‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49

பகுதி ஏழு : தீராச்சுழி – 5

பூர்ணை குடிலிலிருந்து வெளியே வந்து சில கணங்கள் வெறும் வெளியை நோக்கியபடி நின்றாள். பின்மாலையின் சாய்வெயிலில் மரக்கிளைகள் ஒளிகொண்டிருந்தன. காட்டுக்குள் சாய்ந்திருந்த ஒளிச்சட்டங்கள் அங்கு அசையா நெருப்பு நின்றிருப்பதுபோல் தோன்றச் செய்தன. பறவைகளின் ஒலிகள் மாறுபட்டு கான்முழக்கம் கார்வை கொண்டிருந்தது. குடில் நிரைகளில் இருந்த ஏவலர்கள் பேசும் ஒலிகளும் பின்முழக்கம் ஒன்றைச் சூடியிருந்தன. குடில் முன் நின்றிருந்த புரவி அரைத்துயிலில் தலையை நன்கு தாழ்த்தி ஏதோ எண்ணத்திலாழ்ந்திருந்ததுபோல் உறைந்திருந்தது.

அவள் அப்புரவியை நோக்கிக்கொண்டே நின்றாள். எண்ணம் விரைந்தோடும் போது விழிகளை எங்கேயாவது நாட்டி நிற்பது அவள் வழக்கம். எண்ணம் சென்று தொடும் முடிவு அவள் விழி நாட்டி இருக்கும் அப்பொருளுடன் தொடர்புள்ள வடிவிலேயே தோன்றும் விந்தையை அவள் முன்பே அறிந்திருந்தாள். எனவே விழித்தெழுந்தபோது அப்புரவி எவருடையது என்று எண்ணம் எழுந்ததும் அவள் வியப்படையவில்லை. சூழ நோக்கியபோது இளஞ்சேடி அப்பால் வந்தாள். அவளைக் கைகாட்டி அழைத்து “இப்புரவி எவருடையது?” என்றாள். அவள் கூர்ந்து நோக்கியபின் “இங்கு அரசர் இளைய பாண்டவர் ஒரு காவலனை நிறுத்தியிருந்தார், தேவையெனில் செய்தி கொண்டுசெல்வதற்கு” என்றாள்.

“அவருக்கா?” என்றாள் பூர்ணை. “ஆம்” என்றாள் அவள். “ஆனால் அரசி இதுவரை செய்தி என எதையும் அனுப்பவில்லை.” பூர்ணை “இப்போது அக்காவலன் எங்கே?” என்றாள். இளம் சேடி மெல்லிய தவிப்படைவதை பார்த்ததும் அவளுக்கு புரிந்தது. “அக்குடிலுக்கு பின்னால் அவன் நின்றிருக்கிறானா?” என்றாள். இளஞ்சேடி விழி தழைத்தாள். “அவனை வரச்சொல்க” என்று அவள் சொன்னாள். இளஞ்சேடி “இல்லை, நான்தான்… அவர்…” என்று சொல்லத்தொடங்க கூரிய குரலில் மறித்து “செல்க!” என்று பூர்ணை சொன்னாள். இளஞ்சேடி தலைவணங்கி சென்று குடிலுக்குப் பின்னால் அகன்று அங்கு நின்றிருந்த காவலனிடம் பேசினாள்.

அவர்களின் கசங்கிய பேச்சுக்குரல்கள் சொல்லின்றி ஒலித்தன. பின்னர் அவன் தயங்கியபடி அவள் அருகே வந்து நின்றான். அவள் நோக்கியதும் தலைவணங்கினான். அவள் அவனிடம் “இங்கு உன் பணி காவல்” என்றாள். “பொறுத்தருள்க, நான் உண்மையில்” என்று அவன் சொன்னான். இளஞ்சேடி “நான்தான்…” என ஊடே புக அவளை விழிகளால் அடக்கியபின் “சென்று இளைய பாண்டவர் பார்த்தனை இங்கே வரச்சொல்க. அவரை அவர் துணைவி பார்க்க விழைகிறார் என்று கூறுக” என்றாள். “ஆம், ஆணை” என்று அவன் புரவியை நோக்கிச்சென்று அதன் முதுகை தட்டி மேலேறி திரும்பி விரைந்தான்.

