தொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு

 

 

இனிய ஜெயம்

 

அமெரிக்கா சென்று இறங்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த ஞாயிறு நீங்கள் அமெரிக்கா கிளம்பும் முஸ்தீபில் பெங்களூரில் இருந்த சூழலில், உங்களை விட்டு விட்டு நாங்கள் விஷ்ணுபுர குழும நண்பர்கள் ஒரு பத்து பேர் வரை ஒரு சிறிய ஒரு நாள் பயணம் சென்றோம். செல்வேந்திரன் அவரது நண்பர் சந்ரசேகர் அரியலூரில் தொல்பழங்கால உயிரிப் படிமங்கள் அருங்காட்சியகம் அமைய அரசுக்கு ஆவன செய்த தன்னார்வலர்களில் ஒருவர். செல்வேந்திரன் தலைமையில் அவருடன்,அவரது வழிகாட்டலில் அரியலூரில் அமைந்திருக்கும் தொல்லுயிர் படிம அருங்காட்சியகம் சென்று பார்ப்பது என்று திட்டம்.

 

செல்வேந்திரன், அவரது நண்பர் இருவருமே வர இயலாத நிலை. ஈரோடு கிருஷ்ணன் தலைமையில், அவரது தம்பி, பாரி,மணவாளன், தீபன், செல்வராணி,நிக்கிதா, ஈஸ்வரமூர்த்தி, அவரது நண்பரொருவர், தாமரைக்கண்ணன், ராஜமாணிக்கம் அனைவரும் அரியலூரை முற்றுகைட்டு நான் அங்கு செல்லும் முன்பே, சாத்தனூர் கல்மரங்கள், அங்கு அலுவலகத்தில் டினோசர் முட்டை அனைத்தயும் பார்த்து அதனுடன் செல்பிக்கள் எடுத்து ஓய்ந்திருந்தனர்.

 

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

 

நான் புதுவை ராதாக்ருஷ்ணன், மற்றும் நண்பர் பாருக்குடன் அங்கே சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள அனைவரும், முதலில் அகழ்வுகள் நடந்த திடலில் ஒன்றான கொளங்காநத்தம்,அடுத்து வரனாவசி தொல்லுயிர் படிம அருங்காட்சியகம், இறுதியாக அருகிலிருந்த பறவைகள் சரணலாயம் பார்த்துவிட்டு கலைந்தோம்.

 

அரியலூர் அருகே ஐந்துகிலோமீட்டரில் வரனாவசி கிராமத்தில் சிலவருடங்கள் முன்பு, தன்னார்வலர்களின் தொடர் மட்டுறுத்தலின் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் ஜெயலிலிதா இரண்டு கோடி ரூபாய் ஒதுக்க,சில ஆண்டுகள் பணிக்குப் பின் இப்போது அங்கே தொல்லுயிர் அருங்காட்சியகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இமய மலைத்தொடர்  நீருக்குள் இருந்த சூழலில், கடல் நீரால் புதுவை முதல் அரியலூர் வரை சூழப்பட்டிருந்தது என்பது புவியியலாளர்கள் துணிபு. நெய்வேலி நிலக்கரி  சுரங்கம் முதல் திருவக்கரை கல்மரங்கள் வரை இங்கே நிலத்தடி பொதிவுகளுக்கு இந்த சூழலே மூலம்.  காரணமாக ஜுராசிக்,க்ரேடேசியன் யுக தொல்லுயிர்ப் படிமங்கள் இங்கே அதிக அளவில் உண்டு.  இந்த நிலத்தில் சூழச் சூழ சிமின்ட் தொழில்சாலைகள்.  அவற்றால் இங்குள்ள தொல்லெச்சங்கள் பரவிக் கிடக்கும்,புவி வரலாற்றின் முக்கியமான காலம் ஒன்றின் ஆய்வு  வெளி, சிதைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

 

அருங்காட்சியகத்தில், புவி வரலாற்றில்,ஒவ்வொரு உயிர் சூழலும் தோன்றி மறைந்த காலக்கட்டங்களின் சூழல்,அந்த உயிர்களின் மாதிரி பின்புலத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.  அங்கே அரியலூர் சுற்றுப் பகுதியில் கிடைத்த அக்காலக்கட்ட தொல்லுயிர்களின் எச்சங்கள் [டினோசர் முட்டை போன்றவை  போல] அங்கே கிடைக்கும் கல்லின் தனிமங்களின் வகைமாதிரிகள் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது. தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வட்ட வடிவ அருங்காட்சியகம். முதல் தளத்தின் பால்கனியில் நின்று குனிந்து பார்த்தால் மையத்தில், ஜுராசிக் பார்க் படத்தில் டினோசர் எலும்புக் கூடு அகழ்ந்து  எடுக்கப்படும் முதல் டாப் ஆங்கள் காட்சியின் மாதிரி வடிவம்.

