‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59

பகுதி ஒன்பது : சிறகெழுகை 1

யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த நடை எவருக்கேனும் இயலுமா என்று யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். எடையின்மை. தளையின்மை. இறந்தகாலம் இன்மை. ஒருவகையில் எதிர்காலம் இன்மையும்கூட.

இறந்தகாலத்தை உதறிவிடமுடிகிறது. உலகியலாளன் எதிர்காலத்தை ஒருகணமும் அகற்ற முடிவதில்லை. நிகழ்காலத்தின்மேல் அது பேரெடையுடன் ஏறி அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு கணத்தையும் முடிவு செய்கிறது. நாளை என எண்ணாது செய்த ஒரு செயலேனும் தன் வாழ்வில் உண்டா என அவன் எண்ணிக்கொண்டான். திட்டங்கள் கணிப்புகள் சூழ்தல்கள். எதிர்காலமே அனைத்து இன்பங்களின் மேலும் கவியும் நிழல். ஏனென்றால் இன்பங்கள் அனைத்தும் நிகழ்காலத்திலேயே.

எதிர்காலத்தில் இருப்பது அறியமுடியாமை. அங்கிருக்கும் இன்பங்கள் அனைத்தும் வெறும் கற்பனை. அதன்பொருட்டு நிகழ்காலத்தை இழக்கிறார்கள். அறியா இன்பங்களுக்காக அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருகணத்தில் உள்ளம் மலைத்தது. எத்தனை பெரிய மாயையில் சிக்குண்டு உழல்கிறார்கள் மானுடர். அறிவின்மையில் திளைக்கிறார்கள். அறிவின்மையே துயரம். ஊழ் அல்ல. தெய்வங்கள் அல்ல. உடனுறைவோரும் அல்ல. அறியாமையே.

ஸ்ரீமுகர் வந்து “சடங்குகள் இன்னும் சில நாழிகையில் முடியும். நீராடி வருபவர்களுக்குரிய நோன்புணவு ஒருங்கிக்கொண்டிருக்கிறது. முதல் கடனாளர் நீர் விட்டு எழுந்ததும் ஓர் அறிவிப்பை அளிக்கும்படி சொன்னார்கள்” என்றார். “என்ன உணவு?” என்று யுயுத்ஸு கேட்டான். “கம்பரிசிச் சோறும் காட்டுக்கீரை கடைசலும் மட்டுமே” என்றார் ஸ்ரீமுகர். “இங்கிருந்து நீங்கும்வரை அதுவே உணவு. இங்கே நீர்க்கடன் முடிந்து ஓர் இரவுக்குமேல் தங்கலாகாதென்பது நெறி.”

“ஆம்” என்று யுயுத்ஸு பரபரப்படைந்தான். “எனில் இன்றேகூட பலர் கிளம்பக்கூடும். அமைச்சர்களுக்கு இனி இங்கே பணிகளேதுமில்லை. அவர்களில் இருவர் இங்கே நின்றால் போதும். எஞ்சியோரில் சந்திரசேனரும் ஹிரண்யரும் சென்று படகுகளை ஒருக்கட்டும்… படகுகள் எங்கே நின்றிருக்கின்றன?” ஸ்ரீமுகர் “இங்கே இடமில்லை என்பதனால் கங்கையின் மறுகரையில் நிறுத்தப்பட்டுள்ளன” என்றார்.

“அது நன்று, அங்கிருந்து ஒவ்வொன்றாக அழைப்பை ஏற்று இக்கரைக்கு வந்து உரியவர்களை ஏற்றிச்செல்லவேண்டும். படகோட்டிகள் ஒருங்கியிருக்கட்டும். அவர்கள் முன்னரே உணவுண்டு காத்திருக்கவேண்டும். பெண்டிர் சிலர் நீர்க்கடன் முடிந்ததுமே கிளம்ப விரும்பலாம்” என்றான் யுயுத்ஸு. “முரசொலி எழுப்ப ஆணையிடுக! நான் கையசைவு காட்டுவேன். உடனே முரசொலி எழவேண்டும்… நோக்குக, மங்கல முரசு அல்ல! சிறுமுரசு.” ஸ்ரீமுகர் தலைவணங்கினார்.

