’தீட்டு ’

img_2723
செங்கன்னூர் பகவதியின் உடையாடை, புனிதத்தீட்டு

 

 

கனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை”.

இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். ஆழ்ந்த முழுமைத்தேடலால், மெய்மைநோக்கிய பயணத்தால் அவ்விடைகள் கண்டடையப்படுகின்றன. அவ்வாறு கண்டடைபவர்களைத் தொடர்பவர்கள் அவ்விடைகளை  மேலும் முன்னெடுக்கிறார்கள். அவற்றை தத்துவார்த்தமாக நிறுவ முயல்கிறார்கள். இன்னொரு பக்கம்  குறியீடுகள் மூலம் அன்றாட வாழ்க்கையின் பகுதிகளாக ஆக்குகிறார்கள். அக்குறியீடுகளின் பெருந்தொகை வழிபாட்டுமுறைகளாக, நம்பிக்கைகளாக அந்தமதத்திற்குள் நீடிக்கும்

குறியீடுகளை மதம் மரபிலிருந்து பெற்றுக்கொள்கிறது. சிலசமயம் மறுவிளக்கம் அளிக்கிறது. குறியீடுகள் பெரும்பாலானவை நம் பழங்குடி வாழ்விலிருந்து கிளைத்தவை. பழங்குடிமனம் பிரபஞ்சத்தை, வாழ்க்கையைப் புரிந்துகொண்ட முறையின் விளைவுகள் அவை. எல்லா மதங்களிலும் பழங்குடிவாழ்க்கையின் தடங்கள் இருக்கும்.  எந்த மதமானாலும் அதன் அடிப்படைக் குறியீடுகள் மிகத்தொன்மையான பழங்குடிவாழ்க்கைக்குள் இருக்கும். ஏனென்றால் ஒரு சமூகம் முழுமைக்குமாக ஒரு நம்பிக்கையை எவரும் நிறுவிவிட முடியாது. மதம் அதற்கு தத்துவார்த்தமான வளர்ச்சியும் ஆழமும்  மட்டுமே அளிக்கிறது

நம் ஆழ்மனம் குறியீடுகளினாலானது. ஆகவே மரபால் ஆனது. ஆகவே மதத்தில் நம்மையறியாமலேயே வேரூன்றி நிற்பது. மதத்தைத் தத்துவார்த்தமாக முற்றிலும் நிராகரித்து ’எனக்கு வேர்களே இல்லை’ என்ற பாவனையில் வாழலாம். ஆனல் அது கலைகள் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தும் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தும் நம்மைப் பிரித்துவிடும். அது ஒரு வெற்றுவாழ்க்கை. அதேசமயம் மதத்துடன் மரபுடன் உள்ள ஈடுபாடு சமகால வாழ்க்கையில் இருந்து பெற்ற நடைமுறைத் தெளிவை கருவியாக்கி ஓயாமல் மறுபரிசீலனை செய்யப்பட்டபடியே இருக்கவேண்டும்.

மாதவிடாய், பிள்ளைப்பேறு, மரணம் ஆகியவை குறித்த நம்பிக்கைகளும் குறியீடுகளும் எல்லாப் பழங்குடி மரபுகளிலும் இருக்கும். ஏனென்றால் தொல்லுள்ளத்தின் நோக்கில் இம்மூன்றுமே புரிந்துகொள்ள முடியாதவையாக, குருதியுடன் தொடர்புள்ளவையாக உள்ளன. பெரும்பாலான  அடிப்படைக் குறியீடுகளில் இம்மூன்றில் ஒன்றின் தாக்கம் இருக்கும் என்று சொல்பவர்கள் உண்டு. குமரிமாவட்டச் சூழலை வைத்துப் பார்த்தால் பருவமாற்றம், வேளாண்மை ஆகியவற்றின் முக்கியமான உருவகங்கள் எல்லாமே இம்மூன்றுடன் தொடர்புள்ளவை. ஆற்றில் புதுவெள்ளம் வருதல், மரங்கள் பூத்தல், உழுதுபோட்ட மண்ணில் சேறுகலங்கி நொதி வருதல், கடலில் சாகரா எனப்படும் சேற்றுப்படலம் உருவாதல் ஆகியவற்றுக்கெல்லாம் மாதவிடாய் சார்ந்த உருவகங்கள் சொல்லப்படுகின்றன. ஏனென்றால் இவை எல்லாமே கருவுறுதல், வளம்பெருகுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

