அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம். கடைசியாக மிச்சமிருந்த சில கோப்புகளில் வேகமாகக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். என்னெதிரே ரமணி நின்றிருந்தாள். கடைசிக் கோப்பிலும் கையெழுத்திட்டு ‘ராமன்பிள்ளைட்ட ஒருதடவை சரிபாத்துட்டு அனுப்பச்சொல்லு. இன்னைக்கே போனா நல்லது’ என்று பேனாவை வைத்தபோது இரட்டைக் கதவுக்கு அப்பால் அவன் தலையைக் கண்டேன். ‘என்ன விஷயம் குஞ்சன் நாயரே?’ என்றேன். அவன் ரமணியைக் கண்காட்டினான். நான் ரமணியிடம் போகலாம் என்று ஜாடைகாட்டி அவனை உள்ளே வரும்படி தலையசைத்தேன்
குஞ்சன்நாயர் ரமணி போவதைக் கவனித்துவிட்டு ரகசியமும் முக்கியத்துவமும் தொனிக்க சற்றே குனிந்து ‘ஸாருக்கு ஒரு காரியம் சொல்லணும். எப்பிடிச் சொல்லுகதுண்ணு தெரியேல்ல…நான் காலத்தே கேட்டதாக்கும். உச்சைக்கு சைக்கிளை எடுத்துக்கிட்டு கோட்டாறுக்குச் செண்ணு ஒருநடை பாத்துப்போட்டும் வந்தேன். சங்கதி உள்ளது, நான் ஆளைப்பாத்தேன். போதமில்லை. தீரே வய்யாத்த ஸ்திதியாக்கும்…’ என்றான்.
நான் ஊகித்துவிட்டிருந்தலும் அனிச்சையாக ‘யாரு?’ என்றேன். ‘ஸாறுக்க அம்மையாக்கும். கோட்டாறு ஷெட்டிலே பிச்சக்காரங்களுக்க ஒப்பரம் எடுத்து இட்டிருக்காவ. வெறும்தறையிலே ஒரு பாய்கூட இல்லாமலாக்கும் கிடப்பு. துணியும் கூதறயா கெடக்கு. நான் ஒரு அட்டெண்டர்கிட்ட சொல்லி ஒரு புல்பாயி வேங்கி கிடத்தச் சொல்லிட்டு வந்தேன்.. . கையிலே சக்கறம் இருந்தா அவன்கிட்ட குடுத்து ஒரு நல்ல துணி வேங்கி–’
நான் ‘எங்க?’ என்று எழுந்தேன். ‘ஸார்…கோட்டாறு வலிய ஆஸ்பத்திரியாக்கும். ஆஸ்பத்திரிண்ணு சொன்னா செரிக்கும் ஆஸ்பத்திரி இல்ல..இந்தால கழுதச்சந்த பக்கத்தில பழைய ஆஸ்பத்திரி உண்டுல்லா.. இடிஞ்ச ஷெட்டுகள் நாலஞ்சு… அதிலே மூணாமத்ததிலே வெளிவராந்தாவிலே அற்றத்து தூணுக்கு கீழேயாக்கும் கெடப்பு. நமக்க மச்சினன் ஒருத்தன் அங்க சாயக்கடை வச்சிட்டுண்டு. அவனாக்கும் சொன்னது…’ நான் பேனாவைச் சட்டையில் மாட்டி, கண்ணாடியை கூடில் போட்டு, சட்டைக்குள் வைத்துக் கிளம்பினேன்
குஞ்சன்நாயர் பின்னால் ஓடிவந்தான் ‘அல்ல, ஸாறு இப்பம் அங்க போனா…வேண்டாம் ஸார் .நல்லா இருக்காது. இங்க ஓரோருத்தன் இப்பமே வாயிநாறிப் பேசிட்டுக் கெடக்கான். என்னத்துக்கு அவனுகளுக்கு முன்ன நாம செண்ணு நிண்ணு குடுக்கது? இப்பம்வரை நான் ஆரிட்டயும் ஒரு அட்சரம் பேசல்ல பாத்துக்கிடுங்க. இவனுகளுக்க வாயும் நாக்கும் சீத்தயாக்கும்….நீங்க எடபடவேண்டாம். நான் பாத்துக்கிடுதேன். இருசெவி அறியாமல் எல்லாத்தையும் செய்யலாம். உள்ள காச எனக்க கையிலே தந்தா போரும். ஸாறு வீட்டுக்கு போங்க. ஒண்ணும் அறிஞ்சதா பாவிக்க வேண்டாம்…’ நான் கறாராக ‘நாயர் வீட்டுக்கு போங்க…நான் பாத்துக்கிடுறேன்’ என்றபின் வெளியே சென்றேன்
ஆபீஸ் வழியாக நான் நடந்து வெளியே செல்லும்போது என் முதுகில் கண்கள் திறந்தன. எப்போது நான் வெள்ளைச்சட்டை போட ஆரம்பித்தேனோ அப்போதே முளைத்த கண்கள் அவை. அங்கே இருந்த அத்தனைபேரும் முகத்தில் விரிந்த ஏளனச்சிரிப்புடன் திரும்பி என்னைப்பார்த்தபின் ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். உதடு அசைய ஒலியில்லாமல் பேசிக்கொண்டார்கள். என்பின்னாலேயே வந்த நாயர் கைகளை ஆட்டி உதட்டை சுழித்து ஏதோ சொல்ல ரமணி வாயைப்பொத்திக்கொண்டு குனிந்து சிரித்தாள்.
