எழுத்துரு ஓர் எதிர்வினை

மொழி மதம் எழுத்துரு- கடிதம்
தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்
எழுத்துரு விவாதம் ஏன்?
எழுத்துரு கடிதங்கள்
எழுத்துருக்கள்-எதிர்வினைகள்
மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன்
மும்மொழி கற்றல்
தமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி

அன்புள்ள ஆசிரியருக்கு,

தமிழ் எழுத்துரு தொடர்பாக நீங்கள் எழுதியுள்ள கருத்துக்களை  தொடர்ந்து வாசித்திருக்கிறேன் .அவைகளைப் பொறுத்தவரை சில மாற்றுக்கருத்துக்கள் எனக்கு இருக்கின்றன.தமிழ் எழுத்துரு மாற்றத்தைப் பொறுத்தவரை நீங்கள் முன்வைப்பது வரலாற்று யூகத்தை.அதன் மூலம் மானிட சமூகத்தின் வரலாற்றைக் கவனிக்கும் போது நேற்றைய வரலாற்று தரவுகளையும் இன்றைய நிலையையும் வைத்து நாளை என்ன நடக்கும் என்று தாராளமாக சொல்லிவிடமுடியும்.அந்த வகையில் நீங்கள் சொல்லும் வரலாற்று யூகம் நடப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்றே யாரும் அதைப் பெரிதாக மறுக்கவில்லை.இந்த வரலாற்று யூகத்தை  அது இந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படாமல் ஐரோப்பா வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்னும் காரணத்தால் நான் மறுக்கிறேன்.

அதே  சமயம் நீங்கள் இதைச் சொல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை காலத்தால் மாற்றங்கள் பல ஏற்பட்டுவிட்டன.சூழலுக்கு ஏற்ப நீங்களும் உங்களுடைய இந்தக் கருத்தை  மேம்படுத்திக் கொண்டே வந்திருக்கிறீர்கள்.அந்த மாற்றங்களால் உங்களுடைய கருத்துக்குமாற்றுக் கருத்து வைக்க வேண்டும் எனில் முதல் கருத்திலிருந்து மாற்றுக்கருத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.அவைகளை விளக்கும் வண்ணமாகவும்,எந்த அறிவுசார் விவாதத்திலும் மறுபக்கத்தின் வாதம் எழவேண்டும் என்பதால் அதைத் தொடங்கும் வண்ணமும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நீங்கள் பேச ஆரம்பித்த எழுத்துரு மாற்றத்திற்கான உண்மைக்காரணம் ஆங்கில எழுத்துரு அறிவியல் மொழியாக,அறிவியக்க மொழியாக இருக்கும் காரணத்தால் உலகில் பல்வேறு மொழிகளை, எழுத்துருக்களை அழித்துக் கொண்டு வளர்ந்து வருகின்றது.அதற்கு பல்வேறு சமூக, பொருளியல் காரணிகளும் காரணமாக இருக்கின்றன.ஆகவே பெரும் அரக்கனாக அச்சுறுத்தும் அதனிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள எழுத்துருவைப் பலி கொடுத்து மொழியைக் காப்பாற்றிக் கொள்வோம்.அனைத்தையும் இழப்பதற்கு பதிலாக குறைந்த அளவு சேதாரத்துடன் தப்பித்து விடலாம் என்ற நல்ல நோக்கில் அதை முன் வைத்தீர்கள்.

இந்த வரலாற்று யூகம் எப்படி உருவானது என்று பார்த்தோமானால் நீங்கள் பெருமதிப்புக் கொண்டிருக்கும் அறிவியக்கவாதிகளில் உள்ள ஐரோப்பியர்களில் யாரோ ஒருவருடைய கருத்தாகத்தான் இது இருக்கும்.அவர் சொல்லியது ஐரோப்பா வரலாற்றைப் பொறுத்தவரை முழு உண்மை.அதில் மாற்றுக் கருத்துக்கு  இடமேயில்லை.
இன்று ஆங்கில எழுத்துரு என்று நாம் சொன்னாலும் அது ரோம எழுத்துருதான்.ரோம சாம்ராஜ்யத்தில் ஆரம்பித்த எழுத்துரு  முதலில் அரச எழுத்துருவாக இருந்த காரணத்தால் ஐரோப்பா முழுவதும் பரவ ஆரம்பித்தது.அப்போது லத்தீனைத் தன்னுடைய மொழியாகக் கொண்டிருந்து. தன்னால் இயன்ற பாதிப்பை அப்போதே செலுத்த ஆரம்பித்தது.பின் ரோம் கிறிஸ்தவத்தின் தலைநகராக ஆனபோது   மதரீதியான அறிவாதிக்கம்  அரசியல்  ஆதிக்கத்துடன் இணைந்து பேரதிகாரமாக உருக்கொண்டது.இதில் எழுத்துரு இல்லாத மொழிகள் தங்களுக்கான எழுத்துருவாக ரோமனை ஏற்றுக் கொண்டன.ரோமனில் இல்லாத அவர்கள் மொழியின் சிறப்பு ஒலிக்குறிப்புக்கு ஏற்கனவே அவர்கள் கொண்டிருக்கும் எழுத்துரு அல்லது ரோமன் எழுத்துக்களுக்கு சிறப்பு குறியீடுகளை  அமைத்துக் கொண்டனர்.

இந்த இரண்டு அதிகாரத்திற்கும் எதிராக எழுந்த அறிவொளிக்காலமும் அதைத் தொடர்ந்த அறிவியல் காலமும் லத்தீனை ஒழித்து பிராந்திய மொழிகளுக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தன.அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவும் பல்வேறு நாடுகளை வென்று தங்களுடைய ஆளும் பரப்பை விரிவு படுத்தியதன் காரணமாக ஆங்கிலம் லத்தீனுக்கு மாற்றாக அதைவிடப் பெரிய மொழியாக மாறி இருக்கிறது.ஆங்கிலத்தின் எழுத்துரு  ரோமன் எழுத்துருவாக இருப்பதால் அது இன்னும் பேருருக் கொண்டு தனக்கு நிகரில்லா வலிமையுடன் ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இன்று இருக்கிறது.

இந்த வரலாற்றைப் படித்த யாரும் இத்தகைய எழுத்துருவுடன் மோத முடியாது.ஏற்கனவே மற்றவர்கள் செய்வதைப் போல எழுத்துருவைப் பலி கொடுத்து மொழியைக் காப்பாற்றிக் கொள்வோம் என்ற வரலாற்று யூகத்திற்குத்தான் வருவார்கள்.இந்த ஐரோப்பா வரலாற்று யூகத்தை கீழை நாடுகளுக்கு போட்டுப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.

ஆனால்  ஏற்கனவே நடந்தது திரும்ப நடக்கத்தான் வாய்ப்புள்ளது என்ற வரலாற்று யூகத்தை நீங்கள் இந்தியாவில் வைப்பதானால் இங்கு அதைப் போல ஏதேனும் நடந்திருக்கிறதா என்றல்லவா முதலில் பார்க்கவேண்டும்.அப்படிப் பார்த்தால் இலத்தீனைப் போல இங்கும் ஆட்சியதிகாரத்துடன் தொடர்புடைய , மதரீதியான அதிகார மொழியாக சமஸ்கிருதம் இருந்தது.

