அமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்[ முன் தொடர்ச்சி]
அன்புள்ள சந்தானம்,
மனுஷ்யபுத்திரன் சொன்னதை நேரடியாகப் பார்த்தால் திமுக கட்சிக்காரர் ஒருவரின் மிகையான தற்கூற்றாகத்தான் கொள்ளவேண்டும். அது அரசியல்சூழலில் இயல்பான ஒன்றே. அமேசான் போட்டிபற்றிய சூழலில் அவர் அப்படிச் சொல்கிறார். உண்மையில், அவர் திமுகவைப் போல பிற கட்சியினரும் வேண்டுமென்றால் இப்படி கூட்டு அமைத்து வெல்லட்டுமே என்று அறைகூவல் விடுக்கிறார்.
உண்மையில் வேறெந்த கட்சியாவது இப்படி இன்று செய்யமுடியுமா? முடியாது என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? அதை அவர் சொல்வதில், கொக்கரிப்பதில், நியாயம் உள்ளது அல்லவா? அதை ஒரு சீண்டலாகவாவது பிற கட்சிக்காரர்கள் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?
தமிழ் அறிவுச்சூழலில் செயல்படுபவர்களுக்கு நன்றாகத் தெரிந்தவைதான் இவை. இங்கே செயல்படும் கருத்தியல்சார்ந்த தரப்புக்கள் யாவை? அதாவது தமிழ் வாசகர்களை அரசியல் கருத்துநிலைகளின் அடிப்படையில் பிரிப்பதென்றால் எப்படி பிரிக்கலாம்?
இங்கே அதிகமாக நூல்களை வாங்குவது நூலகம் என்னும் அமைப்பு. அரசு நூலகங்கள், கல்விநிலைய நூலகங்கள் ஆகியவை. அவை வாங்கும் நூல்களே விற்கும் நூல்களில் முக்கால்பங்கு. எஞ்சியது மிகச்சிறிய அளவே. தமிழக நூல்பதிப்புத்துறையை முழுமையாக எடுத்துப்பார்த்தால், நமக்கு பதிப்பாளர் அளிக்கும் தரவுகளைக்கொண்டு நோக்கினால், பொதுவாக ஆண்டுக்கு பத்துகோடி ரூபாய் மதிப்பில் நூல்கள் வெளியாகின்றன. அதில் இரண்டுகோடி ரூபாய் அளவிலான நூல்களையே வாசகர்கள் வாங்குகிறார்கள்.எஞ்சியவை நூலகங்களால் வாங்கப்படுகின்றன.
நாம் பேசுவது இந்த சிறியவட்டத்திற்குள் உள்ள வாசகர்களைப் பற்றி மட்டுமே. தமிழக அளவில் ஏதேனும் ஒரு நூலை நூலகத்திலோ வாங்கியோ வாசிப்பவர்கள் ஒருலட்சம் பேர் இருக்கலாம். அதற்கும் குறைவாகவே இருக்கும், கொஞ்சம் மிகைப்படுத்துவது என்னுடைய அற்ப ஆசைக்காக. இவர்கள் தமிழக மக்கள்தொகையான பத்துகோடியில் 0.01 சதவீதம். அதாவது ஆயிரத்தில் ஒருவர். இவர்களுக்குள் உள்ள கருத்தியல்நிலைகளைப் பற்றியே பேசுகிறேன்.
முதலாவது வாசகத்தரப்பு மரபார்ந்த பக்தி, ஆன்மிக வாசகர்கள். இவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே அவர்கள் அமைந்திருக்கும் இயல்பான மதநம்பிக்கைக்குரிய நூல்களை வாங்குகிறார்கள். இங்கே பக்தி,சோதிடம், சடங்குகள் ஆகிய மூன்றும் இணைந்தே இருப்பதனால் இத்தகைய நூல்களே விற்பனையில் முதலிடத்தில் உள்ளன இங்கே.