வால் சுழல, சிறுதாவல்களாகச் செல்லும் அந்த புரவியை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். இளஞ்சேடி அவள் ஆணைக்காக காத்திருந்தாள். அவள் திரும்பி பார்த்தபோது தலைகுனிந்து நின்றாள். அவள் முகத்திலிருந்த பொலிவை, கைவிரல்கள் பதற்றத்துடன் ஒன்றையொன்று தொட்டு நிலையழிவதை பூர்ணை கண்டாள். ஒருகணம் சீற்றம் எழுந்தாலும் மறுகணம் புன்னகை வந்தது. அத்தனை துயரிலும் மானுடர் தங்கள் விழைவுகளை தொடர்கிறார்கள். இடுகாட்டில் பூக்கள் மலர்கின்றன என்ற சூதர் பாடல் நினைவு வந்தது. “செல்” என்றபின் சென்று குடில் திண்ணையில் அமர்ந்தாள்.

உடல் ஓய்வை நாடியது. மண் அவள் தசைகளை இழுத்தது. தன் எண்ணங்களை தொகுத்துக்கொள்ள முயன்றாள். எதன்பொருட்டு இளைய பாண்டவரை வரச்சொன்னோம் என்ற தெளிவே அவளுக்கு இருக்கவில்லை. அம்முடிவை எடுத்த பின்னரே அதை எவ்வண்ணம் கொண்டுசெல்ல போகிறோம் என்று எண்ணத்தொடங்கினாள். எப்போதும் அவள் இயல்பு அதுதான். எண்ணி எடுத்த முடிவுகள் எவையும் அவளுக்கு கைகொடுத்ததில்லை. அவை மீண்டும் எண்ணினால் நிகரான ஆற்றல் கொண்ட மறுதரப்பை உருவாக்கின. எண்ணாமல் எடுத்த முடிவுகள் அனைத்தும் எவ்வண்ணமோ ஊழுடனும் தெய்வங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தன.

எண்ணாமல் வாழும் உயிர்கள் ஊழுக்கு ஒப்புக்கொடுத்தவை. பேரொழுக்கில் நலுங்காது ஒழுகிச் செல்பவை. ஊழுடன் முரண்படுபவருக்கே துயர், ஆகவே தான் ஆற்றலுள்ளோர் அழிவை நாடுகின்றனர். தேடல் கொண்டோர் துயர் மிகுகிறார்கள். அவள் தேவிகையை சென்று பார்க்க வேண்டுமென்று விழைந்தாள். அவள் அன்றிரவு முழுக்க அங்குதான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. தேவிகை எந்நிலையில் இருக்கிறாள்? அவள் வந்திருக்கும் இடமாவது அவளுக்குத் தெரியுமா? அவள் தன் பீடத்தை மெல்ல தட்டியபோது இளஞ்சேடி வந்து நின்றாள்.

“நீ சென்று மத்ரநாட்டு சேடியிடம் சொல், இன்றிரவு நான் வரப்போவதில்லை என்று. இரு அரசியரையும் பேணும் பொறுப்பு அவளுக்குரியதென்று தெரிவித்துவிட்டு வா” என்றாள். அவள் தலைவணங்கி நடந்து சென்றாள். முற்றத்தின் விளிம்பை தாண்டுவது வரை இறுகிய உடலும் ஒடுங்கிய தோளுமாக சென்ற அவள் குறுங்காட்டினூடாக சென்ற பாதையில் ஏறியதுமே சிறுமிபோல் மெல்லிய துள்ளலுடன் கைகளை வீசி செல்வதை அவள் கண்டாள். புன்னகை விரிய அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மலர்கள் புன்னகையின் தூய வடிவங்கள். ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் புன்னகைகளால் தேவர்கள் இம்மண்ணை பொலிவுறச் செய்கிறார்கள் என்ற சூதர் வரியை நினைவுகூர்ந்தாள்.

தொலைவில் அர்ஜுனனின் புரவி வருவது தெரிந்தது. அது சுழன்று நிலமறையும் குளம்போசையுடன் பெருவிரைவில் வந்தது. அந்த விரைவை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. புரவி முற்றத்தில் வந்து வளைந்து நிற்க அர்ஜுனன் கால் சுழற்றி இறங்கி கடிவாளத்தை அதன் மேல் வீசியபடி அவளை நோக்கி வந்தான். அவன் முகம் பதற்றம் கொண்டிருந்தது. அவள் எழுந்து நின்று “கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை, அரசே. அரசியை தாங்கள் பார்க்கலாமென நான் எண்ணினேன்” என்றாள். அர்ஜுனன் “அரசி என்னை பார்க்க விரும்புவதாக செய்தி வந்ததே” என்றான். “ஆம், அச்செய்தியை நான்தான் அனுப்பினேன். தாங்கள் அரசியை இத்தருணத்தில் பார்க்கவேண்டும், தாங்கள் சிலவற்றை அவர்களிடம் சொல்லியாக வேண்டும் என கருதினேன்” என்றாள்.

