அமேசான்
அமேசான் குப்பைகள்
அமேஸான் – கடிதம்
அன்புள்ள ஜெமோ,
சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் ‘திராவிட இயக்கத்தவர் அல்லாதவர்கள்’ ஒரு நாவலை எழுதவோ வாசிக்கவோ பயில்வதற்கு இருநூறாண்டுகள் ஆகும் என்று சொல்லியிருந்தார். அதை அவர் திமுகவினர் அணி அமைத்து செயல்பட்டு ,அவர்களில் ஒருவரின் நூலை அமேசான் கிண்டிலில் வெற்றிபெறச் செய்யும் முயற்சிக்கு எதிரான விமர்சனத்திற்குப் பதிலாகச் சொன்னார்.
உங்கள் கருத்து என்ன? நீங்களும் அமேசான் போட்டி பற்றி கடுமையான கருத்தைச் சொல்லியிருந்தீர்கள் என்பதனால் இதைக் கேட்கிறேன்.
ஆர். சந்தானம்
அன்புள்ள சந்தானம்,
முதலில் இம்மாதிரியான விவாதங்களை ஏன் எடுக்கிறேன் என எனக்கே கேட்டுக்கொள்கிறேன். பலரும் ஈடுபடும் ஒரு விவாதத்தை ஒட்டிச் சொல்லப்படும் கருத்தினூடாக சில இலக்கிய அடிப்படைகளைக் கூறமுடியும் என்பதே காரணம்.
ஏனென்றால் இலக்கியத்திற்குள் நுழைபவர்கள் இலக்கியவிமர்சனக் கருத்துக்களை வாசிப்பதில்லை, அவை இலக்கியவாசிப்பின் ஒரு பகுதியாக, ஒரு முதிர்நிலையில் வாசிக்கப்படுபவை. ஆகவே இவை அறிமுக வாசகனுக்கு அடிப்படையான இலக்கியக்கருத்துக்கள் சிலவற்றை அறிமுகம் செய்ய முடியும்.
அமேசான் போட்டி நடத்துவதிலோ, அதில் எழுத்தாளர்களும் வாசகர்களும் பெருவாரியாகக் கலந்துகொள்வதிலோ எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அமேசானில் நூல்வெளியிடுவது நல்லது, தேவையானது, எதிர்கால வாசிப்பே அதுதான் என்பதே என் எண்ணம்.
சொல்லப்போனால், திமுகவினர் அணி அமைத்து நூல்களை தரவிறக்கம் செய்து செயற்கையான புள்ளிவிவரங்களை உருவாக்கி அவர்களில் ஒருவரை வெற்றிபெறச்செய்வதில்கூட எனக்கு மறுப்பு இல்லை. அவ்வாறு வெல்பவரை நேரில் சந்தித்தால் ”வாழ்த்துக்கள் நண்பரே” என்று சொல்வதில் எனக்கு தயக்கமும் இல்லை
இப்படியேனும் கொஞ்சம்பேர் அமேசான் பற்றி தெரிந்துகொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். பல்லாயிரம்பேர் உள்ளே வந்து நூல்களைப் பார்வையிடும்போது ஒரு இருநூறுபேர் வேறு நூல்களை பார்த்தால், அவற்றில் சிலவற்றை வாங்கினால், அதுவே இலக்கியத்துக்கு நல்லதுதான். அவ்வகையில் இந்த அலையேகூட ஒரு சாதகமான அம்சமே.