தமிழகத்தில்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான சோழர் காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தாலும் சமஸ்கிருதம் முக்கியமான மொழியாக இங்கு இருந்ததை உணர முடியும்.சமஸ்கிருதத்திற்கு என்று தனிப்பட்ட எழுத்து வடிவமான தேவநாகரி இந்தியாவில் இருந்த போதிலும் தமிழகத்தைப் பொறுத்தவரை அது  அறிமுகமாகவில்லை என்பதால் தென்னகம் கிரந்த எழுத்தில்தான் எழுதியது.கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துருவை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டது.அதனுடைய வடிவம் தமிழ் எழுத்துருவைப் போல் இருந்தாலும்,தன் தனித்தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று   தமிழ் எழுத்துரு கிரந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை..

எடுத்துக்காட்டாக இன்றுவரையிலும் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படாத சித்தர் பாடல்களுக்கும் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமந்திரத்திற்கும் உள்ளடக்கத்தில் பெருமளவு வித்தியாசம் இல்லை.இரண்டிலும் இறைவனின் குணம் தொடங்கி சடங்குகள் வரை சற்றேறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.இலக்கண விதிகளை புறக்கணித்தும்  கிரந்தங்களைப் பயன்படுத்தியும் இயற்றப்பட்ட பாடல்கள் என்ற காரணங்கள்தான் சித்தர் பாடல்கள் இலக்கியம் என்ற தகுதிக்கு உட்படுத்தப்படாமல் இன்றும் புறக்கணிக்கப்படும் சூழலுக்குக் காரணம்.தன்னைச் சார்ந்ததாக இருந்தாலும் தன் தனித்தன்மைக்கு எதிரானதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இங்கு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

இதையே இநதியாவை முழுமைக்குமாக பார்க்கும்போது ஐரோப்பாவில் லத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலம் மாறியதுபோல் இங்கும் அதே மாதிரியான மாற்றம் நடந்திருக்கிறது.சமஸ்கிருதத்தின் இடத்தில் இந்தி காலத்தின் மாற்றத்தால் அதிகார மொழியாக வந்திருக்கிறது.மொழி  மாறியதே  தவிர‌ எழுத்துரு மாறவில்லை.இன்று அதிகப்படியான இந்திய மக்கள் எழுதும் எழுத்து வடிவாக இருப்பது தேவநாகரிதான் ..அது அரசு எழுத்துருவாக, மதஅதிகார மொழியான சமஸ்கிருதத்தின் எழுத்துருவாக இருந்து இன்று இந்திக்கான எழுத்துருவாக மாறியபோதிலும் தங்களுக்கென்று எழுத்து வடிவம் இல்லாத, காலத்தால் எழுத்துரு அமையாத  மொழிகள் எழுதும் எழுத்துருவாக வளர்ந்திருக்கிறதே தவிர அவரவர் மொழிக்கு தனிப்பட்ட எழுத்துக்களை உருவாக்கிய எந்த மொழி எழுத்தையும்  தேவநாகரி அழிக்கவில்லை என்பதைக் கவனித்துப் பார்க்கும் போது இந்தியா எப்போதும் தனிப்பட்ட குழுக்களின் தனித்தன்மைகளைக் காப்பாற்றும் மனநிலையைக் கொண்ட நாடாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய மனநிலை கொண்ட மக்களிடம் கூட தன் வல்லமையால் ஆங்கிலம் வென்றுவிடும் என்று சிலர் சொல்லக்கூடும்.என்னைப் பொறுத்தவரை அப்படி நடப்பதற்கான சாத்தியம் இல்லை என்றுதான் சொல்வேன்.வடமொழியைப் பயன்படுத்தி எழுதிய மணிப்பிரவாள நடைக்கு இங்கு என்ன நடந்ததோ அதுதான் நாளை ஆங்கிலத்துக்கும் நடக்கும்.காலத்தின் தேவைக்காக கற்றுக் கொள்ளப்படும் வேற்றுமொழிகளோ எழுத்துருக்களோ அவற்றின் தேவை முடிந்தவுடன் கைவிடப்படும்.
இதற்கடுத்து இதற்கு  ஆதரவாகவும் எதிராகவும் இருக்கும் தரப்புகள் என்ன என்பதைப் பற்றியும் அவைகள் உருவான வரலாற்றுடன் அத்தரப்பில் மக்கள் தொகையில் யார் அதிகமாக இருக்கிறார்கள் என்றும் பார்க்கலாம்.எழுத்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால் பாதிப்பு அதிகப்படியான நபர்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதானே பொது நிபந்தனையாக இருக்க முடியும்.

1.பெரியவாதிகளின் தரப்பு

முதலில் தமிழ் எழுத்துரு மாற்றம் தொடர்பாக பேசியது பெரியார்.அவரைப் பொருத்தவரை பயன்சார் மதிப்புகளைத் தவிர வேறெதையும் கருத்தில்  கொள்ளாதவர்.இந்த மாற்றத்தை தமிழகத்தில் முன்வைத்தவர்.
இன்று இந்தத் தரப்புக்கு தமிழகத்தில் ஒரு நபர்கூட இருப்பதாக தெரியவில்லை.

2.கணிப்பொறித்தரப்பு

கணிப்பொறி யுகம் ஆரம்பித்தவுடன் அதில் புழங்கிய அதிகப்படியான நபர்கள் மற்றும் அறிவியலாளர்களின் எழுத்துருவாக இருந்த ஆங்கில எழுத்துரு கணிப்பொறியின் அடிப்படை மொழியாக அமைந்துவிட்டது.குறைவாக பேசும் மக்கள் தொகை கொண்ட தங்களுடைய எழுத்துருவை கணிப்பொறியின் உள்ளீட்டு மொழியாக மாற்ற செலவு செய்ய முடியாத  நிலை ஏற்பட்டது.அத்தகைய எழுத்துரு கொண்ட மொழிகள் ஆங்கில உள்ளீட்டு மொழியின் மூலம் தங்களுடைய எழுத்துருக்களை வெளிப்படுத்தும் குறைவான செலவு கொண்ட மென்பொருட்களை உருவாக்கின.கணிப்பொறியின் உள்ளீட்டு மொழியாக எந்த மொழியை கொண்டு வருவதாக இருப்பினும் பெரும்செலவு கொண்ட நடைமுறை.அதற்கு குறைவாக செலவு செய்யும் திறனுடையவர்கள் இந்த மாற்று நடைமுறையைக் கைக்கொண்டனர்.

இந்த முறையிலும் ஏற்கனவே  முறையான வழியில் தமிழ் தட்டச்சு படித்தவர்களுக்கு எந்த விதமான பின்னடைவும் இல்லை.முறையாக தமிழ் தட்டச்சு பழகாமல் அதற்கு நேரத்தை ஒதுக்க முடியாத அதிகமான நபர்களுக்கு ஆங்கில எழுத்துருவை வைத்து தமிழ் எழுத்துருவை எழுதும் மென்பொருட்கள் அன்றிலிருந்து இன்றுவரை வரமாகவே அமைந்து விட்டன.இந்த தரப்பைச் சேர்ந்தவர் நீங்கள்.
ஒட்டுமொத்த வயது வந்த தமிழறிந்தவர்களில் இந்தத் தரப்புக்கு பத்து சதவீதம் வரை நபர்கள் இருக்கலாம்.

