அன்புள்ள ஜெ,
நலமா? ரஷ்ய இலக்கியம் வாசித்தல் சார்ந்த சில கேள்விகளை முன்வைக்க நினைக்கிறேன். நீங்கள்,எஸ்.ரா,கமல் ஹஸன்,மிஸ்க்கின் போன்ற நான் மதிக்கும் பலர் சொல்லி, ரஷ்ய இலக்கியம் வாசிக்க, செவ்விலக்கிய நாவல்களாகிய – குற்றமும் தண்டனையும், தி Idiot , போரும் அமைதியும், புத்துயிர்ப்பு போன்ற நாவல்களை வாசிக்க கடந்த சில மாதங்களாக முயற்சி செய்தேன். கு.த மற்றும் idiot இரண்டும் சொல்லி வைத்தார் போல 300 பக்கங்கள் தாண்டியதும் losing track என்று சொல்வது நிகழ்ந்தது. போரும் அமைதியும் 100 பக்கங்கள் தாண்டிய பொது நிகழ்ந்தது.
முக்கியமான இடையூறாக நான் கருதுவது கதாபாத்திரங்களின் பெயர்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் ‘இது இப்போ யாரு’ என்னும் ஐயம் வருகிறது.ஒரு பெயரே மூன்று பாகங்களாக இருப்பதும்,அதில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.
இன்னொன்று இடங்கள். கதை விவரிக்கும் பிரதேசத்தை என் கற்பனைக்குள் கொண்டு வருவதில் சிரமப்படுகிறேன். மற்றுமொரு பிரச்சனை உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு பக்கம் அல்லது அத்யாயம் முடியும்போதும் அதை நான் தாண்டியதை உணர்கிறேன். ஒரு தமிழ் புத்தகமோ மலையாள புத்தகமோ வாசிக்கையில் ஒரு சராசரி நேரத்திற்கேனும் அப்படி நேர்வதில்லை.இத்தனைக்கும் கு.த ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் தான் வாசிக்கிறேன். அதில் ஒன்றும் எனக்கு சிக்கல் இருப்பதாய் தெரியவில்லை.
நீங்கள் முதன்முதலில் வாசித்தபோது இவ்வாறு தோன்றியதுண்டா?ரஷ்ய இலக்கிய வாசிப்பின் ஆரம்பகாலகட்டத்தில் கதாபாத்திரங்களை எவ்வாறு சரியாக பின்தொடர்ந்தீர்கள்? முயற்சியை கைவிட விருப்பமில்லை. எனவே இது தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
ஸ்ரீநிதி
***
அன்புள்ள ஸ்ரீநிதி
பொதுவாக இலக்கியவாசகர்கள் வாசிப்பதற்கு இருக்கும் தடைகளைப்பற்றிப் பேசுவதில்லை. அது தங்கள் தகுதியைக் குறைத்துக்காட்டும் என நினைக்கிறார்கள் . ஆனால் தடைகளை பிரித்துணர்வதும் , அவற்றைக் கடக்க முயல்வதும் இலக்கிய வாசிப்பில் முக்கியமானவை ஏனென்றால் எவை ஓர் இலக்கியவாசிப்பில் தடைகளாக அறியப்படுகின்றனவோ அவைதான் உண்மையில் அந்த இலக்கியப்படைப்பின் தனித்தன்மைகள்.
ஓர் ஆக்கம் தடைகளே அற்ற வாசிப்பை அளிக்கிறது என்பது தனித்தன்மை இல்லாத எழுத்து அது என்பதற்கான சான்றுதான். ’ஆற்றோட்டமான ஒழுக்கு’ என்ற வரி போல இலக்கியத்தை தவறாக வரையறுக்கும் சொல் இல்லை. எந்த பேரிலக்கியமும் ஆற்றோட்டமான வாசிப்பு அளிப்பதில்லை. ஃப்ளோ என நம்மவர் சொல்லும் வாசிப்புத்தன்மை இலக்கியத்திற்கு எதிரானது என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அது ஏற்கனவே அவ்வாசகன் அமைந்திருக்கும் இடத்திற்கு தான் வந்து பேசுகிறது என்பதே அதன் பொருள். அது எதையும் புதிதாகச் சொல்லவில்லை, எங்கும் அவனை எடுத்துச்செல்லவில்லை.
ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கையில் பொதுவாக மூன்றுவகையான தடைகளை நாம் அறிகிறோம்.ஒன்று மொழியின் தடை. இரண்டு பண்பாட்டின் தடை. மூன்று அவ்வடிவத்தின் தடை.
பெரும்பாலான நல்ல படைப்புக்கள் தனக்குரிய தனிநடை கொண்டிருக்கும். அவற்றின் தனித்தன்மையே அந்த தனிநடைதான். எந்த தடையும் அற்ற நடை என்பது சமகாலத்து புழக்கநடைதான், அதில் இலக்கியம் அமைய முடியாது. அது அரிதாக ஒருசில படைப்புகளுக்கான மொழியாக ஆகலாம். பொதுவாக அவ்வாறு ஆவதில்லை. அந்த எழுத்தாளனின் அகச்செயல்பாட்டிலிருந்து உருவான தனிமொழி அமைந்தால் மட்டுமே அந்த படைப்பு இலக்கியமாகிறது.
ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கையில் அது அமைந்துள்ள பண்பாட்டுத்தளத்தையும் நாம் தொட்டறியவேண்டும். அதுவே அப்படைப்பை அர்த்தப்படுத்துகிறது. அப்படி ஒரு புதிய பண்பாட்டுச்சூழலை அறிமுகம் செய்யாத படைப்பும் மேலோட்டமானதே. நாம் அறிந்த வாழ்க்கைச்சூழலை சொல்லும்போதேகூட இலக்கியப்படைப்புக்கள் ஒரு புதிய பண்பாட்டுச்சூழலையே அறிமுகம் செய்கின்றன. வட்டாரவழக்கு, வட்டாரக் குறிப்புகள் போல பண்பாட்டுநுட்பங்கள் முடிவற்றவை
அதேபோல வடிவம் அளிக்கும் தடை. இலக்கியப்படைப்பின் வடிவம் அளிக்கும் தடையே நம்மை கற்பனை செய்ய வைக்கிறது. ஒர்படப்புடன் நாம் உறவாடுவது அதன் வடிவம் வழியாகவே. அதன் உட்புகுந்து அடுக்கிக்கொள்கிறோம். தொகுத்துக்கொள்கிறோம். தொடுத்துக்கொள்கிறோம். விளைவாக நாம் நம் படைப்பை அதனுள் இருந்து எடுத்து அமைத்துக்கொள்கிறோம்.
ருஷ்யப் பேரிலக்கியங்களுக்கு ஒட்டுமொத்தமான ஒரு தனித்தன்மை உண்டு. எளிமையான நேரடிநடையில் எழுதப்பட்டவையே அவற்றில் பெரும்பாலானவை. ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் போன்ற ஆக்கங்கள் பழமொழிகளை உருமாற்றிக் கையாள்வது, பிரெஞ்சுச் சொற்றொடர்களை பயன்படுத்துவது, இறையியல் சுட்டுகள் என பலவகையிலும் அடுக்குகள் மிக்கவை.
ருஷ்யப்பேரிலக்கியங்கள் நாம் அறியாத பண்பாட்டுச்சூழலை நமக்குக் காட்டுகின்றன. ஓரளவுக்கேனும் நான் அவற்றை ‘காட்சிப்படுத்திக்’கொள்ளவேண்டும். அதற்கு இடர்கள் இருந்தால் ருஷ்ய ஓவியங்களைப் பார்க்கலாம். [திரைப்படங்களைப் பார்க்கவேண்டாம். அவை நம் கற்பனையை குறுகச்செய்துவிடுகின்றன] ஓவியங்கள் அக்காலச் சூழலை நம் கண்களுக்குக் காட்டுகின்றன. அவை நம் உணர்திறனை மேலும் துல்லியமாக ஆக்கலாம்
ருஷ்யப்பெயர்களை ஒரு தாளில் தனியாக எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் நோக்கி நினைவில் நிறுத்திக்கொண்டுதான் வாசிக்காவேண்டும். வேறுவழியே இல்லை. கதைமாந்தர் பெயர்கள் மட்டுமல்ல. இடப்பெயர்களும் சிக்கல்தான். அதேபோல அவர்களின் பலவகையான வாழ்க்கைமுறைகளையும் கொஞ்சம் அறிந்துகொண்டாகவேண்டும். போர்க்களச் சித்தரிப்புக்களில் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளவேண்டும். போரும் அமைதியும் போன்ற நாவல்களில் கொஞ்சம் வரலாறும் தெரிந்தாகவேண்டும்
அதற்கு இன்று இணையம், குறிப்பாக விக்கிப்பீடியா, மிகப்பெரிய உதவிசெய்கிறது. தகவல்களை விக்கி வழியாக தெரிந்துகொண்டே வாசிக்க முடிகிறது. சென்ற காலத்தில் நானெல்லாம் வாசிக்கையில் அதற்கான வழி இல்லை. எந்நாவலையும் 30 சதவீதம் அப்படி தகவல்களை தெரிந்துகொண்டு வாசித்தால் அதன்பின் உள்ளே வாழ ஆரம்பித்துவிடுவோம்.
ருஷ்யப்பெருநாவல்களை வாசிக்கையில் மேலே சொன்னவை உண்மையில் சின்ன தடைகள். மிகப்பெரிய தடை வடிவத்தடைதான். ருஷ்யநாவல்களின் வடிவங்கள் சிக்கலற்றவை, ஒழுக்கு கொண்டவை . ஆனால் அவற்றில் மூன்று தடைகள் உண்டு. ஒன்று மிகவிரிவான விவரணைகள். இத்தனை விவரணைகள் தேவையா என இன்றைய வாசகன் கேட்கலாம். ஆனால் அந்த விவரணைகள்தான் நம் மனதில் நெடுங்காலம் – அனேகமாக வாழ்நாள் முழுக்க – அந்நாவல்களை நிலைநிறுத்துகின்றன என பின்னாளில் உணரலாம்.
