அபி: ‘காலத்தின் மீது விழும் மெல்லிய வெயில்’ – யாழன் ஆதி

 

வாழ்வின்மீதான அனுமானங்களில் எப்போதும் ஓர் ஏக்கத்தொனியோடுதான் படைப்புகள் தன்னளவில் உருக்கொள்கின்றன. குறிப்பாக மொழி மனித மனத்தின் தேடல்களை அதன் ஒளிவுமறைவுகளில் எப்போதும் ஒரு சுண்டெலியைப் போலவே சுரண்டிக்கொண்டிருக்கிறது. மொழியின்மீதான அவதானமும் அது தரும் நம்பிக்கையின் பேரொளியும் ஓர் ஆக்கவாளியைத் தொடர்ந்து அவர்போக்கில் இயங்கவைக்கிறது. ஓர் ஓவியர் தனக்கான வெளியை எங்கிருந்து உருவாக்குகிறார். ஒரு புனைவுக்காரர் தனக்கான ஆக்கத்திற்கான ஜீவனை எதிலிருந்து பிடுங்கிக்கொள்கிறார். எத்தகைய நல்லவை அணில்கள் தங்கும் இந்தக் கிளைகள் என்னும் சொற்றொடரின் இருப்பில் என்ன இருக்கிறது. ஏன் இதெல்லாம் நிகழ்கிறது என்பதெல்லாம் பல கேள்விகள்.

தமிழில் கவிதையின் இயங்கியல் என்பது ஆண்டுகள் கடந்தவை. நவீன மொழிக்கட்டமைப்பில் சொல்விளையாட்டாகவோ அல்லது ஒரு பியானோவின் கருப்பு  வெள்ளைக்கட்டைகளுக்கிடையே விரல்கள் அழுத்தும் விசையாகவோ கவிதையியல் மாறி இருக்கலாம். கவிதையும் அதை வாசித்தலுக்கான மனமும் ஒன்றிணையும் தருணம் அது தன் இருப்பிடத்தை அடைந்துவிடலாம். அத்தகைய தருணத்தை நோக்கியே ஒவ்வொரு படைப்பும் அங்கலாய்த்துத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது. தானே படைப்பின் கடைசி உச்சமாய் இருக்க வேண்டும் என்னும் வீரியத்தோடு வந்து தோற்று அடுத்த அவியத்திற்குத் தயாராகிவிடுகிறது. படைப்பு மனம் அப்படித்தான் செயல்படுகிறது. அது காலாதீதத்தின் வயதுகளையோ அல்லது தொழில்நுட்பம் சார்ந்த அலைவுகளையோ நம்பியில்லை. றாம் சந்தோஷாக இருந்தாலும் சமயவேலாக இருந்தாலும் யவனிகாவாக இருந்தாலும் அதுதான் உண்மை. கப்பலின் மேல் தளத்தில் சூரியனின் ஒளிபடர்ந்த பீர்போத்தல்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கானக் கடல்காரனுக்கும் தொடர்பற்ற சொற்றொடர்கள் யவனிகாவிடமிருந்து வரும்போது பன்னாட்டு வணிகத்தின் கொடுமை உள்நாட்டுக்காரனுக்கு எப்படியானது என்பதைக் கட்டமைக்கிறது. காலம் நிலம் வயது நுட்பம் என எல்லாவற்றையும் தாண்டியது அது.

அப்படி ஒரு புறாவைப்போல வந்து அமர்ந்தவை தான் அபியின் கவிதைகள் என் மடியில். முன்வாசிப்புக் காலத்தில் அவருடையக் கவிதைகளை நான் வாசித்திருந்தாலும் தற்போது வாசிக்கும்போது கவிதை முகிழ்த்தத் தருணங்களை அடைய முடிகிறது என்பது எத்தகைய ஆசுவாசமான ஒன்றாக இருக்கிறது.

ஊர்க்கோடி ஒருநாள் இருந்த இடத்தில் இன்னொருநாள் இருப்பதில்லை என்பது நகர்தலின் சாத்தியம் சமைந்த நிலத்தின் அசைவை தன் வார்த்தை ஒலிகளின் ஊடாக சமைக்கிற அபியின் திறன் மொழிக்கும் அவருக்குமான ரகசிய உறவாக மாறிவிடுகிறது.நெடுங்கால நிசப்தங்கள் படீரென்று வெடித்துச் சிதறிய கடுகாகிவிடும் அவரின் காலநிலைகள் கவிதையில் உறையும் போது சுமத்தப்படும் மொழியின் பலம் வார்த்தைகளைக் கொன்றுபோட்டுவிட்டு தன்பிணங்கள் எரிவதைத் தானே பார்க்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. அபி இங்கேதான் கவிதையில் வென்றுவிடுகிறார்.