நான் காரைத் திறந்து உள்ளே அமர்ந்தேன். குஞ்சன்நாயர் கார் அருகே குனிந்து ‘நான் வேணுமானா சைக்கிளிலே பொறமே வாறேன் சார்’ என்றான். ‘வேண்டாம்’ என்று கிளப்பினேன். அவன் மறைந்து, அலுவலகம் பின்னால் சென்று, சாலையின் பரபரப்பில் இறங்குவது வரை எனக்குள் இருந்த இறுக்கத்தை சாலைக்கு வந்ததும் என் கைகள் ஸ்டீரிங்கில் மெல்ல தளர்வதில் இருந்து அறிந்துகொண்டேன். பெருமூச்சு விட்டு என்னை இலகுவாக்கினேன். ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் சட்டையில், காரில் எங்கும் சிகரெட் இருக்காது. நான் சிகரெட் அதிகம்பிடிக்கிறேன் என்று சுபா விதித்த கட்டுப்பாடு
காரை செட்டிகுளம் ஜங்ஷனில் நிறுத்தி இறங்காமலேயே ஒரு பாக்கெட் வில்ஸ்கோல்ட் வாங்கிக்கொண்டேன். சிகரெட் புகையை ஊதியபோது என்னுடைய பதற்றமும் புகையுடன் வெளியே செல்வதுபோல இருந்தது. செட்டிகுளம் ஜங்ஷனில் நின்ற போலீஸ்காரர் என்னைப் பார்த்ததும் விரைப்பாகி சல்யூட் அடித்தார். கார் பள்ளத்தில் இறங்கிக் கோட்டாறு சந்திப்பை அடைந்தது. பக்கவாட்டில் திரும்பி கோட்டாறு ஆஸ்பத்திரி. அதையும் தாண்டித்தான் கழுதைச்சந்தை என்று கேட்டிருக்கிறேன். அங்கே சென்றதில்லை.
ஆஸ்பத்திரி வாசலில் என் கார் நின்றபோது பரபரப்புடன் முன்னால் நின்ற சிப்பந்திகள் உள்ளே ஓடினார்கள். அங்கும் இங்கும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் ஒலிகள். அதட்டல்கள். சிலர் ஓடும் சத்தம். உள்ளிருந்து இரு டாக்டர்கள் என் காரை நோக்கி ஓடி வந்தார்கள். நான் இறங்கியதும் ‘குடீவினிங் சார்’ என்றார் நடுத்தர வயதானவர். இன்னொருவன் இளைஞன். அவன் மிக மெல்ல ’குடீவ்னிங் செர்’ என்றான். ‘நான் இங்க ஒரு பேஷண்டைப் பாக்க வந்திருக்கேன்’ என்றேன் ‘இங்கேயா சார்?’ என்றார் டாக்டர். ‘இங்க இருக்காது சார்…இங்க–’ . நான் ‘இங்கதான்’ என்றேன்.
’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும். பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார் டாக்டர். நான் ‘ம்’ என்றபின் ‘மூணாவது ஷெட் எங்க?’ என்றேன். ‘காட்டுறேன் சார்’ என்றபடி டாக்டர் கூடவே வந்தார் தயக்கமாக ‘எல்லாம் அத்துப்போன கேஸுங்க சார்… ட்ரீட்மெண்டெல்லாம் குடுக்கிறதில்லை. கொஞ்சம் தீனிகீனி குடுத்து ஜெனரல் ஆண்டிபயாட்டிக் குடுத்துப் பாப்போம். சிலசமயம் தேறும். மிச்சம் ஒருநாலஞ்சுநாளிலே போயிடும். ஃபண்ட்ல்லாம் ரொம்ப கம்மிசார். ஸ்டாஃபும் கெடையாது. இதுகளை தோட்டிங்க தவிர மத்த ஸ்டாஃப் தொட்டு எடுக்க மாட்டாங்க…’ என்றார்
நான் பேசாமல் நடந்தேன். ‘ இப்ப ஏகப்பட்ட கிரௌட் சார். மழைக்காலம் பாத்தீங்களா, அங்க இங்க ஈரத்திலே கெடந்து காய்ச்சலும் ஜன்னியும் வந்தெதெல்லாம் இங்க வந்திரும்… இதுகள்லாம் அனிமல்ஸ் மாதிரி. ஒண்ணு விளுந்தா இன்னொண்ணு கவனிக்காது. அப்டியே விட்டுட்டு போயிடும்.தோட்டிங்க தூக்கி இங்க கொண்டு போட்டிருவாங்க…’ அந்த வளாகம் முழுக்க பலவிதமான போஸ்களில் தெருநாய்கள் கிடந்தன. உண்ணி கடித்துக்கொண்டிருந்த ஒரு செவலை என்னை நோக்கி ர்ர் என்றது. கட்டிடங்களின் வராந்தாக்களிலும் நாய்கள் அலைந்தன.
அந்த கட்டிடத்தில் எங்கும் எந்த மரச்சாமான்களும் இல்லை. எப்போதோ எதற்காகவோ கட்டப்பட்ட ஓட்டுக்கொட்டகை. ஓடுகள் பொளிந்த இடைவெளிவழியாக உள்ளே தூண் தூணாக வெயில் இறங்கியிருந்தது. தரையில் போடப்பட்டிருந்த சிவப்புத் தரையோடுகள் தேய்ந்தும் இடிந்து பெயர்ந்தும் கரடுமுரடான குழிகளாக இருந்தன. அவற்றில் கருப்பட்டிசிப்பங்களுக்கான முரட்டு பனம்பாய்களிலும் உரச்சாக்குகளிலுமாக குப்பைகள் போல மனிதர்கள் கிடந்தார்கள். அவர்களின் நடுவே தெருநாய்கள் அலைந்தன
வற்றி ஒடுங்கிய கிழடுகள்தான் அதிகமும். சில பெண்களும்கூட இருந்தார்கள். சிதைந்த உடல்கள். நசுங்கிய உருகிய ஒட்டிய உலர்ந்த முகங்கள். பலர் நினைவில்லாமலோ தூங்கிக்கொண்டோ இருக்க, விழித்திருந்த சிலர் உரக்க கூச்சலிட்டுக்கொண்டும், முனகிக்கொண்டும், கைகால்களை ஆட்டிக்கொண்டும் இருந்தார்கள். வயிற்றை வாந்திக்காக உலுக்க வைக்கும் கடும் நாற்றம் அங்கே நிறைந்திருந்தது. அழுகும் மனிதச்சதையும், மட்கும் துணிகளும், மலமூத்திரங்களும் கலந்த நெடி. விம்ம்ம் என்று ஈக்கள் சுழன்று எழுந்து அடங்கின
நான் கர்ச்சீபால் முகத்தை மூடிக்கொண்டேன். ‘எல்லாம் முத்திப்பழுத்து மண்டை கழண்ட ஜீவன் சார்… படுத்த எடத்திலேயே எல்லாம் போயிடும்…ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றார் டாக்டர். அங்கே எங்கும் எந்த ஊழியர்களையும் காணவில்லை. நான் தேடுவதைப் பார்த்துவிட்டு ’தோட்டிங்க காலையிலே வந்து துப்புரவு பண்ணி மருந்தக் குடுத்துட்டு போறதோட சரி.சாயங்காலம் அவங்க வர்ரதில்லை. எல்லாம் போதைய போட்டிட்டு படுத்திருவாங்க’ டாக்டர் என்னிடம் ஒரு சுய விளக்கத்தை அளிக்க முயல்கிறார் என்று தெரிந்தது.
