்லை தாராஷங்கர். மஞ்சரி வயதின் முதுமையில் நோயினால் நடமாட்டம் அற்று படுக்கையில் இருக்கிறாள். பேச்சு மட்டும் வாய் ஓயாமல் பேசுகிறாள். அவள் நோய்கள் கணவன் பூபியினால் அவளுக்கு வந்தவை.

 

#மஞ்சரியின் முன்னால் மஷாய் சில நிமிடம் சிலையென நின்றார். அவருடைய நெற்றியில் வரிசையாகக் கோடுகள் தோன்றின. ஜேபியிலிருந்து தம் மூக்குக் கண்னாடியை வெளியே எடுத்துக் கண்ணில் அணிந்துகொண்டார். நன்றாகப் பார்த்தார். அவர் விரும்பியது கிடைக்கவில்லை. அதன் ஒருதுளி கூட அவளிடத்தில் இல்லை#

 

மஞ்சரி அவரை தான் எப்போது நிம்மதியாய் கண்ணை மூடுவேன் என்று நாடி பார்த்துச் சொல்லுமாறு கேட்கிறாள். ஜீவன் அவளுக்கும் நாடி பார்க்கிறார். அவரின் கணிப்பு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐந்தாறு மாதங்கள் என்கிறது. அவர் சொன்னதுபோலவே ஐந்து மாதங்களில் மஞ்சரி இறக்கிறாள். மஞ்சரியின் இறப்பு செய்தியை ப்ரத்யோத் ஜீவன் மஷாயிடம் சொல்கிறார். அச்செய்தி ஜீவன் மஷாயுக்குள் மிகு சலனம் எதுவும் உண்டாக்குவதில்லை.

 

இறுதியில் ஜீவனும், ப்ரத்யோத்தும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நண்பர்களாகிறார்கள். ஜீவனின் முதல் இதய அடைப்பிற்கு ப்ரத்யோத்தே மருத்துவம் பார்க்கிறார். இரண்டாம் முறை நெஞ்சு அடைக்கும்பொழுது, மரணத்தைப் புரிந்துகொள்ள முயன்றவாரே, கண்களை மூடி கவனித்துக்கொண்டே உயிர்துறக்கிறார் ஜீவன் மஷாய்.

 

****

 

“ஆரோக்கிய நிகேதனம்” முதல் இருபது முப்பது பக்கங்களுக்குள்ளேயே உள்ளிழுத்துக்கொண்டது. நம்மேல் கிளாஸ்ஸிக்குகளுக்கேயுண்டான பேரன்பு அது. இலக்கியம் எனும் பிரமாண்டத்தின்/விஸ்வரூபத்தின் முன், மனதில் பொங்கிப் பிரவகிக்கும் அன்புடன் பேச்சிழந்து நி

​ன்றேன்​

. எங்கிருக்கிறீர்கள் தாராஷங்கர்?; நீங்கள் இறந்தபின் ஒரு வருடம் கழித்துத்தான் நான் பிறந்திருக்கிறேன். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழிந்து என் கைகளில் இருக்கிறீர்கள். கரம் கூப்பிய என் வணக்கங்களையும், அன்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 

முழு வாழ்வையும் சொல்லிச் செல்லும் செவ்வியல் இலக்கியப் புனைவுகள் எல்லாமே மனதை என்னவோ செய்துவிடுகின்றன. மனதை அமைதிக்குள் அல்லது நிதானத்திற்குள் தள்ளி (சலனப்படுத்தி?), வாழ்வு பற்றிய/வாழ்வின் அர்த்தம் (வாழ்விற்கு அர்த்தம் என்று ஏதாவது உண்டா?) பற்றிய வினாக்களை உண்டாக்கி, ஏதோ ஒரு வெற்றிடத்தை உள்ளே உணரச்செய்து இனம்புரியாத கவலையை(?) உண்டாக்குகின்றன. மொத்த வாழ்வையும் பார்க்கும்போது இவ்வாழ்வின் நிரந்தரமின்மையும், குமிழ்களின் ஆட்டங்களும், சந்தோஷங்களும், கவலைகளும், இலட்சியங்களும், முழுமையை பார்க்க முடியா அதன் இயல்புகளும் கேள்விகளை அடுக்கடுக்காக கிளப்பியவண்ணமே இருக்கின்றன.

 

ஆரோக்ய நிகேதனத்தில், இளம் ஜீவன் அவர் தந்தையிடம், தங்கள் பரம்பரை வைத்திய முறையைக் கற்றுக்கொள்ளும் நாட்களில், அவர் தந்தை அவருக்குச் செய்யும் உபதேசங்கள் அனைத்தும், நவீன மருத்துவத்திற்கும் அதற்குமான அடிப்படை வித்தியாசங்களை மிகத் தெளிவாய் புரிந்துகொள்ள உதவுகின்றன. இன்று நாமும்தான் பார்க்கிறோமே?.

