வெள்ளையானை- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ.,

வணக்கம், தங்களின் நாவலான வெள்ளையானையை வாசித்து முடித்தேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. பல உணர்வுகள் ஊடாக என்னை கொண்டுசென்றது. தமிழர்க்கே குறிப்பாக கீழ்ச்சாதி என்று அழைக்கப்பெற்ற மக்களுக்கே உரியதான மனதாழ்மையை மிக துல்லியமாய் எழுதியுள்ளிர்கள்.

 

விவரிக்க முடியாததும் மற்றும் மிக சிக்கலான‌ ஜாதிய கட்டமைப்பை மிக மிக அருமையாக விவரித்துள்ளிர்கள். மேற்க்கத்திய கோட்பாடுகளுக்குள் அடங்க மறுக்கும் ஜாதி மற்றும் இந்திய சமூகச்சூழலை ஆங்கிலேயர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்றும் புரிந்தது. பலர் அதை தங்கள் லாபத்திற்க்கும், சிலர், எய்டன் போல் மனித உண்ர்வுள்ளோர் அதை புரிந்துக்கொள்ளவும் அதை மாற்றவும் முற்பட்டனர் என்று புரிய வருகிறது. சொல்லப்போனால், அவர்களால் ஜாதிய அமைப்பை எவ்வாறு கையாளுவது என்பதில் தெளிவு இல்லை என்று ஊகிக்க முடிகிறது.

ஆனால், எய்டன் போல நீதியுணர்ச்சியுள்ள சில அதிகாரிகள் இந்த சிக்கலான கட்டமைப்பை மாற்றியமைக்க முயன்ற போது தோல்வியே எஞ்சியது என்பது வருத்தமளிக்கிறது.

 

செங்கல்பெட்டிற்க்கு செல்லும் போது, ஒவ்வொரு தெருவிலூடாக சென்ற போது ஜோசப் ஜாதி அமைப்பை விவரித்தது அருமை.எய்டன் கடைசியாக, தொழிலாளர்களை வெளியே கொண்டுவந்து அவர்களுக்கு போராட ஒரு வாய்ப்பை மறைமுகமாக கொடுக்கும் போது அவர்கள் அனைவரும் அமைதியாக நின்றது, நீதியுணர்ச்சியின் நிமித்தம் எனக்கே ஒரு விதமான கோபம் வந்து விட்டது, எய்டனின் மனக்குமுறல்கள் புரிந்துகொள்ள முடிந்தது.

இறுதியில், காத்தவராயன் என்பது அயோத்திதாசர் என்பதை நான் நாவல் வாசித்து சில நாட்கள் கழித்தே உணர்ந்தேன்.அது மிக சுவாரஸியமாக இருந்தது. ஆக மொத்தத்தில் வெள்ளை யானை வாசிப்பு ஒரு விதமான உணர்ச்சிகளின் பயணமாக இருந்தது.

இப்பொது ஒரு கேள்வி உங்களிடம் கேட்க வேண்டும். உங்களின் வரலாற்றுக் கட்டுரைகள் மற்றும் மேடைப்பேச்சுகளை தேடி விரும்பி வாசிப்ப‌வன் என்ற முறையில் இதை கேட்கிறேன்.

காத்தவராயன் எய்டெனை முதலாக சந்த்திக்கும் போது அவர் தன் சமூகத்தினரால் கற்க்கப்ப்டும் நூல்கள் உள்ளது என்று சொல்லுவார்.

அவைகள் என்ன என்பதை அறிய இயலுமா? அதை பற்றி யாரேனும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா?

அன்புள்ள,
ராஜ்.

 

 

அன்புள்ள ராஜ்

 

வெள்ளையானை ஒரு புனைவு. ஆகவே அதில் உள்ளவை புனைவுக் கதைமாந்தர். ஆனால் அவர்களுக்கு தூண்டுதலாக அமைந்தவர்கள் மெய்யான வரலாற்று மானுடர். காத்தவராயனில் அயோத்திதாசரின் கூறுகள் உண்டு. அவ்வாறு கொள்வோம் என்றால் அவர்களிடம் இருந்த நூல்கள் திருக்குறள், நாலடியார்,மணிமேகலை போன்றவை. அவற்றை அயோத்திதாசரே எழுதியிருக்கிறார். அவர் தன்னை பூர்வபௌத்தர் என்று முன்வைத்தார். அவருடைய தந்தை கந்தப்பரிடமிருந்துதான் திருக்குறளின் ஓலைச்சுவடி எல்லிஸ் துரைக்கு சென்றது. அவர்கள் வழிவழியாகப் பயின்றுவந்த நூல் அது

 

ஜெ

முந்தைய கட்டுரைராகுலும் யானைடாக்டரும்
அடுத்த கட்டுரைசமணமும் கல்வியும்