நூறுநாற்காலிகள் [சிறுகதை] – 3

[தொடர்ச்சி] சுவாமி சாதாரணமாக எதையும் சொல்லவில்லை. வயதாகி உடல்குறுகியதுபோலவே அவரது சொற்களும் குறுகியிருந்தன. ஒவ்வொன்றையும் அவர் நெடுநாட்களாகச் சொல்ல எண்ணியதுபோலிருந்தது. எல்லா வரிகளையும் நான் மீண்டும் மீண்டும் சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன். நான் நேர்முகத்திற்கு செல்லவேண்டிய நாளில் சுவாமி திருவனந்தபுரத்தில் சமாதியான செய்தி வந்தது. அவர் என்னை வரவேண்டாம் என்று சொன்னதற்குப் பொருள் புரிந்து திடுக்கிட்டேன். அவர் சொன்ன ஒவ்வொன்றுக்கும் மேற்கொண்டு என் வாழ்நாளில் அர்த்தம் காணப்போகிறேன் என நினைத்தேன்.

மதுரையில் பதவி ஏற்ற மறு வாரமே திருவனந்தபுரம் வந்தேன். காவல்துறையைக்கொண்டு ஒரேநாளில் என் அம்மாவைத் தேடிப்பிடித்தேன். போலீஸ் ஜீப்பில் பின்பக்கம் ஒப்பாரி வைத்து அழுதபடி வந்த பங்கரையான கிழவிதான் என் அம்மா என்று கண்ட முதல்கணம் சட்டென்று அவளைதிருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை வெல்ல என் முழு ஆன்ம சக்தியும் தேவைப்பட்டது. செதிலடர்ந்த சருமமும் மெலிந்து ஒட்டிய உடலும் கந்தலாடையுமாக கைகூப்பி அழுதபடி அமர்ந்திருந்தவளை லத்தியால் ஓங்கி அடித்து ‘எறங்ஙெடீ சவமே’ என்று அதட்டினான் கான்ஸ்டபிள். அவள் ‘வேண்டா தம்றா …ஒன்னும் செய்யல்ல தம்றா…வேண்டா தம்றா..’என்று அலறி இருகைகளாலும் ஜீப்பின் கம்பியை பிடித்துக்கொண்டாள்.

‘வலிச்சு தாழே இடுடே’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘இதாக்குமா சார் அக்யூஸ்டு? சாருக்கு கண்டாலறியாமல்லோ?’ நான் தலையை அசைத்தேன். அவளை இரு கான்ஸ்டபிள்கள் இழுத்துக்கொண்டுவந்து என் விடுதியின் முன்னால் பூந்தொட்டிகளுக்கு அருகே போட்டார்கள். நோயுற்ற நாய்போல கையும் காலும் நடுங்க ‘தம்றா.. தம்றா, கொல்லாதே தம்றா’ என்று அழுதபடி கிடந்தாள். ‘நீங்க போலாம்’ என்றேன். ‘சார்..இந்த கேஸ்…’ ‘இத நான் பாத்துக்கறேன். யூ மே கோ’ என்று அனுப்பினேன். அவர்கள் சென்றபின் மெல்ல அம்மா அருகே அமர்ந்தேன்

நடுங்கிக்கொண்டு பூச்செடிகள் மேல் சாய்ந்து இலைகளுக்குள் ஒளிந்துகொள்பவள் போல பதுங்கினாள். ’அம்மா இது நானாக்கும். காப்பன்’ ‘தம்றா.. தம்றா’ என்று கைகூப்பி கண்ணீர் வழிய சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் அவள் கூப்பிய கையை தொட்டேன் . ‘அம்மா, இது நானாக்கும். நான் காப்பன். உனக்க மகன் காப்பன்..’ ‘தம்றா. பொன்னு. தம்றா’ என்று சொல்லி உடலை முடிந்தவரை சுருட்டிக்கொண்டாள். நான் பெருமூச்சுடன் எழுந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவளுடைய மகனாக நான் இருந்த நாட்களை நினைத்துக்கொண்டேன். எனக்குப் புரிந்த மொழி ஒன்றுதான். நான் உள்ளே சென்று வேலைக்காரனிடம் அம்மாவுக்கு இலைபோட்டு சோறு பரிமாறச்சொன்னேன். அவன் பெரிய இலையைக்கொண்டு அவள் முன் விரித்தபோது அவள் அழுகை நின்றது. திகைப்புடன் பார்த்தாள். வேலைக்காரன் கொண்டுவந்த சோற்றை அவள் முன் நானே கொட்டினேன். குழம்பு ஊற்றுவதற்குள் அவளே அள்ளி அள்ளி உண்ண ஆரம்பித்தாள். நடுவே இலையுடன் அள்ளியபடி எழப்போனவளை ’இரு..சாப்பிடு…சாப்பிடு’ என்று அமரச்செய்தேன்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் மெல்ல அமைதியானாள். நான் அவளை மெல்ல தொட்டு ‘அம்மா நான் காப்பன்’ என்றேன். சரி என்பது போல தலையாட்டி அங்கிருந்து வெளியே செல்லும் வழியைப் பார்த்தாள். ’அம்மா நான் காப்பன்…நான் காப்பன்’ அவள் கையை எடுத்து என் முகத்தில் வைத்தேன். என் முகத்தை அவள் கையால் வருடச்செய்தேன். கையை உருவிக்கொண்டு தலையைத் திருப்பியவள் சட்டென்று அதிர்ந்து என் முகத்தை மீண்டும் தொட்டாள். ஆவேசத்துடன் என் முகத்தை அவளுடைய நகம் சுருண்ட கரங்களால் வருடினாள். என் காதையும் மூக்கையும் பிடித்துப்பார்த்தாள். அலறல் போல ‘லே காப்பா’ என்றாள். சட்டென்று எம்பி என்னை ஆவேசமாக இறுக அணைத்து என் தலையை அவளுடைய மார்புமேல் அழுத்திக்கொண்டு என் பின்னந்தலையில் மாறி மாறி அடித்து ‘காப்பா! காப்பா!’ என்று கத்தினாள்.

