காந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன்

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம்.

சென்ற வாரம் சென்னை வந்திருந்த குக்கூ சிவராஜ் அண்ணன் தொலைபேசியில் அழைத்தார். குரலில் அதீத உற்சாகம் “செந்தில் சென்னைலதான் இருக்கேன் புத்தகம் வந்துடுச்சி செந்தில் அதான் தொட்டுப் பார்த்துட்டுப் போக வந்தேன் செந்தில்..” என்று நெகிழ்ந்து பேசினார்.

எனக்கு அந்தக்கணமே அவரை  சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை, சிவராஜ் அண்ணன் கரங்களில் பார்க்கும்போது, வெளிநாட்டில் இருந்துவிட்டு வந்த தகப்பன் தன் குழந்தையின் மூடியிருக்கும் விரல்களைத் திறந்து பார்ப்பதுபோல இருந்தது. மனம் பொங்கி அன்று மிகுந்த சந்தோஷமாக உணர்ந்தேன்.  காரணம் இந்தப் புத்தகம் வெளி வரவேண்டும் என்பதற்காக அவர் அடைந்த அகத்தவிப்பை  அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்.

எங்களின் சந்திப்பின் முதல் உரையாடலிலேயே  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவைப் பற்றியும் அவர் எளிய மக்களுக்காக நடையாய் நடந்து நிலங்களை பெற்றுத் தந்தது பற்றியும் அண்ணன் நினைவுகூர்ந்தார். அப்பொழுதே அவரைப் பற்றிய புத்தகத்தை கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளில் இருக்கிறோம் என்று சொன்னார். இது நடந்து  கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இன்று அந்த புத்தகத்தோடு அவரை பார்க்கும்போது மனம் நிறைந்திருந்தது.

“அண்ணா புத்தக வெளியீடு எப்போ?” என்று கேட்டேன் “அதுக்கென்ன செந்தில் எதாவது ஒரு மரத்தடிக்கு கீழே வைத்து எளிமையாக வெளியிட்டுவிடலாம்” என்றார்.

அடுத்த இரு தினங்களில் எனக்கு போன் செய்து செந்தில் அடுத்த வாரம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் புத்தக வெளியீடு என்று சொன்னார்.

சென்னையில் நீங்கள் கலந்து கொண்ட இலக்கிய விழாக்களில், உங்களின் உரையைக் கேட்க நண்பர்களோடு வந்திருக்கிறோம். அங்கெல்லாம் உங்களிடம் பேசுவதற்கோ, புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ தயங்கி, மனத்தடையோடு திரும்பி விடுவேன். இதுபற்றி சிவராஜ் அண்ணனிடம் பகிர்ந்துகொண்ட போது இந்த முறை அந்த தடையை உடைத்துவிடலாம் என்றார்.

காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த போது இரண்டு வகையான மனநிலைகளில் இருந்தேன்.

குக்கூ சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது உண்டாகும் உணர்ச்சி பெருக்கு,  உங்களிடம் என்னை தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைப்பதாக சிவராஜ் அண்ணன் சொல்லியிருந்ததால் ஒருவகையான பதட்டம் என அந்த நாள் முழுதுமே இரு வேறு  உணர்வுக் கலவையால் நிறைந்திருந்தேன்.

காந்தியர்களின் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில், முப்பத்து ஏழு வருடங்களாக வள்ளலாரின் பெயரில் அன்னதானம் அளிக்கும் பழுத்த பழமான அந்த கண் தெரியாத முதியவர் பாடிய வள்ளலார் அகவல் நிகழ்வுக்கு மிகப் பொருத்தமானதாக இருந்தது. கண்ணை மூடிக் கேட்கும்போது என் பத்து வயதில் குடும்பத்தோடு வடலூர் சத்யஞான சபையின் பெரும் சோதியின் முன்னால் கண்ணீரோடு நின்றுகொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

குக்கூ முன்னெடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மிகப் பிரம்மாண்டமானவை. அது ‘எளிமையின் பிரம்மாண்டம்’