3.குறுஞ்செய்தி தரப்பு

இரண்டாம் தலைமுறை தொலைதொடர்பு சாதனங்கள் வந்தவுடன் அவைகளில் குறுஞ்செய்தி அனுப்ப கணிப்பொறியைப்போலவே ஆங்கிலம்தான் வழியாக அமைந்தது.அதனால் ஆங்கிலத்தில் நேரடியாக செய்தியை தெரிவிக்க, புரிந்து கொள்ள  இயலாத நபர்கள் இடையே தமிழ் மொழி ஆங்கில எழுத்துரு மூலமாக  செய்தி பரிமாறப் பயன்படுத்திய தரப்பு.இன்று இதைப் பயன்படுத்துபவர்களும்   20 சதவீதம் வரை  இருக்கலாம்.

4.ஆங்கில வழிக் கல்வித் தரப்பு

தமிழகத்தில்  பல்வேறு பொருளாதார, அரசியல் காரணங்களால் ஆங்கில வழிக்கல்வி இன்று குறிப்பிடத்தக்க எண்ணிக்கை கொண்ட குழந்தைகள் படிக்கும் கல்வி முறையாக மாறிக்கொண்டிருக்கிறது.குறைந்த அளவு தமிழ் மொழி அறிவு கொண்ட ஆங்கிலத்தில் நன்றாக மொழியறிவைக் கொண்ட தலைமுறை உருவாகி வருகிறது.இவர்களுக்கு தமிழைவிட ஆங்கில எழுத்துருவை வாசிப்பது சுலபம்.
இன்றைய மாணவர்களாக இருக்கும் இவர்களின் சதவீதம் 20 வரை தமிழ் நாட்டில் இருக்கலாம்.இதில் தமிழை ஒரு மொழியாக படிக்காத மாணவர்கள் ஒரு சதவீதம் இருக்கும்.

இந்த நான்கு தரப்புக்கும் எதிர்த்தரப்புகளும் இருக்கின்றன. அவை

1.தமிழ் அரசியல் அமைப்புக்கள்

எவை என்று சொல்லவேண்டிய தேவையே இல்லை.தமிழகத்தில் இருக்கும் அனைத்து தமிழ்ப் பெருமை பேசும் அரசியல் அமைப்புகளும்.மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இந்தத் தரப்புக்குத்தான் இருக்கும்.

2.தமிழ் தட்டச்சுத் தரப்பு

தட்டச்சு ஆரம்பித்த காலத்தில் தேவையின் பொருட்டு தமிழ் எழுத்துரு தட்டச்சு உருவானது.அதனால் உருவான தரப்பு இது.கணிப்பொறி யுகம் வந்தாலும் மாற்றமில்லாமல் தொடர்ந்து செல்கிறது.இதற்கு வயது வந்த தமிழறிந்த நபர்களில் 1சதவீதம் கூட இருக்க மாட்டார்கள்.

3.கைபேசித் தமிழ் தரப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியால் இரண்டாம் தலைமுறை கைபேசிகளிலிலேயே தமிழ் எழுத்துரு வந்துவிட்டது.மிகுந்த சிரமத்தின் மூலமே முதலில் செய்தி  அனுப்ப முடிந்தது.இப்போது ஆன்டராய்டு இயங்குதளத்தில் இயங்கும் கைபேசிகளில் மிக எளிதாக எழுத முடிகிறது.இந்தத் தரப்பைச் சேர்ந்தவன் நான்.
என் தரப்புக்கு 10 சதவீதம் வரை நபர்கள் இருக்கலாம்.

4.தமிழ் வழிக்கல்வித் தரப்பு

இன்றும் பெற்றோரின் சமூக பொருளாதார சூழலின் காரணமாக தமிழ் எழுத்துருவைப் முதன்மையாகவும் ஆங்கிலத்தை மொழிப்பாடமாகவும் படிப்பவர்கள்.இன்றும் தமிழகத்தின் 80 சதவீத மாணவர்கள் இவர்கள்தான்.

தமிழ் எழுத்துருவை மாற்றக்கூடாது என்ற தரப்பைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஆங்கில எழுத்துருவுக்கு ஆதரவாக நிற்கக்கூடிய அனைத்து தரப்புகளுக்கான பதில்கள்களைச் சொல்லி என் எதிர்தரபபில் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கிறேன்.அந்தப் பதில்கள்

1.பெரியாரியவாதிகளின் தரப்புக்கான பதில்

இன்று இந்தத் தரப்பைப் பேச ஆளில்லை என்றாலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.எப்போதும் தமிழ்நாடு சரியான மாற்றங்களுக்கு எதிரியாக நின்றதில்லை.பெரியார் தமிழ் எழுத்துக்களில் மூன்று  மாற்றத்தை முன்வைத்தார்.அதில் எழுத்துச் சீர்திருத்தம் அன்றே ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதில் பதிப்பகங்களுக்கு தொல்லையாக இருந்த பழைய துணையெழுத்துகளின் மாற்றத்தை அனைவரும ஏற்றுக் கொண்டனர்.மீதமிருந்த ஆங்கிலத்தைப் போல தமிழை 57 எழுத்தாக்கும் கருத்தும்,ஆங்கில எழுத்துருவும் கருத்திலேயே கொள்ளப்படவில்லை.அதற்கு மிக முக்கியமான காரணமாக மாற்றத்திற்கு மறுக்கும் பிற்போக்குத்தனம் என்று அதைப் புரிந்து கொள்ள முடியாத நபர்கள் கூறுவார்கள்.பதிப்பகங்களின் பிரச்சினைகளை புரிந்து துணையெழுத்து மாற்றங்களை ஏற்ற மக்களுக்கு இதை ஏன் ஏற்க மனமில்லை என்று பார்க்கும் போது தமிழைச் சீர்திருத்தும் அளவுக்கு பெரியார் தமிழறிஞர் அல்ல.
ஆங்கிலத்தைப் போல  தமிழிலும் எழுத்துக்களைக் குறைத்து 57ஆக்க வேண்டும் என்று சொன்னால் ஆங்கிலததுக்கு முன்பே இங்கு குறைவான 47 எழுத்துக்களைக் தேவநாகரி வடிவில் கொண்ட சமஸ்கிருதம் இங்கு தமிழைப் போலவே செவ்வியல் மொழியாக இருந்த சூழலிலும் தமிழ் தன் எழுத்துக்களின் அளவைக் குறைப்பதற்கான எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை.பிற மொழிகளைப் போல்  மாறவேண்டும் என்பது தன்னைக் கீழாக எண்ணும் மொழிகள் செய்ய வேண்டியது.தனக்கு அத்தகைய தேவைகள் இல்லையென்று கருதியதால்தான் கற்றறிந்த என் முன்னோர் செய்யவில்லை.ஏதோ குறைவான எழுத்துரு கொண்ட மொழியை தமிழ் இதற்கு முன்பு சந்திக்கவே இல்லை.அதனால் புதுமையாக குறைவான எழுத்து கொண்ட மொழி இப்போதுதான் வந்திருக்கிறது.ஆகவே அதைப்போல நீங்களும் எழுத்தைக் குறையுங்கள்என்று சொல்லுவது முட்டாள்தனம்.

