மயில்கழுத்து-கடிதங்கள்

அன்பிற்கினிய ஜெமோ,
உங்களின் இந்த சிறுகதை வரிசையில் எந்தக்கதையுமே இதுவரை சாதாரணமாக அமையவில்லை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் அற்புதமானவை. அவரவர் எப்படி கதைகளுடன் மனசை சம்பந்தப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப்பொறுத்து கதைகள் ரசிக்கிறார்கள். எனக்கு தனிப்பட்ட முறையிலே மயில்கழுத்துதான் மிகவும் பிடித்திருந்தது.

எனக்கு மிகவும் கஷ்டமான ஒரு சொந்த அனுபவம் உண்டு. கதையிலே ராமன் எரிந்தது போல நானும் நாலைந்து வருடம் எரிந்திருக்கிறேன். ஒரு விஷயத்தை இழப்பது பெரிய கஷ்ட்ம் இல்லை. அந்த நினைப்புகள் மறைந்து போகும். மரணத்தையெல்லாம் மறக்கிறோமே. அதைவிட கஷ்டமானது இந்தமாதிர்யான விஷயம். அதாவது இதிலே அவமானம் இருக்கிறது.அவமானம் என்று சொல்வதைக்காட்டிலும் நீ கையாலாகாதவன் என்று சொல்லப்படுவதுமாதிரி. லாயக்கில்லை என்று சொல்லபப்டுவது. அதை நாமே சரிதான் என்று நினைக்கிற நேரம்தான் அந்த எரிதல் ஏற்படுகிறது. உயிர்வாழ்வதற்கே அர்த்தமில்லை என்று தோன்றிவிடுகிறது. நேராகபோய் நெஞ்சைபிளந்து போட்டுவிட்டு செத்துடணும்போல இருக்கிறது.

அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டாயிற்று. இப்போது இந்தக்கதை என்னவோ செய்கிறது. என்னென்னவோ நினைப்புகளை கொடுத்து கண்ணீர் விட வைத்துவிட்டது. ராமன் சொல்வதுபோல எல்லாம் நம்மை ஒரு பக்குவத்துக்கு கொண்டுபோய் இதுதானப்பா வாழ்க்கை என்று சொல்வதற்குத்தானா என்று நினைக்க வைக்கிறது

அன்புடன்

சுதாகர்

அன்புள்ள சுதாகர்,

நன்றி. அனுபவங்கள் வழியாக மனிதன் அடையும் மிகப்பெரிய நன்மை தன் வலிமையை அறிந்துகொள்வதே.

ஜெ

=======

அன்புள்ள ஜெ

இதுவரை வந்த கதைகளில் கவிதையை தொடும் உங்கள் மொழி இந்தக்கதையில்தான் நிகழ்ந்திருக்கிறது. பாடல் கேட்கும் அனுபவத்தை அற்புதமாகச் சென்று தொடுகிறீர்கள்.

பழமையான சுருட்டி. ஓடைநீரில் இழையும் நீர்ப்பாம்பு. கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை.

முடிவில்லாத ஒளித்துளைகள். மின்னும் அழியா விழிகள். ஏன் இங்கு இப்படி இருக்கிறேன்? எந்த மகத்தான புரியாமைகளால் விளையாடப்படுகிறேன்?

இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது.

காட்டில் இரவு இதேபோல அப்ஸ்டிராக்டை தொட்டு மீண்டிருந்தது. மீண்டும் இப்போது…

வாழ்த்துக்கள்

சிவம்

=================

மரப்பசு நாவலை படித்ததிலிருந்து இருக்கும் குழப்பம் இது. அந்த நாவலை
எப்படி தொகுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. மனதை சீண்டிக்கொண்டே
இருந்தது. மோகமுள்ளில் கிடைந்த நிறைவிற்கு நேரெதிராக ஒரு நிறைவின்மையே
மரப்பசுவில் கிடைத்தது. யமுனாவை முன்னிருத்தியே மரப்பசு நாயகியை
(அம்மணி?) பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கோணத்தில் பார்த்த போது ஒரு
பொருளும் விளங்கவில்லை. அன்பை தேடி தேடி போகிறாள் என்று தோன்றியது. பிறகு
காயத்ரியுடன் விவாதித்த பொழுது காயத்ரி அதை நிராகரித்தாள். அழகும்
திறமையும் உள்ள இடங்களிலேயே அம்மணிசென்று கொண்டிருக்கின்றாள் என்றால்
அதெப்படி அன்பை தேடி செல்வதாகும் என்பது காயத்ரியின் தரப்பு.

மயில் கழுத்து வாசித்த முடித்ததும் ஒன்று தோன்றியது. நாவலின் நிறைவின்மை,
குழப்பம் எல்லாம் திஜாவிற்கு சந்திராவை எப்படி வகைப்படுத்துவது என்ற
குழப்பமே. குழப்பத்துடன் அடையமுடியாமையின் ஒரு வலியும்… வேறு ஒருவர்
கையில் இந்த வலி சிக்கி இருந்தால் அது காழ்ப்பை உமிழும் கதையாகி
இருக்கும். திஜாவால் அப்படி ஒரு காழ்ப்பை ஒருபோதும் வெளிப்படுத்த
முடியாதென்பதால், சந்திராவை ஒரு இடத்தில் தரம் தாழ்த்தி சித்தரிக்காத ஒரு
நாவலை தான் எழுத முடிந்தது.

காமரூபிணியில் வரும் ஒரு வரி நினைவிற்கு வருகிறது. அழகு என்பது எப்போதுமே
ஒரு விளி தான் இல்லையா… என்ற பொருளில் வரும் வரி. இந்த விளி தான்
திஜாவை அலைகழித்ததா?

சித்தார்த்

அன்புள்ள ஜெ,

மயில்கழுத்தை பல கோணங்களில் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். கதைக்கு ஏன் மயில்கழுத்து என்று தலைப்பு என்று யோசித்தபோதுதான் கதை கொஞசம் கொஞ்சமாக விரிவடைந்தது. அது விஷத்தின் நிறம். தீமையின் நிறம். அந்த நிறம் ஏன் ராமனை கவர்ந்தது? அவரது சிந்தனையிலே தீமையே இல்லையே. இல்லை என்பதனால்தான் அவர் தேடிப்பொனாரா? அதனால்தான் அப்படி பயந்தாரா? பாம்பை நோக்கி தவளை போகிறது போல தோன்றியது. மயில்கழுத்து என்ற உருவகத்தை வைத்துக்கொண்டு கதையை வாசித்தால் என்னென்னவோ கதவுகள் திறக்கின்றன. கதையின் ஆரம்பத்திலே வரக்கூடிய உரையாடலை கதைமுடிந்தபிறகு வாசித்தால் தெளிவுகிடைக்கிறது

நன்றி

ராஜ்

முந்தைய கட்டுரைஅயோத்திதாசபண்டிதர்
அடுத்த கட்டுரைமத்துறு தயிர் -கடிதங்கள்