இன்று டிக்டாக்கும் யூடியூபும் அனைவரையும் துளிக்காட்சிகளில் மூழ்கடித்துள்ளன. முகநூல் அனைவரையும் துளிவாசிப்பில் சுழற்றிக்கொண்டிருக்கிறது. புத்தகம் பற்றிய எந்த ஆர்வமும் நல்லதே. புத்தகம் பற்றிய எந்தப்பேச்சும், எந்த விவாதமும்,, எந்தச் சண்டையும் நல்லதே
நான் சொல்வது இந்தப் போட்டியை இலக்கியரீதியாக கருத்தில்கொள்ளவேண்டாம் என்று மட்டுமே. இதில் வெல்லும் நூலை, இதன் தளம் மற்றும் பரிசுத்தொகை காரணமாக முக்கியப்படுத்துவது இலக்கியத்திற்கு எதிரான மதிப்பீட்டை முன்வைப்பதாக அமைந்துவிடும் என்று மட்டுமே. அதை என் தளத்தில் செய்யமுடியாது என்ற மறுப்பையே நான் பதிவுசெய்தேன். நான் முன்வைத்துவரும் இலக்கிய விழுமியங்களுக்கு மாறானது அது.
இப்போட்டியில் வெல்லும், முன்னெழும் எழுத்து இலக்கியமாக ஆவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இல்லை. ஏனென்றால் இதன் முதல் அளவுகோல் மக்களின் ஏற்பு. பரப்பிய [வெகுஜன] வாசிப்பு இன்று எந்நிலையில் உள்ளது என அனைவருக்கும் தெரியும். அவர்கள் தெரிவுசெய்வது எத்தகைய படைப்பாக இருக்கும் என்பதற்கு எந்த ஐயமும் தேவையில்லை.
சரி, இவ்வாறு வெல்லும் நூலை சிறந்த பரப்பிய வாசிப்புநூல் என்ற அளவிலாவது கொள்ளமுடியுமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஏனென்றால் இதன் பரப்பிய வாசிப்பே செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. சென்ற ஆண்டு இப்போட்டியில் எப்படி ஒரு நூல் வெற்றிபெறச் செய்யப்பட்டது என நாம் அறிவோம்.
ஒர் அரசியல்கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒருங்குகூடி செயற்கையாக நூலை வாங்கி ஒருவரை முதலிடம் பெறச்செய்வதென்பது போலியான ஏற்பை உருவாக்குவதே.
அந்நூலை வாங்கியவர்கள் அதன்மேல் மெய்யான ஆர்வத்துடன், வாசிப்பதற்காக வாங்கினால் மட்டுமே அது மக்களின் விருப்பத்தைக் காட்டுவதாக அமையும். அந்நூலை விலையில்லாமல், அல்லது மிகக்குறைந்த விலையில் அளித்து கட்சிக்காரர்களைக்கொண்டு தரவிறக்கம் செய்யவைத்து முதலிடத்திற்கு வந்து பரிசை வெல்வதென்பது ஒரு தந்திரபூர்வமான மோசடி.
ஆனால் இத்தகைய மோசடிகள் இன்று சர்வதேசப் போட்டிகளில்கூட நிகழ்கின்றன. ஆகவே அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இந்த வெற்றி ஒரு தரப்பினரின் கூட்டுவெற்றி. அதில் பிறர் ஆர்வம் கொள்ளவேண்டியதில்லை, அவ்வளவே நான் சொல்வது.
சென்ற ஆண்டு இப்படி பரிசுபெற்ற நூல் வாசகத் தளத்தில் ஏதேனும் ஆர்வத்தை உருவாக்கியதா? பத்துபேராவது அதைப்படித்து ஏதேனும் எழுதினார்களா? அது ஒருவர் தந்திரமாக ஐந்துலட்சத்தை வென்றெடுத்த உத்தி என்ற அளவிலேயே நின்றுவிட்டது அல்லவா?
அந்நாவலை வாசிப்பவர்கள் அது உயர்நிலைப்பள்ளிக் காலத்தில் நாம் ராஜேஷ் குமார் நாவல்களை வாசித்து நாமும் எழுதலாமே என்று எழுதிப்பார்த்த நாவல்களின் தரத்தில் அமைந்திருந்தது என்பதைக் காணலாம்..எந்த போட்டியிலும், குமுதம் அல்லது நாவல்டைம் தரத்திலான போட்டியில்கூட, அது அடிப்படைத் தேர்வையே தாண்டமுடியாது.
