ஓஷோ- கடிதம்

ஓஷோ மயக்கம் -கடிதம்

ஓஷோ மயக்கம்

அன்பு ஜெயமோகன்,

ஓஷோ மயக்கம் குறித்த எனது பார்வை இது.

நவீனகால இளைஞர்களைக் கவர்பவராக ஓஷோ இருப்பதில் வியப்பில்லை. அக்கவர்ச்சியை அவர் விரும்பினார் என்றே உத்தேசிக்கிறேன். அக்கவர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளும்படியான தர்க்க உரையாடல்களை அவர் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்தார். என்னளவில், அவர் சிந்தனையாளரன்று; கலகக்காரர். அழுத்திக்குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர் வெறும் கலகக்காரர். இதை வெறுப்புணர்ச்சியில் சொல்வதாக நண்பர்கள் விளங்கிக் கொண்டுவிடக் கூடாது. அவரின் சொற்பொழிவுகளைப் பல்லாண்டுகளாக உள்வாங்கியவன் எனும் அனுபவத்தில் இருந்து அதைச் சொல்கிறேன். இதைப் பொதுவான கருத்து என்று அர்த்தம் செய்து குழம்பிக் கொள்ளாதீர்கள்.

“பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை” என்ற தொடரால் ஈர்க்கப்பட்டு அவரிடம் வந்தவன் நான். 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமான ஓஷோ இன்றுவரை என் வியப்புக்குரியவர். புல் தானாக் வளர்கிறது, மீண்டும் புல் தானாகவே வளர்கிறது போன்ற நூல்களின் வழியாகவே அவரை வந்தடைந்தேன். நூற்றுக்கணக்கான அவரின் நூல்களை இதுகாறும் வாசித்திருக்கிறேன். பகவத்கீதை நூலுக்கான அவரின் வியாக்கியான்ங்களைப் பலமணி நேரங்கள் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். எனினும், அவர் நூல்கள் என்னை மேலதிகமாகச் சிந்திக்கத் தூண்டவில்லை. மாறாக, நான் படிக்க இனி எதுவும் இல்லை என்பதான மனநிலையையே அவர் என்னுள் நிறுவினார்.

அவரைப் படித்துவிட்டு பலமணி நேரங்கள் நண்பர்களுடன் உரையாடி இருக்கிறேன். அவ்வுரையாடல்கள், நூற்றுக்கணக்கான் ஓஷோ அன்பர்களை உருவாக்கின. ஆனால், இன்று அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓஷோவிடம் இருந்து விலகிச் சென்று விட்டனர்; சிலர் அவர் நூல்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில்லை. நூற்றுக்கணக்கான ஓஷோ நூல்களை மட்டுமே வைத்திருக்கும் பல நண்பர்களை நானறிவேன். எதுபற்றி கருத்து தெரிவிக்கும் முன்னரும், அவர்கள் ஓஷோ அது பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

வாழ்க்கை, பணம், உறவு, காதல், காமம், முழுமை, கடவுள், பிரம்மம், தியானம், ஜென் போன்ற சொற்களுக்கு ஓஷோ வழங்கும் வியாக்கியானங்கள் தரிசனப்பூர்வமாகவும் இல்லை, அனுபவப்பூர்வமாகவும் இல்லை. தருக்கப்பூர்வமாக மட்டுமே அவை இருக்கின்றன. வியாக்கியானங்களின் தருக்கங்களும் சமூக வரலாற்றுணர்வு கொண்டதாக இல்லை. அவ்வகையில், வாசிப்பவனை இச்சமூகத்தில் இருந்து ஓஷோ தற்காலிகமாகத் தப்பியோடச் செய்கிறார். அத்தப்பியோடலின் வழி அவனுக்கான தற்காலிகக் களிப்பை உருவாக்கி அளிக்கிறார்.

ஓஷோவின் அடிப்படை என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தை வலியுறுத்துவதாக மட்டுமே இருக்கிறது. அதாவது, எதையும் கட்டுடைத்தல் என்பதான மையத்தில் இருந்தே அவர் செயல்படுகிறார். கட்டுடைத்தல், வரவேற்கப்பட வேண்டியது. விதையில் இருந்து முரண்பட்டுக் கிளைக்கும் செடி என்பது விதையின் ஆதாரத்திலேயே மேல் நகர்கிறது. அது விதையை முழுக்கத்தவிர்த்து தான் செடி, நீ விதை என்பதாக தனித்துவம் பேசுவதில்லை. ஓஷோவின் கட்டுடைப்புகள் தனித்துவத்தையே போதிக்கின்றன. சமூக மனிதனைப் புறந்தள்ளி, தனிமனிதனையே ஆகச்சிறந்தவன் என்பதாக நிறுவிவிடுவதில் அவருக்கு நிகர் அவரேதான். கட்டுடைப்பு என்பது ஒருவனை அவனில் இருந்து விரியச் செய்வதாக இருக்க வேண்டும்; குறுகச் செய்வதாக இருக்கக் கூடாது. சித்தாந்தக் கருத்தியல்களைப்போன்றே ஓஷோவும் ஒருவனைக் குறுகச் செய்து விடுகிறார். ஆனால், அதை வாசகன் உணர்ந்துவிடவே முடியாதபடி சாதுர்யமாகச் செய்கிறார்.

