«

»


Print this Post

தடைகள்


அன்புள்ள ஜெ,

‘அன்புள்ள’ என்று எழுத எனக்கு பதினோறு வருடங்கள் எடுத்ததற்கு காரணம் , இத்தனை ஆண்டுகளாக உங்கள் எழுதுக்களை நான் படிக்காததனால்தான்.ஆனால் தயக்கமே இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக ஜெயமோகனை எனக்கு பிடிக்காது என்று சொல்லி வருவதை ஒரு மோஸ்தராகவே பின்பற்றினேன். ஒரு ஜீனியஸை எனக்கு பிடிக்காது என்று பிரசாரம் செய்வதன் மூலம் , நான் உங்களை விட ஒரு படி உயர்ந்து விடுவது போல் ஒரு திருப்தி. எதுக்கும் இருக்கட்டும் என்று “விஷ்ணுபுரம்” ,”ரப்பர்” என்று உங்கள் புத்தகங்களின் தலைப்பை மட்டும் எனது போலி அறிவில் பதிவு செய்துவிடுவேன் , என்றவது எதாவதொரு விவாததுக்கு உதவும் என்று.

எழுத்தை படிக்காமலே எழுத்தாளரைப் பிடிக்காது என்று சொல்வது எவ்வளவு தவறு? இன்று அதை நன்கு உணர்ந்தேன்.

ஏதோ ஒரு உந்துதலில் “சோற்றுக் கணக்கு” படித்தவுடன் தான் இவ்வளவு அருகில் இருக்கும் ஒருவரையா படிக்காமல் விட்டோம் என்று என்னை நானே சபித்துக்கொள்கிறேன். சுஜாதா , அசோகமித்ரன் , ஆதவன் என்ற மிகக் குறுகிய வட்டத்தில் இருந்ததால் வந்த வினை.

எதுக்கும் இருக்கட்டும் என்று இளயராஜாவை கொஞ்ச நாட்களுக்கு மறந்து விட்டு மற்றவர்களின் இசையையும் கேட்கலாமோ என்று தோன்றுகிறது இப்போதுள்ள மனநிலையில்.

இப்படிக்கு முன்னால் போலி வாசகன்,
பாரதசாரி

http://paadhasaary.blogspot.com

அன்புள்ள பாரதசாரி

என் எழுத்துக்கள் மேல் பெரும் ஈடுபாடுள்ள நண்பர் பாதசாரியின் பெயர்போல உங்கள் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

பொதுவாக என் மீதான எதிர்விமர்சனங்களையே ஒரு வாசகன் அதிகம் கேள்விப்படுவான். அதன் வழியாகவே அவன் என்னை அறிமுகம் செய்துகொள்வான். நான் எழுதவந்த மறுவருடம் முதல் இந்நிலைதான் உள்ளது. அதையும் மீறித்தான் எனக்கு வாசகர்கள் வந்தபடியே இருக்கிறார்கள்.

முக்கியமான காரணம் என்னுடைய கருத்துச்சொல்லும் போக்குதான். நான் எழுத்தாளனாக மட்டும் அல்ல, விமர்சகனாகவும்தான் உள்ளே வந்தேன். எழுத ஆரம்பித்த வருடமே விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தேன். அப்போதே என் நலம் விரும்பிகள், ஆசிரியர்கள் எச்சரித்தார்கள். பிறரை விமர்சனம் செய்வதன் வழியாக நான் என் மேல் விமர்சனங்களை வரவழைத்துக்கொள்கிறேன் என்றார்கள். கடுமையான கோபதாபங்களை உருவாக்கிக்கொள்வேன் என்றார்கள். முன்னோடிகளின் கதையும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் விமர்சனம் என்பது ஒரு சூழலில் உண்மையான இலக்கியத்தை நோக்கிய நகர்வுக்கு இன்றியமையாதது என நான் நம்பினேன். விமர்சனம் என்பது அடைந்தவற்றை வகுத்துக்கொண்டு அடையாதவற்றை நோக்கி கனவு காண்பது. விவாதம் மூலம் படைப்புகளை உள்வாங்கி மதிப்பிடச்செய்வது. கூட்டு வாசிப்பை உருவாக்குவது. நல்ல விமர்சகனும் நல்ல எழுத்தாளனுமாக ஒருவனே இருக்கமுடியும் என நினைத்தேன். உடனடி முன்னுதாரணங்கள் மலையாளத்தில் விமர்சகராகவும் நாவலாசிரியராகவும் இருந்த பி கெ பாலகிருஷ்ணனைப் போன்றவர்கள்.

