இருத்தலின் ஐயம்

அன்புள்ள ஜெயமோகன்

பெரும் சோர்வு தான் எஞ்சுகிறது. இலக்கியமாகட்டும் இயலுலகவியலாகட்டும் புகைப்படக்கலையாக்கட்டும் எதுவும் ஒரு கட்டத்திற்குமேல்  சோர்வையே அளிக்கிறது.தேடலை மட்டுப்படுத்தும் சோர்வல்ல.

பேரியக்கமொன்றில் பங்கெடுத்த உணர்வு.இறுக்கமான பள்ளி கல்விச் சூழலில் எத்தகைய பண்பாட்டு நுனிகளாலும் தீண்டப்படாமல்  பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்று ஜடமாய் வெளிவந்து அடர்த்தியான உள் உலகமொன்றை  புலன் உணரப் பெறுவது சவுக்கியமாகத் தான் இருக்கிறது.

சிந்தனை உருப்பெறுகிறது.நம்மை அடையாளப்படுத்தும் படைப்புகளே முதலில் நிறைவு தருகிறது. ‘நான்’ எனும் கருத்தாக்கம் இல்லாத படைப்புகளின் மீதான கிண்டல் கேலிகள் அடுத்த நிலை.பிறகு, இலக்கியக் கூறுகளை அறியும் செயல்பாடாக வாசிப்பு நகர்கிறது.உலகப் பார்வை வியாப்பிக்கிறது.கல்லூரி மற்றும் வெளி உலகப் போக்குகளிடமிருந்து விலகி நிற்க நேரும்.அதேசமயம், அகல்குடியாகவும் அடையாளங்காண்கிறோம்.அது மானுடப் பற்றின்மையும் கூடக் கூட்டி வருகிறது.ஒரு முறை இன்டெர்ஸ்டெல்லார் திரைப்படம் குறித்து பேசும்போது பெங்காலித் திரைப்படமான சித்ராங்ககதா குறித்து  கூறியிருந்தீர்கள்.அதே உணர்வுநிலை தான் மய்யழி கரையோரம் வாசித்து முடித்த பின்னரும்.என் உலகப் பார்வையை பெரியளவில் மாற்றியமைத்த நாவல் எனக் கூறலாம்.

சமீபத்தில் Carl Sagan-ஐ வாசித்த பின்னரும் அதே உணர்வுநிலைதான்.ஆனால், இறுதியில் அவர் மானுட மேன்மையைப் பேசுகிறார். முடிவுறா மற்றும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இயக்கத்தையே Cosmos-இல் சுட்ட விழைகிறார்.அண்டத்திலிருந்து நோக்கின் மனிதனின் அத்தனையும் சூனியப்புள்ளியென உணர்த்த முற்படுகிறார்.A Pale blue dot எனும் அவருடைய புத்தகத்தின் தலைப்பொன்றே மனித குல வரலாற்றை ஒற்றுமின்மைக்குள் ஆழத் தள்ளுகிறது.பிறகும், எப்படி அவரால் மானுடமைய நோக்கோடு பேச முடிகிறது ? எப்படி வந்தடைகிறார் ?

எல்லா அறிவியக்கச் செயல்பாடுகளும் முயங்கும் புள்ளி இந்த சோர்வுதானா ? சோர்வும் நம்பிக்கையின்மையும்தான் உண்மையிலேயே நம்பிக்கையளிப்பதாக இருக்குமா ?Sagan உடைய பிரபஞ்ச ஒருமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவருடைய பிரபஞ்ச ஒருமையைக் காட்டிலும் Frotjoff Capra வினுடையது தனிமனதக்குரியதாகப் படுகிறது.தற்கால நவீன மனத்தின் ஆன்மீக வெற்றிடத்தை  நிரப்ப வல்லது.பாலசந்திரன் சுள்ளிக்காடு பற்றிய கடிதமும் அத்தகைய உணர்வைத் தந்த ஒன்று.யதார்த்தம் குறித்த புதிய பார்வைக் கோணத்தை ஏற்படுத்தும்.அது மேல்மட்டத்தில் வெளிப்பாட்டு முறைமை குறித்து பேசுவதாகத் தெரிந்தாலும் அடிப்படையில் அது மனித சிறுமைகளின் மற்றும் இயற்கை நிகழ்வுகளின் நிரந்திரமின்மையையே சுட்டுகிறது.

எரிச்சல், எல்லாவற்றின் மீதான எரிச்சல்..என் மீதான எரிச்சல்.என்னின் எல்லாவற்றின் மீதுமான எரிச்சல்.மனித குலம் ஏன் இப்படியே தொடரக் கூடாது ? தொடரியக்கம் என்பது எல்லாவகை சாத்தியங்களையும்  உள்ளடக்கியதாகத்தானே இருக்க வேண்டும் ?காலங்காலமாக இப்படித்தானே இருந்துள்ளது ?யுத்தங்களை,மனிதர்கள் காலத்தைச் செலழிக்கப் பயன்படுத்திய யுக்திகள் என்றளவில் நோக்கினால் அர்த்தம் வேறுவகையில் ஏற்படுகிறது.

