அன்புள்ள ஜெயமோகன்,
தங்களை தினமும் தவறாமல் வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.
சில வருடங்கள் முன், என் வாசிப்பு பாலகுமாரன் மற்றும் சுஜாதாவை கடக்க முடியாமல் (முயலாமல்), அதே சமயம் அவர்களின் போதாமையை உணர்ந்தவண்ணமும் தவித்தவேளை, என் நண்பன் ஒருவன் மூலம் உங்களை அறிய நேர்கையில், உங்களின் மேல் காரணமற்ற வெறுப்பு, விலக்கத்துடன் தங்கள் படைப்புகளை தவிர்த்தேன். பின் ஒருநாள், விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்த பின் இன்றுவரை உங்கள் எழுத்துக்களை முடிந்தவரை பின் தொடர்கிறேன்.
இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, உலகியல், இன்னும் பல துறைகளில் உங்கள் தளம் எனக்கு அளித்துவரும் திறப்புகள் அநேகம். என் நன்றிகளை தெரிவிக்க பலமுறை மடல் எழுத எண்ணியபோதும் உங்கள் நேரத்தை வீணடிக்கும் தயக்கத்துடன் தவிர்த்துவந்தேன். இன்று என்னுள் எழும் ஒரு ஐயத்தின் பொருட்டு இதனை எழுதுகிறேன்.
உங்களை வாசிக்க ஆரம்பித்தபின் நான் வேறு எழுத்துக்களை வாசிப்பதில்லை. பலவகை எழுத்துக்களை நீங்கள் அறிமுகம் செய்தபோதும், பரந்த வாசிப்பின் முக்கியதுவத்தை நீங்கள் சுட்டிக்காட்டியபோதும், எனக்கு உங்கள் எழுத்துக்களே போதும் எனும் எண்ணமே நிலைத்துள்ளது.
எனக்கு உங்கள் எழுத்தே சிறந்த அனுபவத்தை அளிகின்றன. சில சிறுகதைகளை, நாவல்களை, வெண்முரசின், விஷ்ணுபுரத்தின் சில அத்தியாயங்களை பல தடவைகள் மீண்டும் மீண்டும் வாசித்துள்ளேன், இன்னமும் வாசிப்பேன். ஒவ்வொரு முறையும் அவை எனக்கு வேறுபட்ட புரிதல்களை அளிக்கின்றன. பல வரிகள் மனதில் நிரந்தரமாய் இடம்பெற்றுள்ளன. சில என் கனவுகளை வடிவமைக்கின்றன.
எனக்கு வாசிப்பதில் சோம்பல் இல்லை. வேண்டிய நூல்களை பெறுவதில் பொருளியல் சிக்கல்களும் இல்லை. ஆயினும், பலமுறை என்னுள் உசாவி நான் அடைந்த பதில், என் வாழவிற்கு உங்கள் எழுத்து போதும் எனும் நிறைவு.
எனினும் ஒவொருமுறையும் நீங்கள் வேறு ஒரு எழுத்தாளரின் நூல்களை விதந்துரைக்காயிலும் எனக்குள் எழும் கேள்வி,
இவ்வாறு ஒருவனை பற்றி ஓரகத்திருத்தல் தவறா? ஆன்மீகத்தில் ஒரு குருவை பற்றி அமைவது போல், இலக்கியத்திலும் அமைதலில் என்ன தவறு?
