எழுத்துரு ஓர் எதிர்வினை -1 [தொடர்ச்சி]
அன்புள்ள ஆசிரியருக்கு,
அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றி வேற்கையின் இந்தப்பாடல் பெரியார் முன் வைத்த தமிழ் எழுத்துரு நிலை பற்றிய அருமையான உவமையாகும்.
பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே!
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே!
//பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் தனது பேச்சாற்றலால் பொய்யையும் உண்மையாக எண்ணும் படி சொல்லக் கூடும். உண்மையே பேசக் கூடியவனுக்கு பேசும் திறன் இல்லாது போனால் அவன் கூறும் உண்மையும் கூட பொய் போலவே தோன்றும்//
இங்கு ஆங்கில எழுத்துருவான ரோமன் எழுத்துரு குறைவான எழுத்துக்களைக் கொண்டதால் கற்பதற்கு எளிமையானதாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.அதன் உண்மை நிலையைப் பற்றி யாரும் பெரிதாக குரல் எழுப்பவில்லை.ஒப்பீட்டளவில் ரோமன் எழுத்து மற்றும் தமிழ் எழுத்தைப் பொறுத்தவரை கற்க,எழுத தமிழ்தான் சிறந்தது என்பதைப் பற்றி இந்தக் கடிதத்தில் விளக்கம் கொடுக்கிறேன்.
என் புரிதலில் இன்று உலகில் எழுதப்படும் எழுத்துக்களை மூன்று எழுத்துக்களாக வைத்துக் கொள்கிறேன்.1.சித்திர எழுத்துக்கள்.2.உயிரெழுத்து மெய்யெழுத்து மட்டும் கொண்டவை.3.மொழியாக பேசப்படும் ஒலிக்குறிப்புகள் அனைத்திற்கும் சொற்கள் கொண்டவை.
1.சித்திர எழுத்துக்கள்
இவை ஆதிமனிதன் தன் எண்ணத்தை வெளிப்படுத்த வரைந்த ஓவியங்களிலிருந்து தோன்றியவை.இவைகளை முதல் கட்டத்தைச் சேர்ந்த எழுத்து என்றும் கூறலாம்.ஆரம்பத்தில் தோன்றிய இவற்றின் மிகப்பெரிய குறை எழுத்துகள் சொற்களின் பொருளைக் கொடுப்பது.தன் எண்ணத்தை வெளிப்படுத்த எண்ணற்ற சொற்களை மனிதகுலம் உருவாக்கும்போது சொற்களுக்கான எழுத்துருக்கள் அதிகமாகிக் கொண்டே செல்லும்.இன்றும் இவைகள் புழக்கத்தில் இருக்கின்றன.சீனத்தில் 47000 சித்திரஎழுத்துக்களும் ஜப்பானில் 2928 சித்திர எழுத்துக்களும் கொண்ட நீண்ட எழுத்துருக்கள் இருக்கின்றன.இவைகளை முழுமையாகக் கற்பது கடினம் . ஆனாலும் புழக்கத்தில் தான் இருக்கின்றன.
2.உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து மட்டும் கொண்டவை.ஒலிக்குறிப்புகளை வைத்து எவை உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்தோ அவைகளை மட்டும் எழுதினாலே போதும் என்று கண்டறிந்து அவைகளுக்கு மட்டும் எழுத்துக்களை அமைத்துக் கொண்டவை.இவைகளில் எல்லா ஒலிக்குறிப்புகளையும் எழுதிவிட முடியும் என்பதாலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய தேவையை உருவாக்கும் சமூக சூழல் காரணிகள் ஏற்படாத காரணத்தால் இரண்டாம் கட்டத்திலேயே தேங்கி நின்றவை.ஆங்கிலரோமன் எழுத்துக்கள் இத்தகையவை.
இவைகளின் குறை அனைத்து எழுத்துக்களுக்கும் தனிப்பட்ட எழுத்து வடிவம் இல்லை.அதற்கு காரணம் இவைகளுக்கு உயிர்மெய் எழுத்து என்ற எழுத்து வடிவமே இல்லை. அதனால் உயிர்மெய் எழுத்துக்களை எழுத உயிரெழுத்து மெய்யெழுத்து இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும். தமிழில் சொல்வதென்றால் த எனும் எழுத்துக்கு வடிவம் கொடுக்காமல் த்அ என்று எழுதுவதைப்போல் எழுதவேண்டும்.
3.அனைத்து ஒலிக்குறிப்புகளுக்கும் எழுத்துரு கொண்டவை.
