மாணவர்களுக்கான இலக்கிய வாசிப்பு

 

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

 

நாகர்கோவில் பொறியியல் கல்லூரியில் இலக்கியம் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். ரகுராம் ராஜன் சொன்னதாக நீங்கள் சொன்ன செய்திகள் முற்றிலும் உண்மையே. யுவல் நோவா ஹராரியின் ’21 lessons for the 21st century’ நூலில் இவை குறித்த ஆழமான கட்டுரைகள் உள்ளன. சமீபத்தில் நிகழவிருக்கும், தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பெருமாற்றங்களைச் சொல்லியிருப்பார்.

 

அந்த நூலில் அவர் கேட்கும் கேள்விகள் மிகவும் நுட்பமானவை. ஒருவனது வாழ்நாளில் 2-3 முறைகள் தன்னைத்தானே மீண்டும் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்காக புதிய தொழில்களை, நுட்பங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறுவார். இப்போதைய தொழிற்புரட்சியினால் எந்த வேலைக்குமே பயனில்லாத மாபெரும் மனிதக்கூட்டம் உருவாகும் என்கிறார். இதிலிருந்து தப்பிக்கவேண்டி புதிய துறைகளில், தொழில் முறைகளைக் கற்கலாம் என்றால் அதுவும் அத்துணை எளிதன்று. வால்மார்ட் போன்ற நிறுவனங்களில் இருந்து வேலையிழக்கும் கடை நிலை ஊழியர், அப்போது மிக அதிகத்தேவையான விமான பைலட்டாகத் தேர்ச்சி பெறுவது எங்ஙனம் சாத்தியமாகும் என்று வினவுகிறார்.ஆகையால் மனிதர்கள் Empathy என்னும் இரக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

 

பன்னாட்டு வங்கித்துறையில் நிகழும் ஆட்டோமேஷன் மாற்றங்களை நேரில் கண்டுகொண்டிருக்கிறேன். தற்போதைய தேவைக்கு ஏற்றாற்போல என்னைத் தகவமைத்துக் கொண்டே இருக்கிறேன் என்றாலும், இந்த ஆட்டோமேஷனின் அதிகப்படியான தாக்கத்தால் சில ஆயிரக்கணக்கான் வேலைகள் அழிவதை நேரில் கண்டுகொண்டே இருக்கிறேன் என்பதும் உண்மையே. 40-50 எம்.பி.ஏக்கள் பணிபுரிந்த க்ரெடிட் டீம் இன்று கால் மெகாபைட் மென்பொருளால் இயக்கப்படுகிறது. 50 பேரும் பத்து நாட்கள் செய்த வேலையை இது அரை நிமிடத்தில் செய்கிறது. தவறுகள் நிகழ்கின்றன. Bias – சாய்வு சார்ந்த பிரச்னைகள் உள்ளன. இருந்தாலும் தனது சாய்வைத் தானே நிவர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு அந்த கால் மெகாபைட்டிற்கு அறிவு உள்ளது. ஒருமுறை செய்த தவறைப் பிறிதொரு முறை செய்வதில்லை. செய்தால் அதற்கான தண்டனை உண்டு (மென்பொருள் பாணியில் சில தண்டனைகள்). Chatbot வகையிலான செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் சில நூறு கால்செண்டர் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதுவும் தனது தவறுகளைத் தானே திருத்திக்கொள்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தவறுகளை முழுவதுமாகத் திருத்துவதற்குக் கூட மனிதர்கள் தேவைப்பட மாட்டார்கள்.

 

அமெரிக்க வங்கியான ஜெ.பி.மார்கன் ஆண்டுதோறும் பெரு நிறுவங்களுடன் ஏற்பட்ட சுமார் 12,000 கடன் ஒப்பந்தங்களைச் சரிபார்க்க 3,60,000 மணி நேரம் எடுத்துக்கொண்டது. 2017ல் COiN – Contract Intelligence Chatbot என்னும் மென்பொருளை உருவாக்கி, அதே ஆவணங்களைச் சில நொடிகளில் சரிபார்த்ததாகச் சொல்கிறது. AML- Anti Money Laundering துறையில் பெருவங்கிகள் பெரும் பொருட்செலவில் மனிதர்களைக் கொண்டு செயலாற்றிவந்தன. தற்போது செயற்கை நுண்ணறிவு முறைகளைக் கையாண்டு மிகச் சிறிய கால அவகாசத்தில் பெரிய கொள்ளைகளைத் தடுக்கின்றன. பாரதத்தின் வங்கிகளும் அதிக அளவில் இவ்வகையான மென்பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன.ஆக, செயற்கை நுண்ணறி மென்பொருட்களால் வேலை இழப்பு என்பது நிதர்சனம்.

