வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’- ஆஸ்டின் சௌந்தர்

 

நீ கூடிடு கூடலே வாங்க

 

வெண்பா கீதாயனை , நான் நேரில் பார்த்திருக்கிறேன். இலக்கியக் கூட்டம் ஒன்றில், எனக்கு முன்னால் இருந்த  இருக்கையில் அவர் அமர்ந்திருக்க, “பரவாயில்லை , என் மகளின் வயதில் உள்ள பெண் புத்தகமெல்லாம் வாசிக்கிறார். நம் மகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கனா கண்டிருக்கிறேன்.  வாசித்து வாசித்து கூடிப் பேசும் நண்பர்கள் மூலம், அவர் குமுதத்தில் தொடர் எழுதியுள்ளார், புத்தகம் போட்டிருக்கிறார் என்று எல்லாம் பிறகு தெரிய வர,  நேரில் பார்த்த சமயம்,  கை குலுக்கி ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் என்று ஆதங்கப்பட்டேன். ஆறு மாதத்தில் ஆயிரம் மணிநேரத்தை வாசித்துக் கடந்த நண்பர் சாந்தமூர்த்தி அவர்களின் ஒரு சிறு குறிப்பில், வெண்பா கீதாயன், ‘நீ கூடிடு கூடலே’ என்று புத்தகம் வெளியிட்டுள்ளார் என்று அறிந்து , கிண்டிலில் வாங்கி, புரட்டியதும், ஒரு  கேள்வி வந்தது, நான் இதை வாசிக்க வேண்டுமா ?

கல்யாண வயதில் மகன், மகள் என்று வீட்டில் இருக்கிறார்கள். அவர்களின் காலில் நின்று அவர்கள் வயது பெண் இன்றைய காதல் நடப்பை பற்றி எழுதியிருப்பதை  வாசித்துதான் பார்ப்போம் என்று புரட்ட ஆரம்பித்தேன். காமத்திற்கும் காதலுக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு.  அதை இனம் காண இந்த புத்தகம், காதல், கல்யாணத்திற்கு முன்னால் சேர்ந்து வாழுதல், அதில் வரும் இலாபம், நஷ்டம் , மனக்கஷ்டம், பணக்கஷ்டம் என்று பிரித்து எடுத்து சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும், பிரச்சனைகளையும் சொல்லி, தீர்வையும் சொல்லியிருப்பது , காதலிப்பவர்களுக்கு, புதிதாக கல்யாணமானவர்களுக்கு எடுத்து வைத்துக்கொள்ளலாம் போன்ற ஒரு  வொர்க்சீட். புத்தகம் அலசுகின்ற  பிரச்சனைகள், ஓரிரு வாக்கியங்களில் தீர்வு காணும் பிரச்சனைகள் அல்ல என்றாலும், நாடித்துடிப்பை பிடித்து அடிப்படை நோயை இனம் காணும் வைத்தியர் போல்   சொல்லியிருப்பதால், வாசிக்கும் காதலர்கள் தங்களை இனம் கண்டுஅகக்கண் திறந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

லிவிங் டுகெதர் மேட்டரை எடுத்துக்கொண்டு மேட்டர் பண்ண மட்டும் பழக நினைக்கும் ஆண்களை கேள்விகள் கேட்கிறார்.  மேட்டர் பண்ண நினைக்கும் ஆண்களை இனம் காண, பெண்களுக்கு, புத்தகம் முழுதும் நுணுக்கங்களை விதைத்து வைத்திருக்கிறார். முத்தம் எங்கு வைத்தால் அன்பு, எத்தனை விரல்களை வைத்து கையை அமுக்கினால் விஷமம்  என்று ஒரு மனநல மறுத்தவர் சொல்லுவதை போல் சொல்கிறார்.கலவி கலவி என்று ஆண்கள்தான் அலைவார்கள் என்று வெண்பா ஒரு பாலினத்தை மட்டும்  குற்றம் சொல்லாமல், சரியான நாட்டாமை வேலை பார்த்துள்ளார்.  பெண் நினைத்தால் ஆணையும், ஆண் நினைத்தால் பெண்ணையும் அடைவது எளிதே என்ற அவலத்தை சிற்சில வாக்கியங்களில் விளக்கி இருக்கிறார். உண்மை ஏன் இப்படி கசக்கிறது ?

எங்கு இருந்தால் என்ன, You have to be presentable  என்பார்கள். வீட்டில் இருந்தாலும் , பளிச்சென்று இருக்கவேண்டும் என்று மேக்கப்பின் அவசியத்தை எடுத்து வைக்கிறார். பெண்ணிற்கென்றில்லை, ஆண்களுக்குமான presentable பரிந்துரைகள் இருக்கின்றன.வெண்பா, பெண்ணின் நிலையிலிருந்து சொல்வதால், ஆண்களுக்கு, பெண்ணை புரிந்துகொள்ள இது ஒரு நல்ல பாட புத்தகம். மாதவிடாயின்போது, பெண்களுக்கு அந்த ஆசை அதிகம் என்று ஒரு வரி கருத்து படித்துவிட்டு வாய்ச்சவடால் அடிப்பவர்களுக்கு, அவளது உண்மையான சவால்களை, உடல் படுத்தும் பாடை , காதலன் மேல் உள்ள அக்கறையால்,  விழுந்து காயமாகி வந்தாலும் அவன் மேல் கோபப்படும் அவளை அடையாளம் காட்டி ஒரு புரிதலை உண்டு பண்ணுகிறார்.