அர்ஜுனன் புருவம் சுருக்கினான். “தன் மைந்தனைப்பற்றி அவர்கள் உளம் கொதிக்கிறார்கள். தன் மைந்தனின் ஊழ் தன்னால் தவறாக வகுக்கப்பட்டுவிட்டது என்னும் குற்றஉணர்வு கொண்டு தவிக்கிறார்கள். அவ்வாறல்ல, அது தவிர்க்க முடியாத ஊழ் என்று நீங்கள் அவர்களிடம் கூறவேண்டும். அவர்கள் உளம் சற்றேனும் அடங்கவேண்டும்” என்றாள். அர்ஜுனன் எரிச்சலுடன் “ஊழ் குறித்து உரையாடுவதற்கா இத்தனை தொலைவு நான் வந்தேன்?” என்றான். “ஆம், தங்கள் மைந்தனின் ஊழ் குறித்து” என்ற பின் “உத்தரையைப்பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்” என்றாள்.

அவன் திடுக்கிட்டவன்போல் தலைதூக்கி “உத்தரையைப் பற்றியா?” என்று கேட்டான். “இங்கு அனைவரும் அறிந்ததுதான். அனைவரும் தயங்கிக்கொண்டிருப்பதும் கூட. நீங்கள் இருவரும் அதைப்பற்றி ஆழ்ந்து ஒரு சொல்லும் இதுவரை உரையாடியிருக்கமாட்டீர்கள். சொல்வதற்கு ஏதேனும் இருப்பின் அவற்றை சொல்லிவிடுங்கள். பிறகு என்றேனும் அவற்றை சொல்வதற்கான தருணம் வாய்க்காது போகும்” என்றாள். அர்ஜுனன் தவிப்புடன் “நான் என்ன கூறுவது?” என்றான். “அரசே, கூறவேண்டியது ஒன்று எஞ்சியுள்ளது. விராடநாட்டு அரசியின் கருவில் வளரும் மைந்தனைப்பற்றி” என்றாள்.

அர்ஜுனனின் விழிகள் தழைந்தன. அவன் கைகள் தவித்து ஒன்றையொன்று பற்றிக்கொண்டன. “தாங்கள் காமத்தை கடந்துவிட்டீர்கள் என்று இங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். எனில் அது உருவாக்கும் இடர்களிலிருந்தும் நீங்கள் வெளியேறியிருக்கவேண்டும். இதுவே அதைச் சொல்வதற்கான தருணம். சென்று கூறுக” என்றாள் பூர்ணை. “நான் அதிலிருந்து முழுக்க வெளியேறவில்லை என்று இப்போது உணர்கிறேன்” என்றான் அர்ஜுனன். “விழைவை கடந்துள்ளேன். அச்சங்களையும் தயக்கங்களையும் அல்ல.” பூர்ணை “தங்களால் வெளியேற முடியும். அதற்கான வாய்ப்பென்று இதைக் கொள்க. செல்க” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

 

அர்ஜுனன் உள்ளே செல்லத் தயங்கி வாயிலிலேயே நின்றான். பின்னர் “முழுமையான செய்திகளை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அரசகுடியினர் அனைவருடைய கருக்களும் கலைந்துள்ளன. முதற்குடியினரும் அணுக்கரும் ஐந்தாமவரும்கூட முழுமையாகவே கருக்குழவிகளை இழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குருகுலத்தின் கொடிவழியில் இன்று எஞ்சியிருப்பது உத்தரையின் கருவிலிருக்கும் குழவி மட்டுமே. அவன் நீளாயுள் கொண்ட மைந்தன் என்றும் முடிசூடி அமரும் ஊழ் கொண்டவன் என்றும் நிமித்திகர்கள் கூறினர். அவ்வண்ணம் ஒரு குழவி எஞ்சுவதென்பது ஊழ் என்பது ஒன்றே என்னை ஆறுதல்படுத்துகிறது” என்றான்.