 

வங்கித்துறையில், மற்ற துறைகளைப் போலவே, KPI – Key Performance Indicator, KRA – Key Result Areas – என்னும் அடிப்படையில் வளர்ச்சி அளவிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளில் ஊடுறுவியுள்ள KPI : இந்த ஆண்டு மூடப்பட்டுள்ள வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை யாது என்பதே. Brick and Mortar Branch Reduction என்பது நடமுறையில் உள்ள யதார்த்தமாகவே ஆகிவிட்டது. கிளைகள் குறைப்பினால் சேமிக்கப்பட்டுள்ள டாலர் ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்கள். டிஜிட்டல் வங்கிகளின் எண்ணிக்கையும் வங்கிச் செயல்பாடுகளில் செயலிகளின் திறனும் அதிகரித்துக்கொண்டே செல்வது, 1990 களுக்குப் பிறகு பிறந்த மில்லினியல்கள் வங்கிக்கிளைகளுக்கு வந்து சேவைகளைப் பெறுவதை விரும்புவதில்லை, மாறாகச் செயலிகளிலேயே அனைத்தையும் தேடுகின்றனர் என்பனவையே  இதற்குக் காரணம்.

 

பட்டயக்கணக்காளர்கள் இன்று மென்பொருள் சார்ந்த ஆடிட்களைச் செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பொறியாளர்கள் மட்டுமின்றி எத்துறையினரும் இன்று சிறிய அளவிலான மென்பொருள்களை எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இது கட்டயமாக்கபடுவதற்கான சாத்தியக்கூறுகளே உள்ளன. மின்னியல் பொறியாளன் மின்சாரம் தொடர்பாகவே பணியாற்றுவான் என்று சொல்லவியலாது. அவனுக்குத் தனது துறை தொடர்பான மென்பொருள்களில் ஆணைகள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். பிற பொறியியல் துறைகளும் அவ்வாறே.

 

நிலைமை இப்படியிருக்க, வரும் ஆண்டுகளில் நமது மாணவர்கள் தங்களது கற்பனைத்திறன் மற்றும் புத்தாக்கச் சிந்தனைகளைக் கொண்டே முன்னேற முடியும். அதற்கு இலக்கியப் பயிற்சி மிக அவசியமானது என்பதைப் பொதுமக்கள் உணரத் துவங்க வேண்டும். இலக்கியப் பயிற்சி கற்பனைத் திறத்தை வளர்க்க உதவுகிறது என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.  நாமக்கல் கோழிப்பண்ணைகளுடன் போட்டி போடும் கல்விச் சாலைகள் இருக்கும் வரை, அவ்வகையிலான கல்விச்சாலைகள் பெருக வழி வகுக்கும் கல்வி அமைப்பு இருக்கும் வரை, பொறியியல், அறிவியல் துறைகளில் பயிலத் தயாராக்கப்படும் மாணவர்களுக்கு இலக்கிய வாசிப்பு என்பது தேவையில்லாத ஆணியாகவே பார்க்கப்படும் என்பதே தற்போதைய நிகழ் உண்மை என்றாலும், இந்த நிலை மாற வேண்டும்.

ஆமருவி தேவநாதன்

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ என்னும் ஆழ்வாரின் வாக்கிற்கிணங்க, இதற்கு மாநிலப் பாடத்திட்டம், மத்திய நடுவணரசுப் பாடத்திட்டம் இரண்டும் மாற்றியமைக்கப்பட்டு, IGCSE, IB முதலிய ஐரோப்பியப் பாடத்திட்டங்களின் நகல்களாக ஆக்கப்பட வேண்டும். இதைச் சொன்னால் ஆங்கில அடிவருடி என்னும் பட்டம் கிடைக்கலாம். ஆனால், கற்பனையுடன் திறன் மேம்பாட்டையும் அளிக்கும் கல்விமுறைகள் இவை என்பதால் ஐரோப்பியப் பாடத்திட்ட வழிமுறைகளைச் சற்று இந்தியத் தனத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.சொந்த அனுபவம். அதனால் தீர்மானமாகச் சொல்ல முடிகிறது.

 

யுவல் நோவா ஹராரியின் பிற நூல்களான சேப்பியன்ஸ், ஹோமொ டயஸ் முதலிய நூல்களையும் வாசிக்க வேண்டுகிறேன். ஒரு சீரிய எழுத்தாளர் என்கிற முறையில் இந்த நூல்களில் உள்ள கருத்துக்களை நமது மாணவர்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க உங்களால் இயலும்.

 

நன்றி

ஆமருவி தேவநாதன்

www.amaruvi.in

முந்தைய கட்டுரைஆஸ்திரேலிய யக்ஷி
அடுத்த கட்டுரைசகஜயோகம்