எத்தனை கடுமையான விமர்சனம் வந்தாலும் அதன்மூலம் உண்மையான படைப்பூக்கம் மறைக்கப்பட்டுவிடாது என நான் நம்பினேன். மேலும் அந்த எதிர்மறை விமர்சனங்கள் நம்மை தொடர்ந்து ஊக்கநிலையில் வைத்திருக்கும். அமர அனுமதிக்காது என நினைத்தேன். எந்நிலையிலும் நிராகரிக்கமுடியாத எழுத்தாக அமைக்கவேண்டிய நிரந்தர அறைகூவலை நமக்கு நாமே விடுத்துக்கொள்ள இதுவே வழி

அது உண்மை என்றே நான் இன்று அறிந்திருக்கிறேன். எத்தனை காழ்ப்புள்ள விமர்சனமானாலும் இன்று என்னை முழுக்க நிராகரித்துவிட முடியாது. அந்த விமர்சனங்கள் என்னை நோக்கி வாசகர்களைத்தான் கொண்டுவந்து சேர்க்கின்றன

உண்மையில் தமிழில் என்னளவுக்கு புகழப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனேகமாக இல்லை. நான் எழுதவந்தபோது தமிழின் அத்தனை முன்னோடிகளும் என்னை பாராட்டி புகழ்ந்து எழுதியிருக்கிறார்கள். அழகியலை அடிப்படையாகக் கொண்டு எழுதும் அத்தனை இலக்கிய விமர்சகர்களும், ஒருவர்கூட மிச்சமிலலமல், என்னை வேறெந்த எழுத்தாளனைவிடவும் அதிகமாக புகழ்ந்திருக்கிறார்கள்.

ஆக்கபூர்வமான எதிர்விமர்சனங்கள் சில உண்டு. அவை அதிகமும் மார்க்ஸிய த்தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டவை. அவற்றை நான் எப்போதும் கருத்தில்கொள்வதுண்டு

காழ்ப்புவிமர்சனங்கள் எப்போதும் எண்ணிக்கையில் அதிகம். இப்போதல்ல நான் ஆரம்பித்த தொண்ணூறுகளிலேயேகூட ஒவ்வொருமாதமும் குறைந்தது இரு சிற்றிதழ்களிலாவது என்னைப்பற்றிய வசையோ அவதூறோ தாக்குதலோ அச்சாகியிருக்கும். இதற்காக தமிழில் செலவழிக்கப்பட்ட பக்கங்கள் ஆச்சரியமூட்டும் அளவுக்கு அதிகம்.

காழ்ப்பு விமர்சனங்கள் பலவகை. நான் எப்போதும் எளிமையான அரசியல் கோஷங்களை சந்தேகப்படுபவன். அந்த அரசியல் வாய்ப்பாடுகளை ஒட்டி நிகழும் இலக்கிய ஆர்ப்பாட்டங்களை கடுமையாக நிராகரித்து வந்தவன். அவ்வப்போதுள்ள அரசியல் கோஷங்களை ஒட்டி இலக்கியம் எழுதப்படுவதை நான் அங்கீகரித்ததே இல்லை. கறாரான அழகியல் நோக்கே என் அடிப்படை. நான் அந்த மரபைச்சேர்ந்தவன்.

இறுக்கமான கருத்தியல் அதிகாரத்தை உருவாக்கும் சிந்தனைகளை நிராகரித்து வந்திருக்கிறேன். அவை அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் மத அமைப்புகளாக இருந்தாலும்.

ஆகவே கருத்தியல் பிரச்சாரகர்களும் அவற்றை ஒற்றைப்படையாக எழுதுபவர்களும் என்னை நிராகரித்தாகவேண்டும், இல்லையேல் அவர்கள் தரப்பை முன்வைக்கமுடியாது. உதாரணமாக மொத்த பின்தொடரும் நிழலின் குரலுக்கும் நம்மூர் மார்க்ஸியர் சொல்ல சாத்தியமான ஒரே பதில் எழுதியவர் நம் எதிரி என்பதே. வேறெதையும் அவர்கள் மறுத்ததில்லை இக்கணம் வரை. மறுக்கமுடியாது.

அந்நாவல் உருவாக்கும் மிக விரிவான விவாத வெளிக்கும் பல்வேறு வண்ணங்கள் கொண்ட கதையுலகுக்கும் இவர்கள் ஒரு நல்ல விமர்சனத்தை உருவாக்கிவிடமுடியாது.

நேற்று என்றால் என்னை சி ஐ ஏ உளவாளி என்று வசைபாடியிருப்பார்கள். இன்று இவர்களின் பிரதான பூச்சாண்டி இந்துத்துவம் என்பதனால் அதை திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.

இவர்களின் இலக்கு என் வாசகர்கள் அல்ல. வாசிப்பவர்களுக்கு நான் என்ன எழுதுகிறேன் எனத் தெரியும். ஏழாம் உலகம் நாவலை ஒரு இந்துத்துவன் எழுதமாட்டான் என அறியாதவர்கள் அல்ல இலக்கியம் வாசிப்பவர்கள். தமிழில் வேறெந்த எழுத்தும் அந்நாவல் அளவுக்கு விளிம்புநிலையை சொன்னதில்லை என ஆரம்பநிலை வாசகனே உணர முடியும்.

