ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி

கடவுச்சீட்டு வாங்க

 

அன்பு ஜெ,

 

நலம்தானே?

 

ஜீவகுமாரனின் “கடவுச்சீட்டு” குறித்த என் சிறிய வாசிப்பனுபவம்…

 

***

 

ஜீவகுமாரன் அவர்கள் பெயரை ஒரே ஒரு முறைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெ-யின் ஆஸ்திரேலிய பயணக் கட்டுரைகளில் ஒன்றில் ஜீவகுமாரன், அவரின் நூல் வெளியீட்டிற்கு ஆஸ்திரேலியா வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

 

நண்பர் சக்தியிடமிருந்து “கடவுச்சீட்டு” நாவலை படிக்க வாங்கிய பொழுது, சக்தி “நல்ல நாவல் சார். படிச்சுப் பாருங்க. ஜெ சார் ஒருமுறை நிகழ்வில் பேசும்போது ஜீவகுமாரன் பற்றி சொல்லியிருந்தார்” என்றார்.

 

***

 

இரண்டு நாட்களுக்கு முன்பு எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல்தான் நாவலைக் கையிலெடுத்தேன். நாவல் முதல் பகுதியிலேயே உள்ளிழுத்துக் கொண்டது.

 

சிறிய நாவல்தான். மூன்று பகுதிகளாக சின்னச்சின்ன அத்தியாயங்களோடு இருந்தது. பரிச்சயமான இலங்கைத் தமிழ். வாசிப்பதற்கு எளிமையாயிருந்தாலும் அப்புலம்பெயர் வாழ்வின் ஒரு வட்டச் சித்திரம், படித்து முடித்ததும், வாழ்வு பற்றிய ஏதேதோ தத்துவார்த்தமான வினாக்களை மனது யோசித்து பெருமூச்சிட வைத்தது.

 

நாவலின் ஆன்மாவை உணர்ந்தேன். ஜீவகுமாரன் எதை வாசகருக்கு கடத்த நினைத்தாரோ அது என்னை வந்தடைந்தது.

 

மிகு வர்ணணைகளோ, மிகு சூழல் சித்தரிப்புகளோ இல்லாத நேரிடையான நாவல். ஆனால் நாவல் முடியும்போது, மனதை என்னவோ செய்தது.

 

காதல் இணை தமிழும் சுபாவும் ஏஜெண்ட் மூலமாக டென்மார்க்கிற்கு அகதிகளாக செல்வதில் ஆரம்பித்து, அங்கு மூன்று குழந்தைகள் பெற்று வளர்த்து அவர்கள் பெரியவர்களாகி, வாழ்வின் ஏற்றமும் இறக்கமுமான சூழ்நிலைகள் சந்தித்து, இறுதியில் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் தனியே இலங்கை திரும்புகையில் முடிகிறது நாவல்.

 

டென்மார்க்கின் அகதிகள் நிர்வாகம் சம்பந்தமான விஷயங்கள் எனக்குப் புதிது. தெரிந்து கொண்டேன். ஒரு புலம்பெயர் தமிழ் குடும்பம், என்னவிதமான கலாச்சார, பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமோ அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள் தமிழும், சுபாவும். சொந்த நாட்டினுள் நிலவும் தீண்டாமை, புலம்பெயர்ந்தவர்களூடே புலம்பெயர்ந்த நாட்டிலும் விரிகிறது.

 

பொருளாதாரச் சிக்கல்களையாவது எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால், நம் மண்ணின் மணத்தை உள்ளில் வைத்துக் கொண்டு, அந்த அயல் மண்ணின் கலாச்சாரத்தை எதிர்கொண்டு அலைக்கழிந்து, குழந்தைகளுக்கு வேர்களைப் புரிய வைக்க முடியாமல், கண்முன்னால் குழந்தைகள் தங்களுக்கு அயலாய் வளர்ந்து நகர்வது கண்டு, எதுவும் செய்ய முடியாத வேதனை இருக்கிறதல்லவா…

 

 

வயதுக்கு வந்த மூத்த பெண் சுமிதாவின் “சாமத்திய வீடு” சடங்கை தங்கள் கலாசாரப்படி விமர்சையாக் கொண்டாடுகிறார்கள் தமிழும் சுபாவும்.

 

பள்ளியில் படிக்கும் சுமிதா இரண்டு கிழமைகள் வகுப்புடன் நார்வே செல்கிறாள். திரும்பி வரும் போது அவள் வழக்கமான சுமிதாவாக இல்லை. மாதவிலக்கு தள்ளிப் போயிருக்கிறது.

 

சுபா பயந்தது போல் டாக்டர் ப்ரெக்னன்சியை உறுதிசெய்ய, கோபம் கொண்ட தமிழ் சுமிதாவை மருத்துவமனையிலேயே ஒரு அறை விட்டு, சுபாவையும் சுமிதாவையம் கூட்டிக்கொண்டு சுமிதாவின் பள்ளிக்குச் சென்று, வகுப்பாசிரியரியையிடம் கண்களில் அனல் கக்க “உங்களை நம்பித்தானே பிள்ளையை நோர்வேக்கு அனுப்பினனாங்கள்?” என்கிறான்.

 

நடந்ததை புரிந்து கொண்ட வகுப்பாசிரியை கேட்கிறார் “நீங்கள் பயணத்திற்கு அனுப்பும் போது பிள்ளைக்கு கர்ப்பத்தடை மாத்திரைகள் கொடுத்து விடவில்லையா?”

 

***

 

செல்லத்துரை அண்ணை, இராகுலன், லக்ஷனா, கரீனா, சிவாஜினி, செந்தில், பென்ரா டீச்சர்…எல்லோரைப்பற்றியும் எழுத ஆசைதான்… பதிவு நீண்டுவிடும்.

 

***

 

இருபத்தைந்து வருடங்கள் கழித்து இலங்கை திரும்பும் தமிழ், சுபாவின் லக்கேஜ்களை சோதனை செய்ய திறக்கும் போது, சுங்க அதிகாரி “டென்மார்க்கிலை இருந்து கனகாலத்தாலை வரியள்…கனக்க சாமான்கள் கொண்டு வந்திருப்பியள்” என்றவாறு திறந்தபின் உள்ளே தமிழ் சுபாவின் பழைய உடுப்புகள் மட்டுமே இருப்பது பார்த்து அதிசயிக்கிறார். பெட்டியை மூடி “உங்க நாட்டுக்காரர் ரொம்ப சாமான்களோடை வருவாங்கள்” என்கிறார்.

 

தமிழும் சுபாவும் நினைத்துக் கொள்கிறார்கள் “பெற்றதைவிட அங்கே இழந்ததே அதிகம்”

 

***

 

வெங்கி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62
அடுத்த கட்டுரைசிற்பக்கலையும் சுவாமிநாதனும்