ப்ளூம்- கடிதம்

ஹெரால்ட் ப்ளூம்- அஞ்சலி -ஜெயமோகன்

ஹரால்ட் ப்ளூம் -ஒரு கட்டுரை

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலம். ஹெரால்ட் ப்ளூம் பற்றிய கட்டுரைகள் மிக உதவியாக இருந்தன. அவரைப்பாற்றி இங்கே பெரிதாகப் பேசப்படவில்லை. நான் ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றதனால் வகுப்புகள் வழியாக அவரைப்பற்றி அறிந்திருக்கிறேன். குறிப்பாக ஷேக்ஸ்பியர் வகுப்புகளில் அவரைப்பற்றிய பேச்சு இருக்கும். சமகாலத்தில் ஷேக்ஸ்பியரை முதன்மையாக முன்வைத்தவர் அவர் என்பது அவரைப்பற்றிய கல்லூரி வழியாக கிடைக்கும் பிம்பம்.

அவருடைய ஒட்டுமொத்தமான சித்திரத்தை உங்கள் கட்டுரை அளித்தது. இலக்கியம் பற்றிய அவருடைய பார்வையையும் அவர் முன்வைத்த மதிப்பீடுகளையும் இலக்கியம் பற்றிய அவருடைய கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளையும் சுருக்கிச் சொல்லியிருந்தீர்கள். போகன் அவர்களின் கட்டுரையும் தெளிவாக இருந்தது. நான் கல்லூரியில் படிக்கையில் அவரைப்பற்றிய ஒரு மிகச்சுருக்கமான புரிதல்தான் அளிக்கப்பட்டது.

நான் இதை ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன். எதைப்பற்றியானாலும் மிகச்சுருக்கமான புரிதல் என்பது தப்பான புரிதல்தான். ஏனென்ளால் அது பெரும்பாலும் ஒருவருடைய கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை எல்லாம் களைந்து ஒற்றைவரி அபிப்பிராயங்களாக மாற்றப்பட்டிருக்கும். அதிலும் ஒரு சிந்தனையாளரைப்பற்றி அப்படி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படுவதெல்லாம் மிகமிக பிழையானது.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள எல்லா கல்லூரிகளிலும் இலக்கியப்படிப்பில் அழகியலுக்குப் பதிலாக அரசியல்பார்வையையே முன்வைக்கிறார்கள். ஏனென்றால் அழகியல் மிக மிக தனிநபர் சார்ந்தது. சப்ஜெக்டீவானது. அதை விளக்குவது கடினம். அரசியலை எளிதாக விளக்கலாம். ஆகவே கல்லூரியில் எளிமையாக கற்பிக்கலாம். இன்றைக்கு கல்லூரிகளிலே உள்ள ஆங்கிலக் கல்வி என்பதே பெண்ணிய இலக்கியம், மூன்றாம்பாலின இலக்கியம் , விளிம்புநிலைமக்கள் சார்ந்த இலக்கியம், பின்காலனிய இலக்கியம் , மூன்றாம் உலக இலக்கியம் என்றெல்லாம் பிரிக்கப்பட்டுத்தான் அறிமுகம் செய்யப்படுகிறது.

இலக்கியத்தை இப்படிப் படிப்பது ‘நவினமானது’ என்றும் அழகியல் அணுகுமுறையானது பழைமையானது என்றும் சொல்லப்படுகிறது. இது இலக்கியத்தையே ஒன்றிரண்டு சூத்திரங்களாக ஆக்கிக்கொள்ளும் அசட்டுப்பார்வையாக ஆகிவிடுகிறது. ப்ளூமை வெள்ளைமேலாதிக்கப் பார்வை கொண்டவர் , ஆண்மேலாதிக்கப் பார்வை கொண்டவர் என்றெல்லாம் ஒற்றைவரியில் வகுத்துச் சொல்வார்கள். ஏனென்றால் அவர் பரிந்துரைத்த கிளாஸிக்குகளின் ஆசிரியர்களில் எல்லாரும் வெள்ளை ஆண்கள் என்பதனால்.

இது மிக எளிமையான பார்வை. அவர் ஏன் ஆசிரியர்களை பரிந்துரை செய்கிறார் என்று விரிவாக விளக்கியிருக்கிறார். அந்தக்காரணங்களைப் புரிந்துகொள்வதை விட இந்த மாதிரியான குறுக்கல்வாதம் மிகமிக எளிமையானது. நம் கல்லூரிகளில் இருந்து இலக்கியமே கற்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நான் வகுப்பிலேயே கேட்டிருக்கிறேன். ப்ளூம் பல முக்கியமான பெண் எழுத்தாளர்களை ஆழமாக ஆராய்ந்து பரிந்துரைத்திருக்கிறாரே என்று. பைபிளே அடிப்படையில் ஒரு பெண்பிரதி என்று சொல்கிறாரே என்று. அதெல்லாம் எவருக்கும் முக்கியம் அல்ல. ஒற்றைப்பார்வை. அதை பேராசிரியர்கள் முன்வைப்பார்கள்.

கடுமையாக உழைக்கவும் நூல்களை பயிலவும் சோம்பல் கொண்ட பேராசிரியர்கள் உருவாக்கும் சித்திரம் இது. இவர்கள்தான் இலக்கியத்தைப் பயில்வதற்குப் பெரிய தடை. இந்தியாவில் மட்டும் அல்ல இங்கேயும்கூடத்தான். அரசியல் சார்ந்து பேசும்போது [அது அரசியல் சார்ந்த பேச்சு அல்ல, அரசியல்சரி சார்ந்த பேச்சுதான்] உடனே அந்த பேராசிரியருக்கு முற்போக்கானவர் என்னும் பிம்பம் கிடைக்கிறது. முற்போக்கான, அவநம்பிக்கை கொண்ட, தனிமையான சிந்தனையாளர் என்பதுதான் இன்றைக்கு உலகமெங்கும் செல்லுபடியாகும் பிம்பம். அதுவே ப்ளூம் போன்றவர்களை எதிர்க்கச் செய்கிறது. மற்றபடி ப்ளூம் முன்வைக்கும் கருத்துக்களை எதிர்க்க இவர்களிடம் எந்த கருத்துக்களும் இல்லை.

ப்ளூம் கல்வித்துறைக்கு எதிராகப்போராடிய கல்வித்துறையாளர் என்று வரையறை செய்கிறீர்கள். அவரை நம்மிடமிருந்து மறைப்பதும் இத்தகைய கல்வித்துறையாளர்கள்தான்

எம்.ராதிகா

முந்தைய கட்டுரைஎழுத்துரு ஓர் எதிர்வினை
அடுத்த கட்டுரைஒரே ஆசிரியரை வாசித்தல்