அவள் என்னைத் தாக்குவதாக நினைத்து ஓடிவந்த வேலைக்காரன் நான் அழுவதைக்கண்டு நின்றுவிட்டான். நான் அவனைப் போ என்று சைகை காட்டினேன். அவள் என் கைகளைப் பிடித்துத்தன் முகத்தில் அறைந்தாள். என் தலைமயிரைப் பிடித்து உலுக்கினாள். சட்டென்று மீண்டும் வெறி எழுந்து என்னை கைகளாலும் கால்களாலும் அள்ளி அணைத்து இறுக்கிக்கொண்டாள். கழுத்து இறுக்கப்பட்ட ஆடுபோன்ற ஓர் ஒலியில் அழுதாள். என் கன்னத்தைக் கடித்து இறுக்கினாள். எச்சிலும் கண்ணீரும் கலந்த முகத்தால் என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். நான் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு அவளருகே அப்படியே வீழ்ந்துவிட்டேன். ஒரு மகத்தான வனமிருகத்தால் மிச்சமின்றி உண்ணப்பட்டவன் போல உணர்ந்தேன்.

வெளியே பேச்சுக்குரல் கேட்டது. சுபாதான். நான் எழுந்து சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டேன். டாக்டர் இந்திராவும் சுபாவும் பேசியபடியே உள்ளே வந்தார்கள். என்னைப்பார்த்ததும் டாக்டர் சிரித்து ‘நௌ ஐ காட் இட். அப்பவே எனக்கு சந்தேகம்தான்….’ என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அம்மாவைச் சோதனை போடும்போது நான் சுபாவைப் பார்த்தேன். அவள் சாதாரணமாக நின்றாள். டாக்டர் ’ஒண்ணுமே இம்ப்ரூவ்மெண்ட் இல்லை. பாப்போம்’ என்றபின் சுபாவின் கையைத் தொட்டுவிட்டு வெளியே சென்றாள்

நான் சுபாவிடம் ’மீட்டிங் இல்லியா?’ என்றேன். ‘மினிஸ்டர் வரலை’ என்று சுருக்கமாகச் சொல்லி ‘நீங்க முழு நேரம் இங்கியே இருக்க வேண்டியதில்லை…அதுவேற ஏதாவது காசிப் ஆயிடப்போறது. பேசாம ஆபீஸ் போங்கோ’ என்றாள். நான் தலையசைத்தேன். ‘நான் சொல்றதைக் கேளுங்க. இங்க உக்காந்து என்ன பண்ண போறீங்க? உங்க ஸ்டேடஸிலே ஒருத்தர் இங்க இருக்கிறது அவாளுக்கும் சங்கடம்.. ‘ ‘சரி’ என்றேன். அவள் மெல்ல ‘டோண்ட் பி ரிடிகுலஸ்…’ என்றாள். நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

சுபா அம்மாவையே பார்த்தாள். ‘பூவர் லேடி. ரியலி ஐ காண்ட் அண்டர்ஸ்டேண்ட் ஹர்… ரியலி.. ஆல் த ஃபஸ் ஷி மேட்… மை காட்’ தோளைக்குலுக்கியபின் ‘நௌ ஐ யம் லீவிங். இப்ப முனிசிப்பல் ஆஃபீஸிலே ஒரு மீட்டிங் இருக்கு. ஸீ யூ’ என்றாள். அவளைத் தொடர்ந்து நானும் சென்று காரில் ஏற்றி விட்டுவிட்டு என் காரில் ஏறிக்கொண்டேன். ஆபீஸ் போகத்தான் நினைத்தேன். ஆனால் ஆபீஸை தாண்டி பார்வதிபுரம் சென்று அப்படியே வயல்களும் மலையடுக்குகளும் சூழந்த சாலையில் காரைச் செலுத்தினேன்.

அப்போது தோன்றியது திருவனந்தபுரம் சென்றால் என்ன என்று. அங்கே ஒன்றும் இல்லை. பிரஜானந்தரின் சமாதி அவரது குடும்ப மயானத்தில் இருக்கிறது. அங்கே ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். கவனிப்பாரில்லாமல் காட்டுக்கொடிகள் படர்ந்த ஒரு செங்கல் பீடம். அதன் மேல் எண்ணைக்கறை கறுத்த ஒரு சிறு மண் விளக்கு. சுற்றிலும் மரவள்ளியும் வாழையும் அடர்ந்திருந்தன. அவர் வாழ்ந்ததற்கான தடையங்களே இல்லாமலாகிவிட்டது. ஒருவேளை என்னைப்போன்ற சிலர் நினைக்கக்கூடும்.