நான் வேலூர் மாவட்டம் ஆம்பூர்க்காரன். வாணியம்பாடியில் கவிக்கோவும் அப்துல்காதரும்தான் இலக்கிய அடையாளங்கள். தன் நுண்மையானக் கவிக்கோடுகளால் கவிக்கோ புகழடைந்துக் கொண்டிருக்கிறார். தன் பேச்சுத்திறத்தால் அப்துல்காதர் மேடைகளை ஆக்கிரமிக்கிறார். இவர்கள் இருவருக்கும் அரசியல் வெளிச்சம் உண்டு, அதனால் அவர்கள் போன வழியே இலக்கிய பாதையாய் ஆனது நமக்கு. தற்போது அபியை வாசிகையில் ஏன் அவர்கள் காலத்தின் சமகவியைப் பற்றிப் பேசவில்லை என்ற கேள்வி இப்போது எழுகிறது.

பொருண்மையின் சொற்கள் சுழன்றாடும் அற்புதங்கள் நிகழ்த்தும் ஒரு கவியாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கும் அபி நவீன கவிதையின் முக்கிய ஆளுமை. நீ ஒரு வடிவிலி. போக்குவரத்து உன்னை வடிவமைக்கிறது, அலைபாய தெரிந்த தூசி, உள்ளே செல்கிறது, இயக்கம் இப்படித்தான் நிகழ்கிறது. போக்குவரத்துகள் தரவுகள் எனில் தரவுகளால் ஏற்படும் தர்க்கம் அதன்மூலம் கிடைக்கும் இரட்டை மனநிலை, முடிவுகளை நோக்கி நகரும் எத்தனம் எல்லாம் மனித இயக்கத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிடுகிறது. இயற்பியலின் இயக்க விதிகளும் இதைத்தான் பேசியிருக்கின்றன. ஒரு பொருளை அதன்மீது புறவிசையை செலுத்தாத வரை அதன் இருப்பை மாற்றலாகாது. இதுதான் இயக்கம். தூசிகளால் வடிவிலிகள் வடிவமைக்கப்படுகிறார்கள். இந்த வடிவங்கள் தொடர்களாக இயங்கியலின் அடிப்படைகளாக மாறிவிடுகின்றன. தூசிகள் இல்லை என்றால் இப்பிரபஞ்சம் ஏது?

அபியின் காதல் கவிதைகள் தனித்துவமானவையாகவும் மிகவும் இயல்பானதாகவும் அமைந்திருக்கின்றன. அணைத்துக்கொண்டபின் கருக்கிக் கொண்ட இருமூச்சுகள், ஒன்றையொன்று குத்திக்கோத்த இருபார்வைகள், கண்ணாடித்துண்டு பாதைக்குள் சிக்கிக்கொண்ட நான்கு காலடிச் சுவடுகள் என அவர் கவிதையில் வரும் காதல் மிகவும் வலிநிறைந்த யதார்த்தம் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

 

வா வா !

வளர்ந்து வளர்ந்து

அடிவான விளிம்பில்போய்

வழியும் உன் கூந்தலை அள்ளிக்கொண்டு

வாவா

 

எனவும் சில கவிதைகள் காதலின் உச்ச உருக்கம் நிறைந்தவையாக மாறி தழைக்கின்றன.

காலம் குறித்த அபியின் பார்வைகள் படிமங்களை உருவாக்கித் தருகின்றன பேசி வெடிக்கும் சுள்ளிகள், தொற்றிய முள்ளையும் ஒட்டிய பூவிதழையும் மறுபடியும் கொண்டுவரும், காலம் ஒரு புழுதி, காலம் ஒளிபயங்கரத்தில் வழிகாட்டும் இருள்சூரியன் என அபி அடுக்கும்போது வாசக மனம் கவிதையின்மீதான ஒட்டுண்ணியாக ஒட்டிக்கொள்கின்றன.

இருப்புகளிலிருந்துத் தன்னைவிடுவித்துக்கொள்வது அபியின் போக்குகளில் கவிதைகள் நமக்குத் தருகின்றன. ஓர் ஆக்கவாளியின் மூன்றாவது கண்ணில் தன்னைப் பார்ப்பதும் தன்னை விடுவித்தல் நிகழும் தருணமும் தட்டுப்பட்டுவிடுகிறது. வார்த்தைகளிலிருந்து விடுபடுதல், தன்னுடைய உடலிலிருந்து விடுபடுதல் என அவர்கவிதைகள் இயங்குகின்றன.

