கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி]

இங்கே சினிமா குறித்த பேச்சுக்களில் சில வகையான மொண்ணைத்தனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.

அ.சினிமா என்பது ஒரு கலைவடிவம். முதன்மையாக அதன் கலைத்தன்மையே ரசனை மற்றும் மதிப்பீட்டில் கருத்தில்கொள்ளப்படவேண்டும். மாறாக சினிமாவில் ஏற்கத்தக்க அல்லது தேவையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை நல்ல சினிமா என்று சொல்வது அக்கலைக்கே எதிரான பார்வை. ஆனால் இங்கே ஓங்கியிருப்பது அதுவே. சாதகமான அரசியல்நிலைபாடு கொண்ட படம் நல்ல படம் என எச்சில் தெறிக்கக் கூச்சலிடும் அரசியல்விமர்சகர்கள் போல சினிமாவுக்கு எதிரானவர்கள் வேறில்லை

அரசியல் நோக்கில் சினிமாவை ஆராயலாமா? ஆராயலாம். அது அரசியல்நோக்காக மட்டுமே முக்கியமானது. அரசியல்நோக்கில் ஒரு சினிமா கொண்டாடப்படும்போதே அதன் கலைக்குறைபாடும் சுட்டப்படும் சூழலிலேயே நல்ல சினிமா வாழ்கிறது.

ஆ. வணிக சினிமாவை சமூகவியல், அரசியல் கோணத்தில் ஆராயலாமா? ஆராயலாம், ஆனால் அவையெல்லாம் சமூகவியல் அரசியல் ஆய்வுகளே ஒழிய சினிமா ஆய்வுகள் அல்ல. சமூகவியல், அரசியல் ஆய்வுகளுக்கு சினிமா அங்கே கச்சாப்பொருள் ஆகிறது. களஆய்வுத் தரவுகள் போல, நூல்பதிவுத் தரவுகள் போல சினிமா தரவுகளை அளிக்கிறது.

வணிகக் கலையை சமூகம் குறித்த தரவுகளின் தொகையாகக் கருதலாம் என்னும் பார்வை சென்ற நூற்றாண்டில் அண்டோனியோ கிராம்ஷியிலிருந்து உருவாகி வந்தது. அந்நோக்கு ஐரோப்பிய ஆய்வுச்சூழலில் பலபடிகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதை அப்படியே இங்கே கொண்டுவருபவர்கள் அந்த ஆய்விலுள்ள நுட்பமான பல உள்ளோட்டங்களை, அவற்றை உணரும்பொருட்டு உருவாக்கப்பட்ட கொள்கைகளை அறிவதில்லை. கொள்கைகளை அறிந்த கல்வித்துறையாளர்கள் அவற்றை அப்படியே எழுதி வைப்பார்களே ஒழிய அவர்களுக்கு அவை பயன்படுவதில்லை. அவர்களின் கல்வி என்பதே படித்து ஒப்பிப்பது மட்டும்தான்.

ஆகவேதான் ஒரு வணிக சினிமாவை ஆராயும்போது அதை எடுத்தவனை அரசியலறியாதவன் என்றோ சினிமா தெரியாதவன் என்றோ வசைபாடும் அசட்டுத்தனம் இங்கே நிகழ்கிறது. வணிகக்கலையை ஒருவகை மோசடி என்றும் மக்களை ஏமாற்றுவது என்றும் கூறுகிறார்கள். வணிகக்கலை என்பது ஒரு பெரும் உரையாடல். அதன் ரசிகர்கள் அதை வடிவமைக்கிறார்கள். அது யதார்த்தத்தைச் சொல்வது அல்ல. பலசமயம் பகற்கனவுகளைச் சொல்வது. மக்களின் ரகசிய அச்சங்களை, உளத்திரிபுகளை வெளிப்படுத்துவது.

மக்கள் எதை வெளிப்படுத்த விழைகிறார்களோ அதை நேர் எதிராகக்கூட அது வெளிப்படுத்தும். அத்தகைய பாவனை மக்களுக்குத் தேவையாக உள்ளது. உதாரணமாக, உச்சகட்ட வன்முறை வெளிப்படும் படங்கள் வெளிவரும் நாடுகளில் பொதுவாக அமைதிச்சூழலே நிலவும். வன்முறைசார்ந்த ஹீரொ வழிபாடு எந்தநாட்டுப் படங்களில் உள்ளதோ அந்தநாட்டில்தான் ஜனநாயக மதிப்பீடுகளில் மக்கள் பொதுவாக நம்பிக்கை வைத்திருப்பார்கள். உதாரணம் ஐரோப்பா

அதேபோல மொத்தச்சமூகமே வன்முறையில் அழுந்திக்கிடக்கும் நாடுகள் பெரும்பாலும் மென்மையான ஒளிமிக்க படங்களை எடுக்கும். உதாரணம் ஈரான். மனித அகம் போடும் நாடகங்களும் ரகசியவிழைவுகளுமே சினிமாவை தீர்மானிக்கின்றன – இது சினிமா விவாதங்களிலேயே சாதாரணமாக பேசப்படும் ஒரு கருத்து.