காரை குமாரகோயில் வளைவில் செலுத்தி கோயில்வரைச் சென்றேன். கோயிலுக்குச் செல்லாமல் குளக்கரைக்குச் சென்று படிக்கட்டில் அமர்ந்துகொண்டேன். நீலச்சிற்றலைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தபோது உதிரி உதிரி எண்ணங்களாக மனம் ஓடிக்கொண்டிருந்தது. சிகரெட் தேடினேன், இல்லை. காருக்கு எழுந்து செல்லவும் தோன்றவில்லை. அம்மாவின் முகங்கள் நினைவில் தன்னிச்சையாக மாறிக்கொண்டிருந்தன. வேலைகிடைத்துத் திருவனந்தபுரம் சென்று முதல்முறையாக அம்மாவைப் பார்க்கும் வரை என் மனதில் இருந்த முகம் ஒன்று. அது வேறு வேறு முகங்களுடன் கலந்து தன்னிச்சையாகத் திரண்டுகொண்டே சென்றது. ஒரு மூர்க்கமான பெரிய தாய்ப்பன்றி போலத்தான் அவளை நினைத்திருந்தேன்.

அம்மாவை நேரில் பார்த்ததும் நான் கண்டது முற்றிலும் வேறு ஒருவரை. ஆனால் அந்த அம்மாவைக் கண்டகணமே அதுதான் அம்மா என்று என் அகம் புரிந்துகொண்டது. என்னை அவளும் அப்படித்தான் அதிர்ச்சியுடன் புரிந்துகொண்டாள் போல. அதிர்ச்சியும் பரபரப்பும் தாளாமல் நிலைகொள்ளாமல் தத்தளித்தாள். ஏதெதோ புலம்பியவள் சட்டென்று கூச்சலிட ஆரம்பித்து அப்படியே மூர்ச்சையாகிவிட்டாள். பிராந்தியை குடிக்கச்செய்து தூங்க வைத்தேன். வேலைக்காரனை அனுப்பி புதியசேலை வாங்கி வரச்சொன்னேன். காலையில் அவள் எழுந்ததும் அவளை புதிய ஒரு பெண்ணாக ஆக்கி என்னுடன் கூட்டிச்செல்ல நினைத்தேன். அன்றிரவு முழுக்க நான் உருவாக்கிய பகற்கனவுகளை நினைத்தால் எப்போதும் என் உடம்பு கூசிக்கொள்ளும்.

அம்மா அந்த புடவையை உடுக்க பிடிவாதமாக மறுத்தாள். மாறாக நான் என் சட்டையை கழற்றிவிட்டு அவளுடன் வரவேண்டும் என்று சொன்னாள். ‘நாயாடிக்கு எந்தரிடே தம்ப்றான் களசம்? ஊரி இடுடே..வேண்டாடே.. ஊருடே…டே மக்கா’ என்று என் சட்டையை பிடித்து கிழிக்க வந்தாள். தன் குட்டிமேல் அன்னியமான ஒரு பொருள் ஒட்டியிருக்கக் கண்ட தாய்ப்பன்றி போல என்னை என் ஆடைகளில் இருந்து பிய்த்து மீட்க முயன்றாள். நான் அவளிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. சொற்களை அவள் உள்வாங்கும் நிலையில் இல்லை. அவளுக்குத் திரும்பக்கிடைத்த குழந்தையுடன் மீண்டும் திருவனந்தபுரம் குப்பைமேடுகளுக்கு திரும்பிச்செல்ல நினைத்தாள்.

நான் பேசிக்கொண்டே சென்று நாற்காலியில் அமர்ந்ததும் பீதியுடன் பின்னால் ஓடி வெளியே சென்று எட்டிப்பார்த்துவிட்டு திரும்பிவந்து ’தம்பறான் கசேரிலே நீ இருப்பாடே? அய்யோ அய்யோ’ என்று பதறினாள். ’எளிடே..எளிடே மக்களே…கொந்நூடுவாருடே’ என்று கண்ணீருடன் கைகளால் மார்பில் அறைந்துகொண்டு தவித்தாள். மிகப்பெரிய தவறொன்றை நான் செய்துவிட்டது போல நினைக்கிறாள் என்று புரிந்துகொண்டேன். இருபது வருடங்களை மானசீகமாக தாண்டிப் பின்னால் சென்று அவளை புரிந்துகொள்ள முயன்றேன். சாக்கடைக்கு வெளியே வந்தாலே கல்லெறி கிடைக்கும் நாயாடிக்கு ஒரு நாற்காலி என்ன அர்த்தத்தை அளித்திருக்கும்? அவனை அடித்து உதைத்து அங்கே தள்ளும் அனைத்துக்கும் அது அடையாளம். குருதிவெறிகொண்ட ஒரு கொலைமிருகம் அது.

அன்று அம்மாவை நன்றாகக் குடிக்கச்செய்து நினைவற்ற நிலையில் உடைமாற்றச்செய்து மதுரைக்குக் கொண்டு வந்தேன். என்னுடன் பன்னிரண்டுநாட்கள்தான் இருந்தாள். கூண்டிலடைபட்ட காட்டுமிருகம்போல அலைமோதினாள். அவளை வெளியே விடக்கூடாதென்று சொல்லி கேட்கதவுகளை பூட்டிவிட்டு காவலுக்கும் சொல்லிவிட்டு ஆபீஸ் சென்றேன். ஆனாலும் இரண்டுமுறை தப்பி ஓடினாள். போலீஸை அனுப்பி தெருவிலிருந்து அவளைப் பிடித்துவந்தேன். அவளால் வீட்டுக்குள் தங்க முடியவில்லை. வீட்டில் சோறு தவிர எதிலும் அவளுக்கு ஆர்வமிருக்கவில்லை.