 

ஜீவன் மரணத்தை வாழ்வினின்று பிரித்துப் பார்ப்பதில்லை; அதை வாழ்வெனும் முழுமைக்குள் கொண்டுவருகிறார். மரணம் குறித்தான விசாரணையை மனதுக்குள் மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார். மகன் வனவிஹாரியின் இறப்பு, இறக்கும்பொழுது அவன் “நான் இறக்க விரும்பவில்லை; என்னை பிழைக்க வையுங்கள்” என்று கதறி அழுதது அவர் மனதுக்குள் மறுபடி மறுபடி எழுந்து அவரை மரணம் சார்ந்த தத்துவ விசாரணையின் ஆழம் நோக்கி தள்ளுகிறது.

 

நவீன மருத்துவம் மரணத்தை எதிரியாகப் பாவிக்கிறதா?; அதை எதிர்த்து முழுமூச்சாய் போரடுகிறதா?. நவீன மருத்துவத்திற்கு தத்துவ அடிப்படை என்று ஏதேனும் இருக்கிறதா?. அது இப்போதிருக்கும் இங்கனம் இல்லாவிட்டால் அதன் இன்றைய அறிவியல் பாய்ச்சல்கள் சாத்தியமா?. வினாக்களை அடுக்கி மனம் சிந்தனைச் சங்கிலிகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. உலக சுகாதார நிறுவனத்தையே தன் இசைக்கு ஏற்றாற்போல் ஆடவைக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மாபெரும் வலைப் பின்னலில் சிக்கியிருக்கும் இன்றைய நவீன மருத்துவம் நோயாளிகளை எந்தக் கண்கள் கொண்டு பார்க்கிறது?;

 

சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பனின் தங்கை கண்கள் நிரம்ப என்னிடம் கூறியது, “அந்த டாக்டர் எங்க போய் என்னத்த படிச்சுட்டு வந்தானோ?; அவன் சொல்றது உண்மையாவே இருக்கட்டும். அத எப்படி சொல்றது, எங்க சொல்றதுன்னு ஒரு அறிவு வேணாம்; பேஷண்ட்கிட்ட அப்படியா கோபமா பேசறது?” என்று கொந்தளித்தார். அந்த டாக்டர் ஒரு விதிவிலக்காயிருக்கலாம். எல்லோருமே அப்படியல்லதானே?. எதிர்ப்புறமும் போலி கவிராஜ் வைத்தியர்களின் அதிகரிப்பும் பயமுறுத்துகிறது. முற்றாக எப்பக்கம் சாய்வதற்கும் ஐயமாக இருக்கிறது. மாறிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கைச் சூழல் புதிது புதிதாய் நோய்களைக் கொண்டுவருகிறது. அதற்கான தீர்வுகள் நவீன மருத்துவத்தில் இருப்பதாய் கால்கள் தரையில் பாவாமல் பறக்கும் சமுதாயம் நம்புகிறது; பெரும் விழுக்காடு உண்மையாகவும் இருக்கலாம்.

 

இந்த நூற்றாண்டுக்கு, ஜீவன் மஷாயும், ப்ரத்யோத்தும் கலந்த ஒரு நட்புக்கலவைதான் சரியாக வருமோ?

 

****

 

“கண்ணீரைப் பின் தொடர்தல்” புத்தகத்திற்கு மிக்க நன்றி ஜெ. வேலூர் லிங்கம் சார் கண்ணீரைப் பின் தொடர்தல் புத்தகம் பற்றி நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டேயிருப்பார். இப்போது கிடைப்பதில்லை என்று சொன்னார். புதிய பதிப்பு ஏதேனும் வருகிறதா ஜெ?

வெங்கி

 

ஆரோக்கியநிகேதனம்-கடிதம்

ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்

கண்ணீரைப் பின்தொடர்தல்

ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

 

==================================================

ஆரோக்கிய நிகேதனம் பற்றி கிருஷ்ணமூர்த்தி

ஆரோக்கிய நிகேதனம் பற்றி கேசவமணி

ஆரோக்கிய நிகேதனம் பாண்டியன் ராமையா

அரோக்கிய நிகேதனம் பற்றி கடிதம்

ஆரோக்கிய நிகேதனம் பற்றி ஜெயமோகன்

முந்தைய கட்டுரைசகஜ யோகம்,கடிதம்
அடுத்த கட்டுரைஇசையின் கவிதை,அழகுநிலா -கடிதங்கள்