இவர்களை நாம் மரபுவாதிகள் எனலாம். இவர்கள் எந்த அறிவுச்செயல்பாட்டிலும் இல்லாதவர்கள். பழைய சிந்தனைகளை அவ்வண்ணமே நிலைநிறுத்துபவர்கள் என்றுவேண்டுமென்றால் சொல்லலாம். இவர்களை ஒரு தரப்பாகக் கொண்டால் ஒட்டுமொத்தமான ஒரு மறுதரப்பாகவே மற்ற மொத்த வாசகர்களையும் கொள்ளவேண்டும். அவர்கள் ஏதேனும் ஒரு மாற்றத்தை விரும்புபவர்கள்.
அந்த வட்டத்தில் அளவில் பெரிய, வாசகத்தரப்பு இடதுசாரிகளே. மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, மார்க்ஸிய லெனினிய கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஆகியவை இணைந்து ஒரு வாசகக்கூட்டமாக தமிழில் உள்ளனர். அவர்களே அதிகமாக நூல்களை வாங்குபவர்கள். விவாதிப்பவர்கள், ஆகவே கண்ணுக்குத் தென்படுபவர்கள்.
இரண்டாவது பெரிய வாசகத்தரப்பு திமுகவினர்தான். அதாவது ஈவேரா, அண்ணாத்துரை ஆகியோரை ஏற்பவர்கள். திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் நாட்டம் கொண்டவர்கள். தமிழ்த்தேசிய- தமிழ்ப்பெருமித நோக்கு கொண்டவர்கள். இந்துவிழுமியங்களுக்கு எதிரானவர்கள். பிராமண எதிர்ப்புப் பார்வை கொண்டவர்கள்.
மூன்றாவது வாசகத்தரப்பை நவீன இலக்கியம் உருவாக்கிய தனிமனித நோக்கு கொண்ட வாசகர்கள் எனலாம். இவர்கள் பொதுவாக எந்த அரசியல்தரப்பு மேலும் ஆழ்ந்த பிடிப்பு இல்லாதவர்கள். எந்த கொள்கையையும் ஒட்டி சிந்திக்காதவர்கள். தங்கள் சொந்த ரசனையை, சிந்தனையை நம்புபவர்கள். சிந்தனையில் எவருடைய ‘தலைமையை’யும் ‘வழிகாட்டலையும்’ ஏற்காதவர்கள். எந்த கூட்டத்திலும் ஒரு பகுதியாக அமையாதவர்கள்.
இந்த மூன்றாம் தரப்பினர் தங்களுக்குள் பலவகை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சில விழுமியங்களில் நம்பிக்கைகொண்டவர்கள் இவர்களில் மிகுதி. நவீன ஜனநாயகக் கொள்கைகள், சுதந்திரவாதக் கொள்கைகள், தனிமனிதவாதக் கொள்கைகள் இவர்களை ஆட்கொண்டிருக்கும். ஜி.கிருஷ்ணமூத்தி, குர்ஜீப் போன்ற நவீன ஆன்மிகக்கொள்கைகளில் ஈடுபாடுகொண்டவர்கள் உண்டு. எதிலும் நம்பிக்கையற்ற அவநம்பிக்கைவாதிகளும், கலகநோக்கு கொண்ட தனியர்களும் உண்டு.
மூன்றாவது தரப்பைத்தான் சிற்றிதழ் இயக்கம் இங்கே உருவாக்க முயன்றது. தொடர்ச்சியாக முக்கால் நூற்றாண்டுக் காலமாக அதற்காகப் போராடுகிறது. ஒரு தலைமுறைக்கு ஆயிரம்பேரை அது உருவாக்குகிறது. அவர்கள்தான் உண்மையில் நவீன இலக்கியத்தின் இலட்சிய வாசகர்கள். அத்தனை நவீன இலக்கியமும் அவர்களை நோக்கியே எழுதப்படுகிறது.