 

கொளங்காநத்தம் அருகே, அகழ்வுகள் நடந்த இடங்களை தேடி அலைந்து பார்த்தது இனிய அனுபவம். வறண்ட பூமி, ஆங்காங்கே கரும்பு,கிழங்கு,சிறு பயிர்கள் விவசாயம் நடக்கும் சிற்சில இடங்களை தவிர்த்தால், விசித்திரமான முள்மரங்கள் பரவிய அரைப்பாலைவனம். டிரேக்ஸ் எல்லாம் இங்கே ‘அலைந்து திரிந்திருக்கிறது’ ஒரு காலத்தில். சுனாமியாக கடல் வந்து மூடி, வருடங்கள் கடக்க இங்கே முழுவதும் தொல்லுயிர்க் களமாகிறது. ஒரு முள் மரத்தின் அருகே நின்றபடி கிருஷ்ணன் கூவினார். அவரை சுற்றி டினோசர் முட்டைகள். நண்பர்கள் தேடித் தேடி ஏதேதோ சேகரித்தனர். கையில் உள்ள வடிவம் அவர்கள் சொன்ன பின் அது போலவே தோற்றம் அளித்தது. ராசுக்குட்டி டிரெக்ஸ் ஒன்றின் முன் கை விரல் நகத்தை கண்டு எடுத்தார். ஏதோ சிறிய உயிர் ஒன்றின் மேல் தாடை ஒன்றை கண்டெடுத்தார். நான் கண்டெடுத்த ஒன்றை என்னாலேயே நம்ப முடிய வில்லை. அம்மொனைட் ஒன்றை கண்டெடுத்தேன்.

 

https://en.wikipedia.org/wiki/Ammonoidea

 

நான்கு கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த கடல் உயிரி. முகத்தை பார்த்தால் நிச்சயம் ஊன் உண்ணிதான். புவியின் வரலாற்றை அறிவதில் மிக முக்கிய கண்ணியாக விளங்குபவை இந்தத் தொல்லுயிர் எச்சங்கள். உலக அளவில் கிமுவின் போதே தொல்லுயிர் எச்சங்கள் கண்டறியப் பட்டிருந்தாலும், பதினேழாம் நூற்றாண்டு வாக்கில்தான் இவை பழங்காலத்தில் வாழ்ந்த உயிர்களின் படிவங்கள் எனும் நிலை உறுதிப் பட்டது. அதற்கான ‘லமார்கிய சிந்தனையை’ விதைத்தவர் லியனார்டோ டாவின்சி என்கிறது தொல்பழங்கால இயல் வரலாறு.

 

1808 இல் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் புவி வரலாற்றை,அங்குள்ள புதை படிவங்கள்  வழியே நிறுவும் ஆய்வு நூல் ஒன்றை, குவியர் மற்றும் அலேக்சான்றே ப்ராங்க்நியார்ட் எனும் இரட்டையர் முன்வைக்கிறார்கள்.

 

1841 இல் உலகளாவிய புவியின் காலக்கட்ட வரலாற்றினை,இந்த தொல்படிமங்களை அடிப்படையாக வைத்து ஜான் பிலிப்ஸ் முதன் முறையாக முழுமையாக தொகுக்கிறார்.

 

இப்படிப் புவியின் காலக்கட்டங்களை கணிப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தவயாக இந்த அம்மொனைடுகள் இருந்திருக்கின்றன. இந்தப் படிமங்கள் ஒரு நிலையான அளவுகோல், எது எப்படி? அதை கொண்டு புவியின் காலக்கட்ட வரலாற்றை [டைம் லைன்] இன்னும் துல்லியமாக வரையறை செய்வது எப்படி என்பதை 1850 களில் ஜெர்மனியை சேர்ந்த,பிரெட்ரிக் குன்ஸ்டேட் மற்றும் ஆல்பர்ட் ஓபல் எனும் இருவர் வகைப்படுத்தி அளிக்கிறார்கள்.

 

கிபி 79 இல் ப்லினி என்பவரால் [அவர் இந்த படிவத்துக்கு இட்ட பெயரே அம்மொனைட்] கிரேக்க தெய்வம் ஒன்றின் கொம்பு என பெயரிடப்பட்ட இந்த படிவம், அன்று மாந்த்ரீகம் ஹீலிங் தெரபிகளில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இந்த அம்மொனைட்டின் இருப்பதிலியே ஆகப் பெரிய வடிவம் ஜெர்மனில் இருக்கிறது. [விட்டம் ஆறு அடி எட்டு அங்குலம்]. கடித்த சுறா ஒன்றின் [ஆமாம் ஜுராசிக் கால சுராதான்] பற்களுடன் கிடைத்திருக்கிறது ஒரு அம்மொனைட். மரத்திலிருந்து வடியும் அம்பர் பிசின் படிமம் [ஜுராசிக் பார்க் படத்தில் இந்த அம்பர் பிசின் வழியேதான் எல்லாமும் தொடங்குவதாக காட்சிகள் விரியும்] அதற்குள் சிக்கிய நிலையில் கிடைத்திருக்கிறது ஒரு அம்மொனைட்.

