உரையாடும் காந்தி வாங்க
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்றைய காந்தி நூலுக்குப் பிறகு, தேசப்பிதா காந்திகுறித்து நீங்கள் எழுதிய புதியகட்டுரைகளின் தொகுப்பாக ‘உரையாடும் காந்தி’ என்னும் நூல் தன்னறம் நூல்வெளியின் வெளியீடாக கடந்த வருடம் உருவானது. சென்ற ஆண்டு முதல்பதிப்பாக அச்சடிக்கப்பட்டு வெளிவந்த இப்புத்தகம், இவ்வாண்டு(2019) இரண்டாம் பதிப்பை அடைந்திருக்கிறது. பரவலாக இப்புத்தகத்தை நிறைய மனிதர்களிடம் கொண்டுசேர்த்த சிறுவாணி வாசகர் வட்டம், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட தோழமைகள், காந்தி ஸ்டடி சென்டர், கோவை ரவீந்திரன் ராமசாமி, திருப்பூர் முத்துகிருஷ்ணன், எழுத்தாளர் வாசுதேவன் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு பெரும் நன்றிக்குரியது. இப்புத்தகத்தை வெளிச்சப்படுத்திய இன்னும்பிற முகமறியாத நண்பர்களையும் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறோம்.
இப்புத்தகத்தை மையப்படுத்திய காந்திய உரையாடல்கள் ஈரோடு கொங்கு கல்லூரி மற்றும் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்களோடு தோழமைகள் கண்ணன் திருவேங்கடம் மற்றும் முருகானந்தம் ஆகியோரால் முன்னெடுத்து நிகழத்தப்பட்டது. வேலூர் வாசக சாலையில் நிகழ்ந்த நூல்விமர்சனக் கூடுகையும், சென்னை காந்தி ஸ்டடி சென்ட்டர் மற்றும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த கருத்தரங்கும்… இந்நூலினையும் அதுபேசும் உண்மையினையும் தக்க மனங்களிடம் அண்மைப்படுத்தின. தமிழகத்தின் நிறையபகுதிகளில் இந்நூல்சார் உரையாடல்நிகழ்வு சிறுசிறு உதிரிக்குழுக்களில் இன்றும் தொடர்கிறது.
இரண்டாம் பதிப்பை இந்நூல் எட்டியிருக்கும் இவ்வேளையில், இதன் முதல்பதிப்பின் விற்பனை வழியாக கிடைக்கப்பெற்ற முழுத்தொகையையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்திலுள்ள குக்கூ காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் ‘விதைநாற்று வளர்ப்பகத்தின்’ உருவாக்கம் மற்றும் பராமரிப்புச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்துகிறோம்.
அழிந்துபோன சில மரவகைகளை, அம்மலையில் மீண்டும் நிலைநிறுத்தும் ஒரு செயலிலக்கின் ஆயுளுக்காக இப்புத்தகம் ஈட்டும் ஒவ்வொரு தொகையும் செலவிடப்பட உள்ளது. ஒரு உரையாடலின் ஆகச்சிறந்த விளைவு என்பது செயலை நோக்கி வாசல் திறப்பதுதான் என்கிற பேருண்மையை நாங்கள் கண்கூடாக அடைந்திருக்கிறோம். மண்காய்ந்த அந்த மலைக்கிராமத்தில் உருவாகும் தாவரப்பச்சையமும் ஈரத்தண்ணீரும் உங்களுக்கான பிரார்தனைகள் என்றே நாங்கள் நம்புகிறோம்.
நவீனத்தின் காலப்போக்கில், இத்தனை இளைஞர்களிடம் காந்தியைக் குறித்த விருப்பவேர்களை ஆழமாக விதைத்த உங்களுக்கு, கூட்டுழைப்பால் சாத்தியமடைந்த ஒரு செயல்கனிவின் நல்லதிர்வையும் அதன்வழி நன்றியையும் மனம்சேர்க்கிறோம். காலத்தால் அழியாத சொல் காந்தியுடையது; அச்சொல்லை ஆயிரமாயிரம் அர்த்த வார்த்தைகளாக விரிவுபடுத்திய உங்கள் படைப்புமனதினை இறுகப்பற்றிக் கொள்கிறோம்.
–
தன்னறம் நூல்வெளி,
குக்கூ காட்டுப்பள்ளி