எந்த நிகழ்வு துவங்குவதற்கு முன்னும் குக்கூ நிலத்தின்  பிரார்த்தனை நடக்கும், அந்த பிராத்தனையை பார்க்கும்போதெல்லாம் “புனிதமான அறியாமையின் முன் கடவுள் தன் இரக்கமற்ற விதிகளையெல்லாம் தளர்த்திக்கொள்ள வேண்டும்” என்ற உங்களின் வரிகள்தான் நினைவுக்கு வரும். பனை ஓலையில் வரையப்பட்ட வள்ளலார் படத்தின் முன் அகல்விளக்கு ஏற்றி நிகழ்வு துவங்கும், சிறிய பனை ஓலை பொம்மைகளால் நிகழ்வு நடக்கும் இடம் அலங்கரிக்கப்பட்டிருக்கும், எல்லோரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து வரவேற்பார்கள், வெள்ளையாய் சிரிப்பார்கள், குழந்தைகள், மாணவர்களின் பங்களிப்புகள் இருக்கும், நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு ஒழுங்கு இருக்கும். எல்லோரும்  செயல் பரபரப்பில் இருப்பார்கள்.

விளக்கெரியும் நல்லெண்ணை வாசனையோடு, அன்பு மட்டுமே அந்த இடம் முழுக்க பரவியிருக்கும்.

அன்று அந்த இடத்தை மேலும் வெளிச்சமாகியது உங்களின் உரை. உலகின் முன்மாதிரி அரசியலமைப்பு வரைவு கொண்டிருக்கும் நாடான  அமெரிக்காவில் இன்றளவும் கறுப்பின மக்களுக்கு சம உரிமை  இல்லை, பெரும்பாலான கறுப்பின மக்களுக்கு  குடியிருக்க வீடுகள் இல்லை, வீடற்றவர்கள் குடிநோயாளிகளாக மாறுகிறார்கள்,  உலகிலேயே  சிந்தனையிலும் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடு என்று சொல்லப்படுகிற அமெரிக்காவில் இன்னமும் சக மனிதர்களை சமமாக பாவிக்கும் ”அனைவரும் சமம்” என்ற சிந்தனை வளரவே இல்லை.

அமெரிக்காவில் இன்றுவரை சாத்தியப்படாத சமத்துவ எண்ணம், மனிதர்கள் எல்லோரும் சமம் என ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இந்தியர்களுக்கு இருப்பதில் காந்தியத்தின் பங்கு பற்றிய உங்களது உரையை அங்கு வந்திருந்த எங்களைப் போன்ற பல இளைஞர்களுக்கு காந்தியத்தைப் பற்றிய பெரும் புரிதலை உண்டாக்கியிருக்கும். காந்தி தன்னைப்போலவே பல காந்திகளை உருவாக்கியதாலேயே அவர் மகாத்மா என்று நீங்கள் கூறியது காந்தியைப் பற்றிய தெளிவான சித்திரத்தை அந்த அரங்கத்தில் வந்திருந்தவர்களுக்கு உண்டாக்கியது.

சிவராஜ் அண்ணன் அன்று பேசியதைப் போல தன்னை கேலி கிண்டல் செய்து வசைபாடும் மனிதர்களுக்கும் சேர்த்து எழுதும் எழுத்தாளர் என்று உங்களைப் பற்றி குறிப்பிட்டார். அதுதான் எவ்வளவு பொருத்தமானது?

இத்தனை வசவுகளையும் விமர்சனங்களையும் மீறி தொடர்ந்து எப்படி உங்களால் படைப்பூக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்று கேள்வி எழும்.

காந்தியத்தை தொடர்ந்து வலியுறுத்தக் கூடிய, காந்தியை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க கூடிய ஒருவருக்கு அது எளிமையானதுதான். எந்த வகையான விமர்சனமும் வசவுகளும் கேலிப் பேச்சுகளும் காந்தியர்களின் செயல்களை   தடுக்க இயலாது என்பதுதான் அது.

உங்களின் செயல்கள் வழி நீங்கள் எங்களுக்கு சொல்லும் செய்தியாக நான் உணர்ந்து கொண்டது இதைத்தான்.