என்றும் நன்றியுடன்,
அருண் பிரகாஷ்
Sydney – Australia
***
அன்புள்ள அருண் பிரகாஷ்,
எல்லா காலத்திலும் வாசக –எழுத்தாளர் உறவில் இந்த ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. சிலகாலம் நாம் ஒரே எழுத்தாளரை தொடர்ச்சியாக வாசிப்போம். அவருடைய மொழி, கூறுமுறை, கருத்துக்கள் நமக்கு பழக்கமாகி விடுவது முதன்மைக்காரணம். அதன்பின் அவருடைய எழுத்தின் நுட்பங்கள் நமக்கு தெரியவருகின்றன. ஒரே ஆசிரியரை நெடுநாட்கள் கூர்ந்து வாசிப்பவர் மட்டுமே அந்த ஆசிரியரை உண்மையாக அறிகிறார்கள். அதாவது சாதாரணமாக நினைவுகூர்ந்தாலே ஓர் ஆசிரியரின் நூல்களின் வரிகள், கருத்துக்கள் நினைவுக்கு வரவேண்டும். அவ்வாசிரியரின் நுட்பங்களை நாமே எண்ணிக்கொள்ள முடியவேண்டும்
ஆசிரியர்களை ’விமர்சனபூர்வமாக அறியவேண்டும்’ என இன்று சிலர் சொல்வதுண்டு. குறிப்பாக ஐரோப்பிய நவீன இலக்கியவிமர்சன மரபிலிருந்து வந்த ஒரு நம்பிக்கை அது. இங்கும் மேலைநாட்டிலும் அப்படிச் சொல்பவர்களை நான் கூர்ந்து கவனித்த்துண்டு. அவர்கள் எந்த ஆசிரியரையாவது உண்மையாக அறிந்திருக்கிறார்களா, எவருடைய ஆக்கங்களைப் பற்றியாவது அசலாக ஏதாவது சொல்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றம்தான். அவர்கள் எல்லா ஆசிரியர்களைப்பற்றியும் பொதுப்புத்தி சார்ந்த சில மதிப்பீடுகளையே வைத்திருப்பார்கள். ஆசிரியர்கள் மேல் தங்கள் சொந்தக்கருத்துக்களை சுமத்துவார்கள். ஆசிரியரை நோக்கி இம்மிகூட சென்றிருக்கமாட்டார்கள், தாங்கள் ஏற்கனவே நின்றிருக்கும் இடங்களுக்கு ஆசிரியர்களை இழுக்கமுயல்வார்கள்.
உண்மையில் ஆசிரியர்களை அறியும்போது கூடவே விமர்சனமும் இருந்தால் அவர்களை அறியவே முடியாது. ஆசிரியர்களை வாசிக்கும்போதே எழும் விமர்சனம் என்பதற்கு என்ன பொருள்? நானும் ஒரு ஆள்தான் என அவருடைய படைப்புகளுக்கு முன் மார்பை விரிக்கிறோம் என்று மட்டும்தான். அந்த ஆணவமே நம்மை அவரிடமிருந்து விலக்கும் திரையாக ஆகிவிடும். பெரும்பாலும் இப்படிச் சொல்பவர்கள் ஏற்கனவே அரசியல் சார்ந்த நிலைபாடுகளுக்கு வந்திருப்பார்கள். மாறாத நிலைபாடுகளை கொண்டிருப்பார்கள். அசட்டு ஆணவங்களால் ஆட்டுவிக்கப்படுவார்கள். ஆசிரியர்களை ‘ஆய்வு’ செய்ய சில நிலையான கருவிகளையும் வைத்திருப்பார்கள். அவர்கள் வாசிப்பதே இல்லை. அவர்கள் ஆசிரியரிடம் சில்லறைப்பூசல் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.
புனைவில்லா நூல்களுக்கு மேலே சொன்ன விமர்சனரீதியான வாசிப்பு உதவக்கூடும். குறிப்பாக அரசியல்நூல்களுக்கு மேலும் உதவியாக இருக்க்க்கூடும். ஆனால் புனைவுக்கு அத்தகைய வாசிப்பு முதன்மையான ஒரு தடையை உருவாக்குகிறது – ஆசிரியர் உருவாக்கும் மெய்நிகர் உலகுக்குள் நுழையமுடியாமலாக்கி விடுகிறது. இதை புனைவுச்சுவை அறிந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரு புனைவாசிரியனின் உலகில் நாம் நுழைந்து அங்கே மெய்யாகவே வாழ ஆரம்பிக்கிறோம். அப்போதுதான் அந்த வாழ்க்கையின் நுட்பங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதை அறியும்பொருளாக கொண்டால் நம் அறிதல் திறனுக்கு மிகச்சிறிய எல்லையே உள்ளது
உதாரணமாக, நீங்கள் வாழும் நகரத்தைப்பற்றி உங்களுக்கு எத்தனை தகவல்கள் தெரியும் என்று பாருங்கள். அனைத்தையும் நூலாக எழுதினால் ஐம்பதாயிரம் பக்கம் வரும். உங்களுக்கு தெரியாத ஒரு நகரைப்பற்றி ஐம்பதாயிரம் பக்க அளவில் ஒரு தகவல்திரட்டு உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதை வாசித்து அந்நகரை நினைவில் நிறுத்த உங்களால் இயலுமா? தல்ஸ்தோயின் புனைவுலகு பிரம்மாண்டமானது. அதில் நுழைந்து மெய்யாக வாழும் ஒருவருக்கு அதன் இண்டு இடுக்குகள் அத்துபடியாகும். ஆனால் அதை அறிந்து, புரிந்து, வகுத்துக்கொள்ளும் ஒருவருக்கு ஓரிரு துளிகளே நினைவிலிருக்கும்
ஒரே ஆசிரியரில் மூழ்கி அவரை முற்றறிவதன் மூலமே இலக்கியத்தையே நாம் அறியமுடியும். நான் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் அவ்வாறுதான் அறிந்தேன். ஐந்தாண்டுகள் இரவும் பகலுமென அவர்களில் மூழ்கிக்கிடந்தேன். அவர்களை முழுமையாக அறியும்பொருட்டு மொழியாக்கம் செய்தேன். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மூன்றுமொழிகளிலும் ஒரே படைப்பை திரும்பத்திரும்ப வாசித்தேன். என் நண்பர்களுக்கும் சுந்தர ராமசாமி போன்ற ஆசிரியர்களுக்கும் அவர்களைப்பற்றி மிக நீண்ட கடிதங்கள் எழுதினேன். அது இலக்கியத்திற்குள் நுழைய ஒர் அரசப்பாதையாக அமைந்தது எனக்கு.