அவன் யுதிஷ்டிரனை நோக்கி சென்றான். யுதிஷ்டிரன் விழிகளிலிருந்து நீர் வடிய தலைமயிர் முகத்தில் சரிந்திருக்க குனிந்து அமர்ந்திருந்தார். முதுசூதர் “சடங்குகளை தொடங்கலாம் அல்லவா?” என்றார். யுதிஷ்டிரன் திடுக்கிட்டு விழித்து “ஆம்” என்றார். முதுசூதர் “இந்த நீர்க்கொடை சடங்கு நன்கு நிறைவுறுக! தடைநீக்கி நின்றருளும் கரிமுகன் அருள் எழுக!” என வணங்கி மஞ்சள் விழுதை உருட்டி வாழையிலைமேல் நிறுவி அதன்மேல் அருகம்புல்லை வைத்து மூத்தவனை பதிட்டை செய்தார். ஒரு துளி வெல்லமும் வெண்மலரும் படைத்து வணங்கினார்.

யுயுத்ஸு அனைத்துப் பூசனைப்பொருட்களும் அங்கே ஒருங்கியிருக்கின்றனவா என்று நோக்கினான். ஒன்றும் குறையவில்லை. ஆனால் ஒன்று குறையும். ஏதோ ஒன்று. அதை கண்டுபிடிக்கவே முடியாது. குறைவது தெரியும்போது இதை எப்படி மறந்தேன் என நெஞ்சு வியக்கும். அதை நிகழ்த்துபவை தெய்வங்கள். தோணிகளை கவிழ்ப்பவை. அணைகளை உடைப்பவை. பெரும்புயல்களை, எரிப்பெருக்கை நிகழ்த்துபவை. பொருட்களைக்கொண்டு மானுடரை வெல்பவை. படைக்கலங்களில் அவை வாழ்கின்றன. கூர்கொண்ட அனைத்திலும் திகழ்கின்றன.

யுயுத்ஸு அறியாது புன்னகைத்தான். அவன் அடைந்த அனைத்து துறவு விழைவுகளும் எங்கோ மறைந்துவிட்டிருந்தன. அவ்வெண்ணங்களை மீட்டெடுக்க முயன்றான். நினைவிலெழவில்லை. சுகோத்ரனின் நடையை எண்ணிக்கொண்டான். ஆனால் அதை நினைவில் தீட்டிக்கொள்ள முடியவில்லை. என் துறவெண்ணம் என்பது என் உலகியல் நோக்கை செறிவூட்டும்பொருட்டே. நான் இங்கே பிணைக்கப்பட்டிருக்கிறேன். இவையனைத்திலும். மீட்பிலாமல். இதோ இந்த ஐவரும்கூட மீளக்கூடும். நான் மீள இயலாது.

சடங்குகள் சீராக முறையாக நடந்துகொண்டிருந்தன. சடங்குகள் செய்துவைப்பவர்களுக்கு ஒரு சீர்நடை இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஒரே விசையில் ஒரே போக்கில் இயற்றுகிறார்கள். செய்துசெய்து பழகியதனாலாக இருக்கலாம். அல்லது இச்செயல்களுக்கு எதிர்விளைவுகள், உடனடிப் பயன்கள் இல்லை என்பதனாலாக இருக்கலாம். சடங்குகள் மட்டுமே இப்படி செய்யப்படுகின்றன. எவருக்கும் எந்தப் பதற்றமும் இல்லை. செய்விப்பவரின் விரைவின்மைக்கு செய்பவரும் தன்னை அளித்துவிடுகிறார்.

சூதர்கள் மெல்லிய குரலில் ஆணைகளை இட யுதிஷ்டிரன் அவற்றை செய்தார். அவர் செய்தபின் பிற நால்வரும் செய்தனர். அவர்கள் ஒன்றுபோல் செய்வதாகத் தோன்றியது. ஆனால் கூர்ந்து நோக்கினால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் அதை செய்தனர். யுதிஷ்டிரனிடம் முதியவரின் நடுக்கம் இருந்தது. பீமனிடம் அவன் கைக்குப் பொருந்தாத செயலின் தடுமாற்றம் இருந்தது. அவன் பெரிய விரல்களால் மெல்லிய மலர்களை எடுக்கமுடியவில்லை. கிண்ணங்களை தேவையற்ற வலிமையுடன் பற்றினான். அர்ஜுனனின் கையசைவுகள் நடனம் போலிருந்தன. புரவிபேணுபவனின் கைகள் என நகுலனின் செயல்கள் காட்டின. அடுமனையாளன் எனத் தெரிந்தான் சகதேவன்.