ஒன்றைக் கட்டுடைத்தலின் வழியாக அச்சிந்தனை அல்லது கருதுகோளைக் குறித்த புனிதப்பூச்சைக் களைவதோடு அவரின் வேலை முற்றுப்பெற்று விடுகிறது. வாசகனை மேலதிகமாகச் சிந்திக்க அவர் தூண்டுவதே இல்லை அல்லது தன் எழுத்தின் களிப்புநிலைக்குள் அவனை மயங்கி நிற்கச் செய்து விடுகிறார். வாசிப்பின்பம் எனும் வார்த்தையை இங்கு நான் பயன்படுத்தவில்லை. வாசகனின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்படியான ஆக்கங்களை வாசிப்பின்பமாக நான் கொள்வதில்லை. ஆகவே, களிப்பு எனும் சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஓஷோ தான் சொல்லும் கதைகள் மற்றும் தருக்கங்களின் வழியாக வாசிப்பவன் விரும்பும் களிப்பைச் சிறப்பாகவே தருகிறார். அக்களிப்பிற்காகவே அவர் கொண்டாடப்படுகிறார்.

மரபின் மீதான கட்டுடைப்புகளை தருக்கக் கண்ணோட்டத்தோடு முன்வைக்கும் ஓஷோவை நவீன இளைஞர்கள் தொடர்ந்து பின்செல்கின்றனர். அவரின் தருக்கங்களின் சுவையால் அவர்களால் ஓஷோவை விட்டு வெளியே வர இயலவதில்லை. தற்காலிகக் களிப்பு தேவைப்படும்போதெல்லாம் ஓஷோவை வாசிக்கத் துவங்கி விடுகின்றனர். பின், அதிலேயே கொஞ்சம் கொஞ்சமாய் அமிழ்ந்தும் விடுகின்றனர்.

ஓஷோவிடம் வரலாற்றுணர்வோ, சித்தாந்தங்களைச் சமூகப்பின்புலத்தோடு பொருத்தி விளங்கிக் கொள்ளும் விரிவான பார்வைகளோ இல்லை. அவ்வகையில், அவரால் எதையும் கேள்விக்குள்ளாக்கிவிட முடிகிறது; தைரியமாகப் பகடி செய்து விட முடிகிறது. சிக்கல்களையும், தீர்வுகளையும் சமூகத்தளத்தை முழுக்கத் தள்ளிவிட்டு தனிமனிதத் தளத்தில் மட்டுமே அவர் பேசுகிறார். சமூகநிறுவனத்தின் இறுக்கத்தில் வேதனை கொள்ளும் இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தைத் தவிடுபொடியாக்கும் மனிதன் கிடைத்தால்? ஓஷோ அவ்வேலையை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்.

குறிப்பாக, சமயமரபு மீது ஓஷோ முன்வைக்கும் தருக்கங்கள் அவரை ஒரு மேம்பட்ட பகுத்தறிவுவாதியைப் போன்றே காட்டுகின்றன. சடங்குகள், தத்துவத் தரிசனங்கள் போன்றவை தொடர்பான அவரின் பார்வைகளையே அவற்றின் அர்த்தங்களாக நிலைநாட்டுவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஓஷோ. ஒருவிதத்தில் அவரை நான் வெகுவாக வியக்கிறேன். எச்சிந்தனையையும் அவர் தட்டையாகக் கட்டுடைத்தது இல்லை. மறுபுறம், அதற்காகவே அவரை நான் மறுக்கவும் செய்கிறேன். ஆம், அவர் நுட்பமாகவும் கட்டுடைப்பது இல்லை. ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற கவுண்டமணியின் வசனத்தை இங்கு நினைவூட்டுகிறேன்.

