பகுதி ஒன்பது : சிறகெழுகை – 2
யுயுத்ஸு யுதிஷ்டிரனின் சிற்றவைக்குச் சென்றபோது தொலைவிலேயே சிரிப்பொலியை கேட்டான். அறியாமல் கால்தயங்கி நின்றான். திரும்பி தன் குடிலுக்கே சென்றுவிடலாமா என்ற எண்ணம் எழ, அதை தவிர்த்து நிலத்திலிருந்து பிடுங்குவதுபோல் காலைத் தூக்கி வைத்து, முன் சென்றான். யுதிஷ்டிரனின் அவையில் அவருக்கு சுற்றிலும் அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் இருப்பதை முதற்கணத்தில் அவன் கண்டான். தௌம்யர் பீடத்தில் அமர்ந்திருக்க சற்று அப்பால் இளைய யாதவர் மறைந்ததுபோல் அமர்ந்திருந்தார். அங்கிருந்து பார்த்த போது அவர்கள் இருவரின் உடல்களும் பாதி பாதியாக இணைந்து ஓருடல்போல் தெரிந்தனர்.
விதுரரும் அங்கிருக்கக்கூடும் என்று எண்ணி அவன் சூழ்ந்திருந்த முகங்களைத் தொட்டு விழிசுழற்றி அவர் இல்லையென்பதை கண்டுகொண்டான். தௌம்யரின் மாணவர்களும் ஆணையேற்கும் ஏவலர்களும் காவலர்தலைவர் இருவரும் அங்கிருந்தனர். யுயுத்ஸு யுதிஷ்டிரனை அணுகி தலைவணங்கி முகமன் உரைத்தான். சிரித்துக்கொண்டிருந்த முகம் அவ்வாறே மலர்ந்திருக்க அவர் அவனை நோக்கி “என்ன செய்திகள்?” என்றார். ஒரு வேடிக்கை வினா என்று அது தோற்றமளித்தது. “ஒவ்வொன்றும் முறையாக நிறைவு பெற்றுள்ளன, அரசே” என்று யுயுத்ஸு சொன்னான்.
“ஆம், முறையாக நிகழ்ந்துள்ளன” என்று யுதிஷ்டிரன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். பின்னர் இளைய யாதவரை நோக்கி திரும்பி “அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்ததுபோல் உணர்கிறேன், யாதவனே. முறையாக செய்யப்பட்ட ஒன்று முழுமையடைகிறது. அம்முழுமையால் அது நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது என்று நெறிநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இன்று அதை தெளிவாக உணர்கிறேன்” என்றார். இளைய யாதவர் புன்னகை புரிந்தார். “முழுமையடைந்தது என்பதையே அது அளிக்கும் விடுதலையிலிருந்து உணரலாம் போலும்” என யுதிஷ்டிரன் மேலும் சொன்னார்.
பின்னர் சற்றே முகம் மாறி நீள்மூச்செறிந்து “மெய்யுரைப்பதென்றால் இந்நீர்க்கடனை இங்கே இவ்வண்ணம் செய்து முடிக்க இயலுமா என்பதே எனக்கு ஐயமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இது ஒருபோதும் நிகழப்போவதில்லை என்றே எண்ணினேன். என் இயற்பிழைகள், ஈட்டிய பிழைகள், தெய்வங்கள் முனிந்த சொற்கள் அனைத்தும் என் மேல் அழுத்த இதை செய்து முடிப்பதிலிருந்து நான் அகற்றப்படுகிறேன் என்று தோன்றியது. ஒரு கணக்கில் அது நன்று. இவையனைத்தும் இவ்வண்ணம் குறையின்றி நிகழ்ந்தமையால்தான் இவற்றிலிருந்து இத்தருணம் விடுதலை பெற்றிருக்கிறேன்” என்றார்.