நான் பரப்பிய ரசனைக்குரிய எழுத்துக்கு எதிரானவன் அல்ல. அத்தகைய எழுத்து மேலும் நிறைய வெளிவரவேண்டும் என்றே விரும்புகிறேன். ஏனென்றால் இன்று நூல்வாசிப்பு என்பதை ஓர் இயக்கமாக நிலைநிறுத்த அத்தகைய எழுத்து இன்றியமையாதது.
ஒரு சூழலில் பலநிலைகளிலான எழுத்துக்கள் தேவை. அவற்றினூடாகவே வாசகன் வளர்ந்து வரமுடியும். துப்பறியும் கதைகள், திகில்கதைகள், பேய்க்கதைகள், அறிவியல்புனைகதைகள், சாகசக்கதைகள், குடும்பக்கதைகள், காதல்கதைகள் எல்லாமே தேவை. ஏனென்றால் வாசகர்களின் ரசனை பல்வேறுவகையானது. வாசிப்புக்கான உளநிலையும் வேறுவேறு தன்மைகொண்டது
தமிழில் பதின்பருவத்தினருக்கான கதைகள் நிறையவே தேவை. குழந்தையிலக்கியம் இங்கே பலமடங்கு பெருகவேண்டும். இவை அனைத்திலும் நல்ல வாசிப்புத்தன்மையுடன் நூல்கள் வரவேண்டும். அப்போதுதான் இளமையிலேயே தமிழில் வாசிக்கும் வழக்கம் உருவாகி நிலைபெறும். இதை தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
இலக்கியம் என ஒன்றை வகுத்துக்கொண்டு அதுவல்லாத அனைத்தையும் நிராகரிக்கும் சிற்றிதழ் உளநிலைக்கு எதிராக எப்போதுமே பேசிவந்திருக்கிறேன். அந்த உளநிலை அறுபது முதல் எண்பதுவரை தேவையான ஒரு எதிர்ப்புநிலையாக இருந்தது. அன்று பரப்பிய எழுத்தே சூழலை ஆட்சி செய்தது. இலக்கியம் சிற்றிதச் சூழலில் முடங்கிக்கிடந்தது
இன்று பரப்பியஎழுத்தே அழிந்துவிட்டது. ஆகவே இலக்கியவாசிப்பு எஞ்சியிருப்பதுபோலப் படுகிறது. ஆனால் பரப்பிய வாசிப்பு அழிந்துவிட்டால் காலப்போக்கில் இலக்கியவாசிப்புக்கும் எவரும் வராமலாகிவிடுவார்கள்.
பரப்பிய எழுத்தை இலக்கியத்திலிருந்து பிரித்துநோக்கும் பார்வை தேவை. வெகுஜன எழுத்தை இலக்கியமாக மயங்காமல் இருந்தால் போதும். அது தமிழில் ஐம்பது முதல் தொண்ணூறுவரை நடந்தது. இலக்கியவிமர்சகன் வணிக இலக்கியத்தை, அதன் மைய ஆளுமைகளை, விமர்சிப்பதும் மறுப்பதும் அவை இலக்கியமாக முன்வைக்கப்படும்போதுமட்டுமே
பரப்பியஎழுத்தின் ஒவ்வொரு வகைமையிலும் முதன்மையான ஆக்கங்கள் இருக்கலாம். உதாரணமாக மரியோ பூஸோவின் ’காட்ஃபாதர்’ இலக்கியம் அல்ல, ஆனால் அது அவ்வகை எழுத்தில் ஒரு கிளாஸிக். இர்விங் வாலஸின் ‘த பிரைஸ்’ இலக்கியம் அல்ல, ஆனால் அவ்வகை எழுத்தில் அது ஒரு முக்கியமான படைப்பு. நமக்கு அத்தகைய எழுத்துக்கள் தேவை.
