சகஜயோகம்

இந்துமதமும் வலதுசாரி அரசியலும்

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்

அன்புள்ள ஜெ

 

இது நேரடியான எளிமையான கேள்விதான். திராவிட இயக்கத்தவரின் அடாவடியையும் அவர்களின் தரம்தாழ்நத நக்கல்களையும் பற்றி சரியாகவே சொல்லியிருந்தீர்கள். ஆனால் இந்துத்துவ அரசியல் கொண்டவர்களின் தரம் என்ன? ஒரு படி கீழேதானே? அவர்களும் இதே புளிச்சமாவு வசையையும் நக்கலையும் மட்டும்தானே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? அரவிந்தன் நீலகண்டன், ஒத்திசைவு ராமசாமி போன்றவர்கள் நீங்கள் அடிவாங்கியபோது கொண்டாடினார்கள். அவர்களும் இதை விட கீழான தரத்தில் புளிச்சமாவு நக்கலையும் நாலாந்தர வசைகளையும்தானே கொட்டுகிறார்கள்? என்ன வேறுபாடு?

 

இன்றைய கட்டுரையுடன் ஒரு கடிதம் [காசி ] இருந்தது. சுந்தர ராஜசோழன் என்பவர் எழுதியது. அவர் அவ்வளவு பவ்யமாக எழுதியிருக்கிறார். ஆனால் அவரே நீங்கள் மோடிமேல் விமர்சனம் வைத்தபின் என்னென்ன வசைகளை எழுதினார் என்பதை அறிய ஆவலிருந்தால் நான் அனுப்புகிறேன். நீங்கள் சினிமாவுக்கு விலைபோனவர் இன்னும் பலபடிகள் கீழே. இவர்களெல்லாம் இவர்கள்  என்ன அரசியலைச் சொல்கிறார்களோ அதை அப்படியே எழுத்தாளர்களும் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள்.சொல்லாவிட்டால் எதிரிதான். எதிரிக்கு வசைகள், அவமதிப்புகள், நாலாந்தர நக்கல்கள் நையாண்டிகள்.

 

நான் கேட்கவிரும்புவது இன்னொரு விஷயம்.  இந்தக்கும்பலை இப்படி திரட்டத்தான் நீங்கள் ஓய்வு ஒழிச்சலில்லாமல் எழுதுகிறீர்களா? இதனால் என்ன பயன்?

 

ஆர்.ராஜசேகர்

 

 

அன்புள்ள ராஜசேகர்,

 

இவர்கள் இப்படி என தெரியும். என் நண்பர்கள் அறியும் ஒன்றுண்டு, இவர்களை நான் எவ்வகையிலும் பொருட்படுத்துவதில்லை. சிரிப்புடன் அல்லாது இவர்களைப்பற்றி பேசுவதுமில்லை. இல்லையேல் நான் எதையுமே செய்யமுடியாமல் ஆகியிருக்கும்.

 

இந்த உளநிலை எல்லா ’கொள்கைநம்பிக்கை’ சார்ந்த அமைப்புக்களிலும் உள்ளதுதான். இதைத்தான் பின்தொடரும் நிழலின் குரலில் விரிவாகப் பேசியிருக்கிறேன். தெளிவான உதாரணமாக கம்யூனிஸ இயக்கம் இருந்தமையால் அதையே முதன்மையாகப் பேசினேன்.

 

கம்யூனிஸ்டுக் கட்சிகளின் சமகால வரலாற்றையே பாருங்கள். ஒரு கட்சியில் இருப்பவர்கள் அவர்களின் தலைவர்களை துதிப்பார்கள். கொண்டாடுவார்கள். சட்டென்று அந்தத் தலைவர்களில் ஒருவர் வெளியேறுகிறார், அல்லது வெளியேற்றப்படுகிறார். பெரும்பாலும் அது தனிநபர் காரணமாகவே இருக்கும் . என்ன நடக்கிறது? அந்தத் தலைவர் முன்பு அங்கே இருந்தபோதே, பல ஆண்டுகளாகவே, துரோகியாகத்தான் இருந்தார் என அவதூறுசெய்யப்படுவார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைவரை அவதூறு செய்து சீரழிக்கப்படும்

 

அதுவரை அவரை கொண்டாடியவர்கள், அவருடன் ஒன்றாகச் சாப்பிட்டு ஒரே குடும்பமாக பழகியவர்கள் அவரை எல்லைகடந்து கீழிறங்கி வசைபாடுவார்கள், கீழ்மைசெய்வார்கள். அவரை தெரிந்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர் ஒரேநாளில் தனியனாகிவிடுவார். உயிர்விட்டவர்கள் உண்டு, குடிகாரரர்களாகி அழிந்தவர்கள் உண்டு

