அன்பின் ஜெ..
1990 ஆம் ஆண்டு, நான் எனது மேலாண்மைப் படிப்பை முடித்ததும், கல்லூரியில், வேலைக்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஒன்று ASSEFA (Association of Sarva Seva Farms). மதுரையில் வேலை. ஆனால், ஊதியம் மிகக் குறைவு. எனக்கு அறிவு அதைவிடக் குறைவு. அம்மாவையும், ஜெகன்னாதன் ஐயாவையும் அறிந்திராத காலம். தொழில் உலகை எனது மேலாண் அறிவின் மூலம் வெல்லும் நோக்கம் வேறு. எனவே வேறு வேலைக்குச் சென்று விட்டேன்.
லௌகீகப் பாதையில் சென்று, மீண்டும் அம்மாவின் காலடிக்குத் திரும்ப 29 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவர்கள் கைகளைப் பற்றியதும், அதன் அணுக்கத்தை வாங்கிக் கொண்டேன். அடுத்த சில மணி நேரங்கள் தன்ணுணர்வில்லாமல் தான் கழிந்தது.
2008 ஆம் ஆண்டில்தான் உங்களை அறிந்து கொண்டேன். எழுதவும் பேசவும் ஆர்வம். ஆனால், தயக்கம். ஜெயகாந்தனும், சு.ராவும், அசோகமித்திரனும் ஆண்டு கொண்டிருக்கும் தளத்தில் எழுத என்ன தகுதி என்னும் எண்ணம் தடுத்துக் கொண்டிருந்தது. நான் எழுதலாமா என உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். மிக நீளமாக, சமுகத்தில் எழுதப்படாத, ஆவணப்படுத்தாத தளங்கள் எவ்வளவு உள்ளன என்பதை எடுத்துக் காட்டினீர்கள். மேற்கத்திய சமூகங்களில் குடும்ப வரலாறுகள் எழுதப்படுவதையும் சுட்டிக் காட்டினிர்கள். “எழுது. அதுவே அதன் ரகசியம்” என்னும் சு.ராவின் ஆப்த வாக்கியத்தின் விரிவான இன்னொரு அர்த்தத்தை உணர்த்தினீர்கள்.
சமீபத்தில், அம்மா, பொதிகைத் தொலைக்காட்சிக்கு கொடுத்த ஒரு நேர்காணலில், கீழ்வெண்மணியைப் பற்றிச் சொன்னார்கள். இந்த நிகழ்விலும்.
அது நிகழ்ந்த மறுநாள், கீழ்வெண்மணிக்குச் சென்ற அவர்கள், அங்கே தீயினால் எரிந்த உடல்களைக் கண்டு அழுகிறார்கள். ஆனால், அந்தக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை. சட்டபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
அந்தச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான மாற்றுவழிகளை முன்னெடுக்கிறார்கள். அந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன என யோசித்து, அதைக் களைகிறார்கள். நிலமற்ற அந்தச் சமூகத்தை நில உடமையாளர்களாக்குகிறார்கள்.
வினைக்கு எதிர்மறை வினையல்ல காந்தியம். வினைக்கான காரணத்தை அறிந்து, அதன் மூலப் பிரச்சினையைச் சரி செய்வது.
கீழ்வெண்மணிப் பிரச்சினைக்கு எதிர்மறை வினையாக ஒரு போராளி வந்து, நில உடமையாளர்களில் ஒருவரைக் கொடூரமான முறையில் கொன்றுவிட்டுச் செல்கிறார். அதன் பின்னர் அதற்கு எதிர்வினையாக, அவர்களின் தரப்பு மீண்டும் நிலமில்லா மக்கள் மீது பதில் வன்முறையை நிகழ்த்துகிறது.
ஆனால், அம்மாவின் செயல், நிலமில்லா மனிதர்களை, நில உடமையாளர்களாக்கி, ஒரு வேளை உணவுக்காக, இன்னொரு மனிதரைச் சார்ந்திருக்கத் தேவையில்லா நிலையை உருவாக்குகிறது. காலம் பிடிக்கும் தீர்வுதான் – ஆனால், உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதன் பின் விளைவாக, பதிலுக்குப் பதில் உயிர்கள் பலியாகும் சங்கிலியின் இணைப்பை என்றென்றுக்குமாக அறுத்து விடுகிறது.
காந்தியம் என்பதன் செயல் விளக்கம் இதுதான். இதைவிட உயர்வான ஒரு அறத்தை உலகின் எந்த மதமும், புனித நூலும் சொல்லிவிடப் போவதில்லை.
நேற்றைய அந்த மூன்று மணிநேரமும், எனது போதாமைகளை மீளாய்வு செய்து கொண்டிருந்தேன். எனது இடதுபுறம் அமர்ந்திருக்கும் என் ஆதர்சங்களின் வழியில் நான் மேலே செய்ய வேண்டியது என்னவென இன்னும் விளங்கவில்லை.