இந்த வகை எழுத்துக்கள் சூழலின் காரணமாக இரண்டாம் கட்ட எழுத்துக்களிலிருந்து மேம்பட தேவையிருந்த காரணத்தால் அல்லது எளிமையாக எழுத உயிர்மெய் எழுத்துகள் தேவையென்பதை உணர்ந்ததால் தங்களின் எழுத்தில் உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கியவை.இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துரு இத்தகையது.
தமிழ் எழுத்துரு வரலாறு
தமிழ் எழுத்து மூன்றாம் கட்டத்தைச் அடைந்தது எப்படி என்பதை நாம் இன்று நமக்கு கிடைத்திருக்கும் குறைவான தகவல்களை வைத்துக்கூட யூகிக்க முடியும்.
தமிழ் எழுத்துருவை எழுத ஆரம்ப கால நிரந்தர ஊடகம் பனையோலைகள்தான்.அவை தமிழ்நாட்டுச்சூழலில் மிக எளிமையாக கிடைத்தன.ஆனால் அவைகளை எழுதுவதற்கு பக்குவப்படுத்துவது சற்று சிரமமான வேலை.பாதுகாப்பது அதைவிடச் சிரமமான காரியம்.அவைகளில் எழுதுவதற்கும் மிக நீண்ட நேரம் தேவைப்படும்.எனவே எழுத்துக்களை எழுத்துக்களை எழுதிப் பழக விரைவில் எழுத்து அழியக்கூடிய மண் ,நெல் போன்ற ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. நிரந்தரப்படுத்த தேவையானவைகளுக்கு மட்டும் ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டன.
சுவடிகளில் எழுதுவதும் அவைகளைப் படியெடுப்பதும் பாதுகாப்பதும் மிகச் சிரமமான வேலையாக இருந்தது. அதனால் ஓலைச்சுவடிகளில் எதை எழுதுவதாக இருந்தாலும் அது சுருங்கச் சொல்லுவதாக அமையவேண்டிய தேவை ஏற்பட்டது.எழுதிப் பழகும் ஊடகத்திற்கு ஒரு குறைவும் இல்லாததால் ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கு ஏதுவான மாற்றம் ஏதும் செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டுவந்த மாற்றம் தான் உயிர் மெய் எழுத்துக்கள்.
பொதுவாக அன்றைய தமிழர்களைப் பொறுத்தவரை ஊன்றிக் கவனித்தால் இயற்கையின் கூறுகளிடமிருந்து கற்று தங்களுக்கு தேவையானவைகளை உருவாக்க கூடிய நபர்களாக இருந்திருக்கின்றனர். அனைவரையும் போல் உயிரெழுத்து மெய்யெழுத்தை எழுதியிருக்கிறார்கள்.மற்றவர்களைப் போலல்லாமல் இயற்கையைக் கூர்ந்துகவனித்து உயிரினங்களின் மெய்யாகிய உடலில் உயிர் கலந்து அவற்றை இயக்குவதுபோல உயிர்மெய் என்ற எழுத்துவகைகளையும் உருவாக்க வேண்டும் என நம் மூதாதைகளுக்கு தோன்றியிருக்கிறது.மெய்யில் உயிர் வந்து சேரும்போது உயிர் நேரடியாகத் தெரியாமல் உயிரினங்களின் சிறப்பான கால்,சுழி,கொம்புகளாக மாறும் வண்ணம் உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
மற்ற எழுத்துக்கள் உயிரையும் மெய்யையும் தனித்தனியாக பாவித்த போது உயிர்மெய் எழுத்தை உருவாக்கிய நம் மூதாதையரை நினைத்து அவர்களிலிருந்து சிலநூறு தலைமுறை தாண்டிய நாம் பெருமை கொள்ளலாம் . இந்த முறையைப் பயன்படுத்தி அழியும் ஊடங்களில் எழுத்தைக் கற்றுக் கொண்டு ஓலைச்சுவடிகளில் எழுத ஆரமபித்தனர்.. அதனால் உயிர்மெய் எழுத்துக்களை அதிகம் பயன்படுத்தும் நம் மொழியில் இரண்டாம் கட்ட எழுத்துக்களைப்போல இரண்டு எழுத்துக்களை எழுதாமல் ஒற்றை எழுத்தை எழுத முடிந்தது.அதன் காரணமாக ஓலைகளில் எழுத எடுக்கும் நேரமும் எழுதும் ஊடகமும் வீணடிப்பு குறைக்கப்பட்டது. இன்றும் பழைய ஓலைச்சுவடிகளில் ஒற்றெழுத்தும் துணையெழுத்தும் இல்லாமல் எழுதியது ஏன் என்பதற்கான காரணம் எழுதப்படும் ஊடகத்தின் போதாமையே என விளங்கும் .
இதன்பிறகு எழுத்துரு மாறிய பல்வேறு ஊடகங்களுக்கு ஏற்ப வடிவ மாற்றம் மட்டும் கொண்டது.கடைசியாக நடந்த மாற்றம் துணையெழுத்துக்களை உருவாக்கியது. நான்காம் கட்ட எழுத்தாக மாறுவதற்கான் தேவை இன்னும் எழவில்லை.
.இதை அறியாமல் பெரியார் மூன்றாம் கட்ட எழுத்துருவிலிருந்த இரண்டாம் கட்ட எழுத்திற்கு மாறுங்கள் என்று சொல்வது எத்தகைய தவறு. சூழல் கொடுத்த கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சூழலை வென்று தன்னை மேம்படுத்திக் கொண்டவனை பிறரையும் மேம்படுத்துபவனை ஏன் இங்கிருந்து மேலேறினாய் என்று கேட்பது தான் தமிழ் எழுத்து விவகாரத்தில் நடந்தது. அதிவீரராம பாண்டியனின் பாடலுக்கான காரணம்இது.
தமிழ் எழுத்துரு உண்மையிலேயே மூன்றாம் கட்டத்தை சார்ந்தது என்பதற்கு இரண்டாம் கட்ட எழுத்துக்களின் போதாமைகள் என்ன,அந்தக் குறைகள் ஏன் தமிழில் இல்லை என்பதையும் விளக்கிச் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது.ஏனெனில் வெறுமனே எதையும் சொல்லிவிட முடியும்.அதை நீருபித்தால் தானே அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.எனவே இரண்டாம் கட்ட எழுத்துக்களின் மூன்று போதாமைகளை மட்டும் சொல்கிறேன்.
அ.கற்பதில் ஏற்படும் சிரமங்கள்
எந்த எழுத்தாக இருந்தாலும் அது கற்க ,எழுத எளிதாகவும்,எழுதும் போது திடமான வடிவைக் கொண்டதாக இருக்க வேண்டும்.அதுதான் கற்பதற்கு எளிதான எழுத்துரு.ரோமன் எழுத்துரு எழுத்துக்கள் குறைவாக இருப்பதால் கற்றுக்கொண்டு நினைவில் வைத்துத் கொள்ள எளிமையாக இருக்கின்றன என்பது மேம்போக்கான உண்மை. 247எழுத்துக்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கு பதில் 26ஐ நினைவில் வைத்துக் கொள் என்றால் எளிதாக இருக்கிறதே என்று தான் தோன்றும்.ஆனால் நடைமுறையில் எழுத்துக்கள் 26 என்றாலும் 52எழுத்துக்கள் இருக்கின்றன.சிறிய வேறுபாடுகள் தான் உண்டு என்றாலும் எழுத்துக்களின் எண்ணிக்கை 52ஆகத்தான் இருக்கிறது.
குறைவான எழுத்துக்கள் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக தோன்றினாலும் அவைகளை வைத்து சொற்களை கற்க்கும் போதும் எழுதம் போதும் பல்வேறு சாத்தியமான எழுத்துக்களை ஒரு சொல்லுக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தும் குழப்பங்களை விட 247 எழுத்துக்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக த எனும் எழுத்துக்கு tha என்றும் dha என்றும் எழுதலாம் எனும் போது கற்கச் சிரமத்தைக் கொடுக்கும்.