இரண்டு, உள்ளத்தின் ஓட்டத்தையும் தத்துவத்தையும் விரித்துரைக்கும் நீள்கூற்றுக்கள். உதாரணமாக, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் அவை நாடகீயத்தன்னுரைகள் [Dramatic monologue ] போலவே வெளிப்படுகின்றன. அவற்றில் மிகநீண்ட உரையாடல்கள் உண்டு. நீண்ட கடிதங்களும் வருவதுண்டு. இவ்வளவு நீளமாகவும் கோவையாகவும் எவராவது பேசுவார்களா, எல்லா கதைமாந்தரும் இப்படி சுவாரசியமாகவும் அறிவார்ந்தும் தத்துவார்த்தமாகவும் பேசுவார்களா, சாதாரண மனிதர்கள் எவராவது இப்படி நீளமாக கடிதங்கள் எழுதுவார்களா என எண்ணினால் நாம் நாவலை, பேரிலக்கிய அனுபவத்தை இழப்போம்.
ஏனென்றால் அந்த நீண்ட பகுதிகள் மானுட உள்ளம் ஆழ்ந்து செயல்படுவதை, அவை வெளிப்படும் விதத்தைக் காட்டுபவை. பின்னாளில் நனவிலி ஒழுக்கின் வடிவில் எழுதப்பட்ட மானுடஉள்ளச்சித்தரிப்பே இந்நாவல்களில் இவ்வடிவில் வெளிப்படுகிறது பின்னாளில் எழுதப்பட்ட மானுட உள்ளச்சித்தரிப்பு அனைத்துக்கும் அவையே அடிப்படை. உண்மையைச் சொன்னால் பின்னாளில் எவருமே அந்த உச்சங்களை கடந்து ஏதும் எழுதிவிடவில்லை.
மூன்று, கதையோட்டத்தை நிறுத்திவிட்டு நேரடியாக தத்துவ விவாதத்தில் ஈடுபடும் பகுதிகள். கதையாக பேசப்படுவனவற்றை கூடவே தத்துவமாக மேலும் விரிவாக விவாதிப்பவை இந்நாவல்கள். அந்த இரு சரடுகளும் சரியாக இணைந்து முறுக்கிக்கொண்டுதான் அவற்றின் முழுமை அமைகிறது. தத்துவத்தை விட்டுவிட்டு அவற்றை வாசிக்க முடியாது. கதைநடுவே எதற்கு தத்துவம் என்னும் கேள்வி எழுந்தாலே அந்நாவல்களை இழந்துவிடுவோம்
உண்மையில் அவை தத்துவம் அல்ல, தத்துவத்தின் புனைவுவடிவங்கள்தான். தத்துவம் புனைவுவடிவிலேயே மிகச்சிறப்பாக வெளிப்பட முடியும். ஏனென்றால் தத்துவத்தின் மிகச்சிறந்த கருவி உருவகம் [Metaphor ]தான் அதை செவ்வியல் நாவல் அதன் மற்ற பக்கங்களில் மிகச்சிறப்பாக உருவாக்கிக் கொண்டுவர முடியும் . தத்துவப்புனைவுதான் நாவல் என்னும் கலைவடிவின் முதன்மையான கலைக்கருவி. நாவலின் நோக்கமே வாழ்க்கை குறித்த பெரும்படிமங்களை, உருவகங்களை உருவாக்குவதுதான் என்பார்கள் விமர்சகர்கள்.
ஆகவே இந்த ‘திசை திரும்பல்களை’ ‘தொட்டுத்தொட்டுச்செல்லும் பயணங்களை’ முழுக்க கருத்தில்கொண்டு கூர்ந்து வாசிக்கத்தான் வேண்டும். வேறுவழியே இல்லை. முறையான உழைப்பை கொடுத்தால்தான் பேரிலக்கியத்தை வாசிக்க முடியும். சாதாரணமான நவீன இலக்கியங்களுக்கு அவ்வுழைப்பு அளிக்கப்படவேண்டியதில்லை. ஏனென்றால் அவை நமக்கு பெரிய தடைகளை அளிப்பதில்லை.
ஆகவே ருஷ்யப்பேரிலக்கியங்கள் மட்டும் அல்ல பேரிலக்கியங்கள் பொதுவாக அளிக்கும் தடைகளை ஓர் எதிர்மறை இயல்பாக நினைக்கவேண்டியதில்லை. தடைகள் இல்லாமல் வாசிப்பது எப்படி என முயலவேண்டியதில்லை. உங்களுக்கு மட்டும் அந்த தடை இருப்பதாக நினைக்கவும் வேண்டியதில்லை. அந்தத் தடைகளை நீங்கள் கற்பனை வழியாக, சிந்தனை வழியாக கடந்துசெல்கிறீர்கள். உங்கள் கற்பனை விரிகிறது. சிந்தனை விரிகிறது. பேரிலக்கியங்களை வாசிக்க நாம் அளிக்கும் உழைப்பே அவற்றிலிருந்து நாம் அடையும் கல்வி என்பது. உண்மையில் பேரிலக்கியங்கள் நம்மை உருமாற்றுவது இப்படித்தான்
ஜெ
***