“மூதாதையரை நினைவுகொள்க!” என்றார் முதுசூதர். யுதிஷ்டிரன் கைகூப்பி கண்களை மூடினார். சூதர் வேகவைத்த சோற்றுருளைகளை கரிய எள்ளுடன் சேர்த்து பிசைந்தார். மெல்லிய குரலில் “வெண்ணிறமான அன்னம் என எழுக அன்னையே, திருமகளே! அன்னையுடன் இணைந்தருள்க, மைந்தனாகிய சனியே! ஒளியும் இருளும் என நீளுலகங்களை கடந்துசெல்க! எங்கள் மூதாதையரின் உலகை சென்றடைக! அவர்களின் பசியும் விடாயும் அணைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

குருகுலத்தின் அரசர்நிரையை அருகே நின்றிருந்த சூதர் உரக்கச் சொன்னார். “முதல்முடிவிலியாகிய விஷ்ணுவுக்கு வணக்கம். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்.” அவருடைய குரல் உணச்சியற்று ஒலித்தது. ஒரு முழவோசை போல. அந்தச் சொற்களை அவ்விருளே சொல்வது போல. “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப் புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக!”

“மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக! குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக!” என இன்னொரு சூதர் தொடர்ந்தார். “குலமூதாதை குருவின் பெயர் நிலைகொள்க! ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என மாமன்னர்களின் வரிசை வாழ்க! பிரதீபரும் சந்தனுவும் விசித்திரவீரியரும் நிறைவுறுக! பெருந்தந்தையர் பேரன்னையராகிய தங்கள் துணைவர்களுடன் விண்பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!”

யுதிஷ்டிரனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “மண்நீத்த மைந்தர்கள் விண்வளர் மூதாதையருடன் நிலைகொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்க! இத்தொல்குடியின் மைந்தர் பெயர்கள் அனைத்தும் இங்கே எழவேண்டும்” என்று முதுசூதர் சொன்னார். “நீத்தாரின் பெயர்நிரையில் இப்போது சற்றுமுன் குடித்தெய்வத்தை நீத்துச் சென்ற இளவரசரின் பெயரும் மீனும் இணையட்டும்.” யுதிஷ்டிரன் திகைப்புடன் நோக்க “அதுவும் நீத்தலே. அவருக்கும் இங்கே அன்னமும் நீரும் அளித்து நிறைவுச்சடங்குகள் செய்வோம். அதன்பின் அவர் உங்களுக்கும் நீங்கள் அவருக்கும் எக்கடனும் இயற்றவேண்டியதில்லை” என்றார் முதுசூதர்.

“ஆம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவருடைய உதடுகள் நடுங்கின. அவர் மீண்டும் நினைவழிந்து விழக்கூடும் என்று முதலில் தோன்றியது. ஆனால் அச்சடங்கை செய்யச் செய்ய அவர் மீண்டபடியே வந்தார். சகதேவன் உறைந்த முகத்துடன் எரியும் அகல்சுடரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். நகுலன் நிலம் நோக்கியிருந்தான். பீமன் தன் கையிலிருந்த அன்னத்தை சீற்றத்துடன் நோக்குபவன் போலிருந்தான்.

சூதர் “பேரரசரிடம் இட்டுச்செல்க எங்களை!” என்றார். யுயுத்ஸு தலைவணங்கி நடக்க ஏழு சூதர்களும் அவனுடன் நடந்தார்கள். அவர்கள் வருவதை திருதராஷ்டிரர் எவ்வண்ணமோ உணர்ந்திருந்தார். அவருடைய தலை நடுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் அருகணைந்தபோது அவர் தொல்பெரும் பறவை ஒன்று சிறகுவிரிப்பதுபோல கைகளை இருபக்கமும் நீட்டினார். யுயுத்ஸு அருகணைந்து “தந்தையே, சடங்குகளுக்குரிய சூதர்கள்” என்றான். அவர் “ஆம்” என்றபடி எழுந்துகொண்டார்.

சூதர்களில் ஒருவர் கையில் சிறுசெப்புச்சிமிழில் களச்சாம்பலை வைத்திருந்தார். இன்னொருவர் தட்டில் பரப்பிய இலையில் பலியன்னத்தை. முதற்சூதர் “வருக!” என்று சொல்லி துழாவிக்கொண்டிருந்த திருதராஷ்டிரரின் கையில் அச்சிமிழை வைத்தார். அது என்ன என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இன்னொரு கையை பற்றி சஞ்சயன் அவரை அழைத்துச்செல்ல தடுமாறும் கால்களுடன் அவர் நடந்தார். தலையைச் சுழற்றியபடி வாயை மென்றபடி வேறெங்கோ நோக்கியவர்போல சென்று கங்கையின் படிக்கட்டை கால் தொட்டதும் நின்றார்.