போர்கள் மூண்டால் தான் என்ன? போரோடு சேர்த்து அனுதாபக்கலையையும் கற்று வைத்திருக்கிறானே மனிதன்.போர் தொடுப்பது ,பிறகு கலையின் வழி துப்புறவு செய்கிறேனென மணிமுள்ளைத் திருப்புவது..

ஆனந்த்-இன் கவிதை :

ஒரு இலை உதிர்வதால் செடிக்கு ஒன்றுமில்லை

ஒரு மரம் படுவதால் பூமிக்கு ஒன்றுமில்லை

….

ஒரு உலகம் அழிவதால்

எனக்கு ஒன்றுமில்லை

(சரியாக நியாபகமில்லை)

உங்களுக்கு எப்போதேனும் அலுப்பு ஏற்பட்டிருக்கிறதா ? சாமானிய அலுப்பு அல்ல விஷேஷ அலுப்பு (விஷேஷ உண்மை – சாமானிய உண்மை)இவ்வளவு எழுதியும் அலுப்புத் தோன்றியதில்லையா ? எல்லாவற்றின் மீதான அலுப்பு.ஏனிந்த..எதற்கிந்த..போன்ற அலுப்பு .வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அலுப்பை எதிர்கொண்டிருப்பீர்கள்.அவை எந்நேரமும் எரிச்சலுடனே அலைய விட்டிருக்கலாம்.அப்படியான அலுப்பு பற்றி..

வாழ்வின் இந்தக் குறிப்பிட்ட காலப்புள்ளியில் நீங்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன ? (விஷேஷ பிரச்சனைகள்)எ.டு – 2k kids ஆன எங்களுக்கிருக்கும் Peer identity,Zelig syndrome சிக்கல் அல்லது இணையதள 90’s kids இன்  இருத்தலியல் மற்றும் அறிவொணாவாதம் போல..

புறப்பொருளை உய்த்துணர்வதற்கான கருதுகோளே காலமும் வெளியும் எனும் Kant-இன் வாதம் அறிவியற்பூர்வமாக மறுக்கப்பட்டிருந்தாலும்  இவ்வாதத்தை மொழியோடு தொடர்புபடுத்த முடி’கிறது’.மொழியில் வினைச்சொற்களின் பங்கும் முக்கியத்துவமும் குறித்து சிந்திக்க வைக்’கிறது’.

மொழியாலும் கால வெளி அனுமானங்களாலும் உருவாக்கப்பட்டதே மனித உலகம் என்றா’கிறது’.மொழி கொண்டு புதியதொரு உலகை உருவாக்கிடவும் அதனை பிறர் உய்த்துணரவும் செய்ய முடி’கிறது’.அவ்வுலத்தினுள் திரண்ட உயிரிகள் கூட நித்யமானவையாக இருக்கலாம்.மொழியைக் கொண்டு ‘பற்றி’யவைகளையே தொடர்புறுத்துகிறோம்.

உண்மையென்பதே மாயச் சுடராக இருக்’கிறது’.இருக்கலாம்.மொழியாலும்,பிரஞ்ஞையாலும் அதுவும் நித்திய சுடரா’கிறது’.பிரஞ்ஞை உயிர் ஆற்றல்.மாயைக்கொரு சொட்டு பிரஞ்ஞை.திவ்ய சுடர்.

(இவ்வாறு இருக்’கிறது’.)

//நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஒருபோதும் அறியவே முடியாத பொருள்வய உலகம் வெளியே இருக்கிறது. // This line of yours was depressing and at the same time delightful.

ஒற்றை இலக்கணம் தான் உள்ளது.ஒற்றை இலக்கணத்தின் கிளைகளே மொழிகள்.புற உலகத் தாக்கம் இரண்டாம் பட்சமே என்கிறார் Noam Chomsky.ஒத்த பண்புடைய மொழிகள் அதன் வேறுபாடின்மை காரணமாக ஒன்றோடொன்று சேர்கிறது.மேலும் மனிதர்களுக்கு பிறப்பிலேயே மொழிக்குறிய இலக்கணம் அமைந்து விடுகிறதென்றும் குழந்தைகள் கேட்டவற்றையும் படித்தவற்றை மட்டுமே பேசுவதில்லை என்கிறார்.

//The basic questions of what is specific to language really have to do with issues

that go beyond those of explanatory adequacy. So if you could achieve explanatory adequacy – if you could say,

“Here’s Universal Grammar [UG], feed experience into it, and you get a

language” – that’s a start in the biology of language, but it’s only a start.// (The Science of Language)

இதை முன்னமே எங்கோ படித்த நியாபகம்.’இமையம் எனும் சொல்’ கடிதத்தில் தான்.