இளைய யாதவர் யுயுத்ஸுவை நோக்கி “நம் படைகளிலோ ஏவலர் அணிகளிலோ உளக்குறையென்று ஏதேனும் கூறப்பட்டதா?” என்றார். “இல்லை, அரசே. நான் ஒற்று உசாவியவரை அவ்வண்ணம் ஒரு சொல்லும் உரைக்கப்படவில்லை” என்றான். “பெரும்பாலானவர்கள் காலையில் பதற்றம் கொண்டிருந்தனர். நீர்க்கடனின்போது கொந்தளித்தனர். இப்போது அமைதியடைந்துள்ளனர்.” “அவர்கள் மெல்ல மீண்டும் உயிர்த்துடிப்படைவார்கள். பேசிக் குவிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் சொல்லிக்கொள்வதற்கு விந்தையான பல நிகழ்வுகள் இங்கே நடந்திருக்கின்றன” என்று பீமன் சொன்னான். “அவற்றை ஏற்கெனவே தாங்கள் அறிந்திருந்தார்கள் என்றும், பிறர் அறியாத ஒன்று தன்னிடம் இருக்கிறதென்றும் நடித்துக்கொண்டு, பேசிப் பேசி கடந்து செல்ல அவர்களுக்கு இன்னும் நெடும்பொழுதாகும்.”
நகுலன் “ஆம், அரசர்கள் என்போர் மக்களின் பொருட்டு மேடையில் நடிக்கும் கூத்தர்கள்போல என்றொரு சொல் உண்டு. நாம் நடிகர்கள். இளிவரலும் துயரும் நடிப்பவர்கள். ஒவ்வொன்றுக்கும் உச்சத்தை மண்ணில் நிகழ்த்திக்காட்டுபவர்கள்” என்றான். யுதிஷ்டிரன் “இளையோனே, ஷத்ரியர்கள் ரஜோகுணம் நிறைந்தவர்கள். ரஜோகுணம் என்பது எழுவிசை. எழுவதனைத்தும் அதன் உச்சத்தை சென்றடைந்தே தீரும். இப்புவியில் பிற மூன்று குலத்தார்க்கும் இல்லாத பேருவகையும் கடுந்துயரும் ஷத்ரியர்களுக்கு உண்டு. அதற்குரிய வாய்ப்புகளும் இடர்களும் அவர்களுக்கு அமையும். உச்சங்கள் அமைவதனாலேயே அவர்கள் உதறிச்சென்று மேலெழவும், விண்தொட்டு அமையவும் வாய்ப்புண்டு” என்றார்.
அவ்வெண்ணத்தின் வழியாகச் சென்று யுதிஷ்டிரன் தொடர்ந்தார். “நூல்களை உசாவுகையில் ஒன்று தெரிகிறது, இம்மண்ணில் அமைதியான வாழ்க்கை ஷத்ரியர்களுக்கு விதிக்கப்படவில்லை. அந்தணர் அறியும் வாழ்வின் அமைதியை ஒருபோதும் ஷத்ரியர்கள் எண்ணி நோக்க இயலாது. ஆனால் இங்கிருந்து விடுபட்டு எழுபவர்கள், இங்கு அமையா பேருண்மை ஒன்றை சென்று தொடுபவர்கள், அங்கிருந்து அதை கொண்டு வந்து இங்கு நிலை நாட்டுபவர்கள் பெரும்பாலும் ஷத்ரியர்களே. அந்தணர் அவற்றை விரித்துரைக்கலாம். அவற்றில் இங்குள்ள மானுடருக்கு பயன் தருவனவற்றை மட்டும் சொல்லிப் பரப்பலாம். நிலைகொண்டு அவற்றை இங்கு நிலைநாட்டலாம். சென்று தொடும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஏனெனில் எதன்பொருட்டேனும் கொல்லவும் சாகவும் உலகனைத்தையும் வெல்லவும் முற்றிழக்கவும் துணிபவர்களே அனைத்தையும் அடைகிறார்கள்.”
யுயுத்ஸு “இன்றைய செய்திகளை நான் கூறிவிடுகிறேன், அரசே” என்றான். “ஆம், கூறுக!” என்றார் யுதிஷ்டிரன். “நாளை காலையிலேயே முக்தவனத்தை ஒழிந்து இங்கிருந்து நாம் கிளம்பவேண்டும். சடங்கு முடிந்த பின்னர் ஓரிரவுக்கு மேல் நீர்க்கடன் அளிக்கும் படித்துறையில் தங்கலாகாது என்பது நெறி” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், கூறினார்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நாம் கிளம்பவேண்டியதுதான். நம் உள்ளம் இவ்விடத்தைவிட்டு ஏற்கெனவே எழுந்துவிட்டிருக்கிறது.” யுயுத்ஸு “நாம் அஸ்தினபுரிக்கு எப்போது செல்கிறோம் என்பதை வகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்குரிய நற்பொழுதும் முறைமைகளும் முடிவு செய்யப்படவேண்டும்” என்று சொன்னான்.