“என்ன? என்ன?” என்றார். “வருக, அரசே!” என்றார் சூதர். “ஏன்? ஏன்?” என்றார் திருதராஷ்டிரர். “வருக, அரசே!” என்றான் சஞ்சயன். “இல்லை…” என அவர் தயங்கி காலை பின்னெட்டு எடுத்தார். “வருக!” என்றான் சஞ்சயன். அஞ்சும் யானையின் அசைவு என யுயுத்ஸு எண்ணினான். “இல்லை இல்லை” என்று சொல்லி அவர் மேலும் பின்னடைந்தார். “அரசே, இது நீர்க்கடன். நீங்கள் உங்கள் மைந்தர்களுக்கு இயற்றியாகவேண்டியது” என்றான் சஞ்சயன். “இல்லை இல்லை” என்றபடி திருதராஷ்டிரர் மேலும் பின்னடைந்தார்.

கரையில் நின்றிருந்த சங்குலன் இறங்கி அருகே வந்து அவர் தோளை தன் மாபெரும் கைகளால் பற்றி “இறங்குக!” என்றான். “என்ன?” என்றார் திருதராஷ்டிரர். “நீரிலிறங்குக!” என அவன் உறுமல்போன்ற மென்குரலில் சொன்னான். கூடவே அவரை பற்றித்தூக்கி கொண்டுசென்றான். அவர் உடலில் தசைகள் இளகி நெகிழ்ந்து அசைந்தன. அவருக்குள் இருந்து யானையின் உறுமலென ஓர் ஓசை எழுந்தபடியே இருந்தது. அவன் அவரை கங்கைநீருக்குள் கொண்டுசென்றான். குளிர்நீர் பட்டதும் அவர் விலங்குபோல அலறி அவன் பிடியிலிருந்து தப்ப முயன்றார்.

அவன் அவரை நீரில் நிறுத்தினான். சூதர்களிடம் “ம்” என்றான். முதிய சூதர் சற்று அப்பால் நின்றபடி “மூதாதையர்களை எண்ணிக்கொள்க! தந்தையரை எண்ணிக்கொள்க! மைந்தரையும் பெயர் மைந்தர்களையும் எண்ணிக்கொள்க! அவர்களின் எஞ்சிய அன்னத்தை இதோ இந்நீரில் கரைக்கிறோம். அவர்கள் விண்சென்று அமைக! அவர்களின் அன்னம் ஆழியை சென்றடைக! உப்புக்கள் உப்பை, அனல் அனலை, காற்று காற்றை, வெறுமை வெறுமையைச் சென்றடைக! ஆம், அவ்வாறே ஆகுக! “என்றார்.

திருதராஷ்டிரர் திமிறிக்கொண்டே இருந்தார். அச்சொற்களை அவர் கேட்டதாகத் தெரியவில்லை. சங்குலன் அவரை ஓங்கி உலுக்கி “ம்ம்” என்றான். அவர் திடுக்கிட்டு நின்றார். சங்குலன் சூதர்களிடம் மீண்டும் அவற்றை சொல்லச்சொன்னான். அவர்கள் அச்சொற்களை நடுங்கும் குரலில் சொன்னார்கள். “நீரில் நீர் கலக்கட்டும். அனலில் அனல் கரையட்டும். காற்றில் காற்று சென்றமையட்டும். வானம் வானமென்றே எஞ்சட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” அவருடைய குரல் முதுமையும் நடுக்குமாக குழறியது. அவர் விம்மி விழிநீர் வழிய அழுதார்.

“எரிமிச்சத்தை நீரில் ஒழுக்குக, அரசே!” என்றார் சூதர். திருதராஷ்டிரர் “மைந்தா மைந்தா மைந்தா” என விம்மினார். “அரசே…” என்றார் சூதர். சங்குலன் அவரைப் பிடித்து அழுத்த அவர் அச்சிமிழை மார்போடணைத்துக்கொண்டு “மைந்தா மைந்தா மைந்தா” என்று சொல்லிக்கொண்டிருந்தார். “அமிழ்க! அமிழ்க!” என்று சூதர் சொல்ல சங்குலன் அவரை அழுத்தினான். அவர் அவனுடைய விசையால் உடல் தசைகள் நெளிந்து இறுக நின்று பின் மெல்ல மூழ்கினார். “உதிர்த்துவிடுங்கள்… நீரில் விட்டுவிடுங்கள்” என்றார் சூதர். “ம்ம் ம்ம்ம்” என முனகியபடி திருதராஷ்டிரர் அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். சூதர் மீண்டும் சொன்னார். திருதராஷ்டிரர் “ம்ம் ம்ம்” என்றார்.