இன்றைய தமிழ் எழுத்துரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்போதைய வடிவத்தின் தொடக்கத்தை அடைந்து விட்டது.பெரியார் பேச ஆரம்பித்த காலத்திற்கு முன்பு எழுதப்பட்ட வரலாற்றிலேயே கிட்டத்தட்ட1000ஆண்டுகளாக தமிழறிஞர்கள் என்று சொல்லப்படுபவர்கள் சமஸ்கிருத்ததிலும் புலமை பெற்றே இங்கே இருந்தனர்.ஆயிரம் ஆண்டுகளாக மாற்றக்கூடாது என்று அவர்கள் கட்டிக் காப்பற்றிய எழுத்துருவை ஏன் மாற்றவேண்டும்.மரபைப் பற்றி துளியும் கவலைப்படாத , எந்த கருத்திலும் உயர்வான சிந்தனையை முன்வைக்காத, வரலாற்று உணர்வு சிறிதும் அற்ற நபர் சொல்லுவதை ஏன் கேட்கவேண்டும்.பதிப்பகத்துறையில் அவரது பங்கு இருந்ததால் அவரது எழுத்துச் சீர்திருத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது.மீதமுள்ள சீர்திருத்தங்களை செய்யும் அளவிற்கு அவர் தமிழின் மீது மரியாதையோ அல்லது தமிழ் எழுத்துருவை ஆழ்ந்து கற்று அதனுடைய குறைகளைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு திறனோ,தமிழ் எழுத்துரு உருவாகி வந்த வரலாறு பற்றிய புரிதலோ அற்றவர் .

2.கணிப்பொறித் தரப்பு

உங்களுடைய தரப்பைச் சேர்ந்தவர்கள் தான் இன்றைய பெரும்பாலான வெற்றிபெற்ற நபர்கள்.உருவாகி வந்த  தொழில்நுட்பத்தை எளிதில் தங்களுக்கு சாதகமாக மாற்றிய திறனுடையவர்கள்.அகமொழி தமிழாக இருக்க தமிழை வெளிப்படுத்த ஆங்கில எழுத்துருவை இராணுவ மற்றும் உளவுக்துறைகளில் பயன்படுத்துவதைப் போல தகவல்களை குறியீட்டு மொழிக்கு மாற்றி பின் அதனை இயல்பு மொழிக்கு மாற்றுவதைப்போல செய்வதற்குப் பயின்றவர்கள் .இன்றுவரை கணிப்பொறியில் தமிழ் தட்டச்சை பல்வேறு காரணங்களால் முறையாக கற்கமுடியாத நபர்கள் இந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறார்கள்.இந்த முறை அதிகப்படியான நபர்கள் பயன்படுத்துவதாலும், யாருக்கும் பெரிதாக குறைகள் தெரியவில்லை என்பதாலும் நேரடி தமிழ் எழுத்துருவுக்கான மென் பொருட்கள் தேவைப்படவில்லை.
எழுதுபவரின் அகமொழியும் வெளிப்பாட்டு மொழியும் அவர் பள்ளியில் படித்த தமிழ் எழுத்துருவில்தான் வெளிப்படுகிறது.சிந்தனை சொல்லக்கப்படும் முன் குறியீட்டுமொழியாக உள்செலுத்தப்பட்டு விளைவாக சரியான சொல் வெளிப்படுகிறது.குறியீட்டு மொழி சிந்தனைக்கும் சொல்லுக்கும் நடுவில் இருந்தாலும் எழுதப்படும் சொல்லில் அதற்கான தடயங்கள் இல்லை.குறியீட்டு மொழியை அறியாத நபர்கள் இதனால் பாதிக்கப்படப்போவதில்லை.தேவையின் பொருட்டு குறியீட்டு மொழி கற்று  தன் பணியைச் செய்த இராணுவத்தினரோ உளவுத்துறையோ அதை அதனுடன் தொடர்பேயில்லாத மற்றவர்களை கற்றுக் கொள்ளச்சொல்லுவது எவ்வளவு தவறோ அதைப் போல இந்த தரப்பினர் மற்றவர்களையும் இதைக் கற்கச் சொல்லுவதும் தவறு.தேவை ஏற்படும் நபர்கள் இதைக் கற்றுக் கொள்ளட்டும்.இப்போது இருக்கும் தமிழ்எழுத்துரு இவர்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவாக இல்லாத போது இவர்களுக்காக ஏன் எழுத்துருவை மாற்ற வேண்டும்?.

3.கைபேசித்தரப்பு

இந்தத் தரப்பைப் பொறுத்தவரை தங்கள் அகமொழி ஒன்றாக இருக்க அதை வெளிப்படுத்தும் எழுத்துரு குறைந்த காலம் இல்லை என்ற காரணத்துக்காக தனிமொழியாக ஆங்கில எழுத்துருவில் எழுதும் தமிழை கொண்டவர்கள்.தமிழ் என இவர்கள் கற்ற எழுத்துருவை மறந்து போய்விடவில்லை. கைபேசியில் தமிழ் இல்லாத  குறுகிய காலம் முடிந்து தமிழ் எழுத்துரு வந்தபோது சற்று முயற்சி செய்திருந்தால் தமிழை தமிழ் எழுத்துருவில் எழுதி இருக்கலாம்.அதற்கு முயற்சி செய்யாத பழக்கத்தின் அடிமைகளான இவர்களுக்கு சிறு அதிர்ச்சி வைத்தியம் தந்தால் போதும் தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி விடுவார்கள்.தமிழில் மட்டுமே தன் செய்தியை கருத்தைச் சொல்ல முடிந்த உனக்கு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தக் கூடத் தெரியாதா என்று சீண்ட ஆரம்பித்தால் இன்று அவர்கள் கையில் இருக்கும் கைபேசியின் தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

கைபேசியில் எழுத வராத தலைமுறைக்கு இப்போது கைபேசியில் தமிழ் எழுத்துரு காத்துத் கொண்டிருக்கிறது.கைபேசியில் தமிழ் எழுத்துருக்கள்  மிக எளிமையாக மாறிவிட்டன என்பதற்கு நானே சாட்சி.இவர்களுக்காகவும் தமிழ் எழுத்துருவை மாற்ற வேண்டிய தேவையில்லை .இவர்கள் தமிழ் எழுத்துருவை நன்கு அறிந்தவர்கள்.

4.ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள்.

உண்மையில் இந்த தரப்புக்கு மட்டுமே  நீங்கள் சொல்கிற ஆங்கில எழுத்துரு மாற்றம் பயன்படும்.தமிழ் எழுத்துரு  தெரிந்தாலும் கற்பிக்கப்படும் மொழி ஆங்கிலமாக இருப்பதால் ஆங்கிலமே இவர்களுக்கு பழகிய மொழியாகி விட்டது.இவர்கள் தமிழிலக்கியத்தையோ தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும் என்று விரும்பினால் தமிழின் செவ்விலக்கியங்களும் முக்கியமான இலக்கிய நூல்களும்  ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எளிதில் கிடைக்கிறது.அவைகளைப் படித்து தமிழின்  ருசி கிடைத்துவிட்டால் தான் கற்ற தமிழ் எழுத்துருவை வைத்து இவர்கள் சற்று சிரமப்பட்டால் மிக எளிதாக தமிழ் நூல்களைப் படித்துவிட முடியும்.தன் முன்னோரின் அறிவுச்செல்வம் வேண்டும் என்று எண்ணும்  பயன்சார் மதிப்பீடுகளைக் கருத்தில் கொள்ளாத நபர்கள் கண்டிப்பாக தமிழ் எழுத்துவை பள்ளியில் படித்த காரணத்தால் தமிழில் படிக்க வந்துவிடுவார்கள்.ஆகவே இவர்களுக்காகவும் தமிழ் எழுத்துருவை மாற்ற வேண்டிய தேவையில்லை.