மூன்றாவது ஷெட்டின் கடைசித்தூணருகே என் அம்மா கிடப்பதைப் பார்த்துவிட்டேன். ஒரு பனம்பாயில் மல்லாந்து கிடந்தாள். பெரும்பாலும் நிர்வாணமாக. கரிய வயிறு பெரிதாக உப்பி எழுந்து ஒருபக்கமாக சரிந்திருந்தது. கைகால்கள் வீங்கித் தோல்சுருக்கங்கள் விரிந்து பளபளவென்றிருந்தன. முலைகள் அழுக்கு பைகள் போல இருபக்கமும் சரிந்து கிடந்தன. வாய் திறந்து கரிய ஒற்றைப்பல்லும் தேரட்டை போன்ற ஈறுகளும் தெரிந்தன. தலையில் முடி சிக்குப் பிடித்துச் சாணி போல ஒட்டியிருந்தது.
‘இவங்களுக்கு என்ன?’ என்றேன். ‘அது…ஆக்சுவலி என்னான்னு பாக்கலை சார். வந்து நாலஞ்சுநாளாச்சு. நினைவில்லை. வயசு அறுபது எழுபது இருக்கும்போல…’ என்றார். ‘நினைவிருக்கிறவங்களுக்குத்தான் மாத்திரை ஏதாவது குடுக்கிறது’ நான் அம்மாவையே பார்த்தேன். அம்மா ஆறடிக்குமேல் உயரம். சிறுவயதில் கரிய வட்டமுகத்தில் பெரிய வெண்பற்களுடன் பெரிய கைகால்களுடன் பனங்காய்கள் போல திடமான முலைகளுடன் இருப்பாள். உரத்த மணிக்குரல். அவளைத் தெருவில் கண்டால் சின்னப்பிள்ளைகள் அஞ்சி வீட்டுக்குள் ஓடிவிடும்.
ஒருமுறை அந்தியில் அம்மா பிடாரிக் கோயில் பின்பக்கம் ஓடை அருகே இருந்து என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆடையற்ற மேலுடலில் முலைகள் குலுங்க சிறிய ஊடுவழியில் வந்தபோது எதிரே தனியாக வந்த வைத்தியர் கிருஷ்ணன்குட்டி மாரார் அதிர்ந்து இரு கைகளையும் கூப்பியபடி ‘அம்மே! தேவீ’ என்று அப்படியே நடுங்கிக்கொண்டே நின்றதை பலமுறை பல கோணங்களில் தெளிவாக நினைவுகூர்ந்திருக்கிறேன். அம்மா அன்று எங்கோ எதையோ மதர்க்க தின்றிருந்ததனால் அவரை பொருட்படுத்தாமல் நிலம் அதிர காலடி எடுத்து வைத்து தாண்டிச்சென்றாள்.
’ஏதாவது கேஸா சார்?’ என்றார் டாக்டர். என் உதடுகள் சட்டென்று கல்லாக ஆகிவிட்டன. என் உயிர் அவற்றை எட்டவில்லை. சிலகணங்கள் முயற்சித்துவிட்டு உதடுகளை நாவால் ஈரப்படுத்தி தலையை அசைத்தேன். ‘வேணுமானா பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போய்டலாம் சார்… பஸ் ஸ்டாண்டிலே இருந்து பொறுக்கிட்டு வந்திருக்கானுக..’ அவர் அம்மாவின் வயிற்றை பார்த்துவிட்டு ‘நாலஞ்சுநாளா யூரின் போகலின்னு நெனைக்கறேன். இன்னர் ஆர்கன்ஸ் ஒண்ணொண்ணா போயிட்டிருக்கு… பெரிசா ஒண்ணும் பண்ணமுடியாட்டியும் யூரினை வெளியேத்தி அம்மோனியாவ கொஞ்சம் கொறைச்சா நெனைவு வர்ரதுக்கு சான்ஸ் இருக்கு…ஏதாவது தகவல் இருந்தா சொல்லவச்சுடலாம்’ என்றார்.
நான் ‘மிஸ்டர்-’ என்றேன். ‘மாணிக்கம் சார்’ என்றார். ‘மிஸ்டர் மாணிக்கம், இது-’ கத்தியால் என் நெஞ்சில்நானே ஓங்கிக் குத்தி இதயம்மீது இரும்புத்தகடை இறக்குவதுபோல சொன்னேன் ‘ இவங்க என் சொந்த அம்மா’ டாக்டர் புரியாமல் ‘சார்?’ என்றார். நான் ‘இவங்க என் அம்மா.. வீட்டைவிட்டுக் காணாமப் போய்ட்டாங்க…கொஞ்சம் மெண்டல் பிராப்ளம் உண்டு’ என்றேன். கொஞ்சநேரம் அவர் சொல்லிழந்து என்னையும் அம்மாவையும் மாறி மாறிப்பார்த்தார். பிறகு ‘ஐயம் ஸாரி சார்…ஆக்சுவல்லி’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
’பரவாயில்லை..இப்ப எனக்காக ஒரு காரியம் பண்ணுங்க. உடனே இவங்களோட டிரெஸ்ஸை மாத்தி அவசியமான டிரீட்மெண்ட் குடுத்து ரெடிபண்ணுங்க. நான் இவங்கள பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போறேன்…ஆம்புலன்ஸும் வரவழையுஙக..’ என்றேன் ‘ஷூர் சார்’ நான் என் பர்ஸை வெளியே எடுத்தேன். ‘சார் ப்ளீஸ்…நாங்க பாத்துக்கறோம்…இட் இஸ் எ ஆனர்…சாரி சார். எங்க நெலைய நீங்க புரிஞ்சுகிடணும்…நான் இந்த சிஸ்டத்திலே என்ன செய்ய முடியுமோ அதைச்செய்யறேன்.’ ‘ஓக்கே’ என்று நான் திரும்பி என் காருக்குச் சென்றேன்.