சூதர் கையால் அவர் கையிலிருந்த சிமிழை தட்டிவிட அது நீருள் விழுந்தது. திருதராஷ்டிரர் பதறி அதை பற்றப்போக அது அமிழ்ந்தது. அவர் “ஆ ஆ” என கூவியபடி நீரை துழாவினார். சங்குலன் அவரைப் பிடித்து நீரில் மூழ்கடித்தான். அவர் எழுந்து வாய் திறந்து மூச்செறிய முகத்தில் நீர் வழிந்தது. மீண்டும் அவன் அவரை முக்கி எடுத்தான். மூன்றாம் முறை முக்கி எடுத்தபோது அவர் விலங்கோசையுடன் கூவிக்கொண்டிருந்தார். அவரை மீண்டும் கரைக்கு கொண்டுவந்தனர். உடல் தளர்ந்து அவர் படிகளில் விழுந்தார். அவர் கையில் அன்னத்தை அளித்தனர். சங்குலன் அவர் கைகளைப் பற்றி அன்னத்தை தலையில் வைத்துக்கொள்ளச் செய்தான்.

அவர் அனைத்தையும் மறந்து கனவிலென திகழ்ந்தார். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சங்குலன் அவரை நீருக்குள் கொண்டுசென்று நிறுத்தினான். சூதர்கள் “அன்னம் அன்னத்தை நிறைவுறச்செய்க! மூச்சு மூச்சை நிறைவுறச் செய்க! அங்கிருக்கும் உலகை இந்த அன்னம் சென்றடைக! அங்கிருப்போர் விடாயை இந்நீர் தணிவிக்குமாறாகுக! அனைவர் பசியையும் போக்குக இந்தத் தூய அன்னம்! தொன்மையான நீரே எங்களை என்றுமழியாத உலகங்களுடன் பிணைத்து நிறுத்து. எளியவர்களாகிய எங்களை மாறாதவற்றுக்கு அருகே நிலைகொள்ளச் செய். உனக்கு வணக்கம்” என்று தொன்மையான சொற்களை சொன்னார்கள். அவர்களின் உதடுகள் ஒன்றென அசைந்து ஒரே குரலெனக் கேட்டன.

“உன்னில் என் மூதாதையரிட்ட அத்தனை அன்னப்பலிகளுக்கும் வணக்கம். என் மைந்தர்களும் கொடிவழியினரும் இடப்போகும் அனைத்து அன்னப்பலிகளுக்கும் மங்கலம். ஆம், அவ்வாறே ஆகுக!” சூதர் திருதராஷ்டிரரிடம் “விரும்பிய ஒன்றை கைவிடுக, அரசே!” என்றார். “ம்?” என்றார் திருதராஷ்டிரர். “விரும்பிய ஒன்றை நீத்தார் பொருட்டு கைவிடுக!” என்றார் சூதர். “விட்டேன் என்று கூறி மூழ்குக!” திருதராஷ்டிரர் கையை அசைத்தார். “விட்டேன் என்னும் சொல்” என்றார் சூதர். சங்குலன் அது தேவையில்லை என்று கைகாட்ட அவர் சரி என தலையசைத்தார். திருதராஷ்டிரர் கையை அசைத்துக்கொண்டே இருந்தார். பின்னர் திடுமென அஞ்சியவர்போல நடுங்கி கரைநோக்கி ஓட முயன்றார்.

அதை எதிர்நோக்கியிருந்தவன்போல அவரை சங்குலன் பிடித்து நீரில் மூழ்கி எழச்செய்தான். அன்னம் நீரில் விழுந்ததும் அங்கே மீன்கள் கொப்பளித்தன. அவர் மூழ்கி மூழ்கி எழுந்ததும் தாடி திரிகளாக நீர்ச்சரடுகளுடன் தெரிந்தது. அவரை அவன் குழவிபோல தூக்கி கரைக்கு கொண்டுவந்தான். படிகளில் அமரச்செய்தான். சஞ்சயன் கொண்டுவந்த மரவுரியை வாங்கி அவன் அவர் தலையை துவட்டத் தொடங்கினான். அவர் குழவி என அவன் கைகளுக்கு தன்னை அளித்தார். கைகளைக் கோத்து மடியில் வைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