இறுதியாக ,எனக்கும் செவிக்கும் நாவுக்கும் இமையம் என்பதே சரியாக இருக்கிறது என்பதனால்.

‘இமையம் எனும் சொல்’ கடிதத்தின் இறுதி வரி.

சொல் தன்னிச்சையாக ஆழுள்ளத்தில் இருந்து எழவிட்டுவிடுவேன்.அது ஒலிமாறுபாடோ பொருள்மாறுபாடோ கொண்டு என்னுள் பதிந்து அவ்வண்ணமே இயல்பாக வெளிப்படுமென்றால் அப்படியே அது இருக்கட்டும் என்பதே என் நிலைபாடு. அது படைப்புவெளிப்பாட்டின் ஒரு வழிமுறை. இலக்கியம் ஒருபோதும் செய்திக்கும் அலுவலுக்கும் உரிய  தரப்படுத்தப்பட்ட நடையில் அமையமுடியாது, அமையவும்கூடாது/

மொழி கற்பனைத் திறனையும் பார்வைக்கோணங்களையும் தீர்மானிக்கிறதா ? இடது புறத்திலிருக்கும் ஆரஞ்சை எடு என ஆங்கிலத்தில் கூறுகிறோம். தென்மேற்கிலுள்ள ஆரஞ்சை எடு என திசைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மொழிகளும் உண்டு.வினைச்சொல் சுட்டும் காலமும் இதனால் மாறுபடுமா ?தனிமனித கால உணர்வு இதனடிப்படையில்தான் செயல்படுகிறதா ? சென்னையில் எனக்கு ஒரு மணி நேரமென்பது பெரிய விஷயமாகஙே இருக்காது.ஆனால் ,கோவையில் ஒரு மணி நேரமென்பது பெரிய கால அளவு போல் தோன்றுவது போலத்தான மொழியின் கால வெளிப் பிணைப்பும் உள்ளதா ?

தமிழில் ஆங்கிலத்தில் உள்ளதைப்போல ஸ்பேனிஷ் மொழியில் நீர்மைப்பண்பு இருப்பதில்லை.ஸ்பானிஷ் மொழியில் மென்அசைவுகளையும், சலனங்களை உணர்த்தும் வினைச்சொற்கள் குறைவு.

ஆக, ஒரு மொழி அழியும்போதும் இறுக்கத்தோடு செயல்படும்போதும் அதற்கே உரிய தனித்தன்மையான உட்பொறிகளும் உலகங்களும் அழிகிறதல்லவா ?

இவையெல்லா பெரும் வியப்பையும் மலைப்பூட்டக்கூடியவையாகவும் இருக்கிறது.மனிதனின் நகர்வு, இயற்கை உந்துதல் என சர்வமும்.

இதற்குமுன் கடிதமெல்லாம் எழுதியதில்லை.இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு இல்லாத ஊரிளுள்ள தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டி சில கடிதங்கள் எழுதயதோடு சரி.இரவு இரண்டு மணியாகப்போகிறது.இப்போதைக்கு சிந்தனைப்போக்கை சட்டமிடாமல்  பார்த்துக்கொண்டேன்.தினசரியின் ஒரு பகுதி.ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சிந்தனை ஓட்டங்களும் கேள்விகளும்.  என்றாலும்,

இந்தக் கடிதத்தையும் என் தினசரியையும் பிரித்தறிய முடியாது என்றளவில் இக்கடிதம் நேர்மையான ஒன்று.நன்றி.

நிஷாந்த்

***

அன்புள்ள நிஷாந்த்

கொஞ்சம் வியப்பும் கொஞ்சம் சிரிப்பும். ஏனென்றால் முப்பதாண்டுகளுக்கு முன் நான் சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதம்போலவே இருக்கிறது. ஏறத்தாழ. அதற்கு சுந்தர ராமசாமி அளித்த பதிலையே நானும் சொல்லவேண்டியிருக்கிறது, ஏறத்தாழ. கொஞ்சநாட்களுக்கு பின் நீங்களும் எவரிடமேனும் இதைச் சொல்லும்படி அமைக.

மூன்றுவகை அடிப்படை ஐயங்களால் ஆனது இளமை. ஒன்று, நீதியுணர்வு சார்ந்த ஐயம். இரண்டு, மானுட உறவுகள் சார்ந்த ஐயம். மூன்று, இருத்தல் சார்ந்த ஐயம் . இவற்றுக்கு எவரும் வெளியே இருந்து ‘பதிலை’ சொல்லித்தர முடியாது. அவற்றுக்குரிய பதிலை கண்டடைய மூன்றே வழிகள்தான். ஒன்று வாழ்ந்து,பட்டு அறிவது. இன்னொன்று, புனைவிலக்கியங்களை வாசித்து மெய்நிகருலகில் வாழ்ந்து அறிவது, மூன்று தத்துவஞானி ஒருவரின் [கவனிக்க ஒருவரின்] உலகுக்குள் நுழைந்து அவருடனான ஆழ்ந்த உரையாடலினூடாகக் கண்டடைவது.