என்னைப்பார்க்காதபோது என் பெயர் சொல்லி கூச்சலிட்டபடி சுற்றிவந்தாள். மூடிய கதவுகளைப் படபடவென்று தட்டின் ஓசையிட்டாள். என்னைப் பார்த்ததும் சட்டையைக் கழற்றிவிட்டு அவளுடன் வரும்படிச் சொல்லிக் கெஞ்சினாள். நாற்காலியில் அமரவேண்டாம் என்று மன்றாடினாள். நான் நாற்காலியில் அமர்வதைக்கண்டால் அவள் உடல் ஜன்னி கண்டதுபோல அதிர ஆரம்பிக்கும். என்னுடைய சட்டை அணிந்த தோற்றம் அவளை ஒவ்வொரு முறையும் அச்சுறுத்தியது. என்னைக் கண்டதும் பயந்து சுவர்மூலையில் பதுங்குவாள். நான் சென்று அவளைத் தொட்டுப்பேசும்வரை அந்த பதற்றம் நீடிக்கும். தொடுகையில் என்னைச் சின்னக்குழந்தையாகத் தொட்ட்ட உணர்ச்சியை மீண்டும் அடைவாளோ என்னவோ ’காப்பா, காப்பா, மக்களே களசம் வேண்டா… கசேர வேண்டா மக்களே’ என்று கூச்சலிட்டு என் சட்டையை பிடித்து இழுத்து கிழிக்க ஆரம்பிப்பாள்.

பன்னிரண்டாம்நாள் அவள் மூன்றாம் முறையாகக் காணாமலாகி இரண்டுநாட்களாகியும் கிடைக்காதபோது நான் உள்ளூர ஆறுதல் கொண்டேன். அவளை என்னசெய்வதென்றே தெரியவில்லை. எவரிடம் கேட்டாலும் அவளை ஓர் அறையில் அடைக்கலாம் அல்லது ஏதாவது விடுதியில் சேர்க்கலாம் என்றுதான் சொல்வார்கள். ஆனால் எனக்கு அவள் தன் உலகில் எப்படி வாழ்வாள் என்று தெரியும். குப்பையை உண்டு தெருக்களில் தூங்கி வாழும் வாழ்க்கையில் அவளுக்கான உற்சாகங்களும் கொண்டாட்டங்களும் உண்டு. அவளுக்கு நெருக்கமானவர்கள் உண்டு. அது வேறு ஒரு சமூகம். சாக்கடையில் வாழும் பெருச்சாளிகள் போல உறவும்பகையுமாக நெய்யப்பட்ட பெரியதோர் சமூகம் அது.

பலநாட்களுக்குப் பின் அவள் மீண்டும் திருவனந்தபுரம் சென்றதை உறுதிசெய்துகொண்டேன். அவள் அத்தனைதூரம் சென்றதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்களுக்கான வழிகளும் தொடர்புகளும் முற்றிலும் வேறு. நான் அவளை என் நினைவுகளில் இருந்து மெல்ல அழித்துக்கொண்டேன். ஒவ்வொருநாளும் எனக்கான சவால்களை நான் சந்தித்துக்கொண்டிருந்தேன் அப்போது. வெறும் ஒரு வருடத்தில் என் எல்லா கற்பனைகளும் கலைந்தன. அதிகாரம் என்ற மாபெரும் இயந்திரத்தின் முக்கியமே இல்லாத ஒரு சிறு உறுப்பாக என்னை மொத்த இயந்திரமும் சேர்த்து அழுத்தி உருமாற்றி அமரச்செய்தது.

அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும் தன்னால் கையாளப்படுவதாக உணரப்பட்டாலும்கூட அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடுதான். உங்களால் அதிகாரம்செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல்கொண்ட கட்டாயம் இருக்கவேண்டும். ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல்திட்டத்துடன் சரியாக இணைந்துகொள்வதன்மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கைவருகிறது. தனித்துச்செல்லும்தோறும் அதிகாரம் இல்லாமலாகிறது

நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்துகொள்கிறான். கூடவே அது எப்படி உருவாகிறது என்றும் கண்டுகொள்கிறான். மேலும் மேலும் அதிகாரத்துக்காக அவன் மனம் ஏங்குகிறது. அதற்காகத் தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறான். சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறிவிடுகிறான். அவன் கொண்டுவந்த கனவுகள் லட்சியவாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன. மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல முகமும்கூட பிறரைப்போல ஆகிவிடுகிறது.

