ராமனின் பெயருடன்

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,

‘ஹே ராம்’ நேற்று பார்த்தேன். படம் வெளியானபோது எனக்குப் பதினோறு வயது. அப்போதெல்லாம் தினத்தந்தி இதழின் சினிமாப் பக்கங்களில்தான் புதியப் படங்களைப் பற்றியச் செய்திகளைத் தெரிந்துகொள்வது. விளம்பரத்தில் கமல் துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி பூணூலைப் போட்டுக்கொண்டு வெற்று உடம்போடு நிற்பதைப் பார்த்தபோது பெரிய அதிர்ச்சி. அதைவிட அதிர்ச்சி படத்தின் கதையாக அப்போது எல்லோரும் சொன்னது, நாயகன் காந்தியைக் கொல்ல முயற்சி செய்கிறான். மஹாத்மா காந்தியை கொல்ல முயற்சிப்பவன் எப்படி ஹீரோவாக இருக்க முடியுமென்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் சாகேத் ராமை பார்த்தேன்.

.படம் வெளியாகிய இத்தனை வருடங்களில் போற்றியும், தூற்றியும் எவ்வளவோ எழுதியிருப்பார்கள். எனக்கும் சாகேத் ராமுடனும், அம்ஜத்துடனும் தொடங்கும் படம் சாகேத் ராமுடனும், முனாவருடனும் முடிவதிலிருந்து பல விசயங்கள் சொல்வதற்கு இருக்கின்றன. ஆனால் படத்தின் தரிசனமாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்

“காந்தியின் உண்ணாவிரதத்தால் நாங்கள் சில நாட்கள் நிம்மதியாகத் தூங்கினோம். ஆனால் யாரோ ஒருவனின் முட்டாள்தனத்தால் நடந்த கொடுமைகளைப் பாருங்கள்”

காலம் எத்தனையோ பிரச்சனைகளைக் கண் முன்னே நிறுத்துகிறது. ஒரு சமுதாயப் பிரச்சனைக்குத் தனி மனிதனாக தீர்ப்பு எழுதக் கிளம்பக் கூடாது என்பதற்கு மிகச் சரியான உதாரணம் இக்காட்சி. அது அவனுக்கு மட்டுமில்லாமல், அவனைச் சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும். தனிமனிதர்களின் எல்லைகள் அவர்களின் பார்வை சார்ந்து மட்டுமோ அல்லது அவர்கள் பயிற்சி பெறும் விசயங்கள் சார்ந்து மட்டுமே இருக்கும். எதுவாகினும் அவற்றின் எல்லையாய் நிகழ்காலம் மட்டுமே இருக்கும். காலத்தைத் தாண்டிச் சிந்திக்க முடியும்போது தனிமனிதன் தலைவனாகிறான். தலைவன் அப்படி எல்லோருக்காகவும் சிந்திக்கும்போதும் மகாத்மா ஆகிறான்.

நான் இப்படி புரிந்த்துகொள்கிறேன்:

காந்தியின் அஹிம்சை சுதந்திரத்திற்காக மட்டும் மக்களைத் தயார்ப்படுத்தவில்லை. அதற்குப் பிறகான வாழ்க்கைக்கும் நமக்கு அது பயிற்சியாக இருந்துள்ளது. காந்தியம் பிரச்சனைகளுக்கான தீர்ப்பெதையும் எழுதவில்லை. பிரச்சனைகளைக் கடந்தும் வாழ்வதற்கான தீர்வை, வழிமுறைகளைக் கூறுகிறது.

கமலின் மற்றப் படங்களில் பெரும்பாலும் அவரே நீக்கமற நிறைந்திருப்பார் (தன் நடிப்பால்) படம் முடித்து வெளியே வரும்போது கமல் என்ற கலைஞனே நினைவில் இருப்பார். இப்படத்தில் எடுத்துக்கொண்ட கதையும், திரைக்கதையும் அவரையும் ஒரு கதாப்பாத்திரமாக மட்டுமே மாத்தியிருக்கிறது. எப்படி யோசித்தாலும் இந்தப் படத்தை ஏன் புரியவில்லை (இன்றளவும்) என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எளிமையாக இல்லாவிட்டாலும் சிக்கலான கதை இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