ஆம், சினிமாவில் கருத்தியல் மேலாதிக்க நோக்கம் உள்ளது. ஹாலிவுட் படங்களில் ஏகாதிபத்ய நோக்கம் உள்ளடங்கியிருக்கிறது. இந்திய மையநிலப் படம் இந்தியாவை இன்று ஆளும் மையக்கருத்தியலையே முன்வைக்கும். அதையொட்டிய நூற்றுக்கணக்கான நுண்ணிய வெளிப்பாடுகள் அந்தப்படங்களில் இருக்கும். வணிகசினிமா என்பது மக்களின் இயல்பை வெளிக்காட்டுவது. மக்கள் மீதான ஆதிக்கத்தையும் வெளிக்காட்டுவது. ஆய்வாளகாள்அவற்றை தொட்டுக்காட்டுவதும் சினிமா ஆய்வுதான்.

ஆனால் அவ்வாறு ஆய்வுப்பொருளாக வணிக சினிமாவை எடுத்துக்கொள்வது வேறு, வணிக சினிமாவை ஒரு மாபெரும் சமூகநிகழ்வாகக் கொண்டாடிக் கூத்தாடுவது வேறு. நெடுங்காலம் இங்கே அறிவியக்கவாதிகள் வணிகசினிமாவை முழுமையாகப் புறக்கணித்தார்கள். பின்னர் அவ்வாறு புறக்கணிக்கக்கூடாது, அவை சமூகத்தின் ஆவணங்கள் என்னும் கருத்து வந்துசேர்ந்தது. குறிப்பாக 1980களில் ‘இனி’ போன்ற சிற்றிதழ்களில் தியடோர் பாஸ்கரன் போன்றவர்களால் அக்கருத்து வலியுறுத்தப்பட்டது. அவர் ஆய்வுநோக்கிலேயே வணிகசினிமாவை ஆராய்ந்தார்

ஆனால் அவ்வாறு வணிகக்கலையை ஆராய்வதற்கான எந்த நவீன அறிவுக்கருவியையும் அதன்பின் இங்குள்ளவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே அவர்கள் டீக்கடையில் நின்று என்னென்ன பேசிக்கொண்டிருந்தார்களோ அதையே ஓரிரு கலைச்சொற்களைச் சேர்த்துக்கொண்டு ஆய்வாக முன்வைத்தார்கள். எளிமையான அரசியல் சார்புநிலைகளை எடுத்துக்கொண்டு சினிமாவை அதனடிப்படையில் மதிப்பிடுதல், பொதுப்புத்தியைக்கொண்டு சினிமாவின் உள்நோக்கங்களை கண்டடைய முயல்தல், வழக்கமான ஒழுக்க, அரசியல்சரி நோக்குகளின் அடிப்படையில் சினிமாவை மதிப்பிடுதல் ஆகியவையே இங்கே நிகழ்ந்தன

தமிழ் ஊடகச்சூழலில் அப்போதுதான் இடைநிலை இதழ்கள் வந்தன. அவை அனைத்துமே ஐந்தாயிரம் பிரதி என்னும் இலக்கை அடைந்து நின்றுவிட்டன. இன்று இணையம் வந்தபின் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆனால் அன்று அவை பத்தாயிரம் பிரதி என்னும் கனவை மேற்கொண்டிருந்தன. ஏனென்றால் பத்தாயிரம் பிரதி என்பது ஆப்செட் அச்சில் அடுத்தகட்டத்துக்கான நகர்வு. அதன்பொருட்டு அவை ‘மக்களுக்குப் பிடித்தமான’ விஷயங்கள் நோக்கி திரும்பின.

இங்கே வணிகசினிமா மக்களின் பெருங்கனவு. ஆகவே இடைநிலை இதழ்களும் வணிக சினிமாக்களைப்பற்றி கட்டுரைகள் வெளியிட தொடங்கின. ஆனால் ஏற்கனவே குமுதமும் விகடனும் வெளியிடும் விமர்சனக்குறிப்புக்களை இவை வெளியிட முடியாது. வேறுபாடு காட்டவேண்டும். ஆகவே  ‘சினிமா ஆய்வு’ என்னும் பாவனை தேவையாகியது. ஒரு சினிமா வெளிவரும்போது விகடனிலும் அதுதான் அட்டைக்கட்டுரை. இடைநிலை இதழிலும் அதுவே அட்டைக்காட்டுரை. இடைநிலை இதழ் அதற்கு ஒரு ஆய்வுச்சாயலை அளிக்கும். வெறும் பாவலாதான். பொத்தாம்பொதுவான கருத்துக்களும் மதிப்பீடுகளுமே இருக்கும்.

இந்தப் பாவனையால் நம் சினிமா ரசனையிலேயே மிகப்பெரிய வீழ்ச்சி உருவாகியது. வணிகசினிமாவை ரசித்து கொண்டாடி மகிழ்வதும் ஒருவகை அறிவுஜீவிச் செயல்பாடே என நம்மவர் எண்ணிக்கொண்டார்கள். சிந்தனையின் ‘கனத்தை’ இறக்கி வைத்துவிட்டு மக்களோடு மக்களாக கொண்டாடுகிறார்களாமாம். டீக்கடையின் சினிமா அரட்டைகளே அறிவுஜீவிகளின் இதழ்களிலும் நிரம்பின

நான் சினிமா பற்றி பேசக்கூடாது என நினைப்பவன். ஏனென்றால் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு படங்களைப் பார்ப்பவன் அல்ல. அதில் அறிஞனும் அல்ல. மேலும் இங்கே எங்கும் எதிலும் சினிமா, ஆகையால் சினிமா இல்லாமலேயே என் தளம் வெளிவரட்டும் என நினைப்பேன். ஆனால் அவ்வப்போது என் உளம்கவர்ந்த சினிமாக்களைப் பற்றி எவரேனும் ஏதேனும் எழுதியிருக்கிறார்களா என்று பார்ப்பேன். ஒரு வரிகூட எழுதப்பட்டிருக்காது. அதேசமயம் ஒவ்வொரு வணிகப்படம் பற்றியும் பக்கம் பக்கமாக வெற்று அரட்டைகள் எழுதிக் குவிக்கப்பட்டிருக்கும். 

இந்தியாவில் ஒரு கலைப்பட இயக்கம் நிகழ்ந்தது. 1970களில் அது தொடங்கியது எனலாம். பாதேர் பாஞ்சாலி அதன் தொடக்கம் என்றாலும் இந்திய மொழிகளில் அதன் அலை மெல்லத்தான் நிகழ்ந்தது. மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சுயம்வரம்’ தமிழில் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகியவை அதன் தொடக்கங்கள். கன்னட, மராட்டிய, இந்தி கலைப்பட உலகம் விரிவானது. தமிழில் அதைப்பற்றி எவரேனும் பொறுப்பாக எதையாவது எழுதியிருக்கிறார்களா? முழுமையாக அவ்வியக்கத்தை அறிமுகம் செய்யும் நூல்கள் உள்ளனவா? செய்திகளை தேடி எடுக்க ஓர் இணையதளம் உண்டா?

தமிழ்க் கலைப்பட இயக்கம் விரைவிலேயே தேங்கி அழிந்தது. ஆனால் இங்கே செய்யப்பட்ட முன்னோடி முயற்சிகள் குறித்த தகவல்தொகுப்பே நம்மிடம் இல்லை. அதைப்பற்றிய ஒரு எளிய புரிதல்கூட உருவாகவில்லை. அந்நிலையில் நாம் மேலே செல்வதைப்பற்றி என்ன யோசிக்கமுடியும்?

நான் இங்கே சினிமா குறித்த பேச்சுக்களை பொதுவாகக் கவனிப்பவன். சினிமாவின் அழகியல் குறித்த பேச்சுக்கள் அனேகமாக இல்லை. கலைப்படங்கள் பற்றிய அறிமுகம் இல்லை. நிகழ்பவை சினிமாவின் அரசியல்நிலைபாடுகளைப் பற்றிய பேச்சுக்கள். சினிமா பற்றிய பொத்தாம்பொதுவான அரட்டைகள் நிகழ்கின்றன. சில்லறை தகவல்பிழைகளை கண்டுபிடிப்பது, எள்ளிநகையாடுவது, ஏதாவது மேலைநாட்டு படத்துடன மேலோட்டமாக ஒப்பிடுவது போன்றவை அடிக்கடிக் காணக்கிடைக்கின்றன.

உண்மையில் இச்சூழலே இங்கே கலைப்படம் உருவாகப் பெருந்தடை. மலையாளச் சூழலில் படங்களின் வகைபாடு குறித்த தெளிவு இருப்பதுதான் முதன்மையாகச் சுட்டவேண்டியது. தமிழின் எந்த இயக்குநருக்கும் நிகரானவரான ஐ.வி.சசி அங்கே தலைசிறந்த வணிகப்பட இயக்குநர் மட்டுமே. அழகிய படங்கள் பலவற்றை எடுத்த பரதனும் சிபி மலையிலும் இடைநிலை சினிமாவின் சிறந்த இயக்குநர் மட்டுமே. அடூர் கோபாலகிருஷ்ணனும் அரவிந்தனும் ஷாஜி என் கருணும்தான் கலைப்பட இயக்குநர்கள்.

கலைப்படங்களைக் குறித்த விவாதங்களே அங்கே மிகுதி. ஒரு கலைப்படம் சில ஆண்டுகளேனும் பேசப்படும். தொடர்ச்சியாக முந்தைய படங்களுடன் ஒப்பிடப்பட்டு அதற்கு ஒரு தொடர்ச்சி நிலைநிறுத்தப்படும். அதன் கலைத்தன்மையே முதலில் பேசப்படும், உள்ளடக்கம் அதன் தொடர்ச்சியாகவே பேசப்படும். தமிழில் உருவாகவேண்டிய உளநிலை இதுதான். அதன்பின்னரே நாம் இங்கே கலைப்படங்கள் உருவாவதைப் பற்றிப் பேசமுடியும்.

[மேலும்]

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…4

முந்தைய கட்டுரைபூதான் சாதி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-44