 

கேரளத்தில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவிய முதன்மைத்தலைவர்களான கே.ஆர்.கௌரி அம்மா, பி.கோவிந்தப்பிள்ளை,சாத்துண்ணி மாஸ்டர் போன்றவர்கள் அவ்வாறு இழிவுசெய்யப்பட்டது சமீபகால வரலாறு. சந்திரசேகரன் போன்ற தலைவர்கள் வெளியேறியதுமே அவதூறுசெய்யப்பட்டு, வெறுப்பு உருவாக்கப்பட்டு, அவராலேயே உருவாக்கப்பட்ட மார்க்ஸியத் தொண்டர்களால் தெருவில் வெட்டிச்சாய்க்கப்பட்டார்கள்

 

இது எல்லா ‘கொள்கைக் கட்சிகளுக்கும்’ பொருந்தும். இந்துத்துவர்கள், இஸ்லாமியத்துவர்கள் அனைவருமே இதே உளநிலைகொண்டவர்கள்தான். அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைதான் முக்கியம். மனிதர்கள் முக்கியமில்லை. விழுமியங்கள் முக்கியமில்லை. ஏன் அவர்கள் எதை நம்புகிறார்களோ அந்த புனிதங்கள், புனிதர்கள்கூட முக்கியமில்லை. இவர்களின் அரசியலை சற்றே முரண்பட்டுப் பேசினால் இவர்கள் இந்துமதத்தின் ஞானச் சிகரங்களைப்பற்றியே என்ன மொழியில் பேசுகிறார்கள் என்று பாருங்கள், நானெல்லாம் சின்னக் கூழாங்கல்.

 

இவர்களுடையது ஒருவகை மூர்க்கம்.அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பு, அவ்வமைப்பின் அன்றைய நிலைபாடு, அதன்மேலுள்ள ஆழ்ந்த நம்பிக்கை – அவ்வளவுதான் அவர்கள். இது அவர்களை திரளாக ஒட்டிவைக்கிறது. பொய்யான ஓர் ஆற்றலை அளிக்கிறது.

 

இக்கூட்டத்தினர் இலக்கியவாதிகளை சிந்தனையாளர்களை இப்படி அணுகுவதில் என்ன ஆச்சரியம்? தங்கள் தலைவர்களுக்கு அளிக்கும் நஞ்சில் ஒரு துளியைத்தான் அவர்கள் இலக்கியவாதிகளுக்கு அளிக்கிறார்கள்.

 

இவர்கள் இப்படி என தெரியும். ஆகவே எந்த ஏமாற்றமும் இல்லை. ஏனென்றால் அப்படியெல்லாம் நம்பிக்கையும் இருந்ததில்லை. மெய்யாகவே ஒரு துளிகூட சோர்வோ கசப்போ இல்லை.

 

எனக்கு ஒரு செயல்திட்டம் உள்ளது. அது எனது குருவழிகாட்டல். நான் எழுத்தாளன் மட்டும் அல்ல. முப்பதாண்டுகளாக பண்பாட்டுச் செயல்பாட்டாளனாக மட்டுமே என்னை எண்ணிக்கொள்கிறேன். இங்கே நான் ஒரு பண்பாட்டுச் சொற்களனை உருவாக்க விரும்புகிறேன். எந்தக்கருத்தையும், பார்வையையும் நிலைநாட்டுவதல்ல என் நோக்கம். ஒரு சொற்களனை உருவாக்குவது மட்டுமே. அதன் எல்லா குரல்களையும் ஒலிக்கவிடுவது மட்டுமே

 

என் எழுத்துக்கள் வழியாக அதை தெளிவாகவே முன்வைக்கிறேன். அது இந்திய மரபின்மீதான ஆய்வுநோக்கு கொண்ட தொடர்ச்சியை பேணுவது. படைப்பூக்கத்தின் கட்டின்மையை நம்புவது. படைப்பூக்கம் என்பது பண்பாட்டின் ஆழத்தில், அதன் அகாலத்தில் இருந்து வருவது என கருதுவது. எளிமையான அரசியல் சொல்லாடல்களுக்கு அப்பால்சென்று அழியாத சில தொடர்ச்சிகளை நிலைநிறுத்துவது.

 

படைப்பூக்கம் என்பது மெய்மை என மானுடம் உணரும் ஒரு பெருநிலையின் சிறுவெளிப்பாடு. அந்த மெய்மையைச் சென்றடைய இங்கே ஒரு பெருவழி இருந்துள்ளது. அதற்குப் பலகிளைகள் இருந்துள்ளன. அவை நவீன நோக்குக்கு இசைவுகொள்ளவேண்டும். அவை எளிமையான அன்றாடத் தர்க்கங்களால் அழியவிடப்படக்கூடாது. நான் பலவாறாக முன்வைப்பது இதுவே.