“நாம் அஸ்தினபுரிக்கா செல்கிறோம்?” என்று பீமன் கேட்டான். “ஆம், அஸ்தினபுரிக்குத்தான் செல்லவேண்டும்” என்றார் யுதிஷ்டிரன். “பிறிதொரு நகரத்திற்குள் முதல் காலடியை வைக்கலாகாது. நாம் வென்றிருக்கிறோம். நமது நகர்நுழைவு அதற்குரிய முறையிலேயே நிகழவேண்டும். அது பாரதவர்ஷமெங்கும் தெரியவேண்டும். எனில் மட்டுமே நமது வெற்றியை ஆழ நிலைநாட்ட முடியும்.” சகதேவன் “ஆம், அதுவே முறை” என்றான். “நகர்நுழைவு என்பது வெற்றி அறிவிப்பு மட்டும் அல்ல, நாம் கொள்ளும் முதல்மங்கலமும் கூட.”
யுதிஷ்டிரன் “தௌம்யர் இங்கிருக்கிறார். இளையோனும் பொழுது கணிக்க அறிந்தவன். அவர்கள் கூறட்டும், நாம் எப்போது கிளம்புவது, எத்தருணத்தில் அங்கு சென்று சேர்வது என்று” என்றார். “இங்கிருந்து நாம் மட்டுமே கிளம்புகிறோம்” என்று யுயுத்ஸு சொன்னான். “பேரரசரும் பேரரசியும் இன்று அந்தியிலேயே இங்கிருந்து கிளம்பி ரிஷபவனம் நோக்கி செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கான குடில்களை அமைக்கும்படி ஆணை சென்றுள்ளது” என்றான். “ரிஷபவனத்திற்கா? அது இங்கிருந்து நெடுந்தொலைவில் அல்லவா உள்ளது?” என்று யுதிஷ்டிரன் கூவினார். “நமது ஆட்சிக்குட்பட்ட நிலமும் அல்ல. அரக்கர்களும் அசுரர்களும் ஆளும் காடு.”
“ஆம், அஸ்தினபுரியின் கோல்எல்லையிலிருந்து அகன்றுவிடவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. ஆணையிடுகையிலேயே அதைத்தான் சொன்னார்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் சிலகணங்கள் அவனை வெறும் விழிகளால் நோக்கிவிட்டு திரும்பி இளைய யாதவரை பார்த்தார். இளைய யாதவர் “அவ்வண்ணம் அவர் விழைவதில் பொருள் உள்ளது, அரசே” என்றார். யுதிஷ்டிரன் நீள்மூச்சுவிட்டு “ஆகுக!” என்றார். பின்னர் பீமனை நோக்கிவிட்டு “அங்கும் நமது ஒற்றர்களும் மறைமுக காவலர்களும் நிற்க இயலும்” என்றார்.
“வேண்டியதில்லை” என்று இளைய யாதவர் கூறினார். “அவர் இன்று எந்தக் குலத்திற்கும் தலைவரல்ல. எந்நாட்டுக்கும் பேரரசரும் அல்ல. முடிதுறந்து குடியும் துறந்து இங்கிருந்து செல்கிறார். எனவே அரக்கர்களுக்கோ அசுரர்களுக்கோ அவரிடம் பகையேதும் இருக்க வாய்ப்பில்லை.” யுதிஷ்டிரன் “அக்காட்டில் அவர்கள் என்ன செய்யக்கூடும்? அரண்மனையில் மைந்தருடன் மகிழ்ந்திருப்பதே பேரரசரின் உள்ளத்திற்கு உகந்ததென்று நான் அறிவேன். இங்கு இன்னமும் பெண்டிர் இருக்கிறார்கள். நம் குலம் இன்னும் முளைத்தெழும். அவர் தோள்களையும் கைகளையும் நிரப்பும் குழவிகள் அரண்மனையில் நிறையும். இங்கு நம்முடன் இருப்பதொன்றே அவர் செய்யக்கூடுவது” என்று யுதிஷ்டிரன் கூறினார்.
“அவருடைய விழைவு வேறு” என்றான் யுயுத்ஸு. “அவரிடம் சென்று நான் மன்றாடினால் என்ன? உகந்தது இதுவென்று வலியுறுத்திக் கூறினால் இங்கு அவர் தங்கக்கூடும். ஒருவேளை அவர் எதிர்பார்ப்பதே இவ்வண்ணம் நான் சென்று அடிபணிந்து மன்றாடவேண்டும் என்பதாகக்கூட இருக்கலாம்” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் “இல்லை, இனி அவர் தோள்களில் எந்த மைந்தனும் அமர முடியாது. இதுவரை குழந்தைகளை அவர் பார்த்த கண்ணல்ல இன்று அவரிடம் இருப்பது” என்றார். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அரசே, அவர் இனிமேல் குழந்தைகளை விரும்பமாட்டார். இன்று அவர் பெருந்தந்தை அல்ல” என்று இளைய யாதவர் சொன்னார். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் மீண்டும் கேட்டார்.
தௌம்யர் “யாதவ அரசர் கூறுவது உண்மை. இன்று அவர் தொடும் குழவிகள் அவரிடமிருந்து உளம் நிறைந்த நற்சொல்லை பெறமாட்டார்கள். அவரால் எச்சமின்றி வாழ்த்தவும் இயலாது. மகவிலியின் வாழ்த்து மைந்தருக்கு உகக்காதென்பார்கள். மைந்தரை இழந்த தந்தையின் கைத்தொடுகையும் நாவெழும் சொல்லும் அவ்வண்ணமே” என்றார். யுதிஷ்டிரன் முகம் சுளிக்க தௌம்யர் “கேட்கையில் இது இரக்கமற்ற சொல்லென்றே தோன்றும். சில உண்மைகள் இரக்கமற்றவை” என்றார். யுதிஷ்டிரன் ஒன்றும் சொல்லவில்லை. சிலகணங்கள் அங்கே அமைதி நிலவியது.
“அவர் அரசியுடன் தனித்து தங்கி அங்கு என்ன செய்யப்போகிறார்? தவம் செய்வது அவர் இயல்பல்ல” என்றான் சகதேவன். “சிலர் விழைந்து தவம் இயற்றுகிறார்கள். சிலர் தவம் நோக்கி செலுத்தப்படுகிறார்கள். கணமேனும் தவம் அமையாத வாழ்க்கையே மண்ணில் இல்லை என்பார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நோயும் முதுமையும் தனிமையும் தவமாகக்கூடும்” என்றபின் “தனிமை தவமாக மாறும், கைவிடப்பட்டு அமையும் தனிமையே ஆயினும்” என்றார்.
மீண்டும் அங்கு சிலகணங்கள் அமைதி நிலவியது. யுயுத்ஸு அதை கலைத்து “அரசே, தாங்கள் வந்து பேரரசரை இன்று வழியனுப்ப வேண்டும். அவர்கள் கிளம்புகையில் அங்கு தாங்கள் இருப்பது நன்றென்று எண்ணுகிறேன்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம், அது என் கடமை. நாங்கள் ஐவரும் வருகிறோம்” என்றார். யுயுத்ஸு “காசிநாட்டரசி பானுமதியும் இளையவர்கள் இருவரும் இங்கிருந்து நேராகவே காசிநாட்டுக்கு செல்லவிருக்கிறார்கள். காசிநாட்டரசி செல்வதற்கு காசியிலிருந்து இன்றிரவே இங்கு படகு வரும் என்று செய்தி வந்துள்ளது” என்றான்.
யுதிஷ்டிரன் “ஆம், அதுவே முறை” என்றார். “காசிநாட்டரசியையும் தாங்கள் வந்து முகமன் உரைத்து வழியனுப்புவதே முறையாகும்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், அதை செய்யவேண்டும் நான்” என்று யுதிஷ்டிரன் கூறினார். “பிற இளவரசியரும் இங்கிருந்தே தங்கள் பிறந்த நாடுகளுக்கு செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக படகுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்பணியைத்தான் இன்றிரவெல்லாம் நான் செய்யவேண்டியிருக்கிறது. நாளை முதற்கதிர் எழுகையில் இந்த ஈமக்கடன் நிலையில் நாம் மட்டுமே இருப்போம். இங்கிருந்து பிற அனைவரும் சென்ற பிறகே நாம் கிளம்பவிருக்கிறோம்.” யுதிஷ்டிரன் நீள்மூச்செறிந்தார். ஆனால் அவர் முகத்தில் இனிய களைப்பொன்றே தெரிந்தது.
யுயுத்ஸு “விதுரர் இன்னும் சற்று நேரத்தில் இங்கிருந்து கிளம்பவிருக்கிறார்” என்றான். அவர் “தன் மூத்தவரை வழியனுப்பிவிட்டுச் செல்வார் என்று எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரன். “அவர் முன்னரே அவரிடமிருந்து விடைபெற்றுவிட்டார்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவரையும் நான் வந்து வழியனுப்ப விழைகிறேன். அரச முறைமையில் அதற்குத் தடையில்லை எனில்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். யுயுத்ஸு “தடையில்லை என எண்ணுகிறேன்” என்றான். சகதேவன் “இல்லை, அரசர் என்றல்ல, எவருமே துயர்நிலையிலிருந்து செல்பவர்களுக்கு விடையளிக்கலாகாது” என்றான். “ஆம், ஆனால்…” என யுதிஷ்டிரன் சொல்ல சகதேவன் “அவர்கள் உதறிச்செல்வது துயரை” என்றான்.
சகதேவன் “நான் விதுரரிடம் பேசினேன். அவர் தங்களிடம் சொல்கொள்ளவோ தங்களை சந்தித்து விடைகொள்ளவோ விழையவில்லை” என்றான். யுதிஷ்டிரன் “ஏன்?” என்று திகைப்புடன் கேட்டார். “அரசே, இவர்கள் அனைவருமே மீளாது விடைகொள்கிறார்கள். மீளாவிடை கொண்டு சென்றாலே துறவு சிறக்கும் என்று நூல்கள் சொல்கின்றன. விடைகொள்கையில் சொல்லும் ஒற்றைச்சொல் ஒரு விதையென உள்ளத்தில் விழுந்து செல்லும் திசையெங்கும் வளர்ந்து சூழ்ந்து சிறைப்படுத்தும் என்றும் அது விட்டுச்செல்லும் அனைத்திலும் தன்னைப் பிணைத்து விடுபடுதலை இல்லாமலாக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கூறாமல் துறவு கொள் என்கின்றன நூல்கள். இவையனைத்தும் துறவுகள்” என்றான்.
யுதிஷ்டிரன் விழிகள் தத்தளிக்க “இச்சொற்கள் அளிக்கும் ஈர்ப்புக்கு இணையே இல்லை. உண்மையில் நான் விழைவது அவ்வண்ணம் ஒரு கூறாத் துறவு மட்டுமே” என்றார். யுயுத்ஸு மேலும் தயங்குவதுபோல் தெரிய பீமன் அதை உணர்ந்து “சொல்க!” என்றான் “அரசியும் விதுரருடனே செல்வதாக தெரிகிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “யார்?” என்றபடி யுதிஷ்டிரன் எழப்போனார். “மூதரசி குந்திதேவி” என்றான் யுயுத்ஸு. “யார் சொன்னது?” என்று உரக்க கேட்டார் யுதிஷ்டிரன். “அவரே என்னை அழைத்து ஆணையிட்டார். விதுரருடன் அவரும் செல்வதற்குரிய ஒருக்கங்களை செய்யச் சொன்னார்.”
“எங்களிடம் கூறும்படி சொன்னாரா?” என்றார் யுதிஷ்டிரன். “இல்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “அவரும் கூறாமல் துறவு கொள்ள விழைகிறார் போலும்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரன் “அன்னையா? இன்று அன்னை இருக்கும் உடல்நிலையில்…” என்றபின் “எனில் நாங்கள் நகர்நுழைவதை அவர் காண வேண்டாமா? அங்கே குருவின் அரியணையில் அமர்ந்து முடிசூடுவதை பார்க்க வேண்டாமா? என்ன சொல்கிறார்?” என்றார். “அவர்கள் அதற்கு விழையவில்லை என்பது தெளிவு” என்றான் யுயுத்ஸு.
“அறிவின்மை! முற்றான பொருளின்மை!” என்று உரக்க கூவினார் யுதிஷ்டிரன். “அன்னை தன் வாழ்நாளெல்லாம் போராடியது அதற்காகத்தான். அஸ்தினபுரியின் முடி சூடி நான் அமர்வதை காணவேண்டுமென்று அவர் எத்தனை இரவுகளில் விழிநீர் வழிய சொல்லியிருக்கிறார்! மும்முடி சூடி நான் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும் என்பதற்காகவே எழுபதாண்டுகளாக அவர் உயிர் வாழ்ந்தார். அதன் பொருட்டே வஞ்சம் கொண்டார். இன்பங்களைத் துறந்தார். மானுடருக்கு மண்ணில் அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் இழந்தார். தான் எந்நிலையிலும் விழையாதனவற்றைக்கூட இயற்றினார். தன் முதல் மைந்தனை துறக்கவும் துணிந்தார். இன்று அவை அனைத்தையும் உதறி அவர் செல்வதென்பது…”
“அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. அவர் உளம் நல்நிலையில் இல்லை. அவரிடம் நான் சென்று பேசுகிறேன். மருத்துவர்கள் அவரிடம் பேசட்டும். சிலநாட்கள் அவர் ஓய்வெடுத்து உடல் தேறட்டும். அதன் பின் முடிவெடுக்கலாம். இன்று அந்த நைந்த உடலிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளுக்கு அவர் பொறுப்பல்ல” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் மெல்லிய குரலில் “அவர் எடுத்து தெளிந்த முடிவு அது. அம்முடிவிலேயே அது தெரிகிறது” என்றார். ”என்ன சொல்கிறாய், இளைய யாதவனே? அன்னை இதுவரை வாழ்ந்ததற்கு என்ன பொருள்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “மெய்மையை வழிதவறிச்சென்று அடைபவர்களும் உண்டு” என்று இளைய யாதவர் சொன்னார்.
சொல்லிழந்து அவரை நோக்கிக்கொண்டிருந்த யுதிஷ்டிரன் பின்னர் “அவ்வாறல்ல. அதை நான் ஒப்ப இயலாது. நான் அவர் அவ்வாறு விடைபெற்றுச் செல்ல ஒருபோதும் ஒப்பமாட்டேன். ஒரு சொல்லேனும் அவரிடம் சொல்லியே அனுப்புவேன். அச்சொல் அவரை திரும்பக் கொண்டுவரும் என்றால் அதுவே என் இலக்கு. எனது சொல் பெறாது அவர் இங்கிருந்து கிளம்ப முடியாது… நான் ஒப்ப மாட்டேன்” என்றார். பீமன் “மூத்தவரே, இத்தருணத்தில் அன்னைக்கு நாம் செய்யக்கூடுவது அவரை விட்டுவிடுவது என்றே தோன்றுகிறது” என்றான்.
“நீ என்ன சொல்கிறாய் என்று தெரிகிறதா? அன்னை நம் பொருட்டே உயிர் வாழ்ந்தவர். நமக்காக அருந்தவம் இயற்றியவர்” என்றார் யுதிஷ்டிரன். “அதை நமக்காக அன்னை செய்தார் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். நாமறியாத ஏணி ஒன்றில் அவர் ஏறிக்கொண்டிருக்கிறார். இப்போது நம்மைக் கடந்து மேலே சென்றுவிட்டார். அவரை நம்மை நோக்கி இழுப்பது நமக்கு பெருமையல்ல” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரன் சகதேவனை பார்த்தார். சகதேவன் “அவர் கூறுவதே மெய். மூத்தவரே, அன்னையை அவ்வண்ணம் விட்டுவிடுவதே நாம் செய்யக்கூடுவது” என்றான். “இல்லையேல் பிறகு அதை எண்ணி நாம் வருந்தவேண்டியிருக்கும்.”