இந்தியாவில் இம்மூன்றை ஒட்டியும் ஒருவகை தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதைக் காணலாம். இதற்கும் சாதியத்தீண்டாமைக்கும் தொடர்பில்ல்லை. இது எவரையும் நிரந்தரமாக ஒதுக்குவதும் அல்ல.  ஒரு மரணம் நடந்தால் அந்த வீட்டுக்குப் போய்வந்தவர்கள் எல்லாமே தீண்டப்படாதவர்களாக ஆகி தீட்டுக் கழிக்கவேண்டியிருக்கிறது இன்னமும். அத்தெருவில் பிணம் அகற்றப்படுவதுவரை தென்னாடு உடையவன் ஆனாலும் அவனது இடப்பாதியானாலும் ஆலயத்தைத் திறக்க முடியாது. இறந்துபோனவர்களின் உதிர உறவுள்ளவர்களுக்கு, குறிப்பிட்ட நாள் வரை ஆலயங்களுக்கோ மங்கல நிகழ்வுகளுக்கோ செல்ல முடியாது. ஆண்கள் பெண்கள் அனைவருக்கும். குமரி மாவட்ட வழக்கில் இது ‘புலை’ எனப்படுகிறது. நெல்லைப்பகுதியில் ‘துட்டி விலக்கு’.

அதைப்போல பிள்ளைப்பேறு நடந்த வீட்டுக்குப் போனாலும் தீட்டு உண்டு. அதன்மூலம் ஆண்கள் உட்பட குறிப்பிட்ட உறவினர்களுக்கு ஆலயவிலக்கு உண்டு. இது இங்கே ‘வாலாய்மை விலக்கு’ எனப்படுகிறது. நெல்லைப்பகுதியில் இது ‘ஈற்றுவிலக்கு’ எனப்படுகிறது. சாவு, பிள்ளைப்பேறு உள்ள வீடுகளுக்குச் சென்றுவந்தவர்கள் குளிக்காமல் வீட்டுக்குள் நுழையமாட்டார்காள். எனக்குத்தெரிந்து இது அனைவராலும் இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இவை தப்பா சரியா , இன்றைக்குத்தேவையா என்பது வேறு கேள்வி. ஆனால் இவை எவரையும் ஒடுக்குவதற்காகவோ, சிறுமைசெய்வதற்காகவோ உருவானவை அல்ல. இவை தொன்மையான பழங்குடிச் சடங்குகள். பழங்குடி வாழ்க்கையிலிருந்து வந்தவையே ஒழிய மதத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. இன்றும் இத்தகைய  ‘தீண்டாமை’ சடங்குகள் தென்னகத்துப் பழங்குடிகளிடம் மிகுதி. உண்மையில் காணிகள், பளியர் போன்ற பழங்குடிகளிடம் மேலும் நான்கு தீண்டாமை சந்தர்ப்பங்கள் உண்டு. ஏழுபெலை என்று அதைச் சொல்கிறார்கள்.[ அன்னியரைத் தொடுதல், எல்லைகளாக அமைந்த ஆறுகளைக் கடத்தல்,  குறிப்பிட்ட சில தெய்வங்களை வழிபடுதல், பன்றி போன்ற சில விலங்குகளைக் கொல்லுதல்]

தலித்துக்களிடம் பிறரைவிட தீண்டாமைச் சடங்குகள் இருந்தமை அயோத்திதாசப் பண்டிதரால் சுட்டிக்காட்டப்படுவதைக் காணலாம். தலித்துக்களுக்கு பிராமணன் தீண்டத்தகாதவன், சாணிநீரால் தீட்டுக்கழிக்கப்படவேண்டியவன் என பண்டிதர் குறிப்பிடுகிறார். தீட்டு உருவானால்  சாணிநீரால் தூய்மை செய்வது பழங்குடிகளின் வழக்கம். எழுபதுகளில் காணிக்காரர்களின் வீடுகளில் எப்போதுமே சாணிப்பால்  இருந்துகொண்டிருக்கும். தீட்டு நடந்தால் உடனே தூய்மைசெய்வதற்காக.

மாதவிடாயின் விலக்கும் இப்படிப்பட்டதே. அது வீட்டுவிலக்கு எனப்படுகிறது. அது அருவருப்பாக ஒதுக்கப்படுவதில்லை. அருவருப்பு தனிமனித மனநிலையாக இருக்கலாம். மரபில் அது ஒரு சிறப்புந்நிலை. அதை அன்றாட வாழ்க்கையில் இருந்து விலக்குகிறார்கள் அவ்வளவுதான். இறப்பு பிறப்பு ஆகியவற்றை விலக்கிய உளநிலையின் நீட்சியே இதுவும்.. இதைமட்டும் பிரித்தெடுத்து பெண்களூக்கு எதிