புத்தசாந்தம்

அன்புநிறை ஜெ,

 

நான் வந்திருப்பது பெண்களுக்கான பயணக்குழுவினருடன். எனவே முழுக்க முழுக்க எங்கு என்ன வாங்கலாம், என்ன சாப்பிடலாம் எனபதே பயணம் முழுக்க விவாதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சற்று ஒவ்வாமையாகத் தோன்றவே, தனியாக ஒதுங்கி இருந்தேன். பிறகு மற்றொரு முறை எனக்கான பயணத்தை நான் தனியாகவோ தக்க நண்பர்களுடனோ மேற்கொள்வது என்று முடிவெடுத்து நீரோட்டத்தில் கலந்துகொண்டேன்.

நேற்று காசியிலிருந்து போத்கயா நாள் முழுவதும் வந்து ஒருவழியாய்  சேர்ந்தோம். எனவே மகாபோதி ஆலயம் மட்டுமே செல்ல முடிந்தது. எனக்கு Roomie ஒரு மாமி, இனிய அறியாமைகளோடு அது தரும் உற்சாகத்தோடு, தனியாகப் பிரயாணம் செய்கிறார். கைடு புத்தர் ஞானம் அடைந்ததன் பல்வேறு நிலைகளையும், மகாபோதி ஆலயம் அசோகரால் கட்டப்பட்டு, சமுத்திரகுப்தரால் விஸ்தீரிக்கப்பட்டு, கில்ஜியால் இடிக்கப்பட்டு, கன்னிங்ஹாமால் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றை முக்காலே மூன்று வீசம் பீகாரி இந்தியிலும், மீதம் பீகாரி ஆங்கிலத்திலும் சொல்லிவர மாமிக்கு நான் தமிழ்ப்படுத்த நேர்ந்தது. சித்தார்த்தன் புத்தரான கதையை சொல்லிக் கொண்டே நடந்த வழிகாட்டி ஆங்காங்கே அசோகர் எழுப்பிய தூண்களைக் காட்டி அதைப் பற்றிய வரலாறை சொல்லி, மீண்டும் புத்தரை விட்ட இடத்தில் பிடித்தார்.

நான் subtitle போட்டுக்கொண்டே வர மாமிக்குப் பயங்கர குழப்பமாகி விட்டது.

மாமி: அசோகருக்கு இங்க அசோகா பில்லர் கீழதான் ஞானம் பிறந்ததா?

நான்: இல்ல மாமி, அசோகருக்கு ஞானம் பிறக்கல, இங்க புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது.

மாமி: இல்லையே அவர் அசோகா பில்லர்னு சொன்னாரே?

நான்: அது அவர் எழுப்பியது புத்தருக்காக..

மீண்டும் சில அடிகளுக்கொரு முறை அதே கேள்வி/பதில்கள்.பிறகு,

மாமி: இல்லம்மா, போதி கீழ கிடைச்சது யாருக்கு?

நான்: புத்தருக்கு

மாமி: அசோகர் இல்ல?

நான்: (மனசுக்குள்) பேசாம அவருக்கே கிடைச்சுருக்கலாம்…

சிறிதுநேரம் கழித்து, இங்குதான் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி இரண்டும் முதல்முறையாகக் கூறப்பட்டது என்றார் வழிகாட்டி.

மாமி சட்டென்று சுதாரித்துக் கொண்டு, சிவாஜி நடித்த படத்தில் வருமேம்மா, இந்த இரண்டு கச்சாமியும் ஒருத்தர் சொல்லிண்டே வர, அந்த ராஜா அசோகர்தானே, அவருக்கு ஞானம் பிறக்குமே அதைத்தான் கேட்டேன் என்றார்.

ஓஹோ, மாமியின் குழப்பம் சிவாஜியால் விளைந்ததா, அவர் புத்தராக நடித்துத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு விளக்கியிருக்கக் கூடாதா என்று நினைத்துக் கொண்டே கலிங்கப் போர் குறித்து சொல்லி முடித்தேன்.

மாமி: வெற்றிப் புன்னகையோடு, அதைத்தான் சொன்னேன். நீ அசோகருக்கு ஞானம் கிடைக்கலைன்னு சொன்னியே என்றார்.

போதி மரத்தடியில் எனக்கும் சிறிது ஞானம் போல ஏதோ பிறந்தது.

 

 

மிக்க அன்புடன்,

சுபா

 

 

அன்புள்ள சுபா,

 

இதனால்தான் நான் அடிக்கடிச் சொல்வது, மக்களைக் கொடுமைப்படுத்தக்கூடாது என்று. புத்தர் உபதேசித்த சாந்தநிலை அதற்கு தேவை.

பெங்களூர் ரயிலில் ஒருவர் என்னைக் கண்டு துணுக்குற்றார். ஓரக்கண்ணால் பார்த்தார். குழம்பினார். மீண்டும் பார்வை. கண்கள் சந்தித்தபோது திடுக்கிட்டார்.

நான் புன்னகைத்து “சாருக்கு நம்மூரா?” என்றேன்

“ஆமா” என தடுமாறி “சாரை எங்கியோ பாத்தமாதிரி…” என்றார்

‘நமக்கு இங்கதான்” என்றேன்

“இல்ல சார் படத்த பேப்பரிலே பார்த்தமாதிரி” என்றார்

‘ஓ அதுவா, தந்தீல பாத்திருப்பீக”

“ஆமா ஆமா”

“அது சும்மா பங்காளிச்சண்ட சார். சலம்பிட்டே கெடந்தான். எம்புடுநாள் வச்சு பாக்கமுடியும்? அதான் போட்டாச்சு”

அவர் திக்பிரமை பிடித்து பார்த்துக்கொண்டிருந்தார்

‘ஜாமீன்ல வந்தாச்சு… இப்பம் ஒரு சாட்சிக்காரன் கெடக்கான். அவனை போடுகதுக்கு ஒருத்தனை பாக்கப்போகணும்… எதுக்கு நாமளே கைய வச்சுகிட்டு… என்ன சொல்றியோ?’

பெங்களூர் வரை அவர் என்பக்கமே திரும்பவில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரைபாவண்ணனுக்கு விளக்கு விருது
அடுத்த கட்டுரைபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை