குறள் பற்றி…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். நான் உங்கள் தீவிர வாசகன். உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் ரசிப்பவன். டிவியில் நேற்று நடந்த திருக்குறளைப் பற்றிய விவாதத்தை பார்த்த அதிர்ச்சியில் இந்த கடிதம். திருக்குறள் ஆகட்டும் , பகவத் கீதை ஆகட்டும் இந்த தளத்தில் விரிவான கட்டுரைகள் உள்ளன. குறள் பற்றிய உங்கள் உரையும் யூடூபில் கிடைக்கிறது. ஒருவர் கூட உங்கள் பெயரை சொல்லவில்லை. ஒரு தமிழ் அறிஞர் கடவுள் வாழ்த்து திருவள்ளுவர் எழுதியதே இல்லை என்று சொல்லிவிட்டார் . எவ்வளவு பெரிய அறிவார்ந்த விடயங்கள் இலவசமாக உங்கள் தளத்தில் கிடைக்கின்றன . மனம் பொறுக்காமல் இந்த கடிதம்.
அன்புடன்
கந்தசாமி
புனே
அன்புள்ள கந்தசாமி
திருக்குறள் பற்றி இங்கே நடப்பது அடையாள அரசியல். அதற்கு அப்பால் எவருக்கும் திருக்குறள் பற்றி எந்த ஆர்வமும் இல்லை என்பதே உண்மை. இவர்களின் மற்ற அன்றாட அறிவுச்செயல்பாட்டில் எங்காவது குறள் பேசப்பட்டிருக்கிறதா என்ன?
எல்லாவற்றையும் அரசியல் வழியாக, அதுவும் அன்றாட கட்சியரசியல் வழியாக , மட்டுமே அறியந்நேர்வதென்பது நம் காலகட்டத்தின் மாபெரும் துரதிருஷ்டம். அதை கடந்து எண்ணவேண்டுமென்றால் அந்த விவாதங்களிலிருந்து முழுமையாகவே விலகி நின்றுகொள்ளவேண்டும். அதுவே குறளை அறியும் வழி. குறளை மட்டுமல்ல எந்த ஒரு பேரிலக்கியத்தையும் அறியும் வழி அதுவே. ஏனென்றால் அன்றாட அரசியல் எது ஒன்றையும் குறுக்கிச் சிறிதாக்கி ஒற்றைவரியாக , ஒற்றைப்பிரச்சினையாக ஆக்கிவிடுகிறது
ஜெ