லிவிங் டுகெதரில் உண்மையான காதலோடு இரு பாலரும் இருப்பதற்கு, சம நிலையிலிருந்து,  வரவிருக்கும்  சிக்கலையும், தடங்கல்களையும், வலிகளையும், முடியாமையையும் படங்கள் இல்லாத குறையாக விளக்குகிறார். சினிமாவில் வரும் டூயட் பாடும் லிவிங் டுகெதர் வாழ்க்கை இல்லை. காதலிக்கு காய்ச்சல் வரும். காதலனுக்கு வேலை போகும், இடம் மாற்றல் வரும், தண்ணி அடிக்கும் நண்பர்கள் கூட்டம் காதலியை ஏளனம் பேசும், தனித்திருக்கும் காதலனை கள்ள உறவாடக் காத்திருக்கும் பெண்கள். எல்லாவற்றையும் தாண்டி காதலனாக / காதலியாக இரு என்கிறார்.லிவிங் டுகெதரை கொடுத்த மேலை நாடு, திடீரென இல்லாமல் போகும் வேலையையும் கொடுத்திருக்கிறது. அந்த சுழ்நிலையில் வரும் சோதனைகளை, கள்ளக்காதலை, குடிப்பழக்கத்தை , உடல் பருமனை கவனித்து விலகிச் சொல்ல  வழி  செல்கிறார்.

வெண்பாவின் கருத்தில்,  பெற்றோர்கள் காதலையே இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. குழந்தைகளை முதலீடுகளாகத்தான் இன்னும் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் சமயம், லிவிங் டுகெதரை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்? இந்தப் புத்தகத்தை அவர்கள் படித்தால் மூர்ச்சையாகிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

புதிதாக கல்யாணமானவர்களும் இந்த நூலை வாசிக்கலாம்.  பொஸசிவ்னஸின் அவசியம், ஊடலின் அவசியம் என்று சொல்லி செல்பவர், சேர்ந்து வாழும் சமயம் வரும் பொருளாதார சிக்கலையும், அதற்கான தீர்வுகளாக அனாவிசய செலவை குறைத்தல், மீதம் நின்றுவிட்ட சில்லறையை சேமிப்பது என்று சூசி ஓர்மன் பாணியில் பொருளாதார அறிவுரையும் தருகிறார்.  (நடுப்பக்கத்தை எடுத்து மட்டும் படித்துவிட்டு , புத்தகத்தை வாங்குபவர்கள்,   24-ஆம் அத்தியாயத்தை வாசித்தால், காதலை வெறுக்கும் பெற்றோர்கள் கூட, இந்த புத்தகத்தை பரிந்துரைக்க வாய்ப்புண்டு).

நல்ல காதலை இனம் கண்டுகொள்ள வழி சொல்லும் வெண்பா, தவிர்க்க வேண்டிய காதலர்கள் என  கையை அறுத்துக்கொண்டு சுயவதை செய்பவர்களை , காதலியை பெற்றோரிடம் அறிமுகப் படுத்த தயங்கும் காதலனை, ஆண்களுடன் பேசினாலே தப்பாக நினைப்பவனை, ப்ளாக்மெயில் செய்பவர்களை  அடையாளம் காட்டுகிறார்.

வெண்பா கீதாயன் , பெண் என்று நினைத்துக்கொண்டு ஒரு தயக்கத்தோடு சில வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது, சொல்லத் தயங்குவது என எதுவும் இல்லாமல் எல்லா பிரயோகங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதியது பாராட்டத்தக்கது. எழுத்தாளனில் ஆண் ஏது? பெண் ஏது? வெண்பா ஒரு எழுத்தாளர் !

காதல், காதலர்கள், காமத்தின் தேவை, லிவிங் டுகெதரை புரிந்துகொள்தல், காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்தல் என்று பேசிக்கொண்டே திருமணத்தின் முக்கியத்துவத்தை   , தளர்ந்த வயதில் இருக்கவேண்டிய துணையின் அவசியத்தை நிலை நிறுத்தி பேசும் இந்த புத்தகம் 214 ரூபாயில் அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது. 138 பக்கங்கள்.

நானும், ராதாவும் காதலை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களாக, பாதுகாவலர்களாக  மாறி வருடங்கள் ஆகிவிட்டன. ஜெய்யிடம் , நீ காதலிக்கும் பெண்ணுடன் , கல்யாணத்திற்கு முன் தனித்து வாழ்வாயா என இருவரும் கேட்டோம். சிரிப்பை பதிலாகத் தந்தான்.

– வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

 

முந்தைய கட்டுரையானை டாக்டர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்