நீதியுணர்வு சார்ந்த ஐயமே முதலில் உருவாகிறது. உண்மையாகவே இங்கே அறம் என ஒன்று உண்டா, நம் சமூக அமைப்பில் நீதி திகழ்கிறதா, நீதி மறுக்கப்படுபவர்களுக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? இவ்வையங்கள் பெரும்பாலான இளைஞர்களை அமைப்புக்கு எதிரிகளாக்குகின்றன. விமர்சகர்கள் ஆக்குகின்றன. அந்த பருவம் தன்மைய நோக்கு கொண்டதாகையால் அறத்தின் காவலராகவும் நீதிக்கான போராளிகளாகவும் தங்களைக் கற்பனைசெய்துகொள்கிறார்கள். அல்லது கசப்படைந்த கலகக்காரர்களாக கற்பிதம்செய்துகொள்கிறார்கள். அது அவர்களை வாசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. நெடுந்தொலைவு முன்னெடுத்துச் செல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பாவனைகளிலிருந்து வெளிவந்துவிட்டார்கள் என்றால் அது உதவிகரமானதுதான்.

மானுட உறவுகள் சார்ந்த ஐயமும் இயல்பாக உருவாவது. மானுட உறவுகள் குறித்த ஓர் ஒற்றைப்படைப் பார்வையை குடும்பம் அளிக்கிறது. அது பெரும்பாலும் நேர்நிலை விழுமியங்களால் ஆனது. பின்னர் அது கட்டமைக்கப்பட்டது, அன்றட உண்மை அல்ல என இளைஞர் உணர்கிறார். அன்பு காதல் பாசம் என்றெல்லாம் மெய்யாகவே உண்டா என உசாவத் தொடங்குகிறார். அவரே சில முடிவுகளுக்கு வருகிறார். அவருடைய உறவுகள் சார்ந்து அந்தப்புரிதல் மாறிக்கொண்டே இருக்கிறது

இவை பொதுவானவை. மூன்றாவது ஐயமே ஆழமானது. இருத்தல் சார்ந்த ஐயம் அது. இவ்வுலகம் இவ்வண்ணம் ஏன் இருக்கவேண்டும், ஏன் இன்னொன்றாக மாறவேண்டும், இதில் தனிமனிதனுக்கான இடமும் பங்களிப்பும் என்ன, மானுட இருத்தலுக்கு தனியான இலக்கும் பயனும் உண்டா, வாழ்தலென்பது புலனின்பங்களை அடைதல் என்பதற்கு அப்பால் ஏதேனும் பொருள்கொண்டதா? இத்தகைய கேள்விகள் எழுந்து ஒரு சோர்வை அளிக்கின்றன

இருத்தல்சார்ந்த ஐயம் முதலில் செயலை பாதிக்கின்றது.ஏனென்றால் செயலுக்கு முதலில் ஓர் உறுதிப்பாடு தேவை.செயலின்மை ஒரு பெரிய நச்சு வளையம். ஏனென்றால் நாம் நம்புவதை மெய்யா என ஆராய்வதற்கான களம் செயலே. நம் ஐயங்கள் குழப்பங்கள் அவநம்பிக்கைகள் எல்லாமே செயல்வழியாகவே களையப்படமுடியும். ஆகவே செயலின்மையில் அவை மேலும் பெருகுகின்றன. அவை மேலும் செயலின்மையைக் கொண்டுவருகின்றன. மேலும் ஐயங்களை உருவாக்குகின்றன. கடைசியில் நாம் கசப்பு நிறைந்தவர்களாக, வசைபாடிகளாக மாறி அமைகிறோம்

நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் எதையாவது செய்வதனூடாக மட்டுமே விடைகாணமுடியும். செயல் எதுவாகவும் இருக்கலாம், உங்கள் இயல்புக்கு உகந்ததாகவும் உங்கள் திறன்கள் வெளிப்படுவதாகவும் , நீங்கள் முழுமையாக ஈடுபட்டுச்செய்வதாகவும் இருக்கவேண்டும். அதன்வழியாக உங்களை நீங்களே கண்டடைவீர்கள். உங்கள் எல்லைகளைக் கடந்துசெல்வீர்கள். உங்க ஐயங்கள் எல்லாமே அந்த எல்லைகளால் உருவாக்கப்படுவன. அந்த ஐயங்கள் அகலக்க்கூடும். அதுவே உங்களுக்கு தேவையான உங்கள் பதில். இது என் பதில், ஏனென்றால் இதை நானே கண்டடைந்தேன். இதை முன்வைப்பேன், ஆனால் இதை மறுப்பவருடன் விவாதிக்க மாட்டேன். ஏனென்றால் இது விவாதித்து அறிந்த ஒன்று அல்ல.விவாதிக்கத்தக்கதும் அல்ல.