பத்து நிமிடத்தில் டாக்டர் என்னருகே ஓடிவந்தார். ‘க்ளீன் பண்ணிட்டிருக்காங்க சார். உடனே யூரின் வெளியேத்தி இஞ்செக்ஷன் போட்டிடலாம்…ஆனா ஹோப் ஒண்ணும் கெடையாது சார்’ ‘ஓக்கே ஓக்கே’ என்று சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன். காருக்கு வெளியே நின்றவர் இன்னும் குனிந்து தணிந்த குரலில் ‘சார்’ என்றார். ‘எஸ்’ என்றேன். ‘சார் நான் என்னால முடிஞ்சத செஞ்சுட்டுதான்சார் இருக்கேன். என் மேலே தப்பே கெடையாதுன்னு சொல்லலை. ஆனா ஒண்ணூமே செய்யமுடியாதுசார். முனிசிப்பல் குப்பைகெடங்குக்கு குப்பைய கொண்டுபோறதுமாதிரித்தான் இங்க இந்த பிச்சக்காரங்கள கொண்டுவர்ராங்க..’
‘ஓக்கே…போய் செய்யவேண்டியதை செய்ங்க’ என்றேன். என் குரலில் தேவையற்ற ஒரு கடுமை எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அது என் மேலேயே எனக்கிருந்த கசப்பினால் ஆக இருக்கலாம். டாக்டர் சட்டென்று உடைந்த குரலில் ‘சார் நான் எஸ்சி சார். கோட்டால வந்தவன். என்னைய மாதிரி ஆளுங்களுக்கு இங்க எடமே இல்லசார். அருவருப்பா ஏதோ பூச்சிய மாதிரி பாக்கறாங்க. நான் சர்வீஸிலே நொழைஞ்சு இப்ப பதினெட்டு வருஷம் ஆகுது… நான் சீனியர் சார். ஆனா இப்ப வரைக்கும் எனக்கு கௌரவமா உக்காந்து நோயாளிகள பாக்கறது மாதிரி ஒரு வேலை எங்கயுமே குடுத்தது கெடையாது. செர்வீஸ் முழுக்க போஸ்ட்மார்ட்டம் பண்ணத்தான் விட்டிருக்காங்க சார். இல்லேன்னா இது…இங்க மேல்சாதிகாரங்க யாருமே இல்ல. சின்னவன் இருககானே அவனும் எங்காளுதான்…எங்க ரெண்டுபேரையும் -’ என்று பேச முடியாமல் விசும்பிவிட்டார்.
இறங்கி அவரைத் தள்ளிவிட்டுக் காலால் வெறிகொண்ட மாதிரி உதைத்து உதைத்து உதைத்து கூழாக்கி மண்ணோடு கலக்க வேண்டும் என்ற வேகம் எழுந்து என் கைகால்கள் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்தன. சிகரெட் நுனி நடுங்கிச் சாம்பல் பாண்ட் தொடைமேல் விழுந்தது. அவர் கண்களை துடைத்தபடி ‘…பாழாப்போன பொழைப்புசார்… கிளினிக் வச்சா எங்க கிட்ட மேல்சாதிக்காரன் வர்ரதில்லை. எங்காளுங்களிலெயே காசிருக்கிறவன் வர்ரதில்லை. எனக்கு ஊரிலே தோட்டிடாக்டர்னு பேருசார். படிச்ச படிப்புக்கு வேற எந்த வேலைக்கு போனாலும் மானமா இருந்திருப்பேன். டாக்டரா ஆகணும்னு சொப்பனம் கண்டு ராப்பகலாப் படிச்சேன் சார். இப்ப இங்க தோட்டிகளோட தோட்டியா ஒக்கார வச்சிட்டாங்க…’
நான் பெருமூச்சு விட்டுக் கண்களை கையால் அழுத்திக்கொண்டேன். பின்பு ‘மாணிக்கம்’ என்றேன். என் குரல் அடைத்திருப்பது எனக்கு வினோதமாக ஒலித்தது. ‘மாணிக்கம்’ என்று மீண்டும் சொன்னேன். ‘வேற வேலைக்கு வந்தாலும் இதே கதிதான்.சிவில்சர்வீஸ் எழுதி என்னை மாதிரி ஆனா மட்டும் என்ன? நான் எங்க டிபார்ட்மெண்ட் தோட்டி–’ டாக்டரின் வாய் திறந்தபடி நின்றது. நான் பேச்சை அங்கேயே முடித்துவிட எண்ணிச் சிகரெட்டை வீசினேன். ஆனால் என்னை மீறிச் சொற்கள் புண்ணிலிருந்து சீழ் போல வெளியே வழிந்தன.
‘பாத்திங்களா, இந்த உடம்ப இதுக்குள்ள ஓடுற ரத்தம் முழுக்க பிச்சைச்சோத்தில ஊறினது. அத நானும் மறக்கப்போறதில்லை. எனக்கு பிச்சை போட்ட எவனும் மறக்கப்போறதில்லை.. மறக்கணுமானா மொத்த ரத்தத்தையும் வெட்டி வடியச்செஞ்சுட்டு வேற ரத்தம் ஏத்தணும்….சிங்கம் புலி ஓநாய் அப்டி ஏதாவது நல்ல ரத்தம்…அது-’ மேலே சொல்ல சொற்களில்லாமல் நின்று ‘– போங்க…போய் அம்மாவ ரெடி பண்ணுங்க…’ என்று உரக்க சொன்னேன். அந்த உரத்த குரல் எனக்கே கேட்டபோது தன்னுணர்வு கொண்டு கூசித் தலையை வருடிக்கொண்டேன்.
