உள்ளுணர்வு, ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ,

மிக மிக அவசரத் தேவையின் காரணமாக உங்களைக் கருதுவதால் இதனை எழுதுகிறேன். இன்றைய காந்தி புத்தகத்தில் உள்ளுணர்வு பற்றி அடிக்கடிக் கூறி இருந்தீர்கள்.

தற்போது என்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்வு(முடிவு ) செய்ய வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறேன்.எனக்குத் திருமணம் செய்வதற்காக நான் ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன். பார்த்ததில் இருந்து என்னுடைய உள்ளுணர்வு மிக மிக
வலுவாக ஏதோ ஒன்றைக் காட்டுகிறது.பொதுவாக என்னுடைய தொழில் சார்ந்து உறுதியாக முடிவு எடுக்கக் கூடியவன் நான்.ஆனால் இந்த விசயத்தில் என்னால்
அப்படி இருக்க முடியவில்லை.மிகவும் குழப்பத்திலேயே இருக்கிறேன்.

அந்தப்பெண்ணைப் பார்த்த பின் எனக்கு ஒரு பேரதிர்ச்சியும் அமைதியின்மையும் தான் ஏற்பட்டது.மகிழ்ச்சியோ பரவசமோ தோன்ற வில்லை ஒரு இனம் புரியாத கடுப்போ
சோகமோ குழப்பமோ ஏற்பட்டது.நெருப்பின் மேல் அமர்ந்து இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு முழு நாள் முழுவதும் கூடி என் அலுவலகக் கோப்பில் ஒரு பத்திக்கு மேல் என்னால் வாசிக்கக் கூட முடியவில்லை இருப்பினும் அந்த உணர்வு என்னை மேற்கொண்டு தொடரச் சொல்கிறதா இல்லை வேண்டாம் என்று
சொல்கிறதா என்று தெரியவில்லை.அந்தப் பெண்ணே வேண்டாம் என்று சொன்னால் நல்லது என்றும் தோன்றுகிறது .ஆனால் புற ரீதியாகப் பார்த்தல் அப்பெண்ணின் தோற்றம், குடும்பம்,படிப்பு எல்லாமே நன்றாகத்தான் தெரிகிறது.இந்த புற
ரீதியில் பார்க்கையில் இந்தப் பெண் மட்டுமே ஓரளவு சிறந்ததாகத்
தெரிகிறது . தங்களால் ஏதேனும் தெளிவு படுத்த முடியுமா?

அன்புடன்

அன்புள்ள —

சிறுகதை மூடில் இருந்தமையால் கடிதம் எழுத தாமதம்.

உங்கள் சிக்கலை இதற்குள்ளாகவே தீர்த்து விட்டிருப்பீர்கள். எதையும் கொஞ்சம் தாமதிப்பது நல்லது. அதுவே தெளியும்

உள்ளுணர்வு எப்போதுமே வழிகாட்டக்கூடியது. ஆனால் அது பொன் போல. மண் கல்லுடன் சேர்ந்தே கிடைக்கும்.

நம்முடைய ஆசைகள் தயக்கங்கள் அச்சங்கள் போன்றவற்றை உள்ளுணர்வுடன் கலந்துகொள்வோம். நம்முடைய மங்கலான உணர்ச்சிகளை உள்ளுணர்வு என்று மயங்குவோம்.

உங்கள் உணர்ச்சிகளையும் உள்ளுணர்வையும் நீங்கள்தான் கூர்ந்து பார்த்து பிரித்துக்கொள்ளவேண்டும். உங்கள் சொந்த அச்சங்களை அவள் மேல் ஏற்றுகிறீர்களா? உங்கள் தயக்கத்துக்கு காரணம் கண்டுபிடிக்கிறீர்களா?

பொதுவாக திருமண விஷயத்தில் – அது சம்பிரதாய மணம் என்றால் – இதுதான் பெண் என்று உறுதியாகும் கட்டத்தில் மனக்கிளர்ச்சிக்குப் பதில் ஒரு சிறிய சஞ்சலமும் சோர்வும்தான் வரும். ஒரு தேடல் முடிகிறது. கற்பனையின் வீச்சை யதார்த்தம் சந்திக்க முடியாதல்லவா? அந்த சோர்வு அது

ஆனால் அந்தப் பெண்ணை மேலும் சந்தித்து பழகும்தோறும் மெல்லமெல்ல அந்த உறவு உணர்ச்சிகரமானதாக ஆகும். அதில் எல்லாவகையான கற்பனாவாத எழுச்சிகளும் நிகழும். நாம் அதை அப்படி வளர்த்துக்கொள்வோம்.

ஆக உங்களிடம் இருப்பது அந்த சஞ்சலமா என்று யோசியுங்கள்

எல்லாவற்றுக்கும் இல்லை என்றே பதில் என்றால், உண்மையிலேயே அது உள்ளுணர்வு என்று சொல்லமுடியும் என்றால் நீங்கள் மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும்.

ஏனென்றால் உள்ளுணர்வு என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது ஆழ்மனம். விலங்குமனம். உங்களுக்கு ஒவ்வாத ஒன்றை எங்கோ கண்டுகொண்டிருக்கிறீர்கள். அது ஆழமானது, அந்தரங்கமானது

உள்ளுணர்வைத் தர்க்கம் மூலம் சமாதானப்படுத்தி அடங்கச்செய்து எதையும் செய்யவேண்டாம்

ஜெ

முந்தைய கட்டுரைவிமரிசன வடை
அடுத்த கட்டுரைஇறுதி யந்திரம் (சிறுகதை)