இப்படி வாசிப்பதன் எதிர்மறைக்கூறுகள் என்ன? இவ்வாறு வாசிக்கும் அவ்வாசிரியர் நம்மில் எப்படி செல்வாக்கு செலுத்துகிறார் என்பது முக்கியமானது. அந்த ஆசிரியர் நம்மை இனிமையாகச் சூழ்ந்துகொண்டு, நமக்குப்பிரியமானவராக மட்டும் இருந்தால் அவர் நமக்கு பயனளிப்பவர் அல்ல. நம்மை அவர் நிலைகுலையச் செய்யவேண்டும். நம்மை மேலும் மேலும் உடைத்து முன் செலுத்தவேண்டும். நாம் அறிந்தவற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கவேண்டும்.அப்போதுதான் அவர் மெய்யாகவே நம் ஆழத்துடன் உரையாடுகிறார்.
நமக்கு இளமையில் வந்துசேரும் சில ஆசிரியர்கள் நம்மை ‘சொகுசான’ வாசிப்புக்குப் பழக்குகிறார்கள். நாம் அறிந்தவற்றை உறுதிசெய்கிறார்கள். நாம் எங்கும் நகராமலேயே இருக்கச் செய்கிறார்கள். ஆகவே நாம் அவர்களை நமக்கு உகந்தவர்களாக நினைக்கிறோம். Comfortable Author என இவர்களைச் சொல்லலாம். அவர்கள் நமக்கு எந்த அறைகூவலையும் விடுப்பதில்லை. நாம் சோர்ந்திருக்கையில் அவர்களை வாசிக்கலாம். மென்மையான ஓர் இனிமையை அவர்கள் அளிக்கிறார்கள். சுகமான ஒரு மெய்நிகர் உலகை சமைத்து பரப்புகிறார்கள். இவர்களில் மூழ்கியிருப்பது மூளைச்சோம்பலையும் காலப்போக்கில் ஆளுமைக்குறுகலை உருவாக்கும்.
அத்தகைய சில ஆசிரியர்கள் நம் வாசிப்பில் இருக்கலாம். உதாரணமாக எனக்கு அலக்ஸாண்டர் டூமா ஒர் எளிமையான வாசிப்புக்குரியவர். உற்சாகமாக அமர்ந்து அவருடைய நாவல்களை மீண்டும் மீண்டும் வாசிப்பேன். ஆனால் அவர்கள் நம் ‘ஒரே’ ஆசிரியர்களாக ஆகக்கூடாது. நாம் வாசிக்கும் அந்த ஒரே ஆசிரியர் வாழ்க்கையின் மீது தீவிரத்துடன் ஊடுருவிச்செல்பவராகவே இருக்கவேண்டும்.
இரண்டாவதாக, நாம் ஓர் அரசியலை அல்லது கொள்கைநிலைபாட்டை கொண்டிருந்து அந்நிலைபாட்டை அல்லது அக்கொள்கையை நம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கும் ஆசிரியரில் மூழ்கியிருப்பது மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கும். அறிவார்ந்த நிலைபாடுகளை அவற்றின் மறுபக்கத்தையும் அறிந்தபின்னரே மேற்கொள்ளவேண்டும். ஆகவே அவ்வாசிரியரின் மறுதரப்பையும் அறிந்துகொண்டாகவேண்டும்.