நான் என் இருபது வயதுவரை எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் ஏழாண்டுக்காலம் எழுதவில்லை. எழுத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. எனக்கு புகழ், அங்கீகாரம் தேவை என்னும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அன்றைய என் வாழ்க்கை கிட்டத்தட்ட நாடோடிக்குரியது. பின்னர் எழுதியபோது ஒரே ஒரு காரணத்துக்காகவே எழுதினேன். எழுதுவது எனக்கு இயல்பாக, எளிதாக இருந்தது. எழுதுவதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடைந்தேன். ஏன் எழுதவேண்டும் என்பதை எழுதியே கண்டுபிடித்தேன். சோர்வு செயலின்மையில் இருந்து வருகிறது ,சோர்விலிருந்து செயலின்மையும் எழுகிறது என கண்டுபிடித்தேன். செயல் கற்பிக்கிறது என்றும்.

என்னளவில் ஒரு விடை இருக்கிறது. இந்தப்பிரபஞ்சம் பிரம்மாண்டமானது. அதை அறிவோம். நான் இருக்கும் இந்தப் பார்வதிபுரம் சாரதாநகருமே பிரம்மாண்டமானது. இங்கிருக்கும் வாழ்க்கை பலநூறாயிரம்கோடி சரடுகளால் பின்னப்பட்டுள்ளது. இதை ஓரளவேனும் அறிவதோ இதை திட்டமிட்டு மாற்றியமைப்பதோ என்னாலோ வேறு எவராலோ இயல்வது அல்ல. வரலாற்றையும் பண்பாட்டையும் வாழ்க்கையையும் தங்கள் விருப்பப்படி மாற்றியமைக்க எண்ணுபவர்கள் எல்லாரும் முதலில் அவற்றை தங்களுக்குச் சௌகரியமானபடி வரையறைசெய்து எல்லை வகுத்துக்கொள்வதையே நான் காண்கிறேன். அதற்குள் அவர்கள் சிலவற்றைச் செய்ய முடியும், சிலவற்றை வெல்லவும் முடியும். ஆனால் என்னுடையது இலக்கியம், அது எளிமையான வரையறைகளை ஏற்பது அல்ல. ஆகவே மாற்றியமைத்தல் என்பது அதன் இலக்கும் அல்ல.

எனில் நான் ஏன் செயல்படவேண்டும்? ஏனென்றால் இதை இவ்வண்ணம் இயக்கும் ஒன்றின் பகுதி நான் என்பதனால். என் பங்களிப்பும் அதில் உள்ளது என்பதனால். ஆகவேதான் செயலாற்றும்போது எனக்கு நிறைவு ஏற்படுகிறது என்பதனால்

குறைந்தது ஐம்பதுமுறையாவது கூறிய உதாரணம்தான் இது. நான் கண்கூடாகப் பார்த்தது என்பதனால் அதிலிருந்து வெளிவரவும் இயலவில்லை. ஆப்ரிக்காவின் மாபெரும் சிதல்புற்றுக்கள் மனிதனின் இன்றைய பெருநகரங்களைவிட நூறுமடங்கு பிரம்மாண்டமானவை, நூறுமடங்கு சிக்கலான பொறியியல் அமைப்பு கொண்டவை. இன்றைய எந்த நகரத்தைவிடவு மும்மடங்கு காலமாக இருந்துகொண்டிருப்பவை, வளர்பவை. ஆனால் ஒரு சிதலின் வாழ்நாள் சிலநாட்கள்தான். அந்தச்சிதல்புற்றை அதனால் எந்நிலையிலும் காணமுடியாது.

எனில் அச்சிதல்புற்று எங்கிருக்கிறது? அந்த சிதல்களின் ஒட்டுமொத்தப்பிரக்ஞையில் எங்கோ இருக்கிறது.  ஒவ்வொரு சிதலின் உள்ளே நுண்வடிவில் உள்ளது. ஒரு சிதல்பிறந்து சில பருக்கை மண்ணை எடுத்துவைத்துவிட்டு மறைகிறது. அதற்குள் இருக்கும் தன்னியல்பு அதைச்செய்ய வைக்கிறது. அந்தத் தன்னியல்பில் உறைகிறது அந்த சிதல்புற்றின் மொத்த வடிவம். என்னுடைய தன்னியல்பில் உள்ளது என்னுடைய பணி. அது என்னைமீறிய, என்னால் காணமுடியாத ஒட்டுமொத்தமான ஒன்றின் சின்னஞ்சிறு துளி. அதைச்செய்வதே என் விடுதலை.

