இவர்கள் இருந்தார்கள் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
ஆளுமைகள் குறித்த புத்தகங்களில் நான் தொடர்ச்சியாக வாசித்த மூன்று புத்தகங்களில் ஒன்று ” இவர்கள் இருந்தார்கள்”.சிவராம் காரந்த் அவர்களின் “Ten Faces of a Crazy Mind” , மற்றும் ” சுதந்திரத்தின் நிறம்” வாசித்தேன்.
ஏற்கனவே தளத்தில் வாசித்திருந்தாலும் எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காத கட்டுரை “சமுத்திரம்” அவர்கள் பற்றியது – உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கும் சபாரி மனிதர் என்றும் நினைவில் இருப்பார்
அடுத்தது “பவுடர் போட்ட சுரதா” – இந்த கட்டுரையில் பொது மக்களுக்கு உள்ள தமிழார்வம் குறித்த கவிஞரின் கருத்துக்கள் எத்தனை தீர்க்க தரிசனம். புளிச்ச தண்ணி இப்போது பி ரை ட் ரைஸ் ஆகியிருக்கிறது , பவுடர் போடவும் ஆட்கள் குறைந்து வருகிறார்கள்.
ஆளுமைகள் குறித்த தங்கள் நுண்ணிய வர்ணனைகள் அபாரம், குறிப்பாக சோதிப்பிரகாசம் அவர்களை குறித்த தங்கள் கட்டுரை. இந்தக் கட்டுரையில் சோதிப்பிரகாசம் அவர்களின் வாழ்க்கை குறித்த கோட்டுச் சித்திரமும் , அவர் பழகும் விதத்தையும் அனுமானிக்க முடிகிறது , அவரது புத்தங்கங்களை படிக்க வேண்டும். சிரித்த படியே பேசும் நபர்கள் மிகவும் குறைவே. அவர் சென்னையில் கூவம் அருகில் தங்கியிருந்தார் என்ற தகவல் ஒரு குழப்பமான மனநிலையை அளித்தது.
ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் கதவை தட்டுவது (பிகே பாலகிருஷ்ணன், ஸ்ரீதர மேனன் ) ,போனில் பேசுவது ( சோதி பிரகாசம் ) தொலைவில் இருந்து கண்டபடியே (கநாசு ) என நீங்கள் ஆளுமைகள் சந்தித்ததன் சித்திரம் வேறு ஒரு தளத்தில் புலனாகியது. இதன் கூடவே நடந்து சென்றபடியே இருப்பது, முதுமையின் கரிப்பை உணர்த்தும் லாசரா மற்றும் சிசு செல்லப்பாவின் சந்திப்புகள்.
அன்புடன்,
மணிகண்டன்