“என்ன நிகழ்ந்தது எவ்வண்ணம் என்று நான் இப்போது விரித்துரைக்க தேவையில்லை. விராடரின் ஆணை அது. உத்தரையின் குழவி அரியணை அமரவேண்டும் என்று அவர் கூறினார். அதற்குரிய வாய்ப்புகள் அன்று இல்லை என்று தோன்றியது. அபிமன்யு அவன் தமையருக்கு அடங்கமாட்டான், தனி முடி நாடுவான் என்று அவர் எண்ணினார். எனக்கும் அவ்வண்ணமே தோன்றியது. அடுத்த தலைமுறையில் அது நிகழட்டும் என்று அப்போது எண்ணினேன். இன்று அந்த எண்ணம் அனைத்தும் உண்மையாகிவிட்டிருக்கிறது. இன்று அவள் குழவி இந்திரப்பிரஸ்தத்தையும் அஸ்தினபுரியையும் ஆளும் நிலை உள்ளது… இத்தருணத்தில்…” என்றான் அர்ஜுனன்.

“அதை அரசியிடம் சொல்லுங்கள்” என்றாள் பூர்ணை. “ஒருவேளை அவர்கள் அச்சொல்லால் உளம் அமையக்கூடும்.” அர்ஜுனன் “இல்லை, அவள் விரும்பமாட்டாள். அவள் உத்தரையை வெறுக்கிறாள்” என்றான். பூர்ணை “அது இயல்பு… ஆனால் வாழ்வது அவர் மைந்தனின் குருதி” என்றாள். அர்ஜுனன் தத்தளித்து “உத்தரை கருக்கொண்டிருப்பவன் முடிசூடும் அரசன் என நிமித்தச்சொல் உள்ளது அவளுக்குத் தெரியுமா?” என்றான். மீண்டும் “அது தன் மைந்தனின் குருதி என்று அவள் எண்ணுகிறாளா?” என்றான். மீண்டும் அவனே “அது அவளை ஆறுதல்படுத்துவதுதானா?” என்றான்.

“உண்மை அவர்களுக்கு தெரியும். ஆகவே தான் மீளும்வழி குறித்து பேசுகிறார்கள்” என்றாள் பூர்ணை. “அவர் சென்று சிக்கிக்கொண்டது என்பது என்ன என்று நன்கு அறிந்திருக்கிறார்.” அர்ஜுனன் “எனில் ஏன் இதை அவளிடம் சொல்லச் சொல்கிறாய்?” என்றான். “ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடத்தில் புதைத்து வைத்திருப்பதனால் எதிலும் தெளிவில்லாமல் இருக்கிறார். அனைத்தும் பேசப்பட்டு முழுத் தருணம் அமையட்டும். அதன் பின்னர் என்ன எஞ்சுகிறதோ அதுவே மெய்மை என்றாகட்டும்” என்றாள் பூர்ணை.

“இத்தருணத்தில் இதை அவளிடம் சொல்லலாமா என்று தெரியவில்லை. நான் ஒரு சொல் இளைய யாதவரிடம் கேட்டுவிட்டு…” என்று அர்ஜுனன் சொல்ல அவள் தடுத்து “அவர் ஆணுடலில் இருக்கிறார். பரம்பொருளே ஆயினும் திகழும் சிலைக்கு கட்டுப்பட்டது என்பார்கள். பெண்ணுளம் அவர் அறியாதது” என்றாள். சற்றே கடும்குரலில் “சென்று அனைத்தையும் கூறுக, அரசே. எஞ்சாது அனைத்தையும் கிழித்து முன்வையுங்கள். பின்விளைவதென்ன என்று அவருக்கு தெரியட்டும். இன்று அவர்கள் எடுக்கும் முடிவுக்கு பின்பு வருந்த நேரக்கூடாது. அனைத்தும் அறிந்தபின் எடுத்த முடிவு என்று அவர்கள் தெளிவுற எண்ணட்டும்” என்றாள்.

அர்ஜுனன் சில கணங்கள் அவளை நோக்கிவிட்டு “உன்னை நம்பி இம்முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. உன் அகவையை. அரசியரை அணுகியறிந்த உன் வாழ்வை… எனக்கு வேறு வழியில்லை” என்றான். பின்னர் மெல்லத் தயங்கி “இது என்னை மட்டும் சார்ந்ததல்ல. உத்தரையையும் சார்ந்தது. குருகுலத்தின் அனைவரையும் ஒருவகையில் தொடர்புறுத்துவது” என்றான். “இத்தருணத்தில் இது உங்கள் இருவருக்கும் இடையே மட்டும் நிகழ்வது” என்றாள் பூர்ணை. தலைகுனிந்து அர்ஜுனன் உள்ளே சென்றான்.

பூர்ணை அக்குரல்கள் தனக்குக் கேட்கும்படியாக வாயிலுக்கு வெளியே நின்றாள். அர்ஜுனன் உள்ளே நுழைந்த பின் சிறிது நேரம் ஓசை எதுவும் கேட்கவில்லை. அவர்கள் சந்தித்துகொண்டார்களா என்று ஆவலுடன் பூர்ணை படலை திறந்து உள்ளே பார்த்தாள். மஞ்சத்தில் கண்களை மூடிக்கொண்டு சுபத்திரை படுத்திருப்பது தெரிந்தது. அவளை நோக்கியபடி அர்ஜுனன் நின்றிருந்தான். அவன் அவளை அழைக்கவில்லை. அவள் அவன் வந்ததை உணர்ந்திருக்கிறாள் என்று தோன்றவில்லை.

உள்ளே சென்று சுபத்திரையை எழுப்பவேண்டுமா என்று எண்ணியபோது சுபத்திரை தன்னுணர்வால் அவன் வந்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள். கையூன்றி எழுந்தமர்ந்து “யார்?” என்றாள். எழுந்து நின்றபோது அவள் அர்ஜுனனை விட உயரமாக இருந்தாள். அவன் உடலைவிட பெரிய உடல். “எப்போது வந்தீர்கள்?” என்றாள். “சற்று முன்னர்தான்” என்று அவன் சொன்னான். கனிந்த குரலில் “உன்னைப் பார்க்க வேண்டுமென்று வந்தேன். இறுதியாக உன்னிடம் சில சொல்ல வேண்டியுள்ளது. நீ சொல்வதை நானும் கேட்டாகவேண்டும்” என்றான்.

அவள் உணர்ச்சியற்ற குரலில் “உங்களிடம் எனக்கு சொல்வதற்கு எதுவுமில்லை. நமக்கிடையே இன்னும் உறவென்று ஏதும் எஞ்சியிருப்பதாகவும் நான் எண்ணவில்லை. நீங்கள் செல்லலாம்” என்றாள். “நம் மைந்தன்” என்று அவன் சொல்லத்தொடங்க “நம் மைந்தனுக்கும் நமக்குமான உறவு அறுந்துவிட்டது. அவனில்லை என்றாகிவிட்ட பிறகு உங்களுக்கும் எனக்கும் என்ன உறவு?” என்றபின் கைசுட்டி “நீங்கள் செல்லலாம்” என்றாள். “சுபத்திரை” என்று அவன் தளர்ந்த குரலில் அழைத்தான். “எதையும் பொறுப்பேற்றுக் கொள்ளும் தகுதிகொண்டவன் அல்ல நான். எனினும் உன் பொருட்டு அனைத்தையும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அனைத்தும் என் பிழையே என்று ஒப்புக்கொள்கிறேன். அதற்கான பழிச்சொற்கள் எதையும் ஏற்கவும் சித்தமாக இருக்கிறேன்” என்றான்.

“பழி கொள்ள வேண்டியவர் எவரென்று எனக்குத் தெரியும்” என்று சுபத்திரை சொன்னாள். “நீங்கள் வெறும் கருவி. உங்களுக்கு எந்த உரிமையுமில்லை. ஆனால் வெறும் கருவிகளிடம் உரையாடும் நிலையில் நானில்லை. செல்க” என்றாள். “நான் நம் மைந்தனைப்பற்றி சில விஷயங்களை அறுதியாக கூற வந்தேன்” என்றான். “என் மைந்தனைப் பற்றி நீங்கள் என்னிடம் எதுவும் கூறவேண்டியதில்லை” என்று அவள் உரக்க கூறினாள். அவள் உடல் நடுங்கியது. முகம் சிவந்து மூச்சு சீறத்தொடங்கியது.

“சுபத்திரை, உன் தோற்றம் என்னை தளரச்செய்கிறது. இருமுறை வந்து உன்னை பார்த்து சென்றிருந்த போதும் கூட இத்தனை நெகிழ்ந்திருப்பாய் என்று எண்ணவில்லை” என்றபடி அர்ஜுனன் கைநீட்ட அவள் சீறல் ஒலியெழுப்பி பின்னகர்ந்து சுவர் சாய்ந்து நின்றாள். “என்னிடம் மறுசொல்லேதும் எடுக்க வேண்டியதில்லை. கிளம்புக” என்று உரக்க கூவினாள். எண்ணியிராதபடி சீற்றம்கொண்டு எழுந்து “எதன்பொருட்டு சினம்?” என்று அர்ஜுனன் கூச்சலிட்டான். “களத்தில் நான் ஆசிரியரையும் பிதாமகரையும் கொன்றேன். உடன்குருதியினர் அனைவரையும் கொன்றேன். குருதியில் நீராடி வெற்றிக்கென இறுமாப்பும் கொண்டேன். அதன் பொருட்டு வரும் தலைமுறைகள் என் மேல் பழி சுமத்தலாம். இழிமகன் என்று என்னை வகுத்துரைக்கட்டும். துணைவியென உன் முன் நின்று நான் சிறுமை கொள்வதற்கென்ன உள்ளது?”

அவன் கைசுட்டி கூவினான். “நம் மைந்தன் சிறுவனல்ல. குண்டலமணிந்து படைக்கலம் எடுத்தவன். களம்நின்று அவன் கொய்தெறிந்த தலைகள் நானும் நிகழ்த்தியதற்கு நிகரானவை. கொல்பவன் கொல்லப்படுவதற்கும் உரியவன். அவன் களம் எழுந்ததன் பொருட்டு நீ இத்தனை துயரடைகிறாய் என்பது அவனுக்கு இழிவு.” அவள் கண்ணீரைத் துடைத்து வஞ்சத்துடன் அவனை நோக்கினாள். வஞ்சம் அவளை கூர்கொள்ளச் செய்தது. “எனில் கூறுக, நீங்கள் இப்போது துயரடைவது எதன்பொருட்டு?” என்று அவள் கேட்டாள். அவன் விழி தாழ்த்தி “அனைத்துக்காகவும்” என்றான். துயர் தளர்த்திய குரலில் “களத்தில் இன்றி எரிந்தழிந்த என் மைந்தருக்காகவும்” என்றான்.

அவள் இதழ்கோட்டி “அவர்களுக்காகவும் அல்ல. துயர்கொள்வது பிறிதொன்றுக்காக. தன் பிழையொன்றிலாத இழப்பின் பொருட்டு மானுடர் நீடுதுயர் கொள்வதில்லை” என்றாள். அவன் முன்னடி வைத்து நெஞ்சைத் தொட்டு “என் பிழை என்ன?” என்று உரக்க கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல், என் பிழை என்ன?” என்று அவன் மீண்டும் கேட்டான். சுபத்திரை ஒன்றும் சொல்லாமல் இகழ்ச்சி தெரிய நோக்கிக்கொண்டு நின்றாள். “சொல் இழிமகளே, என் பிழை என்ன? சொல்” என்று அர்ஜுனன் கூவினான்.

பூர்ணை மெல்ல நகர்ந்து வெளிவந்து அகன்ற முற்றத்தில் நின்றாள். உள்ளே அவர்கள் இருவரும் உரத்த குரலில் மாறி மாறி கூச்சலிடுவது கேட்டது. அவள் வெறிகொண்டவள்போல “செல்க! செல்க!” என்று கூவிக்கொண்டிருந்தாள். “நான் சொல்வதைக் கேள்… ஒரு சொல் கேள்” என்று அர்ஜுனன் கூறுவது கேட்டது. பின்னர் ஓசையடங்கினர். தாழ்ந்த குரலில் அவள் ஏதோ சொன்னாள். அர்ஜுனன் திகைத்து அவளை நோக்கியபடி நிற்பதை அவளால் பார்க்க முடிந்தது.

பின்னர் அர்ஜுனன் கதவைத் திறந்து வெளிவந்து அவளைப் பார்த்தான். “அவள் கழுத்திலிருக்கும் அந்த வாளைத் தாழ்த்தும்படி சென்று சொல்” என்றான். “அவர் தாழ்த்திக்கொள்வார்” என்று பூர்ணை சொன்னாள். அர்ஜுனன் தலையை அசைத்து “ஒன்றும் புரியவில்லை… ஒருகாலத்தில் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள முடியுமென்று எண்ணியிருந்தேன். இன்று மானுடரால் எதையேனும் புரிந்துகொள்ள முடியுமா என்ற அயர்வை அடைந்துவிட்டேன்” என்றான்.

“தாங்கள் இப்போதேனும் கூறியது நன்றே” என்றாள் பூர்ணை. “நான் எதையும் கூறவில்லை. அவள் எதையும் செவிகொள்ளும் நிலையில் இல்லை” என்றான் அர்ஜுனன். “கூறிவிட்டீர்கள். இவ்வளவுதான் அவரிடம் கூறமுடியும். இதற்கப்பால் சொல்லெடுக்க இயலாது” என்று பூர்ணை சொன்னாள். அர்ஜுனன் சில கணங்கள் அவளைப் பார்த்துவிட்டு “இவையனைத்தும் இந்திரப்பிரஸ்தத்தில் குருகுலம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஊழ் வகுத்த சூழ்கை என்று நேற்று மாலை இளைய யாதவர் என்னிடம் சொன்னார்” என்றான்.

“நிகழ்வன அனைத்தும் ஊழே என்பது ஒரு நல்ல எண்ணம். செல்வதற்கான வழி மிகத் தெளிவாக வகுக்கப்பட்டுவிடுகிறது” என்றாள். அர்ஜுனன் “இவள் எதற்காக காத்திருக்கிறாள்?” என்றான். “தன் மைந்தனிடம் பேசுவதற்காக. மலர்ச்சூழ்கையிலிருந்து வெளிவரும் வழியை தன் மைந்தனிடம் தெரிவித்துவிடவேண்டும் என்கிறார்கள். அதை அறியாமல் மைந்தன் விண்புகலாகாது என்று சொல்கிறார்கள்” என்றாள் பூர்ணை. “இறந்தவர்களிடம் பேசவைக்கும் முனிவர் ஒருவரை அழைத்துவருவதற்காக ஏவலன் ஒருவன் சென்றிருக்கிறான்.”

“இறந்தவரிடமா?” என்றபின் “மைந்தனிடமா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றாள் பூர்ணை. “என்ன பேசப்போகிறாள்?” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் சொற்களை அவன் செவிகொள்ளவில்லை என்று தெரிந்தது. “அவர் சென்று சிக்கிக்கொண்ட அந்த மலர்ச்சூழ்கையிலிருந்து எவ்வாறு வெளிவருவதென்று அவருக்கு தெரிந்தாகவேண்டுமாம். அதன் பின்னரே இங்கிருந்து அவர் மூச்சுலகிற்கு மீளவேண்டும் என்கிறார்.”

அர்ஜுனனின் முகம் மாறுபட்டது. “அந்த தாமரை மலர் பலநூறு இதழ்கொண்டது. அதில் ஒரு இதழ் இளைய யாதவர். பிறிதொன்று அவள். பிறிதொன்று நான். என்னுடன் என் உடன்பிறந்தார்கள், அவன் உடன்குருதியினர், துரியோதனன், கௌரவர், அங்கர், துரோணர், லட்சுமணன், துருமசேனன், ஜயத்ரதன் என இதழ்கள் ஏராளமாக உள்ளன. அவள் அவனுக்கு எதை சொல்லப்போகிறாள்? அந்த ஒவ்வொருவருடைய ஊழ் நெறியையும் சொல்லிவிடுவாளா என்ன? சொல்லி முடிக்க எத்தனை ஆண்டுகளாகும்?”

அவள் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் தன் தலையில் ஓங்கி அறைந்து “அறிவின்மை! முற்றிலும் அறிவின்மை!” என்றான். “அவள் அவனை இடருக்கே கொண்டுசெல்வாள். அதற்கு நான் விடப்போவதில்லை… அது நடவாது என்று அவளிடம் சொல்” என்றபின் அவன் புரவியை அணுகி அதிலேறி விரைந்து சென்று மறைந்தான். அவள் புரவி செல்வதை நோக்கியபடி நின்றபின் மீண்டும் சென்று திண்ணையில் அமர்ந்தாள்.

முந்தைய கட்டுரைபாலைநிலப் பயணம்
அடுத்த கட்டுரைஓர் அறைகூவல்