இலக்கியத்திலேயே வெவ்வேறுவகையான போக்குகள் இருக்கலாம். ஒவ்வொன்றிலும் பேரிலக்கியங்கள் எழலாம். ஃப்ராங்க் மெக்கார்ட்டின் [Frank McCourt] அஞ்சலாஸ் ஆஷஸ் [Angela’s Ashes] அந்தரங்கமான நேரடியான எளிமையான எழுத்து. புனைவுக்கும் தன்வரலாற்றுக்கும் நடுவே ஓடுவது. அதுவும் இலக்கியம்தான். உம்பர்ட்டோ ஈக்கோவின் [Umberto Eco] நேம் ஆஃப் த ரோஸ் [The Name of the Rose] முழுக்கமுழுக்க கற்பனை. துப்பறியும் வகைமையைச் சேர்ந்தது. வரலாற்றுப்புனைவா உருவகப்புனைவா என மயங்கச்செய்வது. அதுவும் இலக்கியம்தான்.
ஆகவே வணிக எழுத்துக்கு எதிரான நிலைபாடல்ல நான் எடுத்தது. வணிக எழுத்தை இலக்கியமாகக் கருதவேண்டியதில்லை என்பது ஒரு கருத்து. அமேசானில் வெல்வது ஒரு செயற்கையான வெற்றி, அது உண்மையான பரப்பிய எழுத்தும் அல்ல என்பது இரண்டாவது கருத்து
வணிக- பரப்பிய எழுத்து எளியவிஷயம் அல்ல. அதற்கு சரளமான வாசிப்புத்தன்மை தேவை. அதாவது ஃப்ளோ என நம்மவர் சொல்லும் இயல்பு. எழுதித்தேர்ந்த கையால் தான் அதை உருவாக்க முடியும். வாசகனின் பொதுரசனையை அறிந்து அதனுடன் விளையாடும் திறன் தேவை. களஆய்வு செய்து நம்பகமான புலத்தை உருவாக்கும் அறிவுத்திறனும் தேவை.
வணிகஎழுத்து அல்லது பரப்பிய எழுத்து தொடர்ச்சியான பின்னூட்ட அவதானிப்பு வழியாக உருவாவது. நம் வார இதழ்களில் சென்றகாலங்களில் வெளிவந்த வணிக எழுத்து அதன் வாசகர்களின் எதிர்வினைகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. எந்தக்கேளிக்கை வடிவமும் அவ்வாறு மக்களிடமிருந்து திரட்டி எடுக்கப்படுவதே.
அவ்வாறு அதற்கு ஒர் இலக்கணம் உருவாகிவர நூறாண்டு ஆகியது. வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் முதல் கல்கி, தேவன், அதன் பின்னர் ஆர்வி, மேதாவி, அடுத்து பாலகுமாரன் சுஜாதா, கடைசியாக ராஜேஷ்குமார் ரமணிசந்திரன் வரை ஐந்து தலைமுறை எழுத்தாளர்கள் அதில் தொடர்ச்சியாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
புதிதாக எழுதவருபவர்கள் அந்த தொடர்ச்சியைச் சென்று தொடும்போதே உண்மையில் மக்களின் உளவியலுடன் உரையாடி வெல்லமுடியும். அவ்வாறு உருவாகும் எழுத்து ஒருவகையில் பொதுமக்களின் கூட்டு உளவியலைச் சுட்டுவதும்கூட
ஆனால் இந்த அமேசான் போட்டியில் வெல்லும் எழுத்து வாசகர்களால் முன்வைக்கப்படுவது அல்ல, அது கட்சிக்காரர்களின் ஒரு விளையாட்டு. ஒரு வகை சூதாட்டவெற்றி. ஆகவே அதற்கு அந்த மதிப்பையும் அளிக்கவேண்டியதில்லை. அவ்வளவுதான் என் கருத்து
மனுஷ்யபுத்திரனின் கருத்தைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்
ஜெ