பிரமித்து போனவராக தளர்ந்த நடையுடன் டாக்டர் செல்வதைப் பார்த்துக்கொண்டு இன்னொரு சிகரெட் பற்றவைத்தேன். இந்த ஆளிடம் எதற்காக பிச்சை எடுத்ததைப்பற்றிச் சொன்னேன்? இவன் மனதில் என்னைப்பற்றிய சித்திரம் என்ன ஆகும்? கண்டிப்பாக அது இந்நேரம் சிதைந்து தரையில் கிடக்கும். அவனுக்கு அவனைப்பற்றி எந்த மதிப்பும் இல்லை. இப்போது என்னை அவனைப்போன்ற ஒருவனாக எண்ண ஆரம்பித்திருப்பான். ஆகவே என்னைப்பற்றியும் எந்த மதிப்பும் இருக்கப்போவதில்லை. சிகரெட் ஒரேயடியாக கசந்தது. என் வழக்கத்திற்கு மாறாக நான் தொடர்ந்து சிகரெட்டாக இழுத்துக்கொண்டிருக்கிறேன்.
சிவில் சர்வீஸுக்கான நேர்முகத்தில் எட்டுபேர் கொண்ட குழுமுன் நான் அமர்ந்திருந்தபோது நான் முதலில் எதிர்பார்த்த கேள்வியே என் சாதியைப்பற்றித்தான். என் வியர்த்த விரல்கள் மேஜையின் கண்ணாடியில் மெல்ல வழுக்க விட்டுக்கொண்டு என் இதயத்துடிப்பைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். அறைக்குள் குளிர்சாதனக்கருவியின் ர்ர்ர் ஒலி. காகிதங்கள் புரளும் ஒலி. ஒருவர் அசைந்தபோது சுழல் நாற்காலியின் கிரீச். அவர் மீண்டும் என் படிவங்களைப் பார்த்துவிட்டு ‘நீங்கள் என்ன சாதி?’ மீண்டும் குனிந்து ‘பட்டியல்பழங்குடிகளில்…நாயாடி…’ என்று வாசித்து நிமிர்ந்து ’வெல்?’ என்றார்.
கைக்குழந்தையாக இருந்த காலம் முதல் ஒருநாளும் ஒரு நிமிடமும் என்னுடைய சாதியை நான் மறக்க எவரும் அனுமதித்ததில்லை. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக திவான்பேஷ்கார் நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலை மனப்பாடம்செய்த காலகட்டத்தில்தான் என் சாதியைப்பற்றி அறிந்துகொண்டென். 1906 ல் நாகம் அய்யா அவரது மானுவலை எழுதியிருக்கிறார். அதற்கு முன்னர் வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஆண்டபகுதிகளைப்பற்றி மானுவல்கள் எழுதியிருக்கிறார்கள். மதுரை பற்றிய ஜெ.எச்.நெல்சனின் மானுவல் ஒரு கிளாசிக். அதைப்போன்று எழுதப்பட்டது நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் மானுவல். அதே கறாரான விரிவான தகவல்கள், அதே துல்லியநடை , அதே திமிர்.
திருவிதாங்கூரின் எல்லாச் சாதிகளைப்பற்றியும் நாகம் அய்யா விரிவாகவே எழுதியிருக்கிறார். சாதிகளின் தொடக்கம் பற்றிய தொன்மங்கள், குடியேறிய சாதிகள் என்றால் அதைப்பற்றிய தகவல்கள், சாதிகளின் ஆசாரங்கள் பழக்க வழக்கங்கள், அவர்களின்சமூகப்படிநிலை எல்லாவற்றையும் சொல்கிறார். சாதிகளின் பொதுவான தோற்ற அமைப்பை வர்ணிக்கிறார். எட்கார் தர்ஸ்டனின் அடியொற்றி சாதிகளின் முக அமைப்பை மூக்கின் நீளத்தைக்கொண்டு வரையறுக்க முடியுமா என்று பார்க்கிறார்.
நெல்சனைப்போலவே ஒவ்வொரு சாதிக்கும் அதற்குரிய தனிக்குணம் உண்டு என்ற எண்ணம் அவருக்கும் இருந்திருக்கிறது. கம்பீரமான கட்டுபாடற்ற நாயர், சோம்பேறிகளும் புத்திசாலிகளுமான வெள்ளாளர், கடும் உழைப்பாளிகளான திமிர் கொண்ட நாடார், குடியும் கலகமும் கொண்ட ஈழவர் என்று அவர் இன்றைய ஜனநாயகச் சங்கடங்கள் ஏதுமில்லாமல் சொல்லிக்கொண்டே செல்கிறார். ஒவ்வொரு சாதியைப்பற்றியும் அன்றைய ஆளும்தரப்பு, அல்லது பிராமணத்தரப்பு என்ன நினைத்தது என்பதற்கான ஆவணம் அது.
அதில் மிகக்குறைவாக விவரிக்கப்பட்ட சாதி என்னுடையது. ‘நாயாடிகள். அலைந்து திரியும் குறவர்களில் ஒரு பிரிவு. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால் இவர்கள் பகலில் நடமாடமுடியாது. இவர்களை நேரில் பார்த்துவிட்டால் உடனே சத்தம்போட்டு சூழ்ந்துகொண்டு கல்லால் அடித்து கொன்று அங்கேயே எரித்துவிடும் வழக்கம் இருந்தது. ஆகவே இவர்கள் பகல் முழுக்க காட்டுக்குள் புதர்களுக்குள் குழி பறித்து அதற்குள் தங்கள் குழந்தைகுட்டிகளுடன் பன்றிகள் போல ஒடுங்கிக்கொண்டு தூங்குவார்கள். இரவில் வெளியே கிளம்பி வேட்டையாடுவார்கள். இவர்கள் மூதேவியின் அம்சம் என்று நம்பபட்டமையால் இவர்களுக்கு தவிடு, மிஞ்சிய உணவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வெளியே பிச்சையாக தூக்கி வைக்கும் வழக்கம் உண்டு.