சிவராஜை அன்றுதான் முதன்முதலில் பார்த்தேன். அன்று காலை, கம்பராமாயணத்தின் குகனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள். நிகழ்வு முழுதும் அதை நினைவு படுத்திக் கொண்டேயிருந்தார். நினைவுப் பரிசுகளை வழங்க ஒவ்வொருவரையும், அவர்களுடனான தன் நட்பைச் சொல்லி அழைத்த விதமும், அந்த உணர்வுப் பிணைப்பும் அலையலையாய் எழுந்து அந்தக் கூட்டத்தை மூழ்கடித்துக் கொண்டேயிருந்தது.
கூடலூரில் அக்கார்ட் என்னும் நிறுவனம் உண்டு. கூடலூர் ஆதிவாசிகளின் முன்னேற்றத்துக்காகவே தங்கள் வாழ்நாளைக் கொடுத்து உழைக்கும் நண்பர்கள். ஸ்டேன், ராம்தாஸ், டாக்டர்.நந்தகுமார், ஷைலஜா நந்தகுமார், துர்கா, மனோகரன் என்னும் ஒரு குழு. வார இறுதிகளில், டாக்டர் நந்தகுமார் அவர்கள் வீட்டில் விருந்து உண்டு. இசையும், விருந்தும் அமர்க்களப்படும். காந்தியம் என்றால், இறுகிய அர்ப்பணிப்பு என்று மட்டுமே அதுவரை அறிந்திருந்தேன். அந்த vibe எனக்குப் புதிதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்த்து. இந்த ஊழியரக விழாவில், இளைஞர்கள் மத்தியில் எழுந்த ஆரவாரமும், கூக்குரலும், சீட்டியும் மீண்டும் அதே உணர்வை எழுப்பின. நீங்கள் ‘லிகித்’, எனப் பெயரிட்ட அந்தப் பூங்குழந்தையைக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் உற்சாகம் ததும்பிய சிரிப்பு – இவையனைத்தையும் உணர்வுப் பூர்வமாக இணைத்த சிவராஜின் ஆளுமை..
நிகழ்வில் நான் சந்திக்க விரும்பிய இன்னொரு நண்பர் வந்திருந்தார் – கண்ணன் தண்டபாணி. ஊருக்கொரு காந்தி இருப்பார் என்னும் ஜெயகாந்தனின் வரிகளை நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பவர். சமீபத்தில், அவரது துணை, நித்யா ஒரு நிகழ்வில் உரையாற்றி, அவர்கள் குடும்பத்தில் புது தாதாவாக உருவாகியிருக்கிறார். அவர்கள் குழந்தை, பாடகி மகிழ் அவர்களின் ரசிகர் மன்றத்தலைவன் நான்.
ஸ்டாலினையும் அன்று காலையில்தான் முதன் முதலில்தான் பார்த்தேன். இரு வாரங்கள் முன்பு, சோனம் வாங்க்சுக்கை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு, மிக நீளமாகப் பேசினார். மதிய விருந்தில், அந்த இனிப்பு உருண்டை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது. ஆரவாரமில்லாத, நேர்மறை ஆளுமை.
சந்திப்பில், என் மனதுக்கினிய இளம் அரசியல்வாதி முருகானந்தம் வந்திருந்தது மிக உற்சாகமாக இருந்தது. களப்பணியில் தன்னை மிக இளம் வயதிலேயே இணைத்துக் கொண்ட செயல்வீரர். கிளம்பும் முன்பு அவரை எழுதச் சொன்னீர்கள். எழுதுங்கள் என நானும் வேண்டிக் கொள்கிறேன்.
எழுத்தாளனாக என்னை முதன் முதலில் கையெழுத்து இடச் சொன்ன நண்பர் கிருஷ்ணனுக்கு நன்றி. மூன்று வார விடுமுறை என்பது பயணத்திலேயே கரைந்து விடக் கூடிய ஒன்று. அன்று கிடைத்த சிறு அவகாசத்தில் ராஜமாணிக்கத்துடன் சண்டை போட முடியவில்லை. அதைத் தீர்த்துக் கொள்ளும் வகையில், விஜயராகவனுடன் ஞாயிறு மதியம் கொங்கு மட்டன் குழம்புடன் கொண்டாடிவிட்டேன்.
அடுத்த வாரம் திருவண்ணாமலை சென்று இரண்டு நாட்கள் தங்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இறையருள் அதை நிறைவேற்றி வைக்கட்டும்.
சென்னையிலிருந்து வந்து, காந்திகிராமம் செல்லும் விலக்குச் சாலையில் காத்திருந்த போது, வந்து என்னை அணைத்துக் கொண்டீர்கள். அந்த அணைப்பின் கதகதப்பை, அடுத்த முறை சந்திக்கும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அன்புடன்
பாலா