மானுடம் நான்காயிரமாண்டுகளாக உருவாக்கி எடுத்திருக்கும் அறிவு, மெய்மை என்னும் ஒட்டுமொத்தத்தை – அதன் ஒருவடிவை – எந்நூலகத்திலும் பார்க்கலாம்.  ஏன் கூகிள் புக்ஸ் தளத்திலேயே பார்க்கலாம். அதில் ஒரு துளியையே எந்த ஒரு மானுடமனமும் இன்றைக்கு அறியமுடியும். ஆனால் அந்தப்பிரம்மாண்டமான தொகை மானுடச் சாதனையே. நான் அதில் ஒரு சிறு துளியைச் சேர்க்கிறேன். அது என் பங்களிப்பு, என் வாழ்க்கையின் அர்த்தம். என்வரையில் அது போதும். அந்த ஒட்டுமொத்தத்தின் இலக்கென்ன , பயன் என்ன என்றெல்லாம் அறிய நான் முயலமுடியாது. அது இயலாது. என் வாழ்நாள் குறுகியது, அறிவு அதைவிடக் குறுகியது.

ஆகவே எனக்கு இப்போது எந்தச் சலிப்பும் இல்லை. உண்மையாகவே ஒருகணம்கூட சலிப்பு இல்லை. ஒரு தருணத்தில்கூட  இருத்தல்சார்ந்த சோர்வை உணர்ந்ததில்லை. சலிப்பு இல்லாமல் அவநம்பிக்கை இல்லாமல் முப்பதாண்டுகளைக் கடந்திருக்கிறேன் என்பதனாலேயே நான் கண்டடைந்தது சரியான வழி என நம்புகிறேன். ஆகவே அதைச் சொல்கிறேன்.

எனக்கு சோர்வுகள் உண்டு.இருவகை. ஒன்று, நான் ஒன்றை படைப்பதற்கு முன் அக எழுச்சி நிகழ்ந்து கூடவே அதற்கான இலக்கியவடிவமும் மொழியும் கைகூடாமலிருக்கையில் வரும் தத்தளிப்பும் எரிச்சலும் சிலசமயம் சோர்வும். ஆனால் இவையெல்லாம் அவ்வடிவமும் மொழியும் சிக்கும்வரைத்தான். அவை நோக்கிய பயணத்தின் விளைவுகள் இவை. இன்னொன்று, அவ்வப்போது எதிர்கொள்ளும் மானுடச்சிறுமைகள் அளிக்கும் சோர்வு. குறிப்பாக, தந்திரமாகவும் பூடகமாகவும் சிறுமையை வெளிப்படுத்துபவர்கள். அவர்களுடனான என் உறவை அக்கணமே நிறுத்திக்கொள்கிறேன். வெட்டிவிட்டு முற்றாக மறந்து முன் செல்கிறேன். மற்றபடி என் இலக்கு, செயல்பற்றிய எந்த விசேஷநிலைச் சோர்வும் என்னிடமில்லை.

மிகப்பெரிய சோர்வு ஒருகாலத்தில் இருந்தது. அந்நிலையைக் கண்ட நண்பர்கள் பலர் உள்ளனர். நாட்கணக்கில் குளிக்காமல், சவரம் செய்யாமல். ஆடை மாற்றாமல், உணவுண்ணாமல் கிறுக்கன்போலவே இருந்திருக்கிறேன். நாட்கணக்கில் ஒரு சொல் கூட பேசாமல் இருந்திருக்கிறேன்.அங்கிருந்து என் விடையைக் கண்டடையும் வரை ஒரு பயணம் இருந்தது. அது எனக்குரிய செயலை ஆற்றியமையால் நான் அடைந்தது. இது நான் கண்டடைந்த விடை. நீங்கள் ஒன்றைக் கண்டடையலாம். உங்கள் தேடல் உங்களுக்கு.

கார்ல் சாகனின் தரிசனம் அடிப்படையில் கிறித்தவத் தன்மை கொண்டது. [ஐரோப்பிய நாத்திக , தாராளவாத, மனிதாபிமானம் என்பது கிறிஸ்துவும் திருச்சபையும் இல்லாத கிறித்தவம், கம்யூனிசம் என்பது வேறொருவகை திருச்சபை கொண்ட கிறித்தவம்]  ஆகவே அவர் ஒரு மானுடமைய பிரபஞ்சத்தை கற்பனைசெய்கிறார். மானுடநேயத்தை உயர்விழுமியமாக முன்வைக்கிறார். நீங்கள் பௌத்தம் அல்லது அத்வைதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருவரிடம் பேசினால் அவர் இப்புவியில் மானுடன் ஒரு மையமல்ல, மானுடநேயம் என்பது மனிதன் தன்மேல்கொண்ட அன்புமட்டுமே என்பார். அதற்கும் அப்பால் அறியமுடியாத ஓரு பெருந்திட்டத்தின் பகுதியாகச் செயல்புரிக என்பார். அது என்ன செயல் என்பது உங்கள் இயல்பில் பொறிக்கப்பட்டுள்ளது என்பார். அதன் விளைவுகளை எண்ணும் பொறுப்பு உங்களுக்கு இல்லை என்பார்.

ஆனால் ஒன்று மட்டும் சொல்லவிழைகிறேன். இன்று சமூக ஊடகங்கள் என்னும் நச்சுச்சூழல் உள்ளது. அது இங்குள்ள அனைத்து நஞ்சுகளும் புழங்குமிடம். உங்கள் ஆளுமையின் இடர்களை, உங்கள் தேடல்களை அங்கே கொண்டு வைத்தீர்கள் என்றால் அதை இம்மிகூட புரிந்துகொள்ளாதவர்கள், எதையுமே ஆழமாக புரிந்துகொள்ளத் திராணியற்றவர்கள், எதன்மேலும் எவர்மேலும் நல்லெண்ணம் அற்றவர்கள், பல்வேறு குறைபாடுகளால் முழுக்க முழுக்க எதிர்மறை உள்ளம் கொண்டவர்கள் அதை எதிர்கொள்வார்கள். விளைவாக அவர்களால் நையாண்டி செய்யப்படுவீர்கள். சிறுமை செய்யப்படுவீர்கள். அதற்கு எதிராக நீங்களும் நையாண்டியும் சிறுமையும் செய்வீர்கள். அதனால் அவர்களுக்கு இழப்பு ஏதுமில்லை. நீங்கள் மெல்லமெல்ல அவர்களைப்போல ஆகிவிடுவீர்கள்.

பொதுவாக ஏளனம் செய்வது, பகடி [பின்நவீனத்துவப் பகடி ! அடடா!] செய்வது போன்ற உளநிலைகளை இன்றைய பொதுச்சூழல் வளர்க்கிறது.  மொத்த ஊரே மீம்ஸ் போட துடித்துக்கொண்டிருக்கிறது. நம் சமூகத்தின் ஒட்டுமொத்த அசட்டுத்தனமும் வழியும் களம் அது. இந்தப் பகடி நமக்கு என்ன அளிக்கும்? நான் ஒரு பெரிய ஆள் என்னும் பாவனையை மட்டும்தான். நாமே நம்மை ஊதிப்பெருக்கி முன்வைப்பது மட்டுமே அதன் மெய்யான உள்ளடக்கம். அதன் வழியாக நாம் போலியானவர்களாக ஆகிறோம்.நம்மிடம் உரையாடுபவர்கள், நம்மை விமர்சனம் செய்பவர்கள் இல்லாமலாகிறார்கள். நாம் எல்லாரையும் பகடி செய்வோம். கூடவே நம்மை எவரும் பகடி செய்யாமலிருக்க விளையாட்டான பொறுப்பற்ற ஆள் போல ஒரு முகமூடியையும் போட்டுக்கொள்வோம்.ஆனால் எந்த அறிவியக்கவாதியும், ஆன்மிகத்தேடல்கொண்டவனும் பொதுச்சூழலுக்கு எதிராகச் செயல்படுபவனாகவே இருப்பான்.

இன்றைய இளைஞர்கள் தீவிரமான செயல்பாட்டுக்குள் வருவதை தடுக்கும் இத்தகைய பாவனைகளுக்குள் நீங்கள் சிக்காமலிருக்கவேண்டும்.

*

எங்கானாலும் எதிலானாலும் சிதலின் உள்ளே அந்த புற்று உறைவதைப்போல நீங்கள் உங்களுக்குள் உறையும் இலக்கை கண்டடைந்து அச்செயலை ஆற்றி மட்டுமே உங்கள் விடையை கண்டடைவீர்கள். இதுவே சுருக்கமான என் மறுமொழி.  அது நான் மீளமீளச் சொல்வது

சரி அப்படிக் கண்டடையாமலேயே போவது உண்டா? எந்த இலக்கையும் ஆற்றாமல் பிறந்து மறைபவர்கள் உண்டா? குரூரமான உண்மை ஒன்று உண்டு, மிகப்பெரும்பாலானவர்கள் எதையும் கண்டடையாமல் வீணாகி வாழ்ந்து மறைபவர்களே. மிகமிகப் பெரும்பாலானவர்கள் அறுதியாக பயனற்று உதிர்பவர்களே. அனைவருக்கும் ஏதேனும் பயன் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஏதேனும் திறன் உண்டு என்பதெல்லாம் சும்மா சுயமுன்னேற்ற வகுப்புகளின் ஊக்கமூட்டிப் பேச்சு.  இயற்கையின் செயல்முறை வேறு. புல் கோடிகோடி விதைகளை உருவாக்குகிறது. தகுதியும் வாய்ப்பும் உள்ள சிலவே முளைக்கின்றன. பிற விதைகள் வீணாகின்றன. வீணடித்தல் என்பது இயற்கையின் செயல்நெறிகளில் ஒன்று. கணம் கோடி உயிர்கள் வீணாகிக்கொண்டேதான் இருக்கின்றன. தன்னுடைய சிறந்ததை தெரிவுசெய்ய இயற்கை கண்ட்டைந்த வழிமுறை அது