இவர்கள் கையில் அகப்பட்ட எதையும் தின்பார்கள். எலிகள், நாய்கள் ,பல்வேறு பூச்சிபுழுக்கள் , செத்த உயிரினங்கள் . எல்லாவகை கிழங்குகளயும் பச்சையாக உண்பார்கள். கமுகுப்பாளையால் பிறப்புறுப்புக்களை மறைத்திருப்பார்கள். இவர்கள் பொதுவாக நல்ல கரிய நிறமும் உயரமும் கொண்டவர்கள். நீளமான பெரிய பற்கள் உண்டு. இவர்களின் மொழி தமிழ்போன்று ஒலிப்பது. இவர்களுக்கு எந்தக் கைத்தொழிலும் தெரியாது. இவர்களிடம் அனேகமாக உடைமைகள் என ஏதும் இருப்பதில்லை. இவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் இல்லை என்பதனால் குடில்கள் கட்டிக்கொள்வதில்லை. திருவிதாங்கூரில் இவர்கள் சுமார் ஐம்பதாயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களால் அரசுக்கு எந்த வருமானமும் இல்லை’
நான் நாகம் அய்யா அவரது மானுவலில் என்ன சொல்கிறார் என்று ஒப்பிப்பது போல சொன்னேன். இன்னொருவர் என்னை கூர்ந்து பார்த்தபடி ’இப்போது உங்கள் சாதி எப்படி இருக்கிறது? முன்னேறிவிட்டதா?’ என்றார். ‘இல்லை, இன்றும் அனேகமாக எல்லாருமே பிச்சையெடுத்தும் பொறுக்கி உண்டும் தெருவில் திறந்த வெளிகளில்தான் வாழ்கிறார்கள்’ அவர் என்னை நோக்கி ‘நீங்கள் சிவில்சர்வீஸ் வரை வந்திருக்கிறீர்களே?’ என்றார். ‘எனக்கு ஒரு பெரியவரின் உதவி கிடைத்தது’ அவர்களில் ஒருவர் ‘அம்பேத்காரைப் போல?’ என்றார். நான் அவர் கண்களை உற்று நோக்கி ‘ஆமாம், அம்பேத்காரைப்போல’ என்றேன். சில கணங்கள் அமைதி.
மூன்றாமவர் என்னிடம் ‘இப்போது ஓர் ஊகக்கேள்வி. நீங்கள் அதிகாரியாக இருக்கும்வட்டத்தில் நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஒருபக்கம் நியாயம் இருக்கிறது, இன்னொருபக்கம் உங்கள் சாதியினர் இருக்கிறார்கள். என்ன முடிவெடுப்பீர்கள்?’ என்றார். மற்றவர்கள் அந்த கேள்வியால் மிகவும் தூண்டப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்தது. நாலைந்து நாற்காலிகள் முனகின. என் விரல்கள், காதுமடல்கள், கண்திரை எல்லாம் சூடான குருதி அழுத்திப்பாய்ந்து கொதித்தன. நான் சொல்ல வேண்டிய பதிலென்ன என்று எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் நான் அந்தக்கணத்தில் சுவாமி பிரஜானந்தரை நினைத்துக்கொண்டேன்.
திடமான குரலில் ‘சார், நியாயம் என்றால் என்ன?’ என்றேன். ’ வெறும் சட்டவிதிகளும் சம்பிரதாயங்களுமா நியாயத்தை தீர்மானிப்பது? நியாயம் என்றால் அதன் அடிப்படையில் ஒரு விழுமியம் இருந்தாகவேண்டும் அல்லவா? சமத்துவம்தான் விழுமியங்களிலேயே மகத்தானது, புனிதமானது. ஒருநாயாடியையும் இன்னொரு மானுட உயிரையும் இருபக்கங்களில் நிறுத்தினால் சமத்துவம் என்ற தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டவன் ஆகிவிடுகிறான். அவன் என்ன செய்திருந்தாலும் அது நியாயப்படுத்தப்பட்டு விடுகிறது’
உடல்கள் மெல்லத் தளர நாற்காலிகள் மீண்டும் முனகின. சிலர் கைகளை கோர்த்துக்கொண்டார்கள். கேள்விகேட்டவர் ‘மிஸ்டர் தர்மபாலன், கொலை? கொலை செய்திருந்தால்?’ என்றார். அந்த வரியை அங்கே என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை ‘சார், கொலையே ஆனாலும் நாயாடிதான் பாதிக்கப்பட்டவன்’ என்றேன்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. தாள்கள் மட்டும் கரகரவென புரண்டன. பின் பெருமூச்சுடன் முதலாமவர் சில கேள்விகளைக் கேட்டார். பொது அறிவுத்தகவல்கள்தான். பேட்டி முடிந்தது. என் விதி தீர்மானமாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மனதுக்குள் நிறைவுதான் கனத்தது. நேராகச்சென்று சிறுநீர் கழித்தபோது உடலுக்குள் கொந்தளித்த அமிலமே ஒழுகிச் செல்வதுபோல இருந்தது. கைகால்கள் எல்லாம் மெல்ல மெல்லக் குளிர்ந்தன. கண்ணாடியில் முகம் கழுவிக்கொண்டேன். தலைசீவியபடி என் முகத்தைப்பார்த்தபோது அதிலிருந்த பதற்றம் எனக்கே புன்னகையை வரவழைத்தது
நேராக காண்டீன் சென்று ஒரு காபி வாங்கிக்கொண்டு கண்ணாடிச்சன்னலருகே கண்ணாடிமேஜைக்கு அருகில் சென்று அமர்ந்து உறிஞ்சினேன். கீழே அதல பாதாளத்தில் கார்களின் மண்டைகள் கரப்பாம்பூச்சிகள் போலத் தெரிந்தன. மனிதர்கள் செங்குத்தாக நடந்து சென்றார்கள். பச்சைச் செண்டுகள் போல நாலைந்து மரங்கள் காற்றில் குலைந்தன. சாலையில் சென்ற ஏதோ காரின் ஒளி என் கண்களை மின்னி விலகியது. என் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவரை முதலில் நான் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின்பு தெரிந்தது, பேட்டி எடுத்தவர். அந்த நியாயம் பற்றிய கேள்வியைக் கேட்டவர்
‘ஐ யம் நவீன் சென்குப்தா’ என்றார். ‘ஹல்லோ சார்’ என்று கைநீட்டினேன். குலுக்கியபடி டீக்கோப்பையை சற்று உறிஞ்சினார். ‘பேட்டி மாலையிலும் இருக்கிறது. ஒரு சின்ன இடைவேளை’ என்றார். நான் அவரையே பார்த்தேன். ‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டீர்கள். ஒருவர் தவிர அத்தனைபேருமே உயர்மதிப்பெண் போட்டிருக்கிறார்கள்’ நான் அதை எதிர்பார்க்காததனால் அவரையே அர்த்தமில்லாமல் வெறித்தேன்.’.. இது இப்போதைக்கு அரசு ரகசியம். உங்கள் பதற்றத்தைக் கண்டதனால் சொன்னேன்’ என்றார்.