தமிழில் உயிரெழுத்தையும் மெய்யெழுத்தும் தெரிந்து கொண்டாலே உயிர்மெய் எழுத்துக்களின் வடிவும் நினைவுக்கு வந்துவிடும்.எந்த எழுத்தாக இருந்தாலும் ஒரு ஒலிக்குறிப்புக்கு ஒரு எழுத்து என்பதால் நிலையான எழுத்து வடிவம் நினைவில் வந்துவிடும்.அதிக எழுத்துக்கள் தரும் இந்த வசதி குறைந்த எழுத்துக்களில் கிடையாது .ஒரு எழுத்தைக்கூட மூன்று அல்லது நான்கு எழுத்தைக் கொண்டு எழுதமுடியும் என்பது அந்த எழுத்தைக் கற்பவனுக்கு எவ்வளவு குழப்பத்தைத் தரும்.நிலையற்று நீர்மமாக அலையும் இத்திரவ எழுத்துக்களை பயன்படுத்த அதை உறைய வைக்குமளவு கடினமான முயற்ச்சி செய்துதான் அவைகளைக் கற்க முடியும்.இதை இங்கு எவரும் யோசிப்பதே கிடையாது.இந்த பல்வேறு சாத்தியங்களுக்கான எழுத்துக்கள் நாட்டுக்கு ஒன்றாக மாறக்கூடிய வாய்ப்பிருப்பதால் உலகமெங்கும் ஆங்கில எழுத்துருக்கள் ஒரே மாதிரியாக எழுதுவதற்கு கடினமாக பயிற்சியளித்தால் மட்டுமே கற்பதாக மாறுகின்றன.இது கற்பவனுக்கு சிரமத்தைக் கொடுப்பது.அதே சமயத்தில் அதிமான எழுத்திருந்தாலும் அவைகளை நினைவில் வைத்துக் கொள்ள உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் தெரிந்து கொண்டாலே போதும். உயிரெழுத்தில் மெய்யெழுத்துக்கள் ஒரே மாதிரியான மாற்றத்தைதான் ஏற்படுத்தும் என்பது புரியும் போது உயிர்மெய் எழுத்துக்களை எளிமையாக கற்கலாம்.உயிர்மெய் எழுத்துக்களை கற்றபதன் மூலம் எந்த தொந்தரவும் குழப்பமும் ஏற்படுவது இல்லை.இதுதான் மூன்றாம் தலைமுறை எழுத்துக்கும் இரண்டாம் தலைமுறை எழுத்துக்கும் கற்க்கும் போது இருக்கும் வித்தியாசம்.
இதை வைத்து பார்க்கும்போது தமிழ் எழுத்து கற்பதற்கு பார்வைக்கு கடினமாக தென்பட்டாலும், தர்க்கரீதியாக கற்பதற்கு எளிமையானதாகவும், பெரிய விடுதலையைக் கொடுப்பதாக இருப்பதும் தெரியும்.
ஆ.எழுதுவதில் இருக்கக்கூடிய இடர்கள்
ரோமன் எழுத்துக்களுக்கு ஒரே சொல்லுக்கு பலவித எழுத்து சாத்தியக்கூறுகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.அது எழுதும் போதும் தொடரும்.உயிர் மெய் எழுத்துக்கள் இல்லை என்பதால் உயிர்மெய் எழுத்தை எழுத உயிரெழுத்து மெய்யெழுத்து இரண்டையும் சேர்த்து எழுத வேண்டிய தேவையிருக்கும்.தமிழ் எழுத்தின் பெரும்பாலான ஒற்றை எழுத்தை எழுத ரோமன் எழுத்துக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களை எழுத வேண்டிய தேவை ஏற்படும்.இது எவ்வளவு கால , எழுதும் ஊடக விரயம். எழுதும் ஊடகத்தை விட விலைமதிக்கமுடியாத மனித நேரம் வீணாவதைத் தடுக்க தமிழைப் பின்பற்றி தங்களுக்கான உயிர்மெய் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்கள் செய்வது எல்லாவகையிலும் உலகுக்கு நல்லது.
இ.ஒரே சொல்லுக்கு பல எழுத்து வடிவங்கள்
ஆங்கில எழுத்துரு ஆங்கிலத்தைப் தாய்மொழியாகப் பேசும் பலநாடுகளில் கூட நாட்டுக்கு ஒன்றாக சொற்களை பல்வேறு சாத்தியங்கள் கொண்டு எழுதுகின்றன.இது அடிப்படையில் சரிசெய்யப்பட வேண்டும்.அப்போதுதான் உலகளாவிய முறையில் ஒரே மாதிரியாக எழுதக் கூடிய முறை வரும்.என்றும் தமிழை மலேசியாவில் எழுதினாலும் இலங்கையில் எழுதினாலும் சொற்களை எழுதுவதில் எவ்வித வித்தியாசமும் வராது.இந்த நிலைக்கு ஆங்கிலரோமன் எழுத்துருவும் வரவேண்டும்.அதற்காக தமிழைப் போல தங்களுக்கான உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கினால் நன்று.தமிழ் உயிரெழுத்து மெய்யெழுத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை வைத்து உயிர்மெய்யெழுத்தை உருவாக்கியதைப்போல் அவர்களிடமிருக்கும் உயிரெழுத்து மெய்யெழுத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தினால் கற்க எழுத சிரமமில்லாமல் இருக்கும் என்பதை அறிஞர்களோ துறைசார் வல்லுனர்களோ முடிவெடுத்து மாற்றினால் நல்லது.உலகில் இதைப்போல் இருக்கும் அனைத்து மொழிகளும் தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.உலகிற்கு தமிழ் கொடுத்த கொடையாக இதுவும் இருக்கட்டும்.
இப்படிக்கு
அந்தியூர் மணி