யுயுத்ஸு உடல் தளர்ந்து பெருமூச்சுவிட்டான். அப்பாலிருந்து பாண்டவர்கள் ஐவரும் நிரையாக எரிசிமிழ்களுடன் கங்கையில் இறங்கினர். அவர்கள் அச்சடங்குகளைச் செய்வதை அவன் நோக்கி நின்றான். “நீருக்கு அளிக்கப்படுவது நீடுதொலைவு செல்கிறது. அழிவிலா ஆழியைச் சென்றடைகிறது. அனலுக்கு அளிக்கப்படுவது மேல்நோக்கி எழுகிறது. முடிவிலா விண்ணுக்குச் செல்கிறது. அன்னம் நீரில் அமைக! அன்னமென மீண்டு எழுக! ஆவி விண்ணுக்கு எழுக! அங்கே அழிவற்றோருடன் அமைக! என்றுமிருப்பவை என்றும் திகழ்க! இங்கெழுபவை இங்கு மீண்டும் எழுக! சுழல்பவை சுழல்க! மையம் அங்கனமே அமைக! ஆம், அவ்வண்ணமே ஆகுக!”

யுதிஷ்டிரன் நீரில் மூழ்கி எழுந்தார். கைகூப்பியபடி நின்றபோது அவர் அழுவதை காணமுடிந்தது. சூதர் அவர் தோளில் தொட்டு கரைநோக்கி செல்லும்படி சொன்னார். படித்துறைக்குச் சென்றபின் அவர் அன்னத்துடன் மீண்டும் நீரிலிறங்கினார். அன்னமும் நீரில் கரைக்கப்பட்டபின் ஐவரும் தொழுதபடி கங்கையிலிருந்து நீங்கினர். கரைப்படிகளில் நின்று கங்கையை மலரும் அரிசியும் இட்டு வணங்கினர். பின்னர் திரும்பி நோக்காமல் வேள்விநிலம் நோக்கி சென்றனர்.

முழவுகளும் கொம்புகளும் ஓசையிடத் தொடங்கின. சூதர்கள் கைகளைக் காட்ட நீர்ப்பலி இடும்பொருட்டு காத்து நின்றவர்கள் அனைவரும் நிரையாக கங்கை நோக்கி இறங்கினர். நீர்க்கரையெங்கும் உடல்கள் செறிந்தன. அவர்களின் மறுபக்கம் என மீன்கூட்டங்கள் நீர்ப்பரப்பில் நிறைந்திருந்தன. மீன்களும் மானுடரும் நீர்விளிம்புக்கோட்டின் இருபக்கமும் நின்று ஒருவர் கொடுக்க ஒருவர் பெற்றுக்கொண்டனர்.

அவன் அந்நீர்க்கடனை நோக்கி நின்றிருந்தான். நீரிலிருந்து எழுந்த விதுரர் யுயுத்ஸுவை நோக்கி வந்தார். “அனைத்தும் நிறைவுற்றன. இனி ஆகவேண்டியவற்றை முடிப்போம். நான் சொல்வதற்கு ஏதுமில்லை. இங்கே நின்றிருத்தலும் எனக்கு ஆகாது. குடில் மீள்கிறேன்” என்றார். யுயுத்ஸு “ஆம்” என்றான். விதுரர் கொஞ்சம் பதற்றம்கொள்வது போலிருந்தது. அவர் எதையோ சொல்ல விழைவதுபோல. அவர் அதை சொல்லாமல் திரும்ப முயன்று இறுதிக் கணத்தில் திரும்பிக்கொண்டு “நீ மாளிகைமேல் இருந்து விழுந்தவளுக்கு நீர்க்கடன்களைச் செய்வது உண்டல்லவா?” என்றார்.

அவன் திடுக்கிட்டான். அங்கே அதை எதிர்பார்த்திருக்கவில்லை. உடலுக்குள் உள்ளத்தின் அடியாழத்திலிருப்பது. மறந்துவிட்டிருந்தது. ஆனால் ஒரு சொல்லில் சென்று தொடும்படி மிக அண்மையிலும் இருந்திருக்கிறது. “என்ன?” என்றான். “அவள் மல்லநாட்டு இளவரசி அல்லவா?” என்றார் விதுரர். “ஆம், ஆம்” என்றான் யுயுத்ஸு. “அவளுக்கு நீர்க்கடன் செய்வதில்லையா?” என்றார். அவன் “இல்லை” என்றான். அவர் “ஏன்?” என்றார். “நான் அவளை மணம்புரியவே இல்லை. ஒரு சிறு சடங்குதான் நிகழ்ந்தது. முதல்நாளிலேயே அவள் என்னை சூதனென்று அறிந்தாள். மாளிகை மேலிருந்து பாய்ந்து காலொடிந்து கிடந்தாள். மல்லநாட்டுக்கே மீண்டு ஈராண்டில் உயிர்விட்டாள்…”

