காசியின் காட்சிகள்

காசி

 

அன்புநிறை ஜெ,

 

நலமாக இருக்கிறீர்களா?

 

ஐந்து நாள் பயணமாக நேற்று காசி வந்தேன். வந்திறங்கியதும்தான் உத்தரப்பிரதேசத்தில்  144 அமல்படுத்தியிருப்பதாக சொன்னார்கள். எனில் இங்கு காசியில் எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. எங்கெங்கும் தலைகள், நெரிசல், பலவிதமான ஒலிகளுக்கிடையில் காசியின் நெரிசலான தெருக்களுக்கிடையே நேற்று மாலை நடந்து சென்ற போது மனது முற்றிலும் ஒழிந்து அமைதியாகிவிட்டது. குறுகிய பல தெருக்கள் வழியாக நடந்து சட்டென்று ஒரு திருப்பத்தில் கங்கையின் நீர்ப்பெருக்கைக் காண நேர்ந்தது. நேற்று படகுப்பயணம், கங்கையின் படித்துறைகளை, கங்கை தீபாராதணையை படகிலிருந்தபடி தரிசனம்.  நிருதனும் அம்பையும் மனதில் சித்திரமாக தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்.

 

மணிகர்ணிகா காட்டின் அணையா நெருப்பை, சிவந்த மாலை வானில் எழுந்த நிலவை, இதமான காற்றை, கங்கையிலிருந்தபடி பார்த்தது அதுவே ஒரு மாபெரும் பிரபஞ்ச இயக்கத்தில் ஒரு சிறுதுளியாக, ஐம்பூதங்களை தரிசிக்கும் பேருணர்வைத் தந்தது.

 

இன்று போத்கயா பயணம். நாளை மாலை மீண்டும் காசி. செவ்வாய் அன்று தேவ் தீபாவளி என்றழைக்கப்படும் கார்த்திகை பௌர்ணமி. புதனன்று சாரநாத் மற்றும் BHU பல்கலைக்கழகம் செல்வதாகத் திட்டம்.

 

விமானப் பயணத்தில் இந்தியப் பயணம் வாசித்தபடிதான் வந்தேன். பயணங்கள் அனைத்திலும் துணைவரும் தங்கள் எழுத்துகள்.

 

மிக்க அன்புடன்,

சுபா

 

அன்புள்ள சுபா

 

காசி நிறைய மாறியிருக்கிறது என்கிறார்கள். நிறைய கட்டிடங்களை இடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். காசியின் நெரிசலுக்கு ஒரு வரலாறு உண்டு. அல்லது நாம் சின்னவயசிலே பார்த்த இடம் என்பதனால் ஒரு ஈடுபாடு. அது ஒரு குறியீடாக மனதிலே நிறைந்திருக்கிறது. மாறிய காசியை எப்படி எதிர்கொள்வேன் என தெரியவில்லை

 

பல நிலைகளிலாக காசிக்கு பத்துமுறைக்குமேல் சென்றிருக்கிறேன். 1980 ல் சென்று சிலமாதங்கள். 2005ல் நான் கடவுளுக்காகச் சில மாதங்கள். அந்தப் படித்துறைகளில் எத்தனை நினைவுகள்!

 

நான் கடவுள் படத்தின் இரு பாடல்களும் நினைவில் கொந்தளிக்கின்றன

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம் – கடிதங்கள்