‘நன்றி சார்’ என்றேன். ‘பரவாயில்லை. நான் அந்தக் கேள்வியை சாதாரணமாகத்தான் கேட்டேன். அந்த வகையான கேள்வி எல்லாரிடமும் கேட்கப்படும். ஒரே வகையான பதில்கள்தான் எதிர்பார்க்கப்படும். நீங்கள் சொன்ன பதில் நிர்வாகக் கண்ணோட்டத்தில் மிகமிக தவறானது. ஆனால் ஆத்மார்த்தமாகச் சொன்னீர்கள். உணர்ச்சிகரமாக முன்வைத்தீர்கள்..’ அவர் மீண்டும் டீயை உறிஞ்சி ‘என்னைத்தவிர எவரும் நல்ல மதிப்பெண் போடமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒருவர் தவிர எல்லாருமே மிகச்சிறந்த மதிப்பெண் போட்டார்கள்..’சட்டென்று சிரித்து ‘நான் மதிப்பெண் போட்டதற்கான அதேகாரணம்தான் என்று நினைக்கிறேன்’ என்றார்
நான் என்ன என்பதுபோல பார்த்தேன். ‘என்னை மனிதாபிமானி என்றும் முற்போக்கு எண்ணங்கள் கொண்டவன் என்றும் மொத்தத்தில் நவீனமனிதன் என்றும் அவர்கள் நினைக்கவேண்டும் என்று எண்ணினேன். அதாவது எதற்காக மதச்சின்னங்கள் அணிவதில்லையோ ஏன் மாட்டிறைச்சி தின்று மது அருந்துகிறேனோ அதே காரணம். பங்காலி பிராமணர்களும் பஞ்சாபி பிராமணர்களும் இந்த மனநிலையில் இருந்து வெளிவருவது கடினம்’ மிஞ்சிய டீயை குடித்துவிட்டு ‘- ஆனால் யாதவுக்கு அந்த சிக்கலே இல்லை. அவர் சாதாரணமாக பிற்போக்கு சாதியவாதியாக இருக்கலாம்.’ என்றார்.
’ஓக்கே’ என்று அவர் எழுந்துகொண்டார். ‘நீங்கள் என்னை எந்த தனிப்பட்ட உதவிக்காகவும் தொடர்பு கொள்ளலாம். நானும் முடிந்தவரை முற்போக்காக இருக்க முயற்சி செய்வேன்’ சட்டென்று உரக்கச் சிரித்து ‘அதாவது நீங்கள் என் சொந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள முயலாதவரை’. நானும் சிரித்துவிட்டேன். இரட்டைத்தாடை கொண்ட கொழுத்தமுகமும் சிறிய கண்களும் கொண்ட மனிதர். கொஞ்சம் மங்கோலியக்களை கொண்ட முகம். என் முதுகில் தட்டியபடி ‘இளைஞனே, நீ நிறையச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏராளமான மனமுறிவுகளும் சோர்வும் வரும். இந்த வேலைக்கு வந்ததற்காக வருத்தப்படவே உனக்கு வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் வாழ்த்துக்கள்’ என்றார்.
போகும் வழியில் திரும்பி ‘உன்னைப் படிக்க வைத்தவர் யார்?’ என்றார். ‘சுவாமி பிரஜானந்தர். நாராயணகுருவின் சீடரான சுவாமி எர்னஸ்ட் கிளார்க்கின் சீடர்…’ என்றேன். ’ஏர்னஸ்ட் கிளார்க்கா? வெள்ளையரா?’ ‘ஆமாம் .பிரிட்டிஷ்காரர்.தியஸபிகல் சொசைட்டிக்கு வந்தவர் நாராயணகுருவின் சீடரானார். குரு இறந்தபிறகு திருவனந்தபுரத்தில் நாராயணமந்திர் என்று ஒரு ஆசிரமம் நடத்தினார். 1942 வாக்கில் கோயம்புத்தூருக்குச் சென்று அங்கே ஒரு குருகுலத்தை நிறுவினார். நாராயணகுருவின் வேதாந்தத்தை விவாதிப்பதற்காக லைஃப் என்று ஒரு பத்திரிகை நடத்தினார்..எல்லாம் நான் வாசித்தறிந்ததுதான்’ என்றேன் ‘ பிரஜானந்தர் ஏர்னஸ்ட் கிளார்க்குடன் திருவனந்தபுரம் குருகுலத்தில் இருந்தார். அவர் போனபின் குருகுலத்தை பிரஜானந்தர் கொஞ்சகாலம் நடத்தினார்’
’பிரஜானந்தர் இப்போது இருக்கிறாரா?’ என்றார் சென்குப்தா. ‘இல்லை. இறந்துவிட்டார்’ ‘ஓ’ என்றார். ‘அவரது உண்மையான பெயர் கேசவப் பணிக்கர். ஏர்னஸ்ட் கிளார்க் அவருக்கு காவி கொடுத்து பிரஜானந்தராக ஆக்கினார்’ ‘ஏர்னஸ்ட் கிளார்க் சாமியாரா?’. ‘ஆமாம். நாராயணகுருவின் ஒரே அன்னியநாட்டு சீடர் அவர்தான். ஆனால் நாராயணகுரு ஏர்னஸ்ட் கிளார்க்கின் பெயரை மாற்றவில்லை’ . ‘ஆச்சரியம்தான்’ என்றார் சென்குப்தா
‘நாராயணகுரு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று சென்குப்தா எழுந்தார். ‘ராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி இல்லையா?’. ‘ஆமாம்’. ‘வெல்…பட் -’ என்றபின் ‘ஓக்கே’ என்றார். ‘சொல்லுங்கள் சார்’. ‘இல்லை, உன்னைச் சோர்வடையச்செய்ய விரும்பவில்லை…’ ‘பரவாயில்லை’ ‘இல்லை நீ வேறேதாவது செய்திருக்கலாம். நல்ல கல்வியாளர் ஆகியிருக்கலாம். மருத்துவர் ஆகியிருக்கலாம். சமூக சேவைகூடச் செய்திருக்கலாம்…இது சரியான துறையா என்றே சந்தேகமாக இருக்கிறது. இது நீ நினைப்பது போல அல்ல…வெல்’ சட்டென்று கைகுலுக்கிவிட்டு நேராக நடந்து லிஃப்டை நோக்கிச் சென்றார்.