“இத்தருணத்தில் அன்னை பயணம் செய்யக்கூடாது. செல்லும் வழியில் அவர் உயிர் துறந்தால்கூட வியப்பில்லை. பார்த்தாயல்லவா? குடிலிலிருந்து நீர்க்கடன் நிலைவரை வருவதற்கே அன்னையால் இயலவில்லை” என்றார் யுதிஷ்டிரன். “அவ்வாறு உயிர் துறப்பார் என்றால் அதுவும் அவரின் விடுதலை என்று கொள்ளவேண்டியதுதான்” என்று பீமன் சொன்னான். அர்ஜுனனைப் பார்த்து “என்ன சொல்கிறாய், இளையோனே?” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் யுயுத்ஸுவிடம் “அவர் பேசும்போது எங்கேனும் ஒரு சொல்லேனும் என்னைப்பற்றிய குறிப்பு இருந்ததா?” என்றான். யுயுத்ஸு “இல்லை” என்றான். அர்ஜுனன் “எனில் அவர் கிளம்புவது நன்று” என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் யுதிஷ்டிரன் அவனையும் இளைய யாதவரையும் மாறி மாறி பார்த்தார். “இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எண்ணுவதில் பொருளில்லை. நாம் அன்னையை அவ்வாறு விடமுடியாது. அன்னை நம்மை விட்டுச்சென்றால் அதன் பழி அனைத்தும் நம்மேல் வந்து விழும். இன்று நமது குடியினர் எவரும் நம்மேல் கனிவுடன் இல்லை என்பதை மறக்கவேண்டியதில்லை. இப்பேரழிவு அனைத்திற்கும் பொறுப்பை என் மேல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் அனைவரும் அப்பழியை மணிமுடியென அணிந்துகொண்டிருக்கிறோம். அஸ்தினபுரிக்குள் நுழைந்து முடிசூட்டி அமர்கையில் அன்னை நம்மிடம் இல்லையெனில் அவரும் நம்மை கைவிட்டுவிட்டார் என்றே தோன்றும்” என்றார்.
உடைந்த குரலில் “அன்னை இல்லை எனில் எவருக்காக நான் அம்முடியை சூடுகிறேன்? தந்தை விட்டுச் செல்கிறார். அன்னை விட்டுச் செல்கிறார். மூத்தவர்கள் பெரியவர்கள் எவரும் உடனில்லை. எவருக்காக இதை செய்யவேண்டும்?” என்றார் யுதிஷ்டிரன். “வரும் தலைமுறைகளுக்காக” என்று யுயுத்ஸு சொன்னான். “வருந்தலைமுறையா? அடுத்த தலைமுறையினன் இங்கு நம்மை விட்டுச் சென்றதை நீ பார்த்தாயல்லவா? குருகுலத்தில் எஞ்சியிருப்பது ஓர் எளிய கரு” என்று யுதிஷ்டிரன் கூறினார். “அக்கரு நிலைகொள்கிறதா என்பதை நோக்க ஒவ்வொரு நாளும் ஒற்றர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.”
அதைச் சொன்னதுமே தன் நாவால் அதை சொல்லி பிழை இயற்றிவிட்டோம் என்று எண்ணி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். யுயுத்ஸு “நம் நலனுக்காக எடுக்கும் முடிவல்ல இது. நாம் இன்று அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. தங்கள் விடுதலையை நாடுபவர்களுக்கு பிறர் அனைவரும் அதற்கான தடை என்றே தோன்றுவார்கள்” என்றான். “அன்னையை நான் அவ்வாறு விடப்போவதில்லை. அன்னையிடம் சென்று மன்றாடவிருக்கிறேன். அவர் கால்களில் தலையை வைத்து கோருகிறேன், அன்னையே என்னுடன் இருங்கள் என்று அழுகிறேன். என் முடிசூட்டு நிகழ்வுக்காவது அவர் இருந்தாகவேண்டும் என்று கோருகிறேன்” என யுதிஷ்டிரன் கூவினார்.
மேலும் உளச்சீற்றம் கொண்டு “அவர் இல்லாமல் இங்கே நாம் முடிசூடக்கூடாது. அது என்னை பெரும்பழியில் கொண்டு சேர்க்கும். இவையனைத்தும் அன்னைக்காக. அவர் அதை உணரட்டும்” என்றார். யுயுத்ஸு “இங்கே சொல்லப்பட்ட பின்னரே நானும் உணர்கிறேன். அவர் உங்களிடம் விடைபெறாதபோது நீங்கள் அவரைக் காணச்செல்வது அத்துமீறல்” என்றான். “ஆம், அத்துமீறல்தான். அன்னை மடிமீது தொற்றித் தவழ்ந்து ஏறும் மகவுபோல அத்துமீறுகிறேன்” என்றபடி தன் மேலாடையை எடுத்து தோளிலிட்டு “கிளம்புக!” என்று தேர் நோக்கி நடந்தார்.