மொழி- எல்லைகளும் வாய்ப்புகளும்

இருத்தலின் ஐயம் தொடர்ச்சி

நிஷாந்த் கடிதத்தில் மொழி குறித்து…

உண்மையென்பதே மாயச் சுடராக இருக்’கிறது’.இருக்கலாம்.மொழியாலும்,பிரஞ்ஞையாலும் அதுவும் நித்திய சுடரா’கிறது’.பிரஞ்ஞை உயிர் ஆற்றல்.மாயைக்கொரு சொட்டு பிரஞ்ஞை.திவ்ய சுடர்.

(இவ்வாறு இருக்’கிறது’.)

//நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஒருபோதும் அறியவே முடியாத பொருள்வய உலகம் வெளியே இருக்கிறது. // This line of yours was depressing and at the same time delightful.

ஒற்றை இலக்கணம் தான் உள்ளது.ஒற்றை இலக்கணத்தின் கிளைகளே மொழிகள்.புற உலகத் தாக்கம் இரண்டாம் பட்சமே என்கிறார் Noam Chomsky.ஒத்த பண்புடைய மொழிகள் அதன் வேறுபாடின்மை காரணமாக ஒன்றோடொன்று சேர்கிறது.மேலும் மனிதர்களுக்கு பிறப்பிலேயே மொழிக்குறிய இலக்கணம் அமைந்து விடுகிறதென்றும் குழந்தைகள் கேட்டவற்றையும் படித்தவற்றை மட்டுமே பேசுவதில்லை என்கிறார்.

//The basic questions of what is specific to language really have to do with issues

that go beyond those of explanatory adequacy. So if you could achieve explanatory adequacy – if you could say,

“Here’s Universal Grammar [UG], feed experience into it, and you get a

language” – that’s a start in the biology of language, but it’s only a start.// (The Science of Language)

இதை முன்னமே எங்கோ படித்த நியாபகம்.’இமையம் எனும் சொல்’ கடிதத்தில் தான்.

இறுதியாக ,எனக்கும் செவிக்கும் நாவுக்கும் இமையம் என்பதே சரியாக இருக்கிறது என்பதனால்.

‘இமையம் எனும் சொல்’ கடிதத்தின் இறுதி வரி.

சொல் தன்னிச்சையாக ஆழுள்ளத்தில் இருந்து எழவிட்டுவிடுவேன்.அது ஒலிமாறுபாடோ பொருள்மாறுபாடோ கொண்டு என்னுள் பதிந்து அவ்வண்ணமே இயல்பாக வெளிப்படுமென்றால் அப்படியே அது இருக்கட்டும் என்பதே என் நிலைபாடு. அது படைப்புவெளிப்பாட்டின் ஒரு வழிமுறை. இலக்கியம் ஒருபோதும் செய்திக்கும் அலுவலுக்கும் உரிய  தரப்படுத்தப்பட்ட நடையில் அமையமுடியாது, அமையவும்கூடாது/

மொழி கற்பனைத் திறனையும் பார்வைக்கோணங்களையும் தீர்மானிக்கிறதா ? இடது புறத்திலிருக்கும் ஆரஞ்சை எடு என ஆங்கிலத்தில் கூறுகிறோம். தென்மேற்கிலுள்ள ஆரஞ்சை எடு என திசைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மொழிகளும் உண்டு.வினைச்சொல் சுட்டும் காலமும் இதனால் மாறுபடுமா ?தனிமனித கால உணர்வு இதனடிப்படையில்தான் செயல்படுகிறதா ? சென்னையில் எனக்கு ஒரு மணி நேரமென்பது பெரிய விஷயமாகஙே இருக்காது.ஆனால் ,கோவையில் ஒரு மணி நேரமென்பது பெரிய கால அளவு போல் தோன்றுவது போலத்தான மொழியின் கால வெளிப் பிணைப்பும் உள்ளதா ?