 

இந்த அம்மொனைட் தொல்லெச்சங்கள் இரண்டு நிலையில் காணக் கிடைக்கும். ஒன்று  கல்மரம் போன்ற நிலை. அந்த உயிர் மொத்தமும் கல்லாக வடிவம் மாறி நிற்கும். அடுத்தது கூடு நிலை. சிக்கிய தொல்லுயிர் கால நொதிப்பில் முற்றிலும் மறைந்து போய் அதன் உடலின் தடம் மட்டும் துல்லியமாக எஞ்சும். இங்கே அரியலூரில் கிடைக்கும் அம்மொனைடுகள் கல்வடிவில் கிடைப்பவை. கூடு நிலையில் கிடைக்கும் அம்மொனைட்டுகள் நேபாளத்தில் கங்கை நதிக்கரையில் உண்டு. [ஆம் சாளக்ராமம் என்பதே அம்மொனைடுகள் :) ]

 

மேற்கில் அறிவியல் பூர்வமாக சாளக்ராமம் என்பது தொல்லுயிர்ப் படிமம் என நிறுவப்பட்டது  பதினேழாம் நூற்றாண்டில் என்றால், அந்த தகவல் வெள்ளைக்கார்கள் வழியே பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் இங்கே அது விஷ்ணு ஸ்வரூபம்தான். வஜ்ரகிரீடம் எனும் வண்டாக மாறி விஷ்ணு அந்தக் கற்களை குடைந்து உருவாகியவை அந்தக் கற்களில் உள்ள வடிவங்கள் என்பது ஐதீகம்.  நான் எனது நூலகத்தில் வைக்க அம்மொனைட் சாளக்ராம  சக்கரம் ஒன்றும் சங்கு ஒன்றும் கண்டு பிடித்து எடுத்துக் கொண்டேன்.[ விஷ்ணு] எதிர்வரும் காலத்தில் இமயத்தில் இருந்து நான் கண்டெடுக்கும் ஒரு சாளக்ராமத்தை இதனுடன் இணைத்து வைப்பேன்.:). சுற்றிலும் பார்த்தேன். சிறுவர்கள் கடற்கரையில் கிளிஞ்சல்கள் பொறுக்குவது போல நண்பர்கள் தேடித் தேடி எதயோ சேகரித்துக் கொண்டிருந்தார்கள். நாலு கோடி ஆண்டுகட்கு முந்தய கிளிஞ்சல்களை சேகரிக்கும் குழந்தைகள்.

 

பயணம் முடிந்து நண்பர்கள் கலைய,நாங்கள் திரும்பும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம் தரிசித்தோம். இரவு ஏழு மணி.  மின்சார வெட்டு. கோவில் வளாக  சன்னதிகளின் கருவறைகளில் சிற்சில விளக்குகள் தவிர,விமான உச்சியில் ஒரே ஒரு வெள்ளி விளக்கு. ஒருவரும் அற்ற கோவில் வளாகம் முழுவதும் மெல்லிய நிலவொளியில் நனைந்து நின்றது. இருளுக்குள் விளிம்புகளில் வெள்ளிக் கோடு மின்னும் நிழல் வெட்டுத் தோற்றத்தில், மொத்த ஆலயத்தையும் சரஸ்வதியையும், சண்டேச அனுக்ரக மூர்த்தியையும் தரிசித்தோம். கனவு. கனவில் மட்டுமே காண இயன்ற தருணம். நினைவில் மீட்டியபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

 

அரியலூர் தொல்லுயிர்க் களம் குறித்த நல்ல ஆவணப் படம்.

 

https://www.youtube.com/watch?v=ft419nvVY8o

 

தமிழகத்தில் டினோசர் காலம் குறித்த நல்ல விளக்கப் படம்.

 

https://www.youtube.com/watch?v=VH3YSz620W4

 

https://www.youtube.com/watch?v=XwwduM7_p3Y

 

அம்மொனைடுகளின் வியப்பூட்டும் வடிவங்கள்.

 

https://www.youtube.com/watch?v=gvgqwX2gF0g

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54
அடுத்த கட்டுரையாழன் ஆதி