 

கவிதைக்கானப் பாடுபொருளை அபி உட்கொள்ளும்போது நமக்குக்கிடைக்கும் ஆதாயம் கவிமனம். நனவிலி மனநிலையிலும் போகிறபோக்கில் மேல்விழும் ஒரு மரப்பூவினைப் போலவும் அவர் பாடுபொருள்களை உருவாக்குகிறார். சமதள மனநிலையிலிருந்தும் உயர்படைப்பாக்க மனநிலையிலும் அவர் உருவாக்குகிற கவிதைப்போக்குகள் அமைதியை நோக்கி நம்மை நகர்த்தும் வேலையை எவ்வித சலனமுமின்றி செய்துவிடுகின்றன. இந்தக் கவிதைக்கும் நமக்குமான உறவு படருமிடங்கள் எங்கும் வியாபித்து நாமும் அபியும் இப்பிரபஞ்சமும் கவிதையும் மொழியும் சொற்களுமற்ற ஒரு சூன்ய வெளியில் பிரவேசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். சூன்யமிருந்தவரை எல்லாம் சரியாகத் தானே இருந்தது.

மாலை தொகுப்பு ஒரு மாயவலை. மாலையின் பல்வேறு சூழல்கள் ஆட்கொள்ளும் ஒரு படைப்பாளியின் பார்வைகள் வாழ்வின் பல்வேறு கோணங்களிலிருந்து ஓர் ஒற்றைப்புள்ளியில் கட்டியிருக்கும் கயிற்றைப் போல ஒரு தொகுப்பிற்கான அத்தனைக் கவிதைகளையும் கொண்டுவருகிறது. பார்ப்பதற்கு ஒவ்வொரு கவிதையும் ஒரு குதிரையைப் போல அபி சூரியனைப் போல அவற்றை ஓட்டிக்கொண்டு நம்மீது கவிதை ஒளி பாய்ச்சுகிறார். அவரின் இந்த கவிமைப்பு அதில் அவர் கொண்டிருக்கும் கருதுகோள்கள் அதற்காக அவர் பயன்படுத்தும் சொற்சேர்க்கைகள், எளிய அமுதமாக வாசகப்பரப்பில் வந்து சேர்ந்துவிடுகின்றன அவரின் அமைதி சார்ந்த தேடல்கள்.

கவியும் இமைகளுடன்

கூடவே வானம்

பறவை ஒலிகளைப் பூசிச்

சருமம் மெத்திடுகிறது மாலை

என் மாலையைக் காட்டில் நிறுத்தி

விடைபெற்றுக்கொள்ள வேண்டும்

வீட்டிற்கு அழைத்துப்போக முடியாது.

மாலையை என்ன செய்ய முடியும் பறவைகளின் ஒலி அடங்கும் நேரம் கடைசிப்பறவை ஒருவேளை தன் கூட்டைத்தொலைத்திருக்கலாம் அதன் கூக்குரலோடு அந்த மாலையும் இரவும் கருத்த இரத்தத்துடன் முடிந்து போகலாம்.

அபியின் கவிதைகள் முழுதும் தன்னமைதியின் குறிப்புகளால் அமைந்துவிடுவது ஏற்பாடானாது அல்ல. மிகவும் எதேச்சையானது. அர்த்தங்களின் கணம் தாளாது தடுமாறும் வார்த்தைகளை அவர் காப்பாற்றி கரைதேற்றிவிட்டுகிறார். அவை மீன்களைப் போல நீந்தி தன் தன் திசைகளை அறிய செவுள்களால் நீர்ருந்திக் கொண்டு அலைபோடுகின்றன. நீச்சலின் தாளலயம் மீனிற்கும் நீருக்குமான உறவு. அது மிகவும் நேர்த்தியானது. தப்பாதது. அழகிய குமிழ்களை உருவாக்கக் கூடியது. அக்குமிழ்களே உறுதியான அபியின் கவிதைகள் என நான் உணர்கிறேன்.

என்னளவில், அபி வாழ்வுக்கும் அதன் தேடலுக்குமான பாலமாகத் தன் கவிதைகளில் வாழ்கிறார். மெல்லிய வெயிலைப் போல நம்மீது படர்ந்து மொழி வெள்ளத்தில் மூழ்கி நம்மை ஆசிர்வதித்து மௌனமாகி மெல்ல அவ்விடத்திலிருந்துக் காற்றைப் போல நகர்ந்துவிடுகிறார்.

முந்தைய கட்டுரையாழன் ஆதி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55