மூன்றாவதாக, நாம் மூழ்கியிருக்கும் அவ்வாசிரியரின் உலகம் மிகச்சிறியதாக இருக்கக்கூடாது. அவர் ஒரே கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பவராக இருக்கலாகாது. தன் தேடலை மெய்யியல் வரலாறு ,தத்துவம் ,மானுட உறவுகள், மானுட உள்ளம் என விரிப்பவராக இருக்கவேண்டும். அதாவது தல்ஸ்தோயில் மூழ்கியிருக்கலாம், தாமஸ் மன்னில் மூழ்கியிருக்கலாம், மக்ஸீம் கார்க்கியில் மூழ்கி இருக்கக்கூடாது.
நான்காவதாக அவ்வுலகின் அளவும் முக்கியமானது. இன்றைய வாசகன் அறியவரும் உலகம் மிகப்பெரியது. அரசியல் ,பண்பாடு ,சமூகவியல் என பல களங்களில் ஒரே கேள்வியை அவன் விரித்துக்கொள்கிறான். அதை அவனால் கட்டுப்படுத்தவே முடியாது. ஆகவேதான் இன்றைய படைப்புக்கள் பெரியதாக அமைகின்றன. படைப்புலகமும் பெரியதாக ஆகிறது. அடிப்படையான தத்துவக்கேள்விகள் கொண்ட எழுத்தாளர்களின் எழுத்துலகம் அளவிலும் பெரியதாக, எளிதில் கடந்துசெல்ல முடியாததாகவே இருக்கும். அவர் எழுப்பிய அனைத்துக் கேள்விகளையும் சென்றடையாமல் அதை நம்மால் உள்வாங்க முடியாது.சிறிய புனைவுலகங்கள் பார்வையிலும் சிறியவையே. ஆகவே அவற்றில் மூழ்குவது குறுகிய நோக்கை உருவாக்கும். உதாரணம், காஃப்கா. அவரை மட்டுமே வாசிக்கும் ஒருவன் நோயுற்ற உலகநோக்கையே அடைவான்,
இவ்வாறு ஒரே ஆசிரியனில் மூழ்கியிருப்பதனால் அவருடைய ‘செல்வாக்கு’க்கு ஆளாகிவிடவேண்டியிருக்கும் என்பது பொதுவாகக் கூறப்படும் அபத்தமான வாதம். ஒரு தீவிரமான ஆசிரியரைப் பற்றி பேசினாலே ‘கவனம், அவருடைய பாதிப்பு வந்திரும்’ என எச்சரிக்கும் மொண்ணைக்குரல் எழுவதை பார்க்கலாம்.பெரும்பாலும் எந்தப் படிப்பும் இல்லாதவர்களே இதைச் சொல்கிறார்கள். அதாவது எதையுமே படிக்காமல், ஆகவே எந்த செல்வாக்குக்கும் ஆட்படாமல் அவர்கள் இருக்கிறார்களாம்.
உண்மையில் எதையுமே படிக்காமலிருப்பவன் அச்சமூகச்சூழலில் புழங்கும் பொதுவான கருத்துக்களின் செல்வாக்குக்கு முழுமையாகவே ஆட்பட்டவன், அதை அறியாமலேயே அதில் மூழ்கியிருப்பவன், அதை மீறிசெல்லும் எண்ணமே எழாதவன். அவன் ஒரு மாபெரும் சராசரி. சராசரிகளைப்போல புறச்செல்வாக்குக்கு ஆட்பட்டவர்கள் வேறில்லை. அவர்களின் ஆளுமை என்பது மொத்தமாகவே புறச்செல்வாக்கே. அவர்கள் ‘சொந்த சிந்தனை’ என்று சொல்வது முழுக்கமுழுக்க சமூகம் உருவாக்கிய பழகிப்போன சிந்தனைகளையே எனக்காணலாம். பலசமயம் வெறும் தேய்வழக்குகளாகவே அதைச் சொல்வார்கள்.
ஓரு வலிமையான ஆசிரியர் உண்மையில் அந்தப் பொதுச்செல்வாக்கிலிருந்து வெளியே இழுக்கிறார். ஆகவேதான் அவரை அத்தனைநாள் வாசிக்கிறோம். பொதுச்செல்வாக்கு என்பது அத்தனை எளிமையானது அல்ல. அது எளியது, ஆனால் மிகமிக ஆற்றல்கொண்டது. ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி வந்து பல்லாயிரம்பேரால் சொல்லப்பட்டு பலநூறு அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு கருத்துக்களாகவும் நம்பிக்கைகளாகவும் நம்மைச்சூழ்ந்திருப்பது அது. நம் ஆழுள்ளத்தில் படிமங்களாக திகழ்வது.