நான்காவது வாசகத்தரப்பு என ஒன்று உருவாகியிருக்கிறது என்று சொன்னாலும் அதை விற்பனையில் கண்ணால் பார்க்கமுடியாது – தலித் வாசகத்தரப்பு. அத்தரப்பு மேலே சொன்ன மூன்று தரப்புகளாலும்தான் வாங்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
இந்துத்துவ, இஸ்லாமிய வாசகர் தரப்பு என ஒன்று இங்கே இல்லை. இஸ்லாமிய நூல்கள் வந்து குவிகின்றன. ஆனால் அவை வாசகர்களுக்குரியவை அல்ல. எவரும் வாசிப்பதன் தடையங்களும் இல்லை. அவை வெளிவரும் நோக்கம் வேறு. இந்துத்துவ நூல்கள் மிகமிக அரிதாகவே வருகின்றன. அவற்றுக்கான வாசகவட்டம் அனேகமாக ஏதுமில்லை.
நவீன இலக்கிய வாசகர்கள் என்னும் இந்த மூன்றாம் தரப்பின் நுண்ணுணர்வு, வாசிப்பு, இலக்கியம் சார்ந்த ஒட்டுமொத்தப் புரிதல் ஆகியவற்றுடன் ஒப்பிட இடதுசாரி இயக்கத்தவர் மிகமிக பின்தங்கியவர்கள். அவர்களில் மிகச்சிலரே உண்மையில் நவீன இலக்கிய அறிமுகம் கொண்டவர்கள். ஏராளமானவர்கள் கட்சி இலக்கியத்தை மட்டுமே வாசித்தவர்கள். கட்சியின் துண்டுவெளியீடுகளை மட்டுமே வாசிப்பவர்கள் மிகமிகப்பெரும்பான்மையினர். அவர்கள் ஒரு நிலைபாடு எடுத்திருப்பார்கள். அது கட்சி அளிக்கும் நிலைபாடு. அந்நிலைபாட்டுக்கு தேவையானவற்றை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
திராவிட இயக்கத்தவரில் சிலநூறுபேர் கூட நவீன இலக்கிய அறிமுகம் கொண்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை. எந்த விதமான கருத்துக்களையும் இவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டிருப்பதும் இல்லை. கொள்கைநூல்களை வாசிப்பதில்லை. வரலாற்றுநூல்களையும் அறிந்திருப்பதில்லை. அவர்கள் தரப்பிலிருந்து அத்தகைய நூல்கள் மிக அரிதாகவே வெளிவருகின்றன. அவை அவர்களால் வாசிக்கப்படுவதில்லை. இடதுசாரியினரே அவற்றுக்கும் வாசகர்கள்.
ஆச்சரியம் என்னவென்றால் திராவிட இயக்க வாசகர்களின் வாசிப்பு திராவிட இயக்க இலக்கியம் சார்ந்தும் மிகமிகக் குறைவானது என்பதே. அவர்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற வணிக எழுத்துக்களையே வாசித்திருப்பார்கள். திராவிட இயக்க வாசகர்களின் விருப்பத்திற்குரிய எழுத்தாளர் பெரும்பாலும் சுஜாதா என்பதைக் காணலாம். மு.கருணாநிதி எழுதிய ரோமாபுரிப் பாண்டியன் முதலிய நாவல்களைக்கூட அவர்களில் பெரும்பாலும் எவருமே வாசித்திருக்க மாட்டார்கள்.
அவர்களின் திராவிட இயக்கச் சார்புநிலைகள் கட்சி சார்ந்த எளிமையான மேடைச்சொல்லாடல்களில் இருந்து, ஒற்றைச் சொற்றொடர்களை ஒட்டி எழுந்தவையாகவே இருக்கும். இன்று முகநூலில் எழுதப்படும் ஓரிரு பத்திகளில் இருந்து தங்கள் தரப்பை அடைகிறார்கள். எளிமையான நக்கல்கள், மீம்கள் ஆகியவையே பெரும்பாலும் இவர்களுக்கு ‘கொள்கையை’ அறிமுகம் செய்கின்றன.
இங்கே நவீன இலக்கியத்தரப்புக்கும் இடதுசாரித் தரப்புக்கும் நடுவேதான் இலக்கிய – கோட்பாட்டு விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றும் நிகழ்கின்றன. இவர்களிடையேதான் நிகழ்வும் முடியும். ஏனென்றால் திராவிட இயக்கத்தவரின் பேச்சுமுறை என்பது மேடைகளிலிருந்து கற்றுக்கொண்ட ஒருவகை அடாவடி வெளிப்பாடு – மனுஷ்யபுத்திரனின் கூற்றே அதற்கான சிறந்த உதாரணம்.இடதுசாரிகள் என்னதான் இலக்கியம்சார்ந்து மழுங்கல் கொண்டிருந்தாலும் அவர்களே தமிழ்ச்சூழலின் பெரிய அறிவியக்கம், தர்க்கபூர்வமான அணுகுமுறை கொண்டவர்கள், அறிவுச்செயல்பாடு மேல் அடிப்படையான நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே நவீன இலக்கியச் சூழலின் மெய்யான மாற்றுத்தரப்பு அவர்களே.வேறு வழியே இல்லை..
பொதுவாக திராவிட இயக்க வாசகர்களின் வெளிப்பாடுகளில் தர்க்க ஒழுங்கோ வாசிப்பு பின்புலமோ இருப்பதில்லை. அறிவார்ந்த அடிப்படை என எதையுமே காணமுடியாது. அதனுடன் எந்த அறிவுத்தரப்பும் விவாதிக்க முடியாது. இடதுசாரிகள்கூட தெறித்து விலகிவிடுவதைக் காணலாம்.அவர்களுடன் விவாதிக்க அவர்களின் அதே வழிமுறைகளை ஒரு படி இறங்கிச்சென்று அடிக்கும் இந்துத்துவ, தமிழ்த்தேசிய தரப்பினரால் மட்டுமே இயலும்.
ஆனால் அவர்களை ஓரு குறைந்தபட்ச வாசகத்தரப்பாக, அறிவுத்தரப்பாகக் கொள்ளவும் வேண்டும். ஏனென்றால் கூட்டாகச் சில கருத்துநிலைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லா விவாதத்திலும் ஒரு தரப்பாக ஒலிக்கிறார்கள். அதற்கு விரிந்த செல்வாக்கும் உள்ளது. அது இங்கே நிலவும் ஒரு வலுவான கருத்துநிலை.
நான் திராவிட இயக்கத்தை ஒரு பரப்பியக்கமாக [பாப்புலிஸ்ட்] காண்கிறேன். அதன் செயல்முறை அறிவார்ந்த விவாதங்கள் அல்ல. மக்களைக் கவரும் அடாவடியும் ஆர்ப்பாட்டமும்தான். எளிய ஒற்றைவரிகளைத் திரும்பத்திரும்பச் சொல்லுதல்தான் அவர்களின் பிரச்சார வழிமுறை.
இதுதான் இன்றைய சூழல். இதில் இடதுசாரிகள் கட்சி என்ற அளவில் மிகமிகச் சிறியவர்கள். அவர்களால் ஒரு கூட்டு அமைத்துக்கொண்டு அமேஸானை எல்லாம் கைப்பற்ற முடியாது. ஆகவே இப்போட்டியில் திமுக அன்றி கட்சியே இல்லை. மனுஷ்யபுத்திரன் குறிப்பிடுவது இதைத்தான்.
அத்துடன் இடதுசாரிகளில் இன்று இளைஞர்கள் மிகமிகக்குறைவு. அவர்கள் செயல்படும் தொழிற்சங்கம் போன்ற களங்களுக்கும் இணைய உலகுக்கும் தொடர்பில்லை. இணையச்சூழலில் ஒருங்கிணைவுள்ள கருத்தியல் தரப்பு என்றால் திராவிட இயக்கத்தவரே. அதற்கு எதிராக செயல்படும் இந்துத்துவர்கள் சில தனிமனிதர்களே அன்றி ஓர் கூட்டோ அமைப்போ அல்ல. அவர்களில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிகமிகச்சிலர்.
மனுஷ்யபுத்திரனின் அச்சொல்லாட்சி அவர்களின் வழக்கமான அரசியல் தெருமுனைக் கூட்டத்திற்குரிய தொனி கொண்டது என்பது மட்டுமே வேறுபாடு, மற்றபடி அவர் நின்றுபேசும் தரப்பு சரியானதே
ஜெ
அமேசான்
அமேசான் குப்பைகள்
அமேஸான் – கடிதம்