நான்கு தரப்புகளுக்குமான என் வாதங்களை கவனிக்கும் போது ஒரு தரப்பு மட்டுமே பாதிக்கப்படுகிறது என்பது எனக்கே தெளிவாக தெரிகிறது . அந்தத் தரப்பு ஆங்கில வழி கல்வி கற்றவர்கள். தங்கள் பெற்றோருடைய எண்ணத்தின் காரணமாக இங்கு இருக்கக்கூடிய போட்டியை வெல்லும் நோக்கில் பெற்றோரின் அழுத்தங்களுக்கு பலியான நபர்களின்  தரப்பு அது . அவர்களுக்கு தமிழ் எழுத்துரு அறிமுகம் ஆகியிருக்கிறது.ஆங்கில வழிக் கல்வி கற்றவர்களுக்கு உண்மையிலேயே தமிழின் மீது ஆர்வம் இருந்தால் தமிழ் எழுத்துருவைக் கொண்டு எழுத முடியும்.ஏனெனில் குறைந்தது  பள்ளி இறுதியை முடிக்கும் 12ஆண்டுகள் வரை எழுதிய எழுத்துருவை யாரும் மறக்க முடியாது.முதலில்  சற்று சிரமமாக இருந்தாலும் எளிதல் எழுதி விடலாம்.அதற்குக் கூட சிரமப்பட இயலாத நபர்கள் அப்படியே அவர்களுடைய வாழ்க்கைப் போக்கில் செல்லட்டும் என்பதுதான் எனது வாதம்.  தாங்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுச் செல்வத்தைப் பற்றி கவலையே படாத இந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வாழ்க்கைப் போக்கில் செல்வது எல்லா வகையிலும் எல்லோருக்கும் நல்லது.

ஒருவேளை தமிழ்நூல்களைப் படிக்க முடியாமல் போவதைக் குறையாகக் கருதும் தமிழ் எழுததுருவையே அறியாத தமிழ் பேசும் நபர்களுக்காக speech 2 text போன்ற செயலிகள் இருக்கின்றன.அவைகளைப் பயன்படுத்தி புத்தகங்களை ஒலிப்புத்தகங்களாக மாற்றிக் கேட்க முடியும்.

அனைத்து தரப்புகளையும் கவனிக்கும் போது மக்கள்தொகை அளவில் பெரும்பான்மையாக இருப்பதும், எதிரதரப்பில் இருப்பவர்கள் 99சதவீதம் வரை அறிந்த எழுத்துரு தமிழ் எழுத்துருதான்.இது எழுத்துருவை மாற்றக்ககூடாதென்பதற்கான முதல் காரணம்.

அடுத்ததாக எழுத்துருவை மாற்றக்கூடாதென்பதற்கான அடுத்த காரணம் பண்பாட்டு அடையாளத்தை இழத்தல்.

தமிழ் எழுத்துருவில் இருந்து ஆங்கில எழுத்துக்கு மாறுவதால் என்ன மாற்றம் நிகழும் என்று நான் எதிர் பார்த்தேனோ மற்றவர்கள் எதை எதிர்பார்த்து இந்த மாற்றத்தை குறை சொல்கிறார்களோ அதை பற்றிய என்னுடைய கருத்துக்களை கிருஷ்ணனிடம் வைக்கும்போது கிருஷ்ணன் மாற்றுக் கருத்து ஒன்றை முன்வைத்தார். எழுத்துரு மாற்றம் என்பது உடனடியாக நடந்து விடும் என்றோ இதனால் தமிழில் அறிவுச் செல்வம் அழிந்து விடும் என்று நீ நினைப்பது முட்டாள்தனம் என்று கூறினார். இப்போது இருக்கும் செல்வங்கள் தொழில்நுட்பத்தின் உதவியால்  தமிழ் எழுத்துருவிலிருந்து ஆங்கில எழுத்துருவுக்கு மாற்றப்படும் வாய்ப்புகள் குவிந்து விட்டது ஆகவே எழுத்து மாற்றத்தால் நீ நினைப்பது போல எந்த அறிவிழப்பும் நடக்கப்போவதில்லை என்று கூறினார் .

அதற்கு நான் தனிப்பட்ட எழுத்துரு கொண்டிருப்பது தான் என்னுடைய பண்பாட்டு அடையாளம்.இன்று எழுத்துரு மாற்றம் மேற்கொண்டால் அதை இழந்த பின்னர் அடுத்த தலைமுறையில்  மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது என்று கேட்கும் போது  தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்டு எடுத்து விடலாம் என்று கூறினார். அந்த வாதத்தை கேட்கும் போது நன்றாக இருந்தாலும் தேவையில்லாமல் ஏன் இருக்கக் கூடிய பண்பாட்டு அடையாளத்தை ஒழித்துக்கட்டி மீண்டும் அதை மீட்க வேண்டிய தேவையை உருவாக்க வேண்டும் என்றுதான் தோன்றியது.நம் தளத்தில் வந்த ஜாவி-காட் கட்டுரையைக் கவனிக்கும் போது என் எண்ணங்கள் சரியானவைதான் என்பதைக் உணர்கிறேன்.

தமிழ் எழுத்துரு என்பது நம்முடைய பண்பாட்டின் அடையாளம்.எழுத்தை வைத்தே சில மொழிவிளையாட்டுக்களை விளையாட முடியும்.ஔவையார் சொன்னதில் “ஙப் போல் வளை “என்பதைப போல பல இடங்களில் அதைச் செய்வதுதான் எழுத்துரு பண்பாட்டின் அடையாளமாக மாறும் இடங்கள்.தமிழ் சித்திர எழுத்தாக இல்லாத காரணத்தாலும் இப்படிப் பயன்படுத்த அதிகப்படியான மொழியறிவு தேவை என்பதாலும்  இவைகளை அதிகம் பயன்படுத்தியது போல முதல் பார்வைக்கு தெரிவதில்லை.சற்று யோசித்தால் நிறையவே இருக்கும் என்று நினைக்கிறேன் .அவைகளைக் காக்க எழுத்துருவை மாற்றக்கூடாது.சித்திர எழுத்துருவைக் கொண்ட மொழியைச் சேர்ந்தவர்கள் இநத மாற்றங்களை செய்தால் அவர்களுக்கு பேரழிவுதான்.அந்த எழுத்துருக்கள் அதுவரை கொண்டிருந்த அழகும் கவிதையைப் போல் மாற்றுப் பொருள் கொள்ளுள் முறையை அழித்து வெறும் பயன்பாட்டு எழுத்துருவை அடைந்து விடுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை ஏதேனும் ஒரு பண்பாட்டு அடையாளத்தை ஒழிக்க வேண்டும் எனில் அது காலத்தால் இங்கு இருக்கக்கூடிய ஏதேனும்  தரப்புக்கு  தீங்கு இழைத்து இருக்க வேண்டும்.அந்த அடையாளங்களைக்கூட  பாதிக்கப்பட்ட தரப்புக்கு இழப்பீடு வழங்கி அந்த பண்பாட்டு அடையாளத்தின் மோசமான பகுதி மட்டுமே அறுவைச்சிகிச்சை செய்யப்படவேண்டும். யாருக்கும் எதற்கும் தீங்கு இழைக்காத பண்பாட்டு அடையாளங்கள் கண்டிப்பாக காக்கப்பட வேண்டும். தமிழ் எழுத்துரு தங்களுக்கு தீங்கு விளைவித்ததாக இங்கு யார் சொல்வார்?. குறை கூறும் வண்ணம் தமிழ் எழுத்துரு யாரையும் பெரிதும் பாதிக்கவில்லை . அதனால் எதற்கு பண்பாட்டு அடையாளமான தமிழ் எழுத்துருவை மாற்ற வேண்டும்?. பல காரணங்களால் தன்னுடைய பண்பாட்டு அடையாளங்களை இழந்து அதை மீட்க இன்று ஐரோப்பா முயன்று கொண்டிருப்பதை நீங்கள் என்னிடம் சில முறை கூறி இருக்கிறீர்கள். அதைப் போன்ற நிலை நமக்கு வரக்கூடாது என்று எண்ணுகிறேன்.