அவர் என்ன சொன்னார் என்பதை நான் அதன்பின் ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன். எங்கும் எப்போதும் நான் வெளியே நிறுத்தப்பட்டேன். ஆட்சிப்பணி பயிற்சி என்பது ’நான் கட்டளையிடப்பிறந்தவன்’ என்று ஒருவனை நம்பவைப்பதற்கான எளிமையான மனவசியமன்றி வேறல்ல. ஆனால் என்னிடம் மட்டும் அப்படிச் சொல்லப்படவில்லை. என்னை நோக்கிய எல்லா சொற்களும் நீ வேறு என்பதாகவே இருந்தன. எங்கள் கருணையால், எங்கள் நீதியுணர்ச்சியால் நீ இங்கே அமர அனுமதிக்கப்பட்டிருக்கிறாய். ஆகவே எங்களிடம் நன்றியுடன் இரு, எங்களுக்கு விசுவாசமானவனாக இரு.
தமிழ்நாடு வட்டாரத்திற்கு நான் நியமிக்கப்பட்டு முதல்முறையாக சென்னையில் பணிக்குச் சேர்ந்தபோது முதல்நாளிலேயே நான் யாரென உணரச்செய்யப்பட்டேன். முந்தையநாள் நான் என் மேலதிகாரியிடம் என்னை அறிக்கையிட்டுவிட்டு என் இடத்திலிருந்து பிரிந்துசெல்லும் அதிகாரியைச் சம்பிரதாயமாகச் சென்று சந்தித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் அதே அறையில் நான் நுழைந்தபோது அங்கே ஏற்கனவே இருந்த உயரமான சிம்மாசனம்போன்ற நாற்காலி அகற்றப்பட்டு எளிமையான மரநாற்காலி போடப்பட்டிருந்தது. பலர் அமர்ந்து நார்ப்பின்னல் கூடைபோல தொய்ந்த பழைய நாற்காலி. ஏதோ குமாஸ்தாவுடையது. நான் அதைப்பார்த்தபடி சிலநிமிடங்கள் நின்றேன். என் பின்னால் நின்ற தலைமை குமாஸ்தாவிடம் அந்த பழைய நாற்காலி எங்கே என்று கேட்பதற்காக எழுந்த நாக்கை என் முழுச்சக்தியாலும் அடக்கிக்கொண்டு அதில் அமர்ந்தேன்.
சிலநிமிடங்கள் கழித்து உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொன்ன ஒவ்வொருவரின் பார்வையிலும் நான் அதைத்தான் உணர்ந்துகொண்டேன், அந்த இல்லாமல் போன நாற்காலி. மிதமிஞ்சிய பணிவு, செயற்கையான சரளத்தன்மை, அக்கறையற்ற பாவனை அனைத்துக்கு அடியிலும் அதுதான் இருந்தது. நான் சொன்ன அத்தனைச் சொற்களிலும் அது இருந்தது. கறாரான ஆனால் மென்மையான அதிகாரப்பேச்சுக்கு நான் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. நான் என்ன செய்யவேண்டும்?
என் நாற்காலிக்காக நான் போராடலாம். ஆனால் அதை என்னுடைய அற்பத்தனத்தின் அடையாளமாகச் சித்தரித்துக்கொள்வார்கள். அதையே என் இயல்பாக ஆக்கி அழியாத முத்திரை ஒன்றை உருவாக்குவார்கள். மிஞ்சிய வாழ்நாளெல்லாம் நான் செல்லும் இடங்கள் முழுக்க அந்த முத்திரை கூடவே வரும். அதிகாரவராந்தாக்களில் உருவாகி நிலைபெறும் தொன்மக்கதைகளில் ஒன்றாக ஆகும். அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அது மேலும் இழிவுகளை என் மேல் சுமத்த நானே கொடுத்த அனுமதியாக ஆகும்.
சிலமணிநேரங்களுக்குப் பின் அதைப்பற்றிக் கேட்பதற்காக நான் தலைமைக்குமாஸ்தாவை உள்ளே அழைத்தேன். அவர் கண்களில் தெரிந்த திடத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது, அவர் எடுத்த முடிவல்ல அது. அவருக்குப் பின்னால் ஒரு அமைப்பே இருக்கிறது. அதனுடன் நான் மோதமுடியாது. நான் தன்னந்தனியானவன். மோதி இன்னும் சிறுமைப்பட்டால் என்னால் எழவே முடியாது. சாதாரணமாக ஏதோ கேட்டேன். அந்த சிறிய கண்களில் சிரிப்பு ஒன்று மின்னி மறைந்ததோ என எண்ணிக்கொண்டேன்.