விதுரர் “ஆம், அவளை நானும் பார்த்ததில்லை. உன் மறுமணத்தின்போதுகூட எவரும் அவளை நினைவுகூரவில்லை” என்றார். “நான் அவளை மீண்டும் ஒருமுறைகூட சந்திக்கவில்லை. அவள் என்னை முற்றாக மறுத்து உயிர்விட்டாள். என் பலிநீரை எப்படி பெற்றுக்கொள்வாள்?” என்றான். அவர் மேலும் பேசுவதற்குள் “நான் சூதன்… அவள் மாய்ந்தது அதனால்தான். என் அன்னம்கொள்ள அவள் வரமாட்டாள்” என்றான்.

“என் அன்னை என்னிடமிருந்து இன்றுவரை அன்னம்கொண்டதில்லை” என்று விதுரர் சொன்னார். “ஆனால் அன்று முதல் ஆண்டுதோறும் நான் அவருக்கு நீர்ப்பலியும் அன்னமும் அளித்துவருகிறேன். என் மைந்தரும் அளிப்பார்கள். ஏழு தலைமுறை ஆகலாம். அல்லது எழுநூறு தலைமுறை ஆகலாம். அளித்தபடியே இருப்பது நம் கடமை.” யுயுத்ஸு “நான்…” என்றான். “இம்மண்ணில் இன்றிருப்போர் சிறுதுளி. நீத்தோர் முடிவிலா ஆழி” என்றார் விதுரர். யுயுத்ஸு தலைவணங்கினான்.

அவர் திரும்பிச்செல்ல அவன் அவரை நோக்கி நின்றான். பின்னர் பெருமூச்சுடன் நீர்ப்பரப்பை அடைந்தான். உடல்களின் நெரிசலே ஒரு பெரிய திரை என தோன்ற தனிமைகொண்டான். சடங்குகளைச் செய்விக்கும் சூதர் அவனிடம் “அருகே வருக, இளவரசே!” என்றார். அவன் ஆடை களைந்ததும் “எவருக்காக?” என்று கேட்டார். அவனுக்கு அவள் முகம் நினைவுக்கு வரவில்லை. சூதனுக்கு மனைவியாக விழையாமல் இறந்தவள். தன்னை ஷத்ரியப்பெண் என்று மட்டுமே அறிந்தவள். எங்கிருக்கிறாள்? அவன் அவள் பெயரை நினைவுறுத்திக்கொள்ள விழைந்தான். அதுவும் நினைவிலெழவில்லை.

“பெயர் இல்லை” என்றான். “நாள், கோள்?” என்றார் சூதர். “நினைவில் இல்லை” என்றான். “எவர்?” என்றார் சூதர். “அதுவும் நினைவில் இல்லை. எதுவுமே நினைவில் எழவில்லை.” அவர் புன்னகைத்து “அவ்வண்ணம் ஒருவர் இருந்தாரென்பதே போதும்” என்றார். “அவருடன் என்ன உறவு உங்களுக்கு?” அவன் நா தவித்தது. என் மனைவி. ஆனால் அவள் அதை ஏற்கவில்லை. நானும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வண்ணமென்றால் என்ன உறவு? ஆனால் அவள் கழுத்தில் நான் ஒரு கருகமணியை அணிவித்தேன். அது போதுமா? “என் மனைவி” என்றான்.

சூதர் வியப்பை வெளிப்படுத்தவில்லை. நுண்சொற்களை சொல்லத் தொடங்கினார். “பிழைகளைப் பொறுத்தருள்க, நீத்தோரே! இங்குளோர் அனைவரும் ஊழின் துளிகள். ஊழுக்கு அப்பாலெழுந்தவர்களே, இங்குள்ள அனைவரையும் பொறுத்தருள்க! கனிக! அருள்க! இங்குள்ளோரை வாழ்த்துக! உடனமைக! இந்த அன்னத்தை கொள்க! நீரை கொள்க! இங்கெழுக! இங்கமைக! இந்த அலைகளைப்போல. இந்தக் காற்றின் நெளிவென. இங்குள ஒளியென. ஆம், அவ்வாறே ஆகுக!”