சமரசம் அற்றவனாக நாம் நம்மை அந்தரங்கமாக உணரும் போது ஏற்படும் கர்வத்தைப் போல சுகமானதாக ஏதுமில்லை என்று சுந்தர ராமசாமியிடம் இருந்து கற்றதாக நீங்கள் ‘நினைவின் நதியில்’ புத்தகத்தில் எழுதியிருந்ததைப்  போல உங்களிடம் இருந்து நாங்கள் அதைத் தொடர்ந்து கற்று வருகிறோம்.

காந்தியர்களின் பண்பே அதுதான்! எந்த வகையிலும் தன் அகிம்சையை சமரசம் செய்து கொள்ளாத காந்தியை பின்பற்றுபவர்கள்  இப்படித்தான் இருப்பார்கள். என்பதற்கு உதாரணமாக இருந்தது கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களின் பேச்சு.  அவரது உரையில் சாராம்சமாக ‘செய் அல்லது செத்துமடி’ என்ற காந்திய வரிகள் இருந்தது.

அம்மா அவர்களின் சமரசமற்ற  குணமே அவரை அத்தனை எளிய மக்களுக்கு நிலங்களை பெற்றுத்தர உத்வேகமளித்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு நிலம் பெற்று தருவதற்காக  நெடுந்தூரம் நடையாய் நடந்த அந்த பாதங்களைத் தொட்டு வணங்கி கிருஷ்ணம்மாள்  ஜெகந்நாதன் அம்மாவிடம் சென்று “சுதந்திரத்தின் நிறம்”  புத்தகத்தில் கையெழுத்து கேட்டேன். நடுங்கிய கரங்களைக் கொண்டு ஓவியம் வரைவதைப் போல கையெழுத்திட்டுக் கொண்டே என் தலையில் கைவைத்து “நீ எந்த ஊருப்பா”  என்று கேட்டார். நான் என் ஊரை சொன்னதும் “உங்க ஊரில் ஏகப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன,  அதே ஊரில் இன்னமும் குடியிருக்க நிலமற்ற மக்கள் இருக்கிறார்களே.. அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் நான் இப்படி இங்கே உட்கார்ந்து இருக்கிறேனே” என்று மனக்கலக்கமுறுகிறார், அன்றாட அரசியலைப் பற்றி வருத்தப் படுகிறார்.

எனக்கு உடல் சிலிர்த்து நடுங்க ஆரம்பித்துவிட்டது ஒரு 94 வயது மூதாயின் அந்த வார்த்தைகள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தன சின்ன விஷயங்களுக்கு சலித்துக் கொள்ளும் சிறு விஷயங்களை அடைவதற்கு மிகப்பெரிய மனப் போராட்டங்களை சந்திக்கும் எங்கள் தலைமுறை காந்தியர்களிடம் இருந்து கற்க வேண்டியது இந்த குணத்தை தானே என்று அந்த கணம் எனக்கு ஒரு பெரிய தரிசனமாக அமைந்தது.

நிகழ்வு முடிந்து சிவராஜ் அண்ணன் உங்களுடன் புகைப்படம் எடுக்க அழைத்து வந்தார். உங்களைப் பார்த்ததும் “இவ்வளவு சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும், பேசுவதற்கும் மிக அதிகமாக வாசித்த ஒரு ‘ஞான யானை’யின் பக்கம் நாம் நின்று கொண்டிருக்கிறோம்”  என்ற எண்ணம்தான் என் மனதில் தோன்றியது.

உங்களோடு இருக்கும் இந்த புகைப்படம் கைக்குக் கிடைத்த உடனே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. புகைப்படத்தில் என் விழிகளில் திரண்டிருக்கும் நீர் இத்தனை காலமும் தன் எழுத்தின் மூலம் பல வாசக மனங்களை சமநிலையில் வைத்திருந்த ஒரு பெரும் படைப்பாளிக்கான எளிய வாசகனுடைய அன்பின் சாட்சி!

– செந்தில் ஜெகன்நாதன்.

மயிலாடுதுறை

***

முந்தைய கட்டுரைஓர் அரிய நாள் -பாலா
அடுத்த கட்டுரைமீமொழி