இறுதியாக தமிழ்  எழுத்துருவிற்குப் பதிலாக ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கி 40 வருடங்கள்  ஆனது என்று வைத்துக்கொள்வோம்.இத்தனை ஆண்டுகளில் பொருட்படுத்தத்தக்க எத்தனை கட்டுரைகள், படைப்புகள் புத்தகங்கள் ஆங்கில எழுத்துருவில் வந்திருக்கின்றன. ஒரு கட்டுரை கூட என் கண்ணில் பட்டது கிடையாது.கட்டுரைகளே இல்லாதபோது எங்கிருந்து நூல்கள் வருவது.நாற்பது ஆண்டுகளில் பொருட்படுத்தத்தக்க  ஒரு கட்டுரை கூட வராத எழுத்துருவுக்காக ஏன் நீண்ட பாரம்பாரியமான தனித்தன்மை மிக்க எழுத்துருவைக் கைவிட வேண்டும்.இங்கு  ஆங்கில எழுத்துரு பயன்படுத்தப்படுவது சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்ல மட்டுமே.தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் சொல்லப்படும் கருத்தில் ஒரு சதவீதம் கூட சொந்தக் கருத்து கிடையாது.கடன் வாங்கிய கருத்துக்களைப் பேசும் நபர்களுக்காக, அதைக்கூட கற்ற எழுத்துருவில் எழுத முயலாத நபர்களுக்காக ஏன் எழுத்துருவை மாற்றவேண்டும்.

எழுத்துரு மாற்றத்துக்கான காரணமாக நீங்கள் சொல்லிய பிற கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துகள்

அ.ஆரம்பக் கருத்து

எழுத்துரு பற்றிய உங்கள் ஆரம்பக் கட்டுரை சிறிய மொழிகளை ஆங்கிலம் அழித்துக் கொண்டு வருவதை கருத்தில் கொண்டு அதை நேரடியாகச் சொன்னால் இங்கிருக்கும் அரசியல் தவறாகப் புரிந்து கொள்ளும் என்று பெரியார் சொன்னதை முன்வைத்து கணிப்பொறியின் தரப்பிலிருந்து நீங்கள் எழுதியது.இந்த வரலாற்று யூகத்திற்கான பதிலை ஏற்கனவே மேலே கூறிவிட்டேன்.

ஆ.இடைக்காலம்

கைபேசித்  தரப்பு உருவானதும் ஆங்கில எழுத்துருவை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.அவர்களுக்கும் ஆங்கில வழிக்கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் நூல்களைப் படிக்கும் சிரமம் இருக்கிறது என்பதற்காக ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்தி அதை வைத்து குறையப் போவதாக நீங்கள் எண்ணும்  தமிழ் எழுத்துருவில் படிக்கும் தமிழர்களின் எண்ணிக்கையை ஆங்கில எழுத்துருவுக்கு மாறுவதன் மூலம் உயர்த்தலாம்.அதன் மூலம் படிப்படியாக ஆங்கில எழுத்துருவிற்கு ஒட்டு மொத்த மக்களையும் கொண்டு வரமுடியும்.இதற்கான எந்தச் சூழலும் இன்று தமிழகத்தில் இல்லை என்பதையும் சொல்லிவிட்டேன்

இ. இன்று

இன்றைய நிலையில் இந்தி கற்பித்தல் எனும் விவாதமெழும்போது மாணவர்கள் மூன்று எழுத்துருவைக் கற்க,எழுத இருக்கும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு எழுதியது.தமிழ் எழுத்துரு மாற்றம் ஏற்பட்டால் உலகளாவிய முறையில் தமிழ்மொழியை எழுத்துருவாக கற்கவேண்டிய தேவையில்லாமல் வெறும்பேச்சுமொழியாக கற்பதால்  மனித உழைப்பைக் குறைத்து விட முடியும் என்பது நீங்கள் சொல்ல வரும் கருத்து உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள வேண்டிய அம்சம் என்று தோன்றுகிறது.
உங்களுடைய உவமையில் சொல்வதானால் சிதல் புற்றைப் போல செல்லும் இந்த இந்தியப் பண்பாட்டில் இருக்கும் நாம் இதற்கு செய்யவேண்டியது இப்போது இருக்கும் பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தையும் எதிர்காலத்தைச் சேர்ந்த நம் வாரிசுகளிடம் விட்டுச் செல்வது.எழுத்துரு பண்பாட்டு அடையாளமாக இருப்பதால் அதைக் கொடுத்தால்தான் எப்படி சிதல்புற்றைக் கட்டுவதென்று அடுத்த தலைமுறைக்குத் தெரியும்.

ஈ.எழுத்துருவைக் கற்பதால் ஏற்படும் சிரமங்கள்

இரண்டு எழுத்துருவை கற்பது எழுதுவது சிரமமாக இருக்கிறது எனபதால் ஒரே எழுத்துருவாக உலகம் முழுவதும் மாறுவதால் மனித உழைப்பு வீணாவது குறையும் எனபது சரியான வாதம்.அப்படிச் சொல்வதானால் எது மிகக் குறைவான எழுத்துக்களைக் கொண்டதோ அந்த எழுத்துருவோ அதைத்தானே கருத்தில் கொள்ள வேண்டும்.அல்லது எந்த எழுத்துரு அதிக எழுத்துரு கொண்டதாக இருந்தாலும் கற்க,எழுத சிரமமில்லாமல் இருக்குமோ அதைத்தான்‌ வைக்க வேண்டும்.என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துரு அத்தகையது.தமிழ் எழுத்துருவின் சிறப்புகளைச் சொல்லும் போது இதை விளக்குகிறேன்.

இரண்டு எழுத்துருக்களை கற்பதால் மொழிமாற்றம் செய்து அடுத்த மொழிச் செல்வங்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டிய தேவை இன்றிருக்கிறது இது நாளை தேவைப்படாத சூழல் ஏற்படும். இன்றைய தொழிலநுட்பம் ஏற்கனவே மொழிமாற்றம் செய்யும் செயலிகளை உருவாக்கிவிட்டது.அவைகளில் இருக்கக்கூடிய பெரும் குறை துறைசார் வார்த்தைகள் மற்றும் இரண்டு மொழிகளுக்கு இடையேயுள்ள சொற்களின் நுண்ணிய வேறுபாடுகளை கணக்கில் இன்னும் கொண்டு வர முடியவில்லை என்பதுதான்.

இனிவரும் காலங்களில் இவை மேம்படுத்தப்பட்டு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவன மொழியாக மாறும்.ஜெயமோகன் தளத்தை யாராவது மொழிபெயர்ப்பு செய்யக்கேட்டால் இலக்கியம்,தத்துவம்,வரலாறு,பண்பாட்டுக் கலைச் சொற்களும், தனித்தமிழ்ச் சொற்களுக்கான இணையான சொற்களையும் கொண்டு செய்யவேண்டும் என்று செயற்கை நுண்ணறிவு தீர்மானித்து சரியான சொற்களைப் பிழையின்றி மொழிபெயர்ப்பு செய்யும் சூழல் அமையும்.அப்போது இரண்டு எழுத்துருவைக் கற்க வேண்டிய தேவை குறையும்.ஆனாலும் மொழியைக் கற்க எழுத்துருக்களைக் கற்க வேண்டிய தேவை என்றும் இருக்கும்.

உ.அறிவியல் மற்றும் அறிவியக்க மொழி

இன்று அறிவியல் மொழியாக அறிவியக்க மொழியாக உலகில் இருப்பது ஆங்கிலம் ஆகவே அதைக் கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தமிழ் பேச்சு மொழியாக மாறும் என்பதை நான் ஏற்கமாட்டேன்.அறிவியலில் அறிவியக்கத்தில் இருப்பவர்களுடைய சதவீதம் எவ்வளவு இருக்கும்?.என் கணிப்பில் ஒரு சதவீதம் கூட இருக்க முடியாது.அப்படி ஒரு சதவீதம் இருந்திருந்தால் உலகம்இன்று எங்கோ போய் கொண்டு இருக்கும்.ஒரு சதவீதம் இருக்கும் அவர்களுக்கு பயன்படும் மொழி என்பதற்காக உலகம் முழுக்க எழுதப்படும் மற்ற மொழிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் எழுத்துக்களை கைவிட்டு விட்டு ஆங்கிலத்துக்கு மாறிவிடுவார்களா என்ன?.இங்கு அனைவரும் அறிவியலை தங்கள் வசதிக்கான தொழில்நுட்பம் தரும் தொழிற்சாலை போலத்தான் நினைக்கிறார்கள். தங்களுக்கு வசதி ஏற்படுத்தித் தரும் அறிவியலைப் பற்றி உண்மையில் உலகில் பாதிப் பேருக்காவது அடிப்படை அறிமுகம் இருக்குமா என்பதே சந்தேகம்தான்.அறிவியலின் கதியே இப்படி என்றால் அறிவியக்கத்தின் கதியைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

ஊ.மாணவர்களின் மீதான அழுத்தங்கள்

இதற்கு அடுத்தபடியாக இன்று மாணவர் களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையாக இரண்டு எழுத்துக்களை கற்றுத் தேர்வது வரக்கூடிய அழுத்தங்களை குறிப்பிடுகிறீர்கள். இந்த அழுத்தம் உங்களுடைய காலத்தில் இருந்தது. என்னுடைய காலத்தில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. உங்களுடைய காலத்திலேயோ அல்லது என்னுடைய காலத்திலேயோ இது அழுத்தம் என்று உணரப் படவில்லை. இப்போதைய பாடத்திட்டத்தை பார்த்து இதற்கு முன்பிருந்த பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது சற்று குறைவான அளவே பாடத்திட்டம் இருக்கின்றது. மாணவர்களுக்கு இப்போது இருக்கக்கூடிய அழுத்தங்கள் என்று நாம் நம்பும் அழுத்தங்கள் அனைத்தும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் எதிர் காலத்தை எண்ணி அவர்கள் மீது திணிப்பவை. அவைகளுக்கு மக்கள் தொகை மிகுந்த போட்டி அதிகமாக இருக்கக்கூடிய இந்த நாட்டில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. பெற்றோரிடையே குறைந்தபட்சமாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

எ.மொழியாளுமை அற்ற நபர்கள்

இதற்கு அடுத்தபடியாக 30 வயதிற்கு மேற்பட்டோர் தான் இங்கு தங்களுடைய கருத்துக்களை முன்வைக்கக் கூடிய அளவுக்கு மொழியாளுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி இருந்தீர்கள். பள்ளியில் கொடுக்கப்படுகின்ற அழுத்தத்தின் காரணமாக இளைஞர்கள் மொழியாளுமை அற்றவர்களாக கருத்தை சொல்லக்கூடிய திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்து அதில் தொணித்து நிற்கிறது. இந்த விவகாரத்தில் நீங்கள் உங்களுடைய வாழ்வு அனுபவத்தைக் கொண்டு இன்றைய இளைஞர்களை மதிப்பிடுகிறீர்கள். உங்களுடைய தாய் மிக இளவயதிலேயே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை உங்களிடம் ஏற்படுத்திவிட்டார்கள். உங்களுக்கான கருத்தை உருவாக்க தேவையான தர்க்கரீதியான அளவுகோல்களைக் கொடுக்க குரு நித்யாஉங்களுக்கு கிடைத்து விட்ட காரணத்தால் மிக விரைவாக உங்கள் வாழ்வில் நடந்ததை மற்றவர்கள் வாழ்விலும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள்  இங்கு மிக குறைவாகவே இருக்கின்றன.

பெற்றோர்கள் மற்றும் சுற்றி இருக்கக் கூடியவர்கள் உடைய அழுத்தத்தின் காரணமாக பள்ளிப் படிப்பு கல்லூரியை முடித்து வேலைக்குச் சென்ற பிறகே கருத்துக்களை உருவாக்க வேண்டிய தேவை இங்கு அனைவருக்கும் ஏற்படுகிறது. பெரும்பாலும் கருத்துக்களை உருவாக்க தேவையான தர்க்கரீதியான அளவுகோல்கள் எதுவும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பள்ளிகளில் இல்லாத காரணத்தால் அதற்கு அடுத்தபடியாக புத்தகங்களும் பெரும்பாலும் ஒரு தரப்பை பேசக் கூடியதாக இருக்கக் கூடிய காரணத்தால் கடன் வாங்கக் கூடிய கருத்துக்களை பேசக்கூடிய நபர்கள் மட்டுமே இளமைப் பருவத்தில் இங்கு இருக்க முடியும். கடன் வாங்கி பேசப்படும் கருத்துக்கள் மிக கேவலமாக எதிர்தரப்பு வாதத்திடம் தோற்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் பெரும்பாலான இளைஞர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்க மாட்டார்கள். இதில் அடிபட்டு தெரிந்து தனக்கென்று கருத்தை உருவாக்க காலம் ஆகிறது. அதனால் இன்றைய இளைஞர்கள் 30 வயதைக் கடக்கும்போது அல்லது அதன்பின்பு சிலகாலம் கழித்து தங்களுக்கு என்று கருத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.மொழியாளுமைக்கு படிக்கும் பழக்கமோ கொள்கை ரீதியான உரைகளோதான் காரணமாக அமையும்.இங்கு படிக்கும் வழக்கமும் கொள்கைகளை மொழியாளுமையுடன் பேசும் உரைகளும் மிகக்குறைவு.அதனால் மொழியாளுமை உருவாவதற்கான வாய்ப்புகளும் இங்கு குறைவு.
பள்ளி செல்லும் வயதிலேயே புத்தகங்களை படிக்க ஆரம்பித்தாலும் எனக்கென்று தனிப்பட்ட கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள ஆசிரியரான நீங்கள் எனக்கு கிடைத்த பிறகுதான் என்னால் முடிந்தது.என்னைப்போல  தனிப்பட்ட கருத்துக்களை உருவாக்கும் முறைகளை சொல்லித் தரக் கூடிய ஆசிரியர் கிடைக்காத நபர்கள் என்ன செய்ய முடியும்?. தங்களுக்கென்று கருத்தே இல்லாமல் தாங்கள் உயர்வாக எண்ணி கடன் வாங்கும் கருத்துக்களை யார் சொல்கிறார்களோ அவர்கள் பக்கம் முரட்டுத்தனமாக நிற்க வேண்டியதுதான்.அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களை உடைக்கும் ஆசிரியன் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை காரணம். அவை எழுத்துருவால்   நடந்ததல்ல.

