யுவன் நிகழ்வு – கடிதம்

யுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்
யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

வணக்கம் ஜெயமோகன்,

யுவன் சந்திரசேகர் நிகழ்விற்கு வந்திருந்து சிறப்புரை வழங்கியதற்கு மிக்க நன்றி. நிகழ்வில் சிறு சிறு பிசிறுகள் இருந்தன அவை தவிர்க்க முடியாதவை அதை நீங்களும் பெரிதுபடுத்தவில்லை என்று நேர்பேச்சில் தெரிவித்தீர்கள் அதற்கும் சேர்த்தே எமது நன்றிகள்.

நாங்கள் யுவனின் ஓவியம் வரைந்து அதனை நினைவு பரிசாக வழங்க எண்ணியிருந்தோம். எனது தோழி வரைந்து தருவதாக சொல்லியிருந்தார். ஆனால் அது நிகழவில்லை. நீங்கள் நிகழ்வின் போது யுவன் சந்திரசேகருக்கு நினைவு பரிசு வழங்கியது மிகவும் நெகிழ்வாக இருந்தது. இதற்கும் சேர்த்து இன்னொரு நன்றி.

இன்னும் கொஞ்சம் அழகாக திட்டமிட வேண்டுமென்று இந்த நிகழ்வில் கற்றுக் கொண்டோம். உங்களுக்கு ஏதேனும் புத்தகம் வழங்க வேண்டுமென்று நினைத்திருந்தோம், என்ன புத்தகம் வேண்டுமென்று உங்களையே கேட்டிருக்கலாம் என்று இச்சமயம் தோன்றுகிறது. சிற்றில் பிள்ளைகள் கட்டும் மணல் வீடு தானே. இப்படித் தான் இருக்கும்.

அன்புடன்,
லாவண்யா சுந்தரராஜன்.
(சிற்றில் குழுமத்தின் சார்ப்பாக)

அன்புள்ள லாவண்யா

நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இத்தனை பெரிய நிகழ்ச்சியை வெறும் நண்பர்கள் துணையுடன் ஒருங்கிணைப்பதிலுள்ள இடர்களை நான் அறிவேன். பெரும்பாலானவர்கள் என் நண்பர்களும் கூட என்பதனால் அவர்கள் மிகச்சிறந்த ஒருங்கிணைப்புடன் செயலாற்றுவார்கள் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

நண்பர்களைச் சந்தித்ததும் பேசியதும் மிகுந்த நிறைவூட்டியது. எம்.கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குப்பின் இந்நிகழ்ச்சி மேலும் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ச்சியாக இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உங்களுக்கு ஊக்கம் அமையட்டும்

தமிழகத்தில் மூத்த படைப்பாளிகள் எந்த வாசக கவனமும் இல்லாமல் சென்றுவிட்டது நிகழ்ந்தது. இத்தகைய நிகழ்ச்சிகள் வழியாக ஒர் ஆசிரியர் மேல் மொத்தக் கவனமும் குவிகிறது. யுவன் கதைகள் பரவலாக வாசிக்கப்பட இது வழிவகுக்கும்

நிகழ்ச்சிக்கு கவிஞர் அபி வந்திருந்தது நிறைவளித்தது

அடுத்த நிகழ்வாக சுரேஷ்குமார இந்திரஜித், பிரேதன் [ரமேஷ்] ஆகியோருக்கு இதேபோன்ற கருத்தரங்குகள் அமைக்கலாம் என்று படுகிறது. உங்கள் விருப்பம்

ஜெ

யுவன் என்னும் கதைசொல்லி

முந்தைய கட்டுரைகுறள் பற்றி…
அடுத்த கட்டுரைஎளிமையான படைப்புகள்