ஆனால் நான் அந்த கூட்டு அதிகாரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவே இல்லை. எனக்கிடப்பட்ட வேலைகளை மட்டுமே நான் செய்யமுடியும் என்றும் ஒரு குமாஸ்தாவைக்கூட என்னால் ஏவமுடியாதென்றும் கண்டுகொண்டேன். எனக்கு மேலும் எனக்கு கீழும் இருந்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் என்னை வெளியே தள்ளியது. நான் சொல்லும் எந்தச் சொற்களும் அவர்களின் காதுகளில் விழவில்லை. சிலசமயம் நான் பொறுமையிழந்து வெறிகொண்டவனாக கத்தினால்கூட அந்த கண்ணாடித்திரைக்கு அப்பால் அவர்கள் மெல்லிய புன்னகையுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நகர் நடுவே கூண்டில் கிடக்கும் பெயர் தெரியாத வனமிருகமாக ஆனேன்.சினம்கொண்டு எதிர்க்கும்தோறும் அது என் இயல்பான பண்பின்மையாகக் கண்டு மன்னிக்கப்பட்டது. போராடும்தோறும் அது என் அத்துமீறும் பேராசையாக கண்டு விலக்கப்பட்டது. என் நிலையை நான் அங்கீகரித்துக்கொண்டு பேசாமலிருந்தால் என் குலத்திற்கே உரிய இயலாமையாக விளக்கப்பட்டு அனுதாபத்துடன் அணுகப்பட்டது. என்னுடைய தன்னிரக்கமும் தனிமையும் உளச்சிக்கல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கணமும் நான் முட்டிமோதி என் சதைகளை பிய்த்துக்கொண்ட அந்த கூண்டு நான் எப்படியே எம்பிப்பிடித்து அமர்ந்துவிட்ட வானத்து உப்பரிகையாகச் சொல்லப்பட்டது.

நான் சுபாவை திருமணம் செய்துகொண்டதுகூட அந்த முட்டிமோதலின் ஒரு பகுதியாக இருக்கலாம். வெள்ளத்தில் எருமையைப்பற்றிக்கொண்டு ஆற்றைக்கடப்பதுபோல. அவள் என்னை அவளுடைய உலகத்திற்குள் இட்டுச்செல்வாள் என்று எண்ணினேன். அவளை நான் அடைந்தது அவளுடைய உலகம் மீதான ஒரு வெற்றியாக கருதப்படுமென நம்பினேன். மாலைநேரத்துக் கொண்டாட்டங்கள், தோட்டத்து விருந்துகள், திருமணங்கள், பிறந்தநாட்கள்…சிரிப்புகள், உபச்சாரங்கள், செல்லத்தழுவல்கள், உசாவல்கள்…

ஆனால் கருணை என்ற ஈவிரக்கமற்ற கொலைக்கருவியால் நான் எப்போதும் தோற்கடிக்கப்பட்டேன். அனுதாபத்துடன் என்னை பிரித்து எனக்குரிய இடத்தில் அமரவைப்பார்கள். சங்கடத்துடன் எழுந்தால் மேலும் கருணையுடன் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அவள் ஏன் என்னைத் திருமணம் செய்துகொண்டாள் என்று நான் அப்போது யோசிக்கவில்லை. என்னுடைய ஆண்மையின் சான்றிதழாக, உலகம் அங்கீகரிக்காவிட்டாலும் என்னுள் இருக்கும் காதலனின் வெற்றியாக அப்போது அதை எடுத்துக்கொண்டேன். நான் என் வாழ்நாளில் பெருமிதத்தை உணர்ந்த ஒன்றரை மாதக்காலம் அது. அந்த மூடத்தனம் இல்லாமலிருந்தால் அந்த அற்ப மகிழ்ச்சியையும் இழந்திருப்பேன்.

அவளுக்கு முன்னால்செல்லவேண்டியிருந்தது. கைக்குச்சிக்கிய தெப்பம் நான். ஒரு எளிய கடைநிலை செய்திதொடர்பு அதிகாரியாக இருந்த அவள் இன்று அடைந்துள்ள அத்தனை முக்கியத்துவமும் என்னுடைய மூன்றெழுத்து அவளுக்கு அளித்தவை. அவள் செல்லும் தொலைவு இன்னும் அதிகம். அந்த கணக்குக்கு மேல் அவளே போர்த்திக்கொண்ட முற்போக்குப் பாவனை. பரந்த மனம்கொண்ட நவீன யுகத்துப்பெண். இனி ஒருபோதும் அவளே அந்த போர்வையை விலக்கி அவளைப்பார்க்கப்போவதில்லை.

அதிகாரத்திற்கான தார்மீகப்பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதிகாரமின்றி வாழும் நரகத்தில் நான் சென்று விழுந்தேன். நான் பணியாற்றிய ஒவ்வொரு அலுவலகத்திலும் எனக்கு கீழே ஒரு அதிகாரி இயல்பாக வந்தமைந்தார். அவர் அந்தப்பகுதியில் பிரபலமாக இருக்கும் ஆதிக்கசாதியினராக, அப்பகுதியின் ஆளும்கட்சிக்கோ அல்லது உயரதிகாரிகளுக்கோ வேண்டியவராக இருப்பார். சிலநாட்களிலேயே மொத்த அதிகாரமும் அவர் கைகளுக்குச் செல்லும். அவரது ஆணைகள் மட்டுமே நடக்கும். அவர் என்னிடம் ஒரு மெல்லியபணிவை, நான் அவருக்கு கட்டுப்பட்டவன் என்பதை ஒவ்வொரு கணமும் நினைவுறுத்தும் தன்மை கொண்ட பணிவு அது, காட்டி எதற்கும் என்னுடைய அனுமதியையும் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்வார்.