ஏ.எதிர்கால ஊகங்கள்

அடுத்து தமிழ் எழுத்துரு ஆங்கில எழுத்துருவாக மாறி தமிழின் பண்டைய அறிவுச் செல்வங்கள் அழிந்து வெறுமனே பேச்சு மொழியாக எஞ்சி இருக்கும் என்று நீங்கள் சொல்லக்கூடிய கருத்து எனக்கு பண்டைய முனிவர்களை நினைவுபடுக்கிறது. தங்களுடைய காலத்திற்குப் பிறகு தாங்கள் சமூகத்தில் உயர்வாக கருதக்கூடிய அறம் அழிந்து விடும் என்று நம்பிய அந்த முன்னோர்களுக்கும் உங்களுக்கும் இந்த விவகாரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. அவர்கள் காலத்தில் இருந்து இன்று கவனித்துப் பார்க்கும்போது அறம் கூர்மைப்பட்டு இருப்பதைப் போல தமிழ் இலக்கியமும் தமிழ் எழுத்துருவும் இன்னும் கூர்மைப் பட்டுக் கொண்டே தான் செல்லும். எப்படி ஈராயிரம் ஆண்டுகளாக கணியன் பூங்குன்றனாரரை, கபிலரை, கம்பரை, அவ்வையை, திருவள்ளுவரை நினைக்கிறோமோ அதைப் போல இப்போதைய    தமிழ் இலக்கிய உலகில் உள்ள அத்தனை நபர்களும் எப்போதும் அழியப்போவது இல்லை. காலத்தைத் தாண்டி வாழும் வரத்தைப் பெற்ற நபர்கள் இலக்கியவாதிகள். அது வரமா சாபமா என்பது அவர்களுடைய படைப்பை பொறுத்தது. உலகம் முற்றாக அழிந்தால் தவிர அழிக்கமுடியாத இடம் தமிழ் இலக்கிய உலகம். அதை நவீன அறிவியல் அழித்து விடும் என்று நினைப்பது எப்போதுமே தவறானதாக இருக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நவீன அறிவியல் மனிதனுடைய தேவைகளை மிக எளிதில் நிறைவேற்றி விடுவதன் காரணமாக குறைந்த அளவு நேரத்தில் தன்னுடைய வருமான தேவையை முடித்துக் கொண்ட நபர்கள் தங்களுடைய கொள்கை சார், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பல்வேறு வகையிலும் அறிவுத் தேடலில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆகவே அறிவியல் எல்லா வகையிலும் எந்த மொழியையும் அழிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை அது  மொழியை வளர்ப்பதற்குதான் வாய்ப்புகள் உண்டு . பணியின் நிமித்தம் மொழியைப் பயன்படுத்த வேண்டிய தேவை எப்போதும் இருப்பதால் எந்த மொழியும் அழிவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

எடுத்துக்காட்டாக 200 ஆண்டுகள் முன்பு தொடங்கிய பத்திரப் பதிவுத் தமிழ் மொழி இன்று பேச்சு வழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மொழி அல்ல. இயல்பாக பேசக்கூடிய தமிழ்மொழியில் பல்வேறு மாற்றங்கள் வந்த பிறகும் பெரும்பாலும் அந்த அலுவல் மொழி மாறவில்லை. இதைப் போல எல்லா துறையிலும் அதற்கென்று அலுவல்மொழி இருக்கிறது அந்த மொழியை பணியின் நிமித்தம் கற்றவர்கள் தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய தேவை இருப்பதால்  இன்று அலுவல்பணியில் இருக்கக்கூடிய எந்த தனிப்பட்ட அலுவல் மொழிகூடஅழிவதற்கான வாய்ப்புகள் இல்லாதபோது பெரும்பான்மையினர்  பயன்படுத்தும் மொழி அழிவதற்கான வாய்ப்பேயில்லை.
ஐ.மாற்று வரலாற்று யூகம்

எந்த விவாதமாக இருந்தாலும் முதலில் அறிவுசார் விவாதத்தில் இருந்து ஆரம்பித்து  பொது விவாதமாக மாறுவதற்கு காலம் எடுக்கும்.அதை வைத்து பார்க்கும்போது சிறிது காலம் கழித்து இதைப் பொது விவாதத்திற்கு வைத்தால்  எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை இப்போதே யூகித்துச் சொல்கிறேன்.இன்றைய சூழலில் இந்தியை பள்ளிகளில் கற்பிக்க வேண்டாம்என்று நீங்கள் சொல்வதுதான் என்கருத்தும்.அதனால் தேவநாகரி எழுத்துருவை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆனால் இந்த வாதம் வைக்கப்பட்டால் ஆங்கில எழுத்துருவுக்கு பதில் தேவநாகரியில் எழுதலாம் என்ற கருத்தும் எழும்.இப்போதே குறைவான எண்ணிக்கை கொண்ட நபர்களுக்கு தேவநாகரி தெரியும்.அந்த எண்ணிக்கை கூடுவதற்கான வாய்ப்புள்ளது.அதனால் கண்டிப்பாக இந்தக் கருத்து எழுந்தே தீரும்.

அத்தகைய சூழலில் மொழிக்குடும்பம் வேறு என்ற வகையில் சமஸ்கிருதத்தை எதிர்க்கும் நபர்கள் கூட தேவநாகரி எழுத்தை எதிர்க்க முடியாது.தமிழும் தேவநாகரியும் எழுத்துருவைப் பொறுத்தவரை பிராமியிலிருந்தே உருவானவை.வெளியிலிருந்த வந்த நமக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கில எழுத்துருவை விட இந்தியாவிலேயே சற்றேறக்குறைய 120 மொழிகளின் எழுத்துரு வடிவமாக இருக்கும் தேவநாகரியைக் கற்றுக் கொள்வது தான் சரியானது. எல்லா வகையிலும் சகோதர எழுத்துருவை விட்டு விட்டு ஏன் சிரமமப்படுத்தும் ஆங்கில எழுத்துருவை கற்க வேண்டும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.தங்களுடைய எழுத்துருக்காக மூன்று தரப்பும்  போரிடும்போது மூன்றையும் கற்கட்டும் அதனால் நல்லதுதான் நடக்கும் என்ற வாதம் ஆரம்பமாகிவிடும். மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க இன்று நீங்கள் சொல்லும் காரணங்களை மிக எளிமையாக அன்று தேவநாகரிக்கு ஆதரவாக மாற்ற முடியும்.யாருடைய அழுத்தத்தை  முன்வைத்து எழுத்துரு மாற்றத்தை யோசிக்கலாம் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கு இன்னும் அதிகப்படியான அழுததம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கடைசியாக தமிழ் எழுத்துருவின் சிறப்பையும் வரலாற்றையும் சொல்லாமல் இந்தக் கடிதத்தை முடிக்கக் கூடாது என்பதால் அதையும் சேர்த்து சொல்லத்தான் நினைத்தேன்.ஆங்கில எழுத்துருவை விட என்ன காரணங்களால் தமிழ் எழுத்துரு சிறந்ததென்றும் ,தமிழிடமிருந்து எதை ஆங்கில எழுத்துரு கற்க வேண்டிய தேவையிருக்கிறது என்பதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன்.இதுவே பெரிய கடிதமாக இருப்பதால் இன்னொரு கடிதமாக அதை எழுதி அனுப்புகிறேன்.

இப்படிக்கு

அந்தியூர் மணி

தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48
அடுத்த கட்டுரைப்ளூம்- கடிதம்