வாசிக்காதவர்களையே இவர்கள் குறிவைக்கிறார்கள். தங்கள் பிடியில் உள்ளவர்களை வாசிக்காமல் இருக்கச்செய்ய, புதிதாக வருபரை தடுக்க இதனால் முடியுமென நினைக்கிறார்கள்.ஆனால் நல்ல வாசகன் என்றால் அவன் என்றோ என்னிடம் வந்தே தீர்வான் என நான் நினைக்கிறேன். ஆகவே இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

இன்னொரு வகை வசைபாடிகள் சோட்டா எழுத்தாளர்கள். ஏதாவது ஒன்றிரண்டு சாதாரண கவிதைகளோ கதைகளோ எழுதி விட்டு நானும் எழுத்தாளன் என அந்தரங்கத்தில் எண்ணிக்கொள்பவர்கள். மொழியையும் வடிவையும் கையாளத்தெரியாதவர்கள். அந்த உண்மையை தாங்களே உள்ளூர அறிந்தவர்கள். அதனாலேயே அளவுக்கு மீறி அறிவுஜீவி பாவனை போடுபவர்கள். துரதிருஷ்டவசமாக எல்லாக்காலத்திலும் எண்ணிக்கையில் இவர்களே அதிகம்.

இவர்களுக்கு என் எழுத்தின் வீச்சும் வேகமும் அதற்கிருக்கும் வாசக ஈர்ப்பும் அச்சமும் பொறாமையும் ஊட்டுகிறது. என் எழுத்து ஒவ்வொரு கணமும் அவர்களை சிறியவர்களாக்குகிறது என்று உணர்கிறார்கள். ஆகவே இவர்கள் எரிகிறார்கள். ஒருகணம் கூட இவர்களால் அந்த தழலில் இருந்து விடுபட முடிவதில்லை. எப்போதும் இதே நினைவாக தகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே அப்பட்டமாக வசையையும் காழ்ப்பையும் கொட்டுகிறார்கள். அதில் ஒரு தர்க்க ஒழுங்கையும் நம்பகத்தன்மையையும் உருவாக்கக்கூட முயல்வதில்லை. இணையத்தில் இத்தகைய கட்டுரைகளை எழுதுபவர்கள் எப்படியும் ஐம்பதுபேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். இணையத்தில் வந்த காலகட்டத்திலேயே இவர்களில் பலரை புரிந்துகொண்டு என் கவனத்திலிருந்து விலக்கி விட்டேன்

உள்ளூர இவர்கள் மேல் எனக்கு பரிதாபம்தான். தங்களுக்கிருக்கும் கைப்பிடியளவு படைப்பூக்கத்தைக்கூட இந்த காழ்ப்பினால் இழந்துவிடுகிறார்கள்.

ஒர் எழுத்தாளன் அவன் தரமாக எழுதுகிறான் என உண்மையில் நம்பினால், அல்லது நாளை எழுதமுடியும் என்று கருதினால் அவன் அத்தகைய காழ்ப்புகளுக்குள் ஒருபோதும் செல்வதில்லை என்று கவனித்திருக்கிறேன். நல்ல எழுத்தாளன் இத்தகைய சிறுமைகளே இல்லாத தன்னம்பிக்கையின் அழகுடன்தான் எப்போதும் உள்ளே நுழைகிறான். சு.வேணுகோபால் போல, கண்மணி குணசேகரன் போல இயல்பான ஒரு கம்பீரம் அவனில் கூடிவிடுகிறது.

இத்தகைய எதிர்க்குரல்கள் காரணமாக கொஞ்சம் கவனமில்லாத வாசகர்கள், வாசிக்காமல் அரட்டைகளில் பெயருதிர்ப்பவர்கள் என்னைப்பற்றிய இந்த எதிர்ச்சித்திரத்தை உருவாக்கிக்கொண்டு எங்கும் சொல்லிக்கொண்டிருக்க நேர்கிறது.சூழலை நிறைத்திருக்கும் இந்த சருகுகளை விலக்கித்தான் என்னை ஒரு நல்லவாசகன் கண்டடைய வேண்டியிருக்கிறது.

என் தீவிர வாசகர்களில் பாதிப்பேர் எதிர்மறை எண்ணங்களுடன் வந்தவர்களே. அதுகூட நல்லதுதான் என நான் நினைப்பேன். அத்தகைய ஒரு சிறிய தடை இருப்பது நல்லதே. தன் சுயபுத்தியாலும் நுண்ணுணர்வாலும் அதை தாண்டிவருமளவுக்கு தகுதியுள்ள வாசகன் வந்தால் போதும்.

என் எழுத்துக்களை வாசியுங்கள். அவற்றை வைத்துக்கொண்டு என்னை நிராகரிக்க, வெறுக்க, கடந்துசெல்ல முடியுமா என்று முயலுங்கள். முடிந்தால் அதுவும் நல்லதற்கே.

வருக

ஜெ

மறுபிரசுரம் மார்ச் 13 2011

கதைகள்

கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/12757