மதுரையில் வேலைபார்க்கும்போதுதான் பிரேம் பிறந்தான். அவனுக்கு எட்டு மாதமிருக்கும்போது மீண்டும் அம்மாவை சந்தித்தேன். அம்மாவும் இன்னொரு கிழவருமாக என்னை தேடி மதுரைக்கே வந்திருந்தார்கள். அம்மா என்னை அலுவலகத்திற்கு வந்து பார்த்தாள். நான் பொதுமக்கள் சந்திப்பு என்ற பெரும் வதையில் சிக்கி அமர்ந்திருதேன். கடவுளின் சன்னிதிக்கு வருபவர்கள் போல கைகூப்பி நடுங்கி அழுதபடி மனுக்களுடன் வருபவர்கள். காலில் குப்புற விழும் கிழவிகள். கைவிடப்பட்ட பெண்களின் கூசிச்சிறுத்த மௌனம். அநீதி இழைக்கப்பட்ட எளியவர்களின் ஆங்காரமமும் வன்மமும், நிலம் பிடுங்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டு என்ன ஏதென்றே தெரியாமல் எவராலோ கூட்டி வரப்பட்டு எவரோ எழுதிக்கொடுத்த மனுக்களை கையில் பிடித்தபடி நிற்கும் பழங்குடிகளின் வெற்றிலைச் சிரிப்பு, பெரிய கண்களுடன் வேடிக்கை பார்த்து பெற்றோரின் உடைகளை பிடித்துக்கொண்டு வரும் கைக்குழந்தைகள்….

வந்துகொண்டே இருப்பார்கள். என்னைச் சந்திக்கும்போதே பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நம்புபவர்களைப்போல என் முன் முண்டியடிப்பார்கள். ’ஒவ்வொருத்தாராபோங்க…நெரிக்கப்படாது ஒவ்வொருத்தரா’ என்று மாயாண்டி கத்திக்கொண்டிருப்பார். அந்த ஒவ்வொரு முகமும் என்னைப் பதறச்செய்யும். ஒருவர் கண்களைக்கூட என்னால் ஏறிட்டுப்பார்க்க முடியாது. அவர்கள் அளிக்கும் காகிதங்களைப்பார்ப்பதுபோல அவர்களைச் சந்திப்பதை தவிர்ப்பேன். ’சரி’ ’சொல்லியாச்சுல்ல’ ’சரி’ ’பாக்கிறோம்’ ’செய்றோம்’ ’செய்றோம்மா போங்க’ என்று மீண்டும் மீண்டும் ஒரே சொற்களைச் சொல்வேன். அச்சொற்களைச் சொல்லும் ஒரு இயந்திரமாக என்னை உணர்வேன்

அந்த மக்களுக்கு நான் எதுவுமே செய்யமுடியாதென்று அவர்களிடம் சொல்வதைப்பற்றி நான் பகற்கனவு கண்டநாட்கள் உண்டு. சொல்லி என்ன ஆகப்போகிறது என்று மீண்டும் தோன்றும். மீண்டும் மீண்டும் அடித்து ஒடுக்கப்பட்டு அள்ளிக்குவிக்கப்படும் குப்பைகள் போன்ற மனிதர்கள். எஞ்சியிருக்கும் நம்பிக்கைதான் அவர்களை வாழச்செய்யும் உயிர்ச்சக்தி. அதை நான் ஏன் ஊதி அணைக்கவேண்டும்? ஆனால் இந்த மனுக்களை வாங்கிக்கொள்வதன் வழியாக அவர்களின் நம்பிக்கைகளை நான் வளரச்செய்து கடையில் பெரிய முறிவையல்லவா அளிக்கப்போகிறேன்? காத்திருந்து, கண்ணீருடன் நம்பிக்கிடந்து, மீண்டும் கைவிடப்பட்டு…

ஆனால் அபப்டி இரக்கமேயில்லாமல் கைவிடப்படுவது அவர்களுளுக்கு பழக்கம்தானே. நூற்றாண்டுகளாக அபப்டித்தான். கெஞ்சி, மன்றாடி, பிச்சையெடுத்து, கால்களில் விழுந்து, கைகளை முத்தி, ’தம்புரானே’ ’எஜமானனே’ ’தெய்வமே’ ’உடையதே’ என்றெல்லாம் கூச்சலிட்டு, அள்ளிவீசப்படுவதை ஓடிப்பொறுக்கி, உயிர்வாழ்வதையே கேவலமான அவமதிப்பாக மாற்றிக்கொண்டு, வாழ்ந்து வாழ்ந்து தீர்த்த தலைமுறைகள் அல்லவா? அவர்களை என்னால் ஏறிட்டுப்பார்க்க முடிந்தால் நான் ஒருவேளை அங்கேயே என் சட்டையையும் பாண்டையும் கழட்டி வீசிவிட்டு கோவணத்துடன் எளிய நாயாடிக்குறவனாக தெருக்களில் இறங்கி வானத்துக்கு கீழே வெறும் மனிதனாக நின்றிருப்பேன் போல..

அப்போதுதான் கூட்டத்தில் இருந்து நெரிசலிட்டு வந்த என் அம்மா ‘அது எனக்க மோன்..எனக்க மோன் காப்பன்..லே காப்பா! மக்கா, லே காப்பா!’ என்று பெரிதாகக் கூச்சலிட்டாள். அவளுடன் வந்திருந்த இரு கிழவர்களும் சேர்ந்து, ’காப்பா காப்பா’ என்று கூச்சலிட போலீஸ்காரர் அதட்டியபடி ‘த,,, என்ன சத்தம் இங்க? வாயா மூடு த வாய மூடு…பொடதீல போட்டிருவேன்..வய மூடு நாயே’ என்று அதட்டினார். நான் ‘சண்முகம்..அவங்கள விடு’ என்றேன். அம்மா பளீரென்று ஏதோ கட்சிக்கொடியை முந்தானைபோல போட்டு நரிக்குறவர்களிடமிருந்து பெற்ற பழைய பாவாடையை அணிந்திருந்தாள். தங்கவண்ணம் பூசிய அலுமினிய மூக்குத்தியும் கம்மலும் அணிந்திருந்தாள். மூவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.