தமிழில் ஆங்கிலத்தில் உள்ளதைப்போல ஸ்பேனிஷ் மொழியில் நீர்மைப்பண்பு இருப்பதில்லை.ஸ்பானிஷ் மொழியில் மென்அசைவுகளையும், சலனங்களை உணர்த்தும் வினைச்சொற்கள் குறைவு.

ஆக, ஒரு மொழி அழியும்போதும் இறுக்கத்தோடு செயல்படும்போதும் அதற்கே உரிய தனித்தன்மையான உட்பொறிகளும் உலகங்களும் அழிகிறதல்லவா ?

இவையெல்லா பெரும் வியப்பையும் மலைப்பூட்டக்கூடியவையாகவும் இருக்கிறது.மனிதனின் நகர்வு, இயற்கை உந்துதல் என சர்வமும்.

இதற்குமுன் கடிதமெல்லாம் எழுதியதில்லை.இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு இல்லாத ஊரிளுள்ள தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டி சில கடிதங்கள் எழுதயதோடு சரி.இரவு இரண்டு மணியாகப்போகிறது.இப்போதைக்கு சிந்தனைப்போக்கை சட்டமிடாமல்  பார்த்துக்கொண்டேன்.தினசரியின் ஒரு பகுதி.ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சிந்தனை ஓட்டங்களும் கேள்விகளும்.  என்றாலும்,

இந்தக் கடிதத்தையும் என் தினசரியையும் பிரித்தறிய முடியாது என்றளவில் இக்கடிதம் நேர்மையான ஒன்று.நன்றி.

நிஷாந்த்

***

அன்புள்ள நிஷாந்த்,

மொழி பற்றிய உங்கள் கேள்வி முன்னர் சொன்னவற்றுடன் நேரடியாகத் தொடர்பற்றது அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டு முன்வைக்கவில்லை. அதை நீங்கள் இன்னமும் வாசித்து, இன்னமும் அதனுடன் மோதி, இன்னமும் தெளிவாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். ஆனால் அந்தக்குழப்பமும் தடுமாற்றமும் ஓர் அந்தரங்கத்தன்மையை அளிக்கின்றன. ஆகவே அந்தரங்கமாக உரையாடத் தூண்டுகின்றன

மொழி செயல்படும் விதம் பற்றி இன்றைய கல்வித்துறைக் கோட்பாட்டாளர்கள் எழுதிக்குவித்துவிட்டனர். செயற்கை நுண்ணறிவு  ஒன்றைஉருவாக்க முடியுமா என்ற அறிவியலின் ஆர்வம் தற்காலிகமாக மொழியியல் நோக்கி திரும்பியதன் விளைவு அது. ஏராளமான கொள்கைகள், கொள்கைகளுக்கான மறுப்புகள். விரைவிலேயே அந்த ஆர்வம் மட்டுப்பட்டது. பிறகு உருவான நரம்பியல் மொழியின் செயல்பாடுகளை முற்றிலும் வேறுகோணத்தில் விளக்க ஆரம்பித்ததும் பழைய மொழியியல் கொள்கைகள் வலுவிழந்தன

அந்த விவாதத்தில் மிகக்குறைவாகவே மொழியை ஆளும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பங்கிருந்தது. முப்பதாண்டுகளாக இக்கொள்கைகளை கவனித்து வருகிறேன். ஓரளவு எழுதியுமிருக்கிறேன். ஆனால் அவற்றை வெறும் தர்க்கவிளையாட்டுக்கள் என்று மட்டுமே பார்க்கிறேன். மொழியை ஆளும் கவிஞனோ எழுத்தாளனோ சொல்வதில் மட்டுமே எனக்கு ஆர்வமிருக்கிறது.

நான் மொழியில் செயல்படுபவன். இலக்கியம் மொழிக்கலை. ஆகவே மொழி எழும் விதத்தைக் கூர்ந்து கவனிக்கிறேன். அதில் இரு தளங்கள் உள்ளன. ஒன்று என் அகத்திலிருந்து எழும் ஒரு சரடு. அகக்கட்டுமானமாகிய மொழியில் முளைப்பது அது. இன்னொன்று புறத்திலிருக்கும் சரடு. வடிவம் என்றும் நடை என்றும் சொல்லப்படுவது. புறக்கட்டுமானமாகிய மொழி அதுவே. என் பணி இரண்டையும் இயல்பாக ஒன்றாக முடைவது.