 

இது முழுக்கமுழுக்க மெய்யியலுக்கும் அழகியலுக்குமான உறவடல். அறிவுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வுகளுக்கும் அறிவார்ந்த தளத்திற்குமான பரிமாற்றம். ஆன்மிகத்துக்கும் தத்துவத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையேயான ஓர் இன்றியமையான ஊடாட்டம். இதில் அன்றாட அரசியலுக்கு எந்த இடமும் இல்லை.

 

அதை நான் முன்வைக்கையில் அதில் ஏதேனும் ஒருபகுதியை ஏற்று சிலர் என்னை நோக்கி வருகிறார்கள். சிலர் என்னை புரிந்துகொள்ள முயல்கிறார்கள். என்னில் ஒரு பகுதியையேனும் பெற்றுக்கொள்கிறார்கள். தாங்களே சிலவற்றை வளர்த்துக்கொள்கிறார்கள். அவ்வண்ணம் இந்த சொற்களனில் ஒருபகுதி ஆகிறார்கள்.

 

உண்மையில் என் செயல்பாடு அவர்களைநோக்கி மட்டுமே. அவர்கள் வழியாகவே இச்சொற்களன் மேலே செல்கிறது. ஆனால் வருபவர் எவரையும்  நான் வடிகட்டுவதில்லை.  எவர்மேலும் தீர்ப்பை உருவாக்குவதுமில்லை. பெறுவதும் மறுப்பதும் அவரவர் தகுதிப்படி, தேவைப்படி. எவர் விலகினாலும் வசைபாடினாலும் எனக்கு ஒன்றுமில்லை, அது அவர்களின் பிரச்சினை

 

இச்செயல்பாடு ஒரு தனிநபரால் செய்யப்படுவதல்ல. இது ஒரு சிறு திரளால்தான் செய்யப்பட முடியும். ஆகவே என்னை சற்றேனும் புரிந்துகொள்கிற, என் எண்ணங்களை ஓரளவேனும் ஏற்றுக்கொள்கிற வாசகர்களை சூழ அமைத்துக்கொள்கிறேன். அவர்கள் எனக்கு நண்பர்களாகி நீடிக்கிறார்கள். அவர்களை திரட்டுவது என் பொதுநோக்கத்துக்காக மட்டுமே.

 

அவர்களிடமிருந்து எதையும் தனிப்பட்டமுறையில் பெற்றுக்கொள்வதில்லை. அந்நிலையில் என்றும் இருந்ததில்லை.  ஒருவேளை நான் இதிலிருந்து தனிப்பட்டமுறையில் ஏதேனும் பெற்றுக்கொள்வதாகத் தோன்றிவிடுமோ என்ற சிறு ஐயம் வந்தாலே அதை தவிர்த்துவிடுகிறேன். அதேசமயம் என் இயல்பால் நண்பர்கள் , சகஎழுத்தாளர்கள் அனைவருக்குமே தனிவாழ்க்கையிலும் உறுதுணையாகவே இருந்து வருகிறேன்.

 

அதேசமயம் இந்த இலக்கும் செயல்பாடும் எனக்கு மதநம்பிக்கை போன்ற ஒன்று அல்ல. இது என் வாழ்க்கையின் மையமும் அல்ல. எழுத்து, வாசிப்பு ,பயணம், நண்பர்கள் ஆகியவையே என் கொண்டாட்டங்கள். அவற்றிலேயே வாழ்கிறேன்.  ’எல்லாமே முக்கியம்தான் ஆனால் எதுவுமே முக்கியமல்ல’ என்பது ஆத்மானந்தர்  கூறிய வரி. அதை ‘இது முக்கியம்தான் ஆனால் மிகவும் முக்கியமல்ல’ என்று எனக்காக மாற்றிக்கொண்டிருக்கிறேன். ஆகவே எப்போது வேண்டுமென்றாலும் இதையெல்லாம் அப்படியே விட்டுச்செல்லவும் தயங்கமாட்டேன்

 

எதிலும்  தீவிரப்பற்று எல்லாம் இல்லை. வாளைப்பிடிப்பதுபோல செயலைப் பற்றுக என்றார் நித்யா. வாள் கையிலிருந்து தெறிக்கவும்கூடாது, வாளில் படும் அடி கைக்கு வரவும் கூடாது

 

ஆகவே  எப்போதும் ஊக்கம்தான். எல்லா நாளும் அன்றைய கொண்டாட்டம்தான். ஆகவே அர்ஜுனா ’போய்னே இரு’

 

 

ஜெ

 

முந்தைய கட்டுரைமாணவர்களுக்கான இலக்கிய வாசிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62