ஓஷோ மயக்கம் -கடிதம்

ஓஷோ மயக்கம்

அன்புள்ள ஜெ

இந்தக் கட்டுரை காந்தி, அம்பேத்கர் என்னும் இருபெரும் ஆளுமைகளின் வாழ்வில் நடடைபெற்ற முக்கியமான நிகழ்வையும் அதை பற்றிய ஓஷோவின் பார்வையையும் அது சார்ந்து நடைபெற்ற ஓர் விவாதத்தையும் அலசுகிறது.

காந்தி தேச விடுதலைக்காகவும் ஒற்றுமைக்காவும் உழைத்தார்.அம்பேத்கர் தன் சமூக  முன்னேற்றத்திற்காவும் தேசத்திற்காவும் பாடுபட்டார்.இதில் பெரிதும் தன் இன முன்னேற்றதிற்காக உழைத்தவர் அம்பேத்கர்.மறுபுறம் காந்தி அதே சமூகத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தீண்டாமை கொடுமை எதிர்த்து போராடினார்.ஆனால் காந்தி ஒருபோதும் அவர்களை இந்து சமூகத்தில் இருந்து பிரித்து தனிநல்வாழ்வு நல்கிட வேண்டும் என்று எண்ணியதில்லை. மாறாக மதத்திற்குள் ஒரு மறுமலர்ச்சி காண வேண்டுமென்று விரும்பினார்.
தீண்டத்தகாத வகுப்பிலேயே பிறந்து தீராத கொடுமைகளுக்கு உள்ளாகி தீர நெஞ்சத்தோடு தீர்க்க அறிவினராய் உதித்த அம்பேத்கர், என்னதான் மறுமலர்ச்சியே உருவாகி மக்களனைத்தும் சமமென்னும் நிலை வந்தாலும் ஆதிக்க வர்க்கத்தினரின் ஆதிக்க மனப்பான்மை அவ்வளவு எளதில் மறைந்துவிடாது.ஆதலால் தனிநாடு ஒன்றும், அதில் அடிமைகளல்ல, அரசர்களாய் மக்களாட்சி நடத்திட வேணும் என விரும்பினார்.

அம்பேத்கர் தன் கோரிக்கையை பொதுவெளியில் முன்வைத்து முறையிட்டார்.இதற்கு நேரெதிர் கொள்கையுடைய காந்தி சாகும் வரை உண்ணாவிரதத்தை கையிலெடுத்தார்.அக்காலத்தில் பெரும் ஆளுமை மிக்கவரான காந்தியின் இம்முடிவு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. 21 நாட்கள் நீடித்த காந்தியின் உண்ணாவிரதம் இறுதியாக அம்பேத்கர் தன்முடிவை திரும்ப பெற்று கொண்டதுடன் முடிவுக்கு வந்தது.இதில் நம்மில் பலரும் காந்தியின் அணியில் நின்று, காந்தியின் செயல் எவ்வளவு உன்னதமானது! இல்லையேல் நாமெல்லாரும் எவ்வளவு துன்பப்பட்டிருப்போம் என்போம்.

இனி ஓஷோவின் வாதத்திற்கு வருவோம்.ஓஷோ, காந்தி நாம் அடையும் இலக்குகள் மட்டும் தூய்மையானவையாக இருந்தால் போதாது.அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானவையாக இருத்தல் வேண்டும்.அதாவது அவர் வழிமுறைகளில் வழித்தூய்மை என்பது மிக முக்கியமான கொள்கை.இப்போது நான் உங்களுக்கு கூறுகிறேன்.ஒருவர் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவது மட்டுமே வன்முறை அல்ல. நீ இதை செய்யாவிட்டால் நான் தற்கொலை செய்து என மிரட்டுவதும் வன்முறையேயாகும்.காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம் தற்கொலை மிரட்டலல்லாமல் வேறென்ன ? என்று கேள்வி எழுப்புகிறார்.இனி இதுசார்ந்து எனக்கும் என் தோழிக்கும் நடந்த மேலதிக விவாதத்தைக் காண்போம்.

அவள் வாதமாவது,”அது எப்படி சரியாகும் ? யாரோ ஒருவர் தன்னை தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி என்னை நீசத்தனமான செயல்களை செய்ய சொன்னால் நான் எப்படி செய்ய முடியும் ?  அவர் இறந்ததன் பழி என் மீது சுமத்தப்பட்டாலும் நான் அத்தீச்செயலை செய்யாததனால் என்னை நிருபிக்க வழியுண்டு.என் தரப்பு நியாயத்தை என் உற்றார் உறவினர் புரிந்துகொள்வர்.அது எனக்கு வாழத் துணைசெய்யும்.ஊராரின் ஏச்சுப்பேச்சுகள் பற்றி எனக்கென்ன ?” என்றாள்.