மொழியில் செயல்படுவது என்பது ஒரு நிகருலகை உருவாக்கி கொண்டு அங்கே அனைத்து உசாவல்களையும் நிகழ்த்துவது. ’எல்லாச்சொல்லும் பொருள்குறித்தனவே’ என்பது மொழி அளிக்கும் மிகப்பெரிய ஆறுதல்.அறியமுடியாமையின் பதற்றம் நிறைந்த புறப்பெருக்கில் இருந்து நாம் உருவாக்கிக்கொள்ளும் அறிதலால் எல்லைகட்டப்பட்ட நிகருலகு அது. நம்மால் சென்றடைய முடிவற்றவையாலான ஒரு தளம் . இதில் நாம் செயல்படுகையில் முடிவின்மையை இதன் சொற்சேர்க்கைகள் வழியாகக் கண்டடைகிறோம். ஒவ்வொரு மொழியும் வெவ்வேறு வகையில் ‘எடுத்துத் தொகுக்கப்பட்டது’ ஒவ்வொரு வகையில் ‘பிரதிநிதித்துவம்’ கொண்டது.

மொழி கற்பனைத் திறனையும் பார்வைக்கோணங்களையும் தீர்மானிக்கிறதா? இல்லை, அவ்வாறு தோன்றும் ஆனால் அது உண்மை அல்ல. மொழி ஒரு களத்தையே அளிக்கிறது. அதில் எவையெல்லாம் வரையறை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை எல்லாம் மீறும் முயற்சியையே படைப்பூக்கம் என்று சொல்கிறோம். அளிக்கப்பட்டுள்ள சாத்தியங்களைக் கொண்டு புதிய ஒன்றை அடைவது. அது ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏறத்தாழ முப்பது நூற்றாண்டுகளாக  பெரும்பாலும் நிலையாக உள்ள ஒரு சட்டகத்திற்குள் ஒவ்வொரு கணமும் புதியன நிகழ்வது அவ்வாறுதான்.

மொழியின் காலவெளிப் பிணைப்பு சார்புநிலை கொண்டதா? அதுவும் ஒரு தோற்றம்தான். முதல்கணத்தில் மொழி அப்படி மாயம்காட்டுகிறது. ஆனால் மொழியில் ஒரு மாறிலி உள்ளது. அதுதான் இலக்கியத்தின் இயக்குவிசையாக உள்ளது. அதை மொழியினூடாக அறியப்படும் மொழிகடந்த ஒன்று என்று வேண்டுமென்றால் சொல்லலாம்

ஒரு மொழி அழியும்போதும் இறுக்கத்தோடு செயல்படும்போதும் அதற்கே உரிய தனித்தன்மையான உட்பொறிகளும் உலகங்களும் அழிகிறதல்லவா? மொழி தன்னை ஒருவகையில் கட்டமைத்துக்கொண்ட ஒரு வெளிப்பாடு. அவ்வெளிப்பாட்டுக்கு ஆதாரமாகும் ஒன்று  ‘அங்கே’ இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது வேறெவ்வகையிலாவது வெளிப்படும். மொழியால் அது கட்டமைக்கப்படவில்லை. ஆகவே மொழி மறைந்தாலோ மாறினாலோ அது மாறிவிடுவதில்லை

இவை என் அறிதல்கள். பொதுவாக நான் இன்று ஊகங்களை முன்வைப்பதில்லை, அறிதல்களையே முன்வைக்கிறேன். ஆகவே எனக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லாமலாகிக்கொண்டே இருக்கிறது. இவை உங்களுக்கு விவாதித்துக்கொள்ல உதவினால் நன்று.

*

இலக்கியத்தையோ மொழியையோ தன் களமாகக் கொள்ளாதவர்களுக்கு இந்த வரையறை பொருந்தாது. அவர்களின் களம் வேறு. உதாரணமாக, சேவையை தன் களமாகக் கொண்டவர் மானுடம் என்னும் பேரமைப்பில் தன்னைக் கண்டுகொள்ளக்கூடும். இயற்கையில் உள்ள ஒன்றை ஒரு அறிவியல்சூத்திரமாக கண்டடைபவர் அங்கே தன்னை அறியக்கூடும். அந்த வழிகள் முடிவிலாதவை. அவரவருக்கு ஏற்றவை.

இந்த ஊற்று என் வழியாக வந்தாலும் என்னுடையது அல்ல.ஆகவே  எதை எழுதவேண்டும் எதை எழுதக்கூடாது என நான் ’தர்க்கபூர்வமாக’ தீர்மானிக்கக்கூடாது. எழுதியபின் அதில் நிலைகொள்ளக்கூடாது. கண்டடைந்தபின் கடந்துசெல்லவேண்டும். இதுவே இலக்கியம் பற்றிய என் புரிதல். இப்படிச் சொல்வேன், நான் பாய்மரக்கப்பல். புறக்காற்றுகளில் என் விசை உள்ளது. என் சுக்கான் தன்னியல்பாகத் திரும்பவேண்டும். ஆகவே அகத்தை கவனிக்கிறேன். அனைத்து விடைகளுக்காகவும்

ஏனென்றால் மொழி என்னும் கட்டுமானம் – அல்லது வளர்நிகழ்வு- மிகமிகப் பிரம்மாண்டமானது. அதை என்னால் என் நுண்ணுணர்வைக்கொண்டு உணரமுடியாது, அதிலேயே நான் இருந்தாலும்கூட. கடலில் இருக்கும் மீன் கடலை அறியமுடியாது. ஆனால் தன்னுள் கடலை அது அறியமுடியும். கடலின் அனைத்து ஆணைகளையும் கேட்கமுடியும். மொழி மானுடர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அதன் அடித்தளம் மானுடமூளையின் நரம்பமைப்பு. அது பரிணாமத்தால் உருவாகி வந்தது. ஆகவே அது இயற்கையால் திரட்டப்பட்ட ஒன்று. மொழி அந்நரம்பபைப்பின் மேல் உருவாக்கப்பட்ட மேலும் பிரம்மாண்டமான அமைப்பு. அதற்குள் உருவாக்கப்பட்ட அமைப்பு அறிவு. அதற்குள் உருவாக்கப்பட்ட அமைப்பு இலக்கியம். நான் எந்த அளவுக்கு அதற்குள் இருக்கிறேனோ அந்த அளவுக்கு அதை உணரமுடியும். தன்னிலையை எந்த அளவுக்கு அதில் கரைத்தழிக்கிறேனோ அந்த அளவுக்கு நான் முழுமையடைய முடியும்

அது எனக்கு நிகழ்ந்துள்ளதா? ஆம், உறுதியாக தெளிவாக நிகழ்ந்துள்ளது. எனக்குத்தெரியும் அந்த முழுமையை. அதிலிருந்து நான் எனக்கானவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். ஆகவே எனக்கு எந்தச் சோர்வுமில்லை. எந்தக் கசப்பும் இல்லை. எந்த வெறுமையும் இல்லை. துளிகூட எதிர்மறைக்கூறு இல்லை.  ‘நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?’  என்று நரேந்திரராக இருந்த விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்டார். “ஆம். கண்டதுண்டு, உன்னை இப்படி காண்பதுபோல’ என அவர் மறுமொழி சொன்னார். நான் கடவுளைக் காண்பதாக இருந்தால் இலக்கியத்தில் ,அறிவில், மொழியில் தான் இயலும் என்று இருபதாண்டுகளுக்கு முன் நித்யா சொன்னார். இன்று என்னிடம் நீங்கள்  ‘கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டால் என் பதில் என்ன. “ ஆம், தெளிவாக, திட்டவட்டமாக, அறுதியாக” என்பதுதான்

ஜெ.

***

முந்தைய கட்டுரைவாஷிங்டனில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48