அதை உடைத்து வெளிக்கொண்டுசெல்லும் ஆசிரியனே உண்மையில் நம்மை நெடுநாட்களாக ஆட்கொள்கிறான். அவனுடைய செல்வாக்குக்கு நம்மை கொடுக்கையில்தான் நாம் சமூகம் அளித்த செல்வாக்கிலிருந்து வெளியே செல்கிறோம். நாம் கைவிட மறுத்து அக்குளில் இடுக்கியிருக்கும் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பிடுங்கி அப்பால் வீசுபவனே எழுத்தாளன். அவ்வாறு நம்மை ஒப்புக்கொடுத்து மாறுவது மிகமிக கடினமான ஒரு போராட்டம் வழியாகவே நிகழ்கிறது. விளைவு தெரிய நெடுநாட்களாகிறது. ஒரு ஆசிரியன் அளிக்கும் செல்வாக்கு என்பது நாம் அவனுக்கு ஆட்படுவது அல்ல, அவன் வழியாக நாம் நம் எல்லைகளை மீறிச்செல்வது.அது உண்மையில் ஒரு விடுதலை. தல்ஸ்தோய் முதல் நித்ய சைதன்ய யதி வரை எனக்கு அளித்தது விடுதலையையே
இத்தகைய செல்வாக்குக்கு ‘எதிர்ப்பு’ அளித்தால்தான் நம் சுயம் உருவாகும் என்பது இன்னொரு மாயை. இதையும் இத்தளத்தில் எந்த அறிவும் இல்லாத மூடர்கள் பொதுத்தளத்தில் சொல்லிச் சொல்லி நிலைநாட்டியிருக்கிறார்கள். ’செல்வாக்கு’ என்பதற்குப் பதிலாக ‘பாதிப்பு’ என்னும் சொல்லை கண்டடைந்த அறிவிலி அறிவியக்கத்திற்கு இழைத்த தீங்கு மிகப்பெரியது. இதன் விளைவாக தன்னை ஆழ்ந்து பாதிக்கும் ஆசிரியனுக்கு எதிராக செயற்கையாக முறுக்கிக்கொண்டு நிற்கும் இளைஞர்கள் உருவாகிறார்கள். உண்மையில் அவர்கள்தான் தங்கள் தனித்தன்மையை இழக்கிறார்கள்.
ஏனென்றால் தனித்தன்மை என்பது ஒருவரின் தேடல், இயல்பு ஆகிய இரண்டுக்கும் ஒப்ப இயல்பாக உருவாகி வருவது. எதிர்வினையாக உருவாக்கிக்கொள்ளப்படுவது அல்ல. ஓர் ஆசிரியனுக்கு எதிராக நீங்கள் திரும்பினால் என்ன ஆகும்? செயற்கையாக உந்தி முன்வைக்கும் ஓர் ஆணவம் மட்டுமே உங்களிடம் எஞ்சும். அதற்காகவா அவ்வளவு வாசிப்பு?
ஓர் ஆசிரியனிலிருந்து நாம் ஒன்றைப் பெற்றுக்கொள்கிறோம். அவனுடனான நீடித்த உறவு என்பது அதை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்காகவே. அவனுடைய உலகில் வாழ்ந்து அதை அடைகிறோம். ஆனால் நாம் அசலானவர்களாக இருந்தால் அதை வெறுமே அப்படியே வைத்திருக்க மாட்டோம். நம் அனுபவம் சார்ந்து அது வளரும். நம் சிந்தனையினூடாக புதுவழிகளைக் கண்டடையும். மறுத்துத்தான் வளரவேண்டும் என்பதில்லை. மறுப்பும் வளர்ச்சியே. ஆனால் விரிவாக்கம், நிரப்பிக்கொள்ளுதல் இரண்டுமே இயற்கையில் இருக்கும் இயல்பான வளர்ச்சிப்போக்குகள்.
ஓர் ஆசிரியனில் நிலைகொள்வது நல்லதா? ஆம், அவனை முழுதறிய முடியும். அவன் வழியாக நாம் வளரமுடியும். ஓர் ஆசிரியனில் நிலைகொள்ளாமல் எவரும் அவனை முழுதறியப்போவதில்லை. முழுதறியாத எவரையும் நாம் வளர்த்துக்கொள்ளவும் இயலாது
ஜெ
***