அம்மா உரக்க ‘இது எனக்க மோன் காப்பன், எனக்க மோனாக்கும்…எனக்க மோன்..லே காப்பா லே மக்கா’ என்று சொல்லி என் முகத்தை அள்ளிப்பிடித்து என் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டாள். முத்தம் என்பது மெல்ல கடிப்பதுதான். என் முகத்தில் வெற்றிலை எச்சில் வழிந்தது. மொத்தக்கூட்டமும் திகிலடித்தது போல நின்றதைக் கண்டேன்.. ‘நீ உள்ள போய் இரு…நான் வாறேன்’ என்றேன். அம்மா ‘நீ வாலே…வாலே மக்கா..’ என்று என் கையைப்பற்றி இழுத்தாள். ஒரு கிழவர் திரும்பி கூட்டத்திடம் ‘இது காப்பனாக்கும். நாயாடிக்காப்பன். எங்க ஆளு…எல்லாரும் போங்க இண்ணைக்கினி இங்க சோறு கிட்டாது…சோறு இல்ல…போங்க’ என்று கையாட்டி ஆணையிட்டார்.

நான் எழுந்து அம்மாவை கரம்பிடித்து இழுத்துச்செல்ல மற்ற இருவரும் பின்னால் வந்தார்கள். ஒருவர் ‘நாங்க எங்கிட்டெல்லாம் தேடினோம். காப்பா நீ களசமெல்லாம் போட்டிருக்கேலே, அப்பம் நல்ல சோறு தருவாகளாடே?’ என்றார். ‘லே நீ சும்மா கெட, அவன் எம்பிடு தின்னாலும் இங்க ஒண்ணும் கேக்க மாட்டாக பாத்துக்க. அவன் ஆப்பீசறாக்கும் கேட்டையா’ என்றார் இன்னொருவர். நான் ‘அம்மா நீ இங்க இரு…இப்பம் வந்திருதேன் இங்க இரு’ என்று சொல்லி முகம் கழுவிவிட்டு மற்ற அறைக்கு வந்தேன். வந்து அமர்ந்ததுமே ஒன்றைக்கவனித்தேன். மொத்தக்கூட்டத்துக்கும் உடல்மொழி மாறிவிட்டது. நான் அதிகாரவர்க்கத்தின் துண்டு அல்ல என்று அத்தனைபேருக்கும் தெரிந்ததுபோல. ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் ஒருவர்கூட என்னிடம் ஏதும் கெஞ்சவில்லை. சிலர் மட்டுமே ஏதேனும் சொன்னார்கள். வெறுமே மனுவை மட்டும் தந்துவிட்டு சென்றார்கள்.

அம்மா அம்முறை இருபதுநாட்கள் என்னுடன் இருந்தார். அவர்கள் மூவருக்கும் என் பின்கட்டில் தங்க இடம் கொடுத்தேன். ஆனால் கூரைக்கு கீழே தங்க அவர்களுக்கு பழக்கமில்லை. காம்ப் ஆபீஸின் சைக்கிள் ஷெட்டிலேயே தங்கிக்கொண்டார்கள். இரவும் பகலும் உரத்தகுரலில் சண்டைபோட்டார்கள். ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டு சுற்றிலும் ஓடினார்கள். இரவில் தோட்டமெல்லாம் மலம் கழித்தார்கள். ஒவ்வொருநாளும் சுத்தம்செய்யும் அருணாச்சலம் மெல்லிய குரலில் தனக்குள் சாபமிட்டுக்கொள்வதை நான் கவனித்தேன்.

அம்மாவுக்கு சுபாவை முதல்பார்வையிலேயே கொஞ்சமும் பிடிக்கவில்லை சுபாவின் வெள்ளைநிறம் ஒரு நோய் அறிகுறிமாதிரியே அவளுக்கு தோன்றியது.அவளைப்பார்த்ததுமே அஞ்சி வீட்டுத்திண்ணையில் இருந்து இறங்கி ஓடி முற்றத்தில் நின்றுகொண்டு வாயில் கையை வைத்து பிதுங்கிய கண்களால் பார்த்தாள். சுபா ஏதோ சொன்னதும் தூ என்று காறித்துப்பினாள். ‘பாண்டன் நாயிலே லே அது பாண்டன்நாயிலே’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

சுபா அம்மாவைபபர்க்கவே அஞ்சி உள்ளே ஒதுங்கிக்கொண்டாள். அம்மா அவளைப்பார்த்தால் கையில் எது இருக்கிறதோ அதை அவளை நோக்கி வீசினாள். உடையை தூக்கி மர்ம உறுப்பைக்காட்டி வசைபாடினாள்.சுபா ‘பால், பிளீஸ் என் மேலே கொஞ்சமாவது அன்பிருந்தா இவங்கள எங்கயாவது அனுப்பிருங்க. உங்கள நம்பி வந்தேன். அதுகாக நீங்க எனக்கு செய்ற லீஸ்ட் ஹெல்ப் இதுதான்…அவங்கள என்னால தாங்கிக்கவே முடியலை பால். ப்ளீஸ்’ என்று கதறி அழுது அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.