பெரும்பாலான இளைஞர்களுக்கு நிறுவனச் சமூகத்தின் மீது சொல்லவொணா ஒவ்வாமை. அதேநேரம், அச்சமூகத்தை விட்டுவிட இயலாத வகையில் தத்தளிப்பும் இருக்கிறது. அச்சூழலைத் தனக்குச் சாதகமான களமாக்கிக் கொள்கிறார் ஓஷோ. மத அடிப்படைவாதியாக, மார்க்சியனாக, அம்பேத்காரியனாக, பெரியாரியனாக விரும்பாத ஒரு இளைஞன் ஓஷோவிடம் வந்து சேர்கிறான். சித்தாந்திகளிடம் போனால் செயல்பட்டே ஆக வேண்டும். ஓஷோவிடம் வந்தால் செயல்படத் தேவையில்லை. அதேசமயம், சித்தாந்திகளை நக்கல் அடித்து மனச்சமாதானம் கொள்ளலாம். எளிதாகச் சொல்வதாயின், ஒரு சிந்தனையைக் கட்டுடைத்துக் கைதட்டிக் கொள்வதோடு நகர்ந்து விடலாம். மேலதிகமாக, சிந்தித்து நம்மைக் குழப்பிக் கொள்ளத்தேவையில்லை. இன்றைய சமூக ஊடகங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஒரு சிக்கலை எடுத்துக் கொண்டு அதை ஓஷோ ஆராயும் முறையே அலாதியானது. மனிதச்சமூகத்தில், காலம் மூன்றாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். ஓஷோவைப் பொறுத்தமட்டில் நிகழ்காலம் மட்டுமே சாசுவதம்; அதில் வாழ்வதே தியானம். ஒரு கனவுக்கருதுகோளாக அவரின் வாதம் சரி, ஆனால், நடைமுறை வாழ்க்கையில்? அவரின் வாழ்க்கையையே கவனித்தால் கூட அக்கூற்றின் அபத்தம் நமக்கு நிச்சயம் விளங்கும். ஆனால், அவர்தான் மேலதிகமாகச் சிந்திக்க வாய்ப்பு கொடுத்துவிட மாட்டாரே? அவரின் சொற்களில் மயங்கி வாசகன் ’நிகழ்காலத்தில் வாழ்வதற்காக’ தியானம் செய்ய ஆரம்பிக்கிறான். என்ன கொடுமை பாருங்கள், ஒருபோதும் ’நிகழ்காலத்தில் வாழும்’ ஓஷோ தியானியை அவன் சந்திக்கப்போவதே இல்லை.

காலம் குறித்த ஓஷோவின் கோணம் – “கடந்த காலத்தில் மனிதன் வாழவே இல்லை. அவனது வாழ்வு தள்ளிப்போடுதலாகவே மாறி விட்டது. நான் எதிர்காலத்தை பற்றிய எந்த கருத்தும் இன்றி இப்போது இங்கே வாழச் சொல்லித்தருகிறேன். எதிர்காலம் நீ இப்போது வாழ்வதிலிருந்து பிறக்க வேண்டும். நிகழ்காலம் முழுமையாக இருந்தால் எதிர்காலம் மேலும் முழுமையானதாக இருக்கும்.

முழுமையிலிருந்து மேலும் முழுமை பிறக்கும். ஆனால் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டுமென உனக்கு சில கருத்துக்கள் இருப்பதால் நீ நிகழ்காலத்தில் பகுதியாகத்தான் வாழ்கிறாய். ஏனெனில் உனது முழுக்கவனமும் எதிர்காலம்தான். உனது கண்கள் எதிர்காலத்தை பார்க்கின்றன.

நீ உண்மையுடன் நிகழ்காலத்துடன் தொடர்பை இழந்து விட்டாய். நாளை உன்னுடன் தொடர்பில்லாத இந்த நிஜத்திலிருந்துதான் பிறக்கும். நாளை இன்றிலிருந்து பிறக்கிறது, ஆனால் உனக்கு இன்றுடன் தொடர்பில்லை”

தர்க்கப்பூர்வமாகப் பொருந்தும் இவ்வாதத்தில் அவர் ஒருவித கனவையே முன்வைக்கிறார். ஆனால், அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்பது போன்ற மயக்கத்தையும் அளித்து விடுகிறார். ஒரு மனிதன் கடந்தகால மற்றும் எதிர்காலச் சிந்தனைகள் அற்று நிகழ்காலத்தை அணுகுவது சாத்தியமா? கொஞ்சம் யோசித்தாலே நமக்கு விளங்கிவிடும். நிகழ்காலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும் மனிதன் என்பதே ஓஷோவின் கனவு. அக்கனவை நான் குறைசொல்லப்போவதில்லை. ஆனால், அதைத் தத்துவம் போன்று அவர் வியாக்கியான்ங்களால் முன்னெடுத்துச் செல்லும்போது அது அபத்தமான ஆன்மீகமாகத் தளர்வடைந்து நிற்கிறது.

இறுதியாக ஒன்று. சிறந்த புனைவெழுத்தாளராக வந்திருக்க வேண்டிய ஓஷோவை நாம் தவறவிட்டு விட்டோம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-56
அடுத்த கட்டுரைஉரையாடும் காந்தி – மறுபதிப்பு