விஷ்ணுபுரம், ஒரு நம்பிக்கை

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா அணுகிக்கொண்டிருக்கிறது. பத்தாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. விஷ்ணுபுரம் விழாவைப்பற்றிய செய்திகளைத்தான் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய நான் இதுவரை அதில் பங்குகொண்டதில்லை. ஜெனிஸ் பரியத் எழுதியிருந்ததை வாசித்தேன். அவர் பல மாபெரும் இலக்கிய விழாக்களில் பங்கு கொண்டவர். அவர் விஷ்ணுபுரம் விழாவின் பிரம்மாண்டத்தையும் ஸ்பிரிட்டையும் புகழ்ந்து எழுதியிருந்தார். இந்த ஆண்டும் விழா சிறப்புற நிகழும் என நினைக்கிறேன். ஆண்டுக்காண்டு செலவு ஏறிக்கொண்டே செல்லும் சூழலில் இவ்வாறு ஒரு விழா முழுக்கமுழுக்க வாசகர்களாலேயே ஒருங்கிணைக்கப்படுவது என்பது மிகப்பெரிய நிறைவை அளிக்கிறது. வாழ்த்துக்கள்

எஸ்.ராதாகிருஷ்ணன்

***

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

உண்மையில் இவ்விழா இத்தனை பெரிதாக ஆகும் என எண்ணியிருக்கவில்லை. எவருக்குமே அந்த கணிப்பு இருக்கவில்லை. தன்னியல்பாக வளர்ந்து பெரிதாகியது. இப்படி ஒரு விழாவுக்கான தேவை இருந்திருக்கிறது, அவ்வளவுதான். இதில் நான் பங்களிப்பாற்றுவது மிகமிகக் குறைவே. பெரும்பாலும் நண்பர்களால் இது நடத்தப்படுகிறது.

அன்றும் இன்றும் நிதிதான் மிகப்பெரிய பிரச்சினை. அல்லது நிதிக்கும் கொள்கைக்கும் நடுவிலான ஒரு சமரசம். தொடக்கத்தில் முழுக்கமுழுக்க என் செலவிலும் நண்பர்கள் செலவிலும் இது நடைபெற்றது. முதல் விழாவுக்கான செலவே 75000 ரூபாய்தான். பரிசுத்தொகை ஐம்பதாயிரம். அரங்கு இலவசம். சிறப்பு விருந்தினரான மணி ரத்னம் சொந்தச் செலவில் வந்தார். ஒரே நாள் வாடகை விடுதி ஏற்பாடு செய்திருந்தோம்

அப்படியே நிகழ்ச்சி வளர்ந்தது. இருநாள் நிகழ்ச்சியாகியது. கருத்தரங்கம் ஆகியது. செலவு சென்றமுறை பத்து லட்சம். இம்முறை மேலே செல்லலாம். ஆனால் நான் அறிய இத்தனை பெரிய நிகழ்ச்சி இத்தனை குறைவான செலவில் நிகழ்வது இங்கு மட்டுமே. கிட்டத்தட்ட 200 பேர் இரண்டுநாட்கள் தங்கி உண்டு விவாதித்துச் செல்வதற்கான செலவு, இரண்டு நாட்கள் அரங்கச் செலவு, விழாச்செலவு, பங்கேற்பாளர்களின் பயணப்படிகள், ஆவணப்படச் செலவு, நூல்வெளியீட்டுச் செலவு ,பரிசுத்தொகை உட்பட.

இந்நிகழ்ச்சியை தமிழகத்தின் பிற இலக்கிய விழாக்களுடன் ஒப்பிட்டால் ஐந்துல் ஒன்றே செலவாகிறது. ஆனால் இதன் தீவிரமும் ஒருங்கிணைப்பும் வேறெங்கும் காண இயலாதது. ஏனென்றால் முழுக்கமுழுக்க இலக்கியவாசகர்களால் நிகழ்த்தப்படுவது இது. இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கிய நிகழ்வு இதுதான்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை முழுக்கமுழுக்க நண்பர்களின் நிதியுதவியால் இது ஒருங்கிணைக்கப்பட்டது. செலவுகள் மிகுந்தமையால் ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ஆனால் எவரிடமும் சென்று நிதி கோருவதில்லை. இலக்கிய ஆர்வம் கொண்ட, எங்கள் செயல்களை அறிந்தவர்களிடம் மட்டுமே நிதி பெற்றுக்கொள்கிறோம். ஆகவே நிதி திரள்வது மிகமிக மெல்ல, மிகக்குறைவாகவே நிகழ்கிறது.

இப்போது தேவையான நிதியில் ஐந்தில் ஒருபங்கே இதுவரை வந்துள்ளது. வந்துவிடும் என்னும் நம்பிக்கை உள்ளது. நிதிநெருக்கடி உள்ளது என்கிறார்கள், ஆகவே நிதி வராமல் போய்விடலாம் என்னும் அச்சம் இருந்தாலும் வராவிட்டால் சொந்தப்பணம் போட்டுக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கையும். நண்பர்கள் உடனிருக்கிறார்கள்.

இன்னொன்று, நிரந்தர நிதியாக வைத்துக்கொள்ளலாமா என்னும் எண்ணம. அது ஒவ்வொரு முறையும் உருவாகிறது. சென்றமுறை தேவைக்கு மிஞ்சிய நிதியை அவ்வாறு வைப்புநிதியாக வைக்கலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் எப்போதுமே வெவ்வேறு கடும் நிதிநெருக்கடியில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய வேறு அமைப்பு என ஏதும் இன்றில்லை. எங்கள் பொறுப்பை உதறவும் முடியவில்லை.

இம்முறை நிதியளிக்க விழைபவர்கள் தாமதிக்கவேண்டாம் என்று கோருகிறேன்

ஜெ

***

முந்தைய கட்டுரைஅபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50