அவள் அழுவதை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றேன். பிரசவம முடிந்து அவள் வேலைக்கு போக ஆரம்பிக்கவில்லை. ‘சொல்லுங்க பால். சும்மா எதுக்கெடுத்தாலும் இப்டியே சிலைமாதிரி நின்னா எப்டி?’ என்றாள்.‘சுபா, ப்ளீஸ். நான் பாகக்றேன். ஏதாவது பண்றேன்…மெதுவா அனுப்பிச்சிடறேன்’ என்றேன். ‘நோ..நீங்க அனுப்ப மாட்டீங்க. ஸீ அவங்கள நீங்க நம்ம வழிக்கு கொண்டுவரமுடியாது. அவங்க ஒரு வாழ்க்கைக்கு பழகிட்டாங்க…இனிமே அவங்கள நம்மால மாத்த முடியாது. அவங்க எங்கயாவது சந்தோஷமா இருந்தா போதும். அதுக்கு என்ன வேணுமானாலும் செய்வோம்…’

நான் என்னிடம் பிரஜானந்தர் சொன்னதைத்தான் நினைத்துக்கோண்டிருந்தேன். அம்மாவுக்கு பெரிய அநீதி ஒன்றை நான் இழைத்துவிட்டேன், என் வாழ்நாளெல்லாம் நான் அதற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்றார். அவளுடைய ஆணையை நான் மீறலாகாது. அவளுடைய விருப்பமே அவள் ஆணை. ஆனால் அம்மா என்ன விரும்புகிறாள் என்றே தெரியவில்லை. என் வீட்டின் எதுவுமே அவளுக்கு தேவையிருக்கவில்லை. சோறுகூட கொஞ்சநாளில் அலுத்துவிட்டது. அதேசமயம் சுபா மீதான வெறுப்பு ஒரு வேகமாக மாறி அவளை இயக்கியது. அவளைப்போன்றவர்களின் பிரியம்போலவே வெறுப்பும் கரைகளற்றது. பின்னாளில் யோசித்துக்கொண்டேன், சுபாமேல் அவள் கொண்ட வெறுப்பு எத்தனை ஆழம் மிக்கது என. எத்தனை நூற்றாண்டு வரலாறிருக்கும் அதற்கு!

அம்மா சமையலறையில் புகுந்து கிடைத்ததை அள்ளி போட்டுத் தின்றாள். வீட்டின் எந்த மூலையிலும் வெற்றிலைபோட்டு துப்பி வைத்தாள். வீட்டுக்குள்ளேயே சிறுநீர் கழித்தாள். சுபாவின் புடவைகளையும் நைட்டிகளையும் ஜாக்கெட்டையும் பிராவையும் கூட எடுத்து அணிந்துகொண்டாள். ‘எடீ எனக்க மோன் காப்பனுக்குள்ளதாக்கும்டீ..நீ போடீ நீ உனக்க வீட்டுக்கு போடி பன்ன எரப்பே’ என்று ஒவ்வொருமுறையும் சுபாவின் அறைக்கு முன்னால் வந்து நின்று கத்துவாள். சுபா இருகைகளாலும் காதுகளைப்பொத்திக்கொண்டு தலை தாழ்த்தி அமர்ந்திருப்பாள்.

ஆனால் அம்மா தன் அழுக்கு நிறைந்த கைகளால் பிரேமை தொட்டு தூக்குவதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குழந்தையை கொடுக்காமல் அதன் மேல் குப்புறவிழுந்து மூடிக்கொள்வாள். அம்மா அவள் முதுகை அடித்தும் அவள் கூந்தலைப்பிடித்து இழுத்தும் அவள் மேல் துப்பியும் பிராண்டியும் கூச்சலிடுவாள். நான் இரண்டுமுறை அம்மாவை அள்ளிப்பிடித்து தரதரவென்று இழுத்து வெளியே கொண்டுசென்று தள்ளி கதவைச்சாத்தினேன். கிறிஸ்துதாஸிடமும் செல்லத்திடமும் அம்மாவை குழந்தையை நெருங்கவிடக்கூடாது என்று சொல்லி வைத்தேன். ஆனாலும் எப்படியோ உள்ளே வந்து விடுவாள்.

வெளியே இருந்து அவள் எடுத்துக்கொண்டு வந்த ஏதோ அழுகலை ஒருமுறை குழந்தைக்கு ஊட்டிவிட்டாள். குளித்துவிட்டு வெளியே வந்த நான் அதைப் பார்த்து திடுக்கிட்டேன் . என் கைகால்கள் எல்லாம் பதற ஆரம்பித்தன. அம்மாவை இழுத்துச்சென்று வெளியேதள்ளி செல்லத்தை வாயில் வந்தபடி வசைபாடினேன். செல்லம் சமையலறைக்குள் நின்று என் காதில் படும்படி ஏதோ சொல்வதை கேட்டேன். ‘குறப்புத்தி’ என்ற சொல் காதில் விழுந்ததும் மந்திரக்கோலால் தொடப்பட்டு கல்லாக அனதுபோல என் உடல் செயலற்றது. பின் எல்லாச் சக்திகளையும் இழந்து முன் தளத்து சூழல்நாற்காலில்யில் அமர்ந்தேன்.

கடைசிப்பகுதி

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள் [சிறுகதை] – 2
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள் [சிறுகதை] – 4