சுதந்திரப் போராட்ட இறுதியில் நடந்த கலவரங்களில் கதையின் நாயகன் தன் மனைவியை இழந்துவிடுகிறான். பலி வாங்க ரோட்டிற்கு வருபவன் அங்கு நடக்கும் ‘வேறு பலி’ வாங்குதலைக் காண்கிறான். தன் பிரச்சனைகளில் இருந்து பொதுப் பிரச்சனைகளுக்குள் விழுந்து அதில் அவன் அடையும் கண்டடைதல்களை மிக அழகாக படம் பேசிச் செல்கிறது. படத்தில் வேறு எவ்வித ஆராய்ச்சியும் இல்லை. ஹிந்துக்கள் செய்தது தவறா, முஸ்லீம்கள் செய்தது தவறா எல்லாப் பிரச்சனைகளுக்கும் காந்திதான் காரணமா என்றெல்லாம் எதுவுமில்லை. படத்தில் காதல் காட்சிகள் இருக்கின்றன. குடும்பம் இருக்கிறது (அதிலும் ஒரு ஆவணம். ஒரு காட்சியில் அறைக்கு வெளியே நின்று தந்தியைக் கொடுப்பவரிடம், “ஆதான் மாமா இல்லையே உள்ள வாய்யா என்று கமல் சொல்லும் இடம்”) அக்காலத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் கதை என்று நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை ஒரு குடும்பம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்று கூட இப்படத்தில் வரும் காட்சிகளைக் காணலாம். இதைப் புரிந்துகொள்வதில் என்ன சிக்கல் இருந்திருக்கும்?

கமலுக்கும், ஷாருக்கானிற்கும் நடக்கும் உரையாடல் படத்தின் உட்சம். சாகேத் ராம் அம்ஜத்கானை வந்தேறி (இன்றய மொழியில்) என்கிறான். உன் ராமன் கூட அதேதான் என்கிறார்கள் என அம்ஜத் சொல்லும்போது கோபம் கொண்டு நெற்றியில் துப்பாக்கியை வைக்கிறான். சிரிப்பு வந்தது.தமிழகத்தில் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாக இதை வைத்துதானே அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். “Ghandhi is the only sanity in this country, நீ என்னைக் காப்பற்ற விரும்புகிறாய், நம்மால் ஒற்றுமையாக இருக்க முடியும் என்று காந்தி சொன்னது உண்மை” என்று அம்ஜத் சொல்கிறான். இன்றைக்கும் பொருந்துகிறதுதானே.

எளிய மனங்கள் சிக்கலான விசயங்களைப் பற்றி யோசிக்க விரும்பவதில்லை. காந்தி கல்கத்தாவில் ஒரு கூட்டத்திடம் ஒருவரை பேசச் சொல்கிறார். கூட்டத்தின் நடுவே இருந்து சாகேத் ராம் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கள்தானே பொறுப்பு எனக் கத்த ஆமாம் நான் பொறுப்பு என்று அவர் ஏற்றுக்கொள்கிறார். எல்லோருக்கும் அந்த விடை போதுமானதாக இருக்கிறது. காந்திஜி வாழ்க என கோசம் போடுகிறார்கள். சாகேத் ராமிற்கு அது புரியவில்லை. அவர்களைக் குழப்பமாகப் பார்க்கிறான். அவன் மனம் சமாதானம் அடையவில்லை. அதை அப்யங்கர் என்றக் கதாப்பாத்திரம் பயன்படுத்திக்கொள்கிறது. என்னால் இவ்விடத்தில் சாகேத் ராமை புரிந்துகொள்ள முடிந்தது. ஏன் கோட்சேவைக் கூட. கொடூரமான இழப்புகளைச் சந்தித்த ஒருவனால் எப்படி எளிதாக சமாதானம் அடைய முடியும். காந்தி எப்படி அமைதியை நாடும்படி கலவரக்காரர்களிடம் கேட்டார். ஒவ்வொருவருக்கும் இழப்புகள் இருந்திருக்கும். இருந்தும் அவர்கள் எப்படி அவர் பேச்சினைக் கேட்டனர் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்று கை காட்டுவது எளிது. நீங்கள் நாங்கள் என பிரிந்து நிற்பது, பிரிப்பதும். (இவ்விடத்தில் தமிழகத்தின் தலையாய சீர்திருத்தவாதி ஒரவரை நினைத்துக்கொள்கிறேன்) எல்லாவற்றையும் மீறி வெறுப்பின் மொழியில் பேசாமல் அன்பை போதிக்க முடிந்தால் அவர் மகாத்மாதான்.

கலைப் படம் பற்றின உங்கள் கட்டுரைகளை வாசித்தேன். உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது. இப்போது குழம்பி நிற்கிறேன். கமல் என்னும் மகத்தான கலைஞனைப் பற்றியா, தமிழின் மிக முக்கியமான முயற்சிகளுள் ஒன்றான ஹே ராம் பற்றியா, மகாத்மாவைப் பற்றியா எதைப் பற்றி உங்களிடம் கேட்பது என்று தெரியவில்லை.

 நன்றி,

சங்கர்

முந்தைய கட்டுரைஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது
அடுத்த கட்டுரைஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்