அனைவருக்கும் திறன்கள் உண்டா? ஒவ்வொருவரிடமும் ஏதேனும் திறன் உண்டு என்று சொன்னால் நான் மனிதாபிமானி. ஆனால் நானறிந்த உண்மை அப்படி அல்ல. உண்மை என்பது மனிதாபிமானம் கொண்டது அல்ல. ஏனென்றால் மெய்மை மானுடத்தன்மை கொண்டது அல்ல. மிககமிகச் சிலரிடமே தனித்திறன்கள், அறிவுத்தரம் ஆகியவை உள்ளன. எஞ்சியோருக்கு வாழவும் அடுத்த தலைமுறையை உருவாக்கி தொடர்ச்சிபேணவும் தேவையான ஆற்றல் மட்டுமே உள்ளது.  தன் தங்கிவாழ்தலின் தேவைகளுக்கு அப்பால் எதையாவது தேடவும் கற்றுக்கொள்ளவும் தேடலும் திறமையும் அமைவது மிக அரிது. தன்னைத்தானே காணவும், தான் சார்ந்த  உண்மைகளுக்கு அப்பால் சென்று பார்க்கவும் கூடுவது அதைவிட அரிது.வாழ்க்கையின் புறவயத்தன்மை, அன்றாடத்தன்மைக்கு அப்பால் செல்லும் ஆற்றல் என்பது அரிதினும் அரிது.அந்த திறன் இயல்பிலேயே இல்லாதவர்களிடம் அதைப்பற்றி பேசவே முடியாது. ஒரு சொல்கூட புரியவைக்க முடியாது. அவர்களுக்கு அது அறிவின்மையாக, இளக்காரமாக தோன்றும். நையாண்டியும் நக்கலும் செய்பவர்கள் அவர்களே.

அத்தகைய திறனைக் கொண்டவர்கள் தோல்வியடைவது எவ்வாறு? தன்னை மிகையாக புரிந்துகொள்ளல். அல்லது தன்னை குறைவாகப்புரிந்துகொள்ளல்.அதன்வழியாக தான் என்ன செய்யமுடியுமோ அதைக் கண்டடையாது போதல். மிகையாகப்புரிந்துகொள்பவர்கள் நையாண்டியும் விமர்சனமும் மட்டும் செய்துகொண்டிருப்பார்கள். குறைவாகப்புரிந்துகொள்பவர்கள் கசப்பைக் கொட்டுவார்கள். செயலாற்றுவதில் தயக்கம் உருவாகும். மிக எளிதில் வாழ்க்கை கடந்துபோகும், ஓரு வயதுக்குப்பின் செயலூக்கம் உடலில் இருக்காது. செயலாற்றுவதை தொடங்கவும் முடியாது. தன் களம் என்ன என்று அறியாமல் செயல்களிலிருந்து செயல்களுக்குத் தாவிக்கொண்டிருத்தல் மூன்றாவது. அவர்கள் குவிவதன் ஆற்றலை இழந்துவிடுவார்கள். ஆகவே எங்குமே முழுமையாக வெளிப்பட்டிருக்க மாட்டார்கள்.ஆகவே செயலாற்றுவதன் பயனையும் அடைந்திருக்க மாட்டார்கள். அனைத்தையும் விட முக்கியமானது நான்காவது தடை. உள்ளம், ஆழம் எதை நோக்கிச் செலுத்துகிறதோ அதை தவிர்த்து உலகியல் ஆசைகளுக்காக வாழ்க்கையைச் செலவிடுவது. ஆடம்பரம், பிறர் நோக்கில் பரியாதை, போகங்கள் ஆகியவற்றுக்காக அகம் ஆணையிடும் செயலை தவிர்த்து பிறிதொன்றைச் செய்வது.

ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்? உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை செய்ய தொடங்குங்கள். நாவல் எழுதுங்கள். தத்துவநூல் ஒன்றை எழுதுங்கள். கொல்லைப்பக்கம் செல்லவே கால்கள் சலிக்கின்றனவா? தோள்பையை எடுத்துப்போட்டுக்கொண்டு சென்று இமையமலையில் ஏறுங்கள். நீங்கள் கண்டடைவீர்கள். சலிப்பு அகலும். வாழ்த்துக்கள்.

ஜெயமோகன்

[பிகு: மொழி குறித்த உங்கள் கேள்விகளுக்கு அடுத்த குறிப்பில் மறுமொழி சொல்கிறேன்]

***

முந்தைய கட்டுரைநுழைவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47