அவன் விழிகள் நீர்கொண்டன. தொண்டை அடைப்பது போலிருந்தது. அவன் இடைவரை நீரில் நின்று அச்சொற்களைச் சொன்னபடி அவர் ஆணையிட்ட சடங்குகளை செய்யலானான். சூதர் “விரும்பிய ஒன்றை விடுக!” என்றார். “என்ன?” என்றான். “விரும்பிய ஒன்றை விடுக!” என்றார் சூதர். ‘பொருளையா?” என்றான். “பொருளையோ, பழக்கத்தையோ. பொருளனைத்தும் பழக்கங்களே” என்றார் சூதர். அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். அது உளநடுக்கு. ஆனால் வெளிக்குளிரென உள்ளே நுழைந்தது. “எதை?” என்றான். “எதையாயினும்… நாம் விரும்பா பொருள் இங்கு ஏதுமில்லை” என்றார் சூதர்.

யுயுத்ஸு தன் நினைவிலிருந்த பொருட்கள் அனைத்தையும் தொட்டுத் தொட்டு சென்றான். அத்தனை பொருட்களும் பொருளிழந்திருந்தன. அவன் தொட்டதும் அனைத்தும் பொருள்கொண்டன. அவன் “எந்தப் பொருள்?” என்றான். “உணவு, பயன்பொருள், கைப்பொருள், நினைவுப்பொருள் எதுவாயினும். தந்தையர் தந்ததோ ஈட்டியதோ ஆகலாம்.” அவன் “ஆம்” என்றான். “எண்ணிக்கொண்டுவிட்டீர்களா?” என்றார். “ஆம்” என்றான். இவளை கைவிடுகிறேன். இந்த மல்லநாட்டு இளவரசியை. இனி ஒருபோதும் அவள் என் நினைவில் எழாதொழிக! “எண்ணியதை கைவிடுக!” என்றார். “ஆம், விட்டேன்” என்றான். “மூழ்குக!” என்றார் சூதர். அவன் மூழ்கி எழுந்தான்.

நீரிலிருந்து மேலெழுந்தபோது அவன் உள்ளம் தெளிந்திருந்தது. முகத்தை கைகளால் துடைத்தபடி படிகளில் ஏறினான். திருதராஷ்டிரர் கிளம்பிக்கொண்டிருந்தார். சங்குலனின் கைகளைப் பற்றியபடி அவர் எழுந்தார். அவன் அவர் அருகே சென்றான். அவர் “உம் உம் உம்” என முனகிக்கொண்டிருந்தார். சஞ்சயன் அவர் அருகே சென்று நின்றான். சங்குலன் “செல்வோம்” என்றான். முக்தவனத்திலிருந்த அனைவரும் நீர்ப்பலி அளிப்பதற்காக வந்துகொண்டிருந்தனர். மழைநீரில் சிற்றோடைகள் அனைத்தும் ஆற்றுக்கு வருவதுபோல.

திருதராஷ்டிரர் திரும்பாமலேயே “சஞ்சயா…” என்றார். சஞ்சயன் “அரசே…” என்றான். “இனி நீ என்னுடன் வரவேண்டாம்…” என்றார். அவன் “ஆணை” என்றான். அவர் மேலும் ஏதும் சொல்லாமல் நடக்க சஞ்சயன் தலைவணங்கி கைகட்டி நோக்கியபடி நின்றான். யுயுத்ஸு அவனை பார்த்தான். அவன் ஏதாவது சொல்வான் என எண்ணினான். அல்லது முகத்தில் ஏதேனும் உணர்வு இருக்கும் என்று. ஆனால் எப்போதும்போல பொருளில்லா புன்னகை ஒன்றையே சஞ்சயன் கொண்டிருந்தான். யுயுத்ஸு அவனை நோக்கி ஏதேனும் சொல்ல விழைந்து அவனிடம் சொல்ல ஏதுமில்லை என உணர்ந்து முன்னால் சென்றான்.

சில அடிகள் எடுத்து வைத்ததும்தான் சஞ்சயனின் அந்த முகம் இளைய யாதவருடையது என அவன் எண்ணினான். அந்தப் புன்னகைதான் அவ்வண்ணம் காட்டுகிறது. அவன் திரும்பி சஞ்சயனை பார்த்தான். “ஆம்” என சொல்லிக்கொண்டான். மீண்டும் ஓர் அடி வைத்தபோது அவனுக்கு அவள் பெயர் நினைவிலெழுந்தது. தேவப்பிரபை. மல்லநாட்டாள். அவள் முகம் மிக அருகிலெனத் தெரிந்தது. விழிநீர் வஞ்சமென வழியும் அழகிய சிறுமுகம். அவன் மீண்டும் திரும்பி சஞ்சயனின் புன்னகையை பார்த்தான்.

முந்தைய கட்டுரைபத்து ஆலோசனைகள்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை