பகுதி ஏழு : தீராச்சுழி – 4
இளைய யாதவர் வரும்போது பூர்ணை சுபத்திரையின் குடில் வாயிலில் நின்றிருந்தாள். இளைய யாதவர் தேரில் வருவார் என்று அவள் எண்ணினாள். அவர் தொலைவில் நடந்து வருவதைக் கண்டதும் மெல்லிய திகைப்பு ஏற்பட்டது. அவர் களைத்து தனித்து வருவதாக முதலில் தோன்றியது. ஆனால் அணுகுந்தோறும் இளமை கொண்டு சிறுவனென்றாகிவிட்டதாக விழிகள் மயங்கின. தலையிலிருந்த பீலி காற்றில் அசைந்தது. இருபுறமும் நோக்கி, அவ்வப்போது நின்று கூர்ந்து பார்த்து, முகம் மலர தனக்குள் மகிழ்ந்து தலையசைத்து உள்ளே ஓடும் சொற்களை மெல்ல சொல்லிக்கொண்டு சிறுவனாகவே அவர் அணுகி வந்தார்.
ஒளிபட அவர் அணுகியபோது கருவறை தெய்வம் அகலொளியில் என அவர் முகத்திலிருந்த விரிந்த புன்னகையைக் கண்டு பூர்ணை படபடப்பு கொண்டாள். சொல்லெழாமல் கைகூப்பி நின்றாள். இளைய யாதவர் அருகணைந்து அவளிடம் “எப்படி இருக்கிறாள்?” என்றார். பூர்ணை அவ்விழிகளையும் புன்னகையையும் கண்டு சொல்மறந்து நெஞ்சில் கூப்பிய கைகள் மேலும் இறுகி நடுங்க நின்றாள். அவர் அவள் தோளில் கைவைத்து “உளம் தெளிந்திருக்கிறதா?” என்றார். அதன் பின்னரே அவள் சொல் மீண்டு “ஆம் அரசே, உளம் தெளிந்திருக்கிறார். தங்களிடம் பேச விரும்புகிறார்” என்றாள். “நன்று” என்றபின் அவர் குடிலுக்குள் சென்றார். உள்ளே நுழைய ஒப்புதல் கோரவில்லை. அவளைச் சொல்பெற்றுவர அனுப்பவுமில்லை.
பூர்ணை வாசலில் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்றாள். இளைய யாதவர் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு முகம் திருப்பிக்கொண்டார். அவர்கள் அவளை அகன்று போகச் சொல்லவில்லை என்பதனால் அவள் அங்கேயே நின்றாகவேண்டும் என உணர்ந்தாள். சுபத்திரை இளைய யாதவரைக் கண்டதும் எழுந்து மேலாடையை சீர்செய்து ஆடைமுனையை தலைக்கு மேல் சுழற்றி குழல் மறைத்து அமைத்தபடி தலைநிமிர்ந்து நின்றாள். அவள் முகமன் ஏதும் உரைக்கவில்லை. ஆனால் அவள் ஏதோ பேசிக் கொதிப்பதுபோல் முகம் நெளிந்துகொண்டிருந்தது.
இளைய யாதவர் “நான் இருமுறை வந்து உன்னைப் பார்த்துவிட்டு சென்றேன், சுபத்திரை. அன்று நீ துயின்றுகொண்டிருந்தாய். உன் முகம் மிகவும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. உடல் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தது. இன்று ஓரளவுக்கு தேறியிருக்கிறாய் என்று நினைக்கிறேன். நன்று, உளம் தேறினால் உடலும் தேறும்” என்றார். சுபத்திரை அவர் முகத்தை பார்த்து “உங்களுக்கு மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி தெரியுமா?” என்றாள். அவர் புன்னகைத்து “நான் வெளியேறும் முறைகள் எதையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எப்போதும் வெளியேதான் நின்றிருக்கிறேன். எதற்குள்ளும் நுழைவதில்லை” என்றார்.
அவள் சீற்றத்துடன் “இத்தகைய சொல்விளையாடல்களுக்கு எனக்கு பொழுதில்லை. என் மைந்தனுக்கு நீங்கள் உரைத்த மலர்ச்சூழ்கையை உடைத்து உள்ளே செல்லும் வழிதான் அவனை கொன்றது. அதிலிருந்து மீளும் வழியை நீங்கள் அவனுக்கு ஏன் சொல்லவில்லை?” என்றாள். “யாருக்கேனும் அது சொல்லப்படுகிறதா?” என்றார் இளைய யாதவர். “யாரேனும் வெளியேறியிருக்கிறார்களா?” என்று மீண்டும் கேட்டார். “என்னிடம் விளையாடவேண்டாம். இச்சொற்களுக்கு என்னிடம் எந்தப் பயனுமில்லை!” என்று உரத்த குரலில் சுபத்திரை சொன்னாள். “நான் என் மைந்தனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அவனுக்கு மலர்ச்சூழ்கைக்குள் செல்லும் வழியை கற்பித்தீர்கள். மீளும் வழி கற்பிக்கப்படவில்லை. ஆகவேதான் அவன் அங்கேயே சிக்கிக்கொண்டான்.”
“இதெல்லாம் சூதர்கள் உருவாக்கும் கற்பனைகள். அவன் தனது அத்துமீறும் இயல்பினால் தனித்து அச்சூழ்கைக்குள் சென்று சிக்கிக்கொண்டான். போர் என்பது ஒத்திசைவால் மட்டுமே நிகழ்த்தப்படுவது. எந்நிலையிலும் தன் படைகளின் ஒரு பகுதியாக நிலைகொள்பவனே மெய்யான வீரன். இளமையின் துடுக்கும் புகழ் தேடவேண்டும் என்னும் மிகைவிழைவும் உன் மைந்தனை அலைக்கழித்தன. அவன் அவ்வாறு மீறிச்செல்வதை எவரும் எதிர்பார்க்கவில்லை. அவனும் எவரையும் திரும்பி நோக்கவில்லை. ஆகவே மலர்ச்சூழ்கையிலிருந்து அவனை மீட்கும் பொழுது பாண்டவப் படைகளுக்கு அமையவில்லை… மெய்யாகவே நிகழ்ந்தது இதுவே.”
“நடந்ததை நீயே உசாவி அறியலாம், அரசி” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அப்போது இளைய பாண்டவர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளிலிருந்தனர். அவர்கள் பலரை வென்று கடந்து வந்து அச்சூழ்கையை உடைக்கவேண்டியிருந்தது. அபிமன்யுவைக் களத்தில் சூழ்ந்து நின்றிருந்தவர்கள் அங்கரும் துரோணரும் ஜயத்ரதனும் என கௌரவத் தரப்பின் மாவீரர்கள். அவர்களே அம்மலரின் இதழ்கள். அவனால் அச்சூழ்கையை உடைத்து எப்படி வெளிவர இயலும்? வீண் கதைகளை உன் எண்ணத்தில் ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர்.
“இல்லை! மீளும் வழி தெரிந்திருந்தால் என் மைந்தன் வந்திருப்பான். அவனை எவராலும் அவ்வண்ணம் சிறைப்படுத்தியிருக்க இயலாது!” என்று அவள் சொன்னாள். “அத்தனை மாவீரர்களையும் தன்னந்தனியாக நின்று அவன் எவ்வாறு எதிர்க்கமுடியும்?” என்றார் இளைய யாதவர். “அவன் எதிர்த்தான். பொருதி அவர்களை வென்றான். அவர்கள் ஒவ்வொருவரும் பின்னடைந்தனர்!” என்று சுபத்திரை சொன்னாள். “அவன் வெல்லற்கரியவன். தேவர்களுக்கு இனியவன். அவனை வென்றது ஊழ். இப்புவியில் எவருமல்ல, வெல்லற்கரிய ஊழ்” என்று அவள் கூவினாள். “நான் அறிவேன். அந்த ஊழின் திறவுகோல் உங்களிடமிருந்தது. அதை நீங்கள் அவனுக்கு அளிக்கவில்லை!”
அவர் பொறுமையுடன் “போருக்குப் பின் கதைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அங்கு என்ன நிகழ்ந்ததென்று எவர் கண்டது? அவனை எதிர்ப்பதில் அனைவருக்கும் தயக்கமிருந்தது என்பதே உண்மை. களத்தில் அவனைக் கொன்றாகவேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். எனில் மட்டுமே போர் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இயலும் என்பதை அறிந்திருந்தார்கள். ஆனால் அங்கர் தன் கையால் அவன் இறப்பதை விழையவில்லை. கிருபர் அவன் வீழ்த்தப்படவேண்டும் என்று மட்டுமே எண்ணினார். ஜயத்ரதன் கூட முழுமையாக போரிடவில்லை. துரியோதனன் அப்போரிலேயே இல்லை. மெய்யாகவே எதிர்த்தவர் துரோணர் மட்டுமே. அவரும் விரைவிலேயே பின்னடைந்து நம் மைந்தன் தப்பிப்போக முடியுமென்றால் செல்லட்டுமே என்ற முடிவை அடைந்தார்” என்றார்.
“அவனை தப்ப விடாது நின்று போரிட்டவன் லக்ஷ்மணனும் கோசல மன்னன் பிருஹத்பலனும் மட்டுமே. அவன் அவர்களைக் கொன்றான். அப்போது கூட அவனை அவர்கள் முழுமையாக சுற்றி வளைக்கவில்லை. அறுதியில் அவனை வீழ்த்தியவன் ஜயத்ரதன். அவனைக் கொன்றவன் துருமசேனன். இதுதான் நடந்தது…” அவள் தலையை இல்லை இல்லை என்று அசைத்தாள். “என் மைந்தனுக்கு வெளியேறும் வழி தெரிந்திருக்கவேண்டும். தெரிந்திருந்தால் அவன் இவ்வண்ணம் வீழ்ந்திருக்க மாட்டான். அது உங்கள் பிழை. எனது பிழை!” என்று கூவினாள். அவள் கண்கள் கலங்கி வெறித்திருந்தன. முகம் சிவந்து மூச்சு சீறியது. பிச்சி போலிருந்தாள்.
“அவன் உள்நுழைந்த சூழ்கைகள் என்னென்ன என்று நமக்கு தெரியாது. விண்ணிலிருந்து பார்க்கும் தேவராலும்கூட மண்ணில் மானுடர் புகுந்து ஆடும் சூழ்கைகளைப்பற்றி அறியமுடியாது…” என்றார் இளைய யாதவர். “நீங்கள் விண்ணிலிருந்து பார்ப்பவர். உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை” என்று சுபத்திரை சொன்னாள். “இப்பிறவியிலாவது அவன் அச்சூழ்கையை அறுத்து முன்னகர வேண்டும்… இங்கிருந்தாவது அவன் அதை கடந்துசெல்லவேண்டும்” என்று அவள் கூச்சலிட்டாள். முன்னால் வந்து இளைய யாதவரின் கைகளைப் பற்றிக்கொண்டு உலுக்கியபடி “அவன் விடுதலை பெற்றாகவேண்டும்… அவன் கடந்துசென்றாகவேண்டும்!” என்றாள்.
“உன் நாவிலிருந்து வந்தது ஓர் அரிய சொல். உணர்க. அவன் இச்சூழ்கைக்குள் சிக்கிக்கொண்டது இப்போது மட்டுமல்ல. ஒரு வாழ்வில் ஒருவர் அடையும் துன்பங்கள் அனைத்தும் முந்தைய பிறப்பின் தொடர்ச்சிகள் என்றும் அடுத்த பிறப்பின் தொடக்கங்கள் என்றும் உணர்வது ஒரு மெய்யறிதல். அச்சூழ்கைக்குள் அவன் பல பிறவிகளுக்கு முன்னரே நுழைந்துவிட்டிருந்தான். மீள மீள முயன்று ஒவ்வொன்றாக இழந்து ஒருசிலவற்றை ஈட்டி அவன் பிறவிச்சுழலில் சென்று கொண்டிருக்கிறான். வரும் பிறவிகளில் அவன் கண்டடைவான். அவன் மீளக்கூடும். அவன் ஊழ் அவனை அழைத்துச் செல்லும். அதுவே நெறி” என்று இளைய யாதவர் சொன்னார்.
“அனைத்திற்கும் மறுமொழியாக இதை சொல்கிறார்கள்!” என அவள் கசப்புடன் சொன்னாள். “ஊழ் ஊழ் ஊழ் என்று ஒரு சொல். எனக்கு அச்சொல் வெறுப்பை அளிக்கிறது… மானுடனின் அறியாமையையும் கீழ்மையையும் சிறுமையையும் அதைப்போல் வெளிப்படுத்தும் பிறிதொரு சொல் இல்லை.” இளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.
இளைய யாதவரின் குரல் கனிந்திருந்தது. சிறுமியிடம் பேசுவதுபோல் குனிந்து அவளிடம் சொன்னார் “அப்பயிற்சிக்கு குறுக்கு வழிகள் இல்லை, அரசி. குறுக்கு வழிகளால் வெல்பவன் எதையும் கற்றுக் கடந்து செல்வதில்லை. உன் மைந்தன் இங்கு முன்னரே அவனுக்கு வகுக்கப்பட்டிருந்த சூழ்கை ஒன்றில் உட்புகுந்து சிக்கிகொண்டான். அவனுக்காக வைக்கப்பட்ட அத்தேர்விலும் சிலவற்றை வென்றிருப்பான். சிலவற்றை ஈட்டியிருப்பான். அதுவே இனி அவனை கொண்டுசெல்லும் ஊர்தி. அவனுடைய வழிகாட்டி அது. அதை நீ இங்கிருந்து உணர முடியாது.” சுபத்திரை “அவன் என் கனவில் வந்தான். அச்சுழியிலிருந்து அவனை விடுவிக்கும்படி என்னிடம் கோரினான்” என்றாள்.
“உன் கனவில் வந்தானா? தன்னை விடுவிக்கும்படி அவன் கோரினானா?” என்று முதல்முறையாக குரல் கூர்மையடைய இளைய யாதவர் கேட்டார். “ஆம், அதனால்தான் நான் தவிக்கிறேன்” என்றாள் சுபத்திரை. அவர் மேலும் கூர்ந்து அவள் கண்களுக்குள் நோக்கி “நன்கு எண்ணிச்சொல். அவன் அவ்வாறு கூறினானா?” என்றார். “கூறினான்! அது கனவல்ல, மெய். நாங்கள் துவாரகையின் வட்டச்சுழல் பாதையில் வழி தவறினோம். அன்னையே உனக்கு மீளும் வழி தெரியுமா என்று அவன் கேட்டான்” என்றாள் சுபத்திரை.
இளைய யாதவர் புன்னகைத்து “உனக்கு மீளும் வழி தெரியுமா என்று மட்டுமே கேட்டிருக்கிறான்” என்றார். “அது அவ்வழியை அவனுக்கு நான் சொல்லவேண்டும் என்பதற்கான கோரிக்கை மட்டுமே. அவனை நான் அறிவேன்” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் சற்றே சலிப்படைந்து “இவ்வெண்ணத்தை விட்டுவிடு, சுபத்திரை. இது நன்றல்ல. ஊழை அறிந்துகொள்ள முயல்வது என்பது அதை எதிர்த்து நிற்பதற்கு நிகர்தான். அந்த அத்துமீறலை ஊழ் சமைத்த ஆற்றல்கள் விரும்புவதில்லை. எதிர்த்து நிற்பவர்களுக்கு ஊழ் மேலும் ஆற்றல் கொண்டதாகிறது” என்றார்.
“நீ உன் உள்ளத்தில் செறிந்திருக்கும் ஆணவத்தால் ஊழை எதிர்க்கலாம் என்னும் எண்ணத்தை அடைகிறாய். உன்னால் எதுவும் முடியுமென்று எண்ணுகிறாய். நீ உன்னையே கூட இன்னும் அறியவில்லை. உன்னைச் சூழ்ந்தவற்றை கூட இன்னும் கடக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கையில் பிறருக்கு வழிகாட்டுபவர் என எவருமில்லை. மைந்தருக்கும், சுற்றத்திற்கும், எளியவருக்கும், கற்றோருக்கும், சான்றோருக்கும், அந்தணருக்கும், முனிவருக்கும், தெய்வங்களுக்கும் நாம் அளிக்கும் அனைத்து கடமைகளும் நாம் வெளியேறும் பொருட்டு நாம் செய்வது மட்டுமே” என்றார் இளைய யாதவர்.
“இச்சொற்கள் எவற்றையும் நான் செவிகொள்ளப் போவதில்லை. இத்தகைய சொற்களால் என் வாழ்நாள் முழுக்க சித்தத்தை நிரப்பிவிட்டிருக்கிறேன். சற்றே எண்ணியிருந்தால் என் மைந்தனுக்கு வெளியேறும் வழியை நான் சொல்லியிருப்பேன். இனி அது நிகழலாகாது. அடுத்த பிறவியிலாவது அதை அவன் அறிந்தாகவேண்டும். என் மைந்தனுக்கு இன்னும் பொழுதில்லை. இன்றிரவுக்குள் அவனை நான் சந்திக்க வேண்டும். அவன் எங்கிருந்தாலும் என் முன் வரவேண்டும். அவனுக்கு நான் சொல்ல வேண்டும், அதிலிருந்து வெளியேறும் வழி என்ன என்று” என்றாள் சுபத்திரை. “சொல்லுங்கள், மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி என்ன?”
இளைய யாதவர் “மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி ஒன்றே” என்றார். “அதன் மிகவும் ஆற்றல் குறைந்த பகுதி அதன் குவிமுனைதான். அதன் இதழ்களை ஊடுருவி எவரும் வெளியேற முடியாது. ஆனால் இதழ்கள் வந்து கவ்வுவதனால் ஒவ்வொருவரும் அதை ஊடுருவவே முயல்வார்கள். எதிர்ப்போரை மட்டுமே எதிர்ப்பது என்பது போர்ச்சூழலில் நிகழும் உளமாயம். மலர்ச்சூழ்கையின் இதழ்கள் குவியும் இடத்தில் ஒரு சிறு வாயில் இருந்தே ஆகவேண்டும். ஒவ்வொரு இதழும் ஒன்றையொன்று அழுத்துவதனால் உருவாகும் சிறு துளை அது. இதழ்கள் விசை கொள்ளும்தோறும் அத்துளை மேலும் தெளிவடைகிறது. அதனூடாக அன்றி வேறெவ்வகையிலும் மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேற இயலாது.”
சுபத்திரை “இதை என் மைந்தனிடம் சொல்லவேண்டும். நான் சொல்லவில்லையெனில் இப்பிறவியில் எந்நிறைவையும் அடையப்போவதில்லை. அன்னையென இங்கிருப்பது வீணென்றே உணர்வேன்” என்றாள். இளைய யாதவர் “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்கை. இப்பிறவியில் மலர்ச்சூழ்கை, அடுத்த பிறவியில் அவனுக்கு காத்திருப்பது எச்சூழ்கை என்று நீ எவ்வாறு அறிவாய்?” என்றார். சுபத்திரை “இதை அவன் அறிந்து செல்லட்டும். இப்பிறவியில் அவனுக்கொரு தெளிவிருக்கட்டும். இங்கிருந்து இத்தனை பெரிய விடையின்மையுடன் அவன் செல்லலாகாது” என்றாள்.
“நீ எண்ணுவதுதான் என்ன? அவனது மீட்பா? அல்லது இதனூடாக உன் பொறுப்பிலிருந்து நீ விடுவித்துக்கொண்டாய் எனும் நிறைவா?” என்று இளைய யாதவர் கேட்டார். சுபத்திரை திகைப்புடன் இளைய யாதவரை பார்த்தாள். பின் உரக்க கூவியபடி குடில் மூலையிலிருந்த வாளை எடுத்து உருவி தன் கழுத்தில் வைத்துக்கொண்டாள். “இக்கணம் நீங்கள் உரைக்கவேண்டும். என் மைந்தனுடன் நான் உரையாட முடியுமா? என் மைந்தனை என் முன் வரவழைக்க முடியுமா? என் எண்ணத்தை அவனிடம் சொல்ல முடியுமா? இல்லையெனில் மறுகணம் இதை இழுத்துக்கொள்வேன். இங்கு உயிர்வாழமாட்டேன்! உங்கள்மேல் ஆணை!”
“சுபத்திரை…” என்று கை நீட்டியபடி இளைய யாதவர் முன்னகர்ந்தார். “கூறுக, ஆமெனக் கூறுக” என அவள் கூவினாள். “நான் அறிவேன், உங்களால் இயலும் என. வேறெந்த சொல்லையும் ஏற்கமாட்டேன்.” இளைய யாதவர் “பொறு… பொறு… நான் நீ கோருவதைச் செய்கிறேன்… பொறு” என்றார். அவள் வாளை அழுத்தியபடி அவரை வெறி நிறைந்த விழிகளால் நோக்கினாள். “அவன் இங்குதான் இருக்கிறான். நீர்க்கடனுக்கு முன் உற்றாரை சூழ்ந்திருப்பது நீத்தாரின் இயல்பு” என்றார். “அவனிடம் நான் பேசியாக வேண்டும். அவனிடம் அனைத்தையும் கூறியாகவேண்டும்” என்றாள் சுபத்திரை.
“அவனை இங்கு வரவழைப்போம். அதற்கு நான் ஒருங்கு செய்கிறேன்” என்றார் இளைய யாதவர். சுபத்திரை கழுத்தில் பதித்த நடுங்கும் வாளுடன், நீர் நிறைந்து நிலைத்த விழிகளுடன், சிவந்து குருதி படிந்தவைபோல் மாறியிருந்த முகத்துடன் இளைய யாதவரை பார்த்துக்கொண்டிருந்தாள். “மெய்யாகவே அதை செய்யலாம். ஆணை… நம்பு” என்றார் இளைய யாதவர். “எனக்கு ஒரு முனிவரை தெரியும். நான் அவரை தண்டகாரண்யத்தில் ஒருமுறை கண்டேன். அவரை அழைத்து வரச் சொல்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார்.
அவள் வாளை ஓசையுடன் நிலத்திலிட்டு தன் இரு கைகளையும் தலையில் சேர்த்து பற்றிக்கொண்டு எடையுடன் மஞ்சத்தில் குனிந்து அமர்ந்தாள். இளைய யாதவர் “நீ செய்வதென்ன என்று உனக்குத் தெரியவில்லை. இந்நெறிகள் இரக்கமற்றவை. புவி முழுக்க உயிர்களை கட்டுப்படுத்துபவை என்பதனால் அவை அவ்வாறுதான் இருக்க இயலும். ஏனென்றால் இங்கு ஓர் உயிருக்கு காட்டும் இரக்கம் பல்லாயிரம் உயிர்களுக்கு இழைக்கும் கொடுமையாக மாறிவிடகூடும். இங்கு ஒரு நெறி முடிச்சவிழ்கையில் பல்லாயிரம் கோடி முடிச்சுகள் மேலும் இறுகக்கூடும். இதில் ஒரு அணுவையும் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. இவையனைத்தையும் படைத்து காக்கும் மும்மூர்த்திகளுக்கும் கூட” என்றார்.
“பரம்பொருளென்பது இப்பல்லாயிரம் கண்ணிகளால் தன்னை தொடுத்துக்கொண்டு புடவியெங்கும் நெறிகளென்றும், நிகழ்வுகள் என்றும் நிறைந்திருக்கும் ஒன்று. நீ அறிந்துகொள்ள முயல்வது முனிவர் ஊழ்க நிறைவில் அடைவதை. நீ எதிர்ப்பது உன்னுள்ளும் உறையும் அம்முடிவின்மையை” என்றார் இளைய யாதவர். “நான் எதையும் எண்ண விரும்பவில்லை. என் மைந்தன் என்னுடன் பேசவேண்டும். அவனிடம் நான் சொல்லியாக வேண்டும். அது ஒன்றே எனக்கு இப்போதைய தேவை” என்றாள் சுபத்திரை.
இளைய யாதவர் சுபத்திரையிடம் விடைபெறும் முகமாக “நன்று, நான் உரியன செய்கிறேன்… நீ பொறுத்திரு” என்று கூறி திரும்பியபோது அவர் முகத்தை பூர்ணை பார்த்தாள். அதில் அங்கு வரும்போது இருந்த அதே புன்னகை இருப்பதைக் கண்டு அவள் திகைத்தாள். இளைய யாதவர் அவளிடம் அதே புன்னகையுடன் “என் ஏவலன் வெளியே வந்துள்ளானா?” என்றார். அவள் திரும்பிப்பார்க்க வெளியே அவருடைய அணுக்க ஏவலனாகிய யாதவ இளைஞன் வந்திருப்பதை கண்டாள். “ஆம்” என்றாள்.
அவர் வெளியே வந்து அவனை அருகணையும்படி கைகாட்டினார். இயல்பாக அவன் தோளில் கைவைத்து தாழ்ந்த குரலில் பேசத்தொடங்கினார். அவன் அவர் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் தலைவணங்கி திரும்பிச் சென்றான். இளைய யாதவர் பூர்ணையிடம் “நான் அறிந்த முனிவர் இங்குள்ளார். அவர் நீத்தாரை வரவழைத்து அவர்களுடன் நம்மை பேச வைக்கும் ஆற்றல் கொண்டவர். அவரை ஒருமுறைதான் நேரில் கண்டிருக்கிறேன். ஆனால் அவர் ஆற்றலை உணர்ந்திருக்கிறேன். அவரை அழைத்துவரும்படி தூதனுப்பியிருக்கிறேன். அவர் மிக அருகேதான் இருக்கிறார். அதை நான் உணர்கிறேன். அங்குதான் அனுப்புகிறேன்” என்றார்.
அவள் தலையசைத்தாள். “சற்றுநேரத்திலேயே அவர் வந்துவிடுவார். அதுவரை நீ தங்கையுடன் இரு. அவள் உள்ளம் தளராது நோக்குக” என்றார். அவள் “அவர் உள்ள உறுதி கொண்டிருப்பதாகத்தானே தோன்றுகிறது?” என்றாள். “இல்லை. அது இன்னொரு வகையான தளர்வு” என்றபின் தலையசைத்துவிட்டு இளைய யாதவர் ஏவலன் கொண்டுவந்து நிறுத்தியிருந்த தன் புரவியை நோக்கி சென்றார். அதில் ஏறிக்கொண்டு மெல்லிய தாவல்நடையில் அவர் இருளுக்குள் செல்வதை அவள் நோக்கி நின்றாள். பின்னர் நீள்மூச்சுடன் திரும்பினாள்.
பூர்ணை சுபத்திரையை அணுகி “தாங்கள் ஏதேனும் அருந்தலாம், அரசி” என்றாள். “அவரால் இயலும். அவர் என் மைந்தனிடம் பேச வைப்பார். அவனுக்கு நான் இங்கு என்ன நிகழ்ந்ததென்று கூறுவேன். வெளியேறும் வழியை அவனுக்கு நான் கூறுவேன்… ஐயமில்லை” என்று அவள் சொன்னாள். “ஆம், உங்கள் உள்ளம் அதை அழுத்தமாக ஆணையிடுகிறது என்றால் அதை செய்க” என்றாள் பூர்ணை. “ஆனால் அது ஊழின் நெறியைக் குலைத்தல் என்றும் அது தீங்கை விளைவிக்கும் என்றும் இளையவர் கூறுகிறாரே?” என்று சுபத்திரை சொன்னாள். பூர்ணை புன்னகைத்து “அரசி, நாம் ஒன்றை நம் உயிரை மீறி செய்துவிடமுடியுமா?” என்றாள்.
அக்கோணத்தில் முதன்முறையாக எண்ணிய சுபத்திரை திகைப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “நீங்கள் இவ்வண்ணம் எண்ணுவதும் இதை இயற்றுவதும் கூட மறைந்த இளவரசரின் ஊழின் ஒரு பகுதியோ என்னவோ. நம் உள்ளம் ஏவுவதை செய்வோம். நம் உள்ளத்தை ஏவுவது எவரென்றும் ஏனென்றும் நாம் அறிய முடியாதல்லவா?” என்றாள் பூர்ணை. “ஆம்” என்று சுபத்திரை பெருமூச்சுவிட்டாள். எழுந்து தன் விழிகளை துடைத்து மேலாடையை சீரமைத்தாள். அவள் வளையல்கள் ஒலித்தன. ஆடை சரசரத்தது.
பூர்ணை அவளை நோக்கினாள். அவள் கையில் நிறைந்திருந்த வளையல்கள் பெரிதாகி மணிக்கட்டிலிருந்து கழன்று நழுவி வெளியே விழும்படி தோன்றின. வெண்ணிறமான கைகளில் நீல நரம்புகள் புடைத்து பரவியிருந்தன. “நான் வேண்டுமென்றால் இளைய பாண்டவரை இங்கு வரச்சொல்கிறேன். தங்களிடம் அவர் முறைப்படி ஏதோ சொல்ல வேண்டுமென்று கூறப்பட்டது” என்றாள் பூர்ணை. “வேண்டாம்!” என்று உரக்க சுபத்திரை சொன்னாள். மூச்சுத் திணற பற்களைக் கடித்து “இத்தருணத்தில் நான் எவரையாவது சந்திப்பதை முற்றாக தவிர்க்கிறேன் என்றால் அவரைத்தான்” என்றாள்.
“அவர் துயருற்றிருக்கிறார். தாங்களும் துயருற்றிருக்கிறீர்கள். இத்தருணத்தில் நீங்கள் ஒருவரோடொருவர் கைமாறிக்கொள்ளும் சொற்கள் எவையாயினும் அவை நன்றே. வசையோ பழியோ கூட ஆறுதல் அளிப்பதுதான்” என்று பூர்ணை சொன்னாள். “வேண்டியதில்லை!” என்று அவள் உரக்க சொன்ன்னாள். “ஒருநாள் கூட அவரிடம் நான் எதையும் பகிர்ந்துகொண்டதில்லை. ஒருமுறை கூட அணுக்கமாக உணர்ந்ததும் இல்லை. அவருடன் எனக்கு இன்று எந்த உளத்தொடர்பும் இல்லை.”
“அவரை விரும்பி அவருடன் வந்தீர்கள்… அவர் தேரை நீங்கள் செலுத்திய கதையை சூதர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன்” என்றாள் பூர்ணை. “ஆம், அது ஒரு சிறு பொழுது… ஆனால்…” என்றபின் “இந்நகருக்குள் நுழைந்தபோதும் முதல் நாளிலேயே தெரிந்துகொண்டேன், அவர் உள்ளத்தில் வேறு பெண்களுக்கு இடமில்லை என்று” என்றாள் சுபத்திரை. “ஆனால்…” என்று பூர்ணை சொல்லத் தொடங்க “ஆம், பல பெண்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவருடைய வேறு வேறு வடிவங்களே. அவர்களும் அதை உணர்ந்து தங்களை அந்த வடிவங்களாக மாற்றிக்கொண்டு அவருக்கு அணுக்கமானார்கள். சில தருணங்களில் அவரை வென்றார்கள்” என்றாள் சுபத்திரை.
“நான் யாதவரின் தங்கை. துவராகையின் அரசி. பிறிதொருவரின் மாற்றுவடிவமாக மாறுவது என்னால் இயலாது. அவ்வாய்ப்பை முற்றாகவே தவிர்த்துவிட்டேன். ஆகவே ஒருபோதும் அவருக்குள் நுழையவுமில்லை, அவருக்கு அணுக்கமாக ஆகவும் இல்லை. ஓரிரவு ஓரிரு சொற்கள் அதற்கு மேல் எனக்கும் அவருக்கும் எவ்வுறவுமில்லை. இம்மைந்தன் அவருடன் நான் கொண்ட அன்புக்கான சான்றல்ல. நான் கொண்ட விலக்கத்தின் சான்று மட்டுமே. இது அவரிலிருந்து நான் அள்ளி எடுத்துக்கொண்ட எனக்குரிய வடிவம். இதில் திகழ்ந்த நான் சமைத்துக்கொண்ட இளைய பாண்டவர் அவன்” என்றாள் சுபத்திரை.
பூர்ணை “ஆம்” என்று பெருமூச்சுவிட்டாள். “அவன் நிலையற்றிருக்கிறான். துயருற்றிருக்கிறான். அத்துயர் எதனால் என்று என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை” என்றாள் சுபத்திரை. “நீர்க்கடனுக்கு முன் அத்தனை ஆத்மாக்களும் துயருறுகின்றன, நிலையழிகின்றன என்கிறார்கள்” என்றாள் பூர்ணை. “இருக்கலாம். என் மைந்தனின் துயர் அவ்வாறல்ல. அதற்கும் மேலான ஒன்று. அதற்கான தீர்வொன்றையே நான் காண்கிறேன்…” என்று சுபத்திரை சொன்னாள்.
பூர்ணை சில கணங்கள் அவளை நோக்கி அமர்ந்தபின் “தாங்கள் விராட இளவரசியை பார்த்தீர்களா?” என்று கேட்டாள். சுபத்திரை திகைத்து திரும்பி அவளைப் பார்த்தாள். அவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. மூச்சில் நெஞ்சு ஏறி இறங்கியது. “அங்கே துவாரகையில்தான் இருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. “இல்லை” என்று அவள் சொன்னாள். முற்றாக நிலையழிந்து கைகளால் ஆடைமுனையைச் சுழற்ற தொடங்கினாள்.
சுபத்திரையை கூர்ந்து நோக்கி பூர்ணை சொன்னாள் “தாங்கள் முதலில் உங்கள் மூத்தவரிடமல்ல விராட இளவரசியிடம் அல்லவா பேசியிருக்க வேண்டும்?” சுபத்திரை தன் முழு உளவிசையையும் திரட்டி “தேவையில்லை!” என்று உரக்க கூவினாள். கைகளை காற்றில் விசிறிபோல வீசி “தேவையில்லை தேவையில்லை தேவையில்லை” என்றாள். அவள் குரல் உடைந்து ஒலித்தது. “நீ செல்லலாம்… வெளியே செல்லலாம்” என்று கைகாட்டினாள். பூர்ணை தலைவணங்கி குடிலிலிருந்து வெளிவந்தாள்.