“ஆனாலும் நம் மனதில் சிறிதளவு குற்றவுணர்ச்சி இருக்குமே ?” எனக் கேட்டேன்.”ஆமாம் இருக்கும்.ஆனாலும் நம் பக்கம் குற்றமில்லை எனும்போது அவரை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து எளிதாக விடுபட்டு விடலாம்” என்றாள்.நானும், “ஆமாம்” என ஆமோதித்தேன்.

இத்தோடு அவ்விவாதம் முடிந்துவிட்டது.பின்பு நிதானமாக சிந்திக்கையில்,நம்மை மிரட்டுபவர் சொல்லும் செயலை நாம் செய்வோமா ? இல்லையா ? என்பது அம்மனிதருக்கும் நமக்கும் இடையேயான உறவை பொறுத்தது.

இது இப்படிக்கு நிற்க.இப்போதுது வாதம் எங்கோ திசை மாறிவிட்டிருப்பது புலனாகிறது.எங்கே மாறியது ? நாம் குறிப்பிட்டது, குறிப்பிட்ட நிகழ்வு வன்முறையானதா ? இல்லையா ? என்பதுவே. ஆனால் அவள் ஏன் நிகழ்வோடு தன்னை இணைத்து கொண்டாள்.நான் காந்திக்கும் அம்பேத்கருக்கும் உவமையாக என்னையும் அவளையும் சுட்டிக்காட்டி பேசியதன் விளைவு அது.ஆக, வாதம் அதன் மையப்புள்ளியிலிருந்து வெகுதூரம் உருண்டோடி விட்டது.ஆனால் மையம் என்னவோ அங்கேயே தான் உள்ளது.

வன்முறை என்பது ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டு அவரை காயத்துக்கு உள்ளாக்குவது என்றால் உடல் மனம் இரண்டையும் குறித்ததுவே.இரத்தம் வழிந்தால் தான் என்றன்று.கண்ணீர் சொரிந்தாலும் காயம் காயம்தான்.இந்த கோணத்தில் அணுகும்போது காந்தியின் அச்செயல் வன்முறையானதாகவே படுகிறது.

அவளுக்கும் எனக்கும் இடையே எப்படி விவாதம் தொடங்கியது ? நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பார்த்து, ‘இது என்ன புத்தகம் ? யாருடையது ‘ என்றவள் கேட்க, ‘இது, தாவோ:முன்று புதையல்கள்(Tao:The three treasures) ஓஷோவுடையது’ என்றேன்.அவள்,’அது யார் ஓஷோ ?’எனக் கேட்க, அதற்கு நான் விளக்கம் கொடுத்தப்போது வந்த விவாதமே இது.

ஓஷோ இந்தியாவில் பிறந்தார்.அவர் ஒரு பெரும் ஞானி,யாருக்கும் அஞ்சாதவர்,கலகக்காரர்.அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்களேன் என்று சொல்லி தங்களுக்கு பிடித்த காரசாரமான விஷயத்தை சுட்டிகாட்டி ஓஷோவின் பெருமையை சிலாகிப்பர் சிலர்.இந்த வகைமை தான் அதிகமும் கூட.இவர்கள் பெரும்பாலும் ஓஷோவின் புத்தகங்களை மட்டுமே படித்து தங்கள் அகங்காரத்திற்கு தீனிப் போட்டுக்கொள்வர்.அவர் கூறும் கருத்துக்களை எடைபோடுவதோ, குறுக்கு விசாரணை செய்வதோ, சரிபார்ப்பதோ, ஆராய்வதோ எதுவுமே இவர்களிடம் இராது.இந்த வகைமையில் நின்றுதான் என் தோழிக்கு விளக்கம் கொடுத்தேன்.விளைவாக உருவான விவாதம் திசைமாறி முடிந்தது.அந்த திசை மாற்றம் என்னுள் ஒரு நல்மாற்றத்தை உருவாக்கியது.புதியதொரு உண்மையையும் கண்டடைந்தேன்.

ஓஷோ காந்தியின் வழித்தூய்மை கொள்கை எங்கே வழிமாறியது என்பதை தர்க்கப்பூர்வமாக சுட்டிக்காட்டி, இவரே கடைப்பிடிக்காத ஒன்றை ஏன் எல்லோரையும் கடைபிடிக்க சொல்கிறார் ? இதில் என்ன நியாயம் இருக்கிறது ? என கேள்வி எழுப்பி அதற்காக அவர்மேல் குற்றமும் சுமத்துகிறார்.ஆனால் காந்தி செய்தது முழுக்க தவறு, அம்பேத்கர் கேட்டபடியே நாட்டை பிரித்து கொடுத்திருக்க வேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை.

இதே ஓஷோ தான் வேறொரு முறை காமம் பற்றி பேசுகையில், காந்திக்கும் கஸ்தூரி பாய்க்கும் இடையே இருந்த கணவன்-மனைவி உறவை போல (தாய்சேய் உறவை போல) ஒவ்வோரு கணவன்-மனைவியும் இருத்தல் வேண்டும் என்கிறார்.இதுபோன்று தன் வாழ்நாளில் ஏராளமான ஒன்க்கொன்று முரண்பட்ட கருத்துகளை கூறிவந்துள்ளார் ஓஷோ.இன்னும் சொல்லப்போனால் மதிப்பீடூ என்று கூட சொல்லலாம்.

ஆனால் வெறுமனே கண்மூடித்தனமாக ஓஷோவை வாசிக்கும் ஒருவர் தன் நம்பிக்கையை உடைப்பதற்காக அவரை வெறுத்து ஒதுக்கலாம் அல்லது தன் அகங்காரத்திற்கு தீனி கிடைப்பதால் வணங்கி வழிபடவும் செய்யலாம்.இப்படிப்பட்ட வாசிப்பு ஒருவருக்கு எந்த அறிதலையும் வழங்கிடாது,அகங்காரத்தை தவிர.இதற்கு உதாரணமாக காந்தி-அம்பேத்கர் நிகழ்வையே காட்டலாம். நீங்கள் காந்தியின் கட்சியில் நின்றால் இறுகிப்போன பழைய நம்பிக்கைகளில் இருந்து வெளிவர முடியாதவராய் எல்லோரும் மகாத்மா என்று போற்றும் நாமும் அவ்வாறே செய்து நற்பெயர் எடுத்து கொள்வோம் என்பவராய் காட்சியளிப்பீர். எதிர் கட்சியில் நின்றால் காந்தி என்ன பெரிய ஆளா ? அவரும் என்னை போன்றவர் தான் என்று சொல்லும் பொறாமை பிடித்தவராய் நிற்பீர்.இவ்விரண்டையும் விளங்கிக் கொள்ளுங்கால் காந்தியின் மேலான உங்களது பொறாமைக்கோ அல்லது பெருமைக்கோ ஓஷோவை எப்படி பயன்படுத்தி கொண்டிர் என புரிய வரும்.இதன்பின் ஓஷோ என்னும் கைத்தடிக்கு வேலையில்லை.நாமாக காந்தியை கற்கவேண்டியதுதான் மிச்சம்.இதை உணரும் வேளையில் இயல்பாகவே காந்தியை நேசிக்க தொடங்கி விடுகிறோம்.

இந்த கட்டுரையை எழுதி முடிக்கும்போது,” என்னை புரிந்து கொண்டவன் எனக்காக வாதிட மாட்டான்.” என்னும் ஓஷோவின் வரிகள் தம் பொருளை தெரிவித்து கொண்டன.

*   *   *

நிற்க. இப்படியெல்லாம் நாம் பேசும்போது ஓஷோவை நமக்கு உதவிய மகான் என்றும் காந்தியின் அச்செயல் அறமற்றது என்று நிறுவுகிறோம்.ஆனால் ஒரு செயலை தனித்து கருத்தில் கொண்டு சரியா ? தவறா ? என முடிவு செய்வது எவ்வளவு பெரிய பிசகு ? அது நடந்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டால் தான் செயல் முழுமையடைகிறது.செயலும் சூழ்நிலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல.

நாடு பிரிந்தால் கோடிக்கணக்கான மக்கள் படப்போகும் துன்பங்களை எண்ணி, தன் ஒருவனை வருத்தி கொண்டு இம்முடிவெடுத்த மனிதனை  மாற்றுவதற்கெடுத்த முயற்சி என்ன வன்முறையா ? எந்த மக்கள் துன்பப்படக் கூடாது என அம்பேத்கர் விரும்பினாரோ, அவர்கள் பிரவினையின் துன்பத்தை அனுபவிக்க கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தன்னை வருத்திக் கொண்டு நோன்பிருந்த காந்தியின் செயல் வன்முறை இல்லை என்பது தெளிவு.

மேலே கடைசி பத்தியில் உள்ள தெளிவு தங்கள் தளத்தில் உள்ள ஓஷோ குறித்த கட்டுரைகளை படித்தப்பின் உண்டானது.இது நான்  எழுதிய கட்டுரையின் மைய வாதத்தை மட்டும் பொய்ப்பிக்கிறது.இதே போன்று கட்டுரை சரியில்லாத பல கருத்துகளை கூறுகிறது.இதை ஓஷோ மயக்கம் என்று தான் கூற வேண்டும்.

ஆனாலும் இன்று மீண்டும் ஓஷோவின் புத்தகங்களில் ஒன்றான In the search of miraculous என்ற புத்தகத்தை படித்தேன்.படிக்கும் போது அவர் சொல்லும் எல்லாம் சரியானவை போன்றே தோன்றுகிறது.இதை அவரது மற்ற புத்தகங்களை படிக்கும் போதும் உணர்கிறேன். இந்த மயக்கத்தில் இருந்து விடுபட என்ன தான் வழி ?

நன்றி
சக்திவேல்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-53
அடுத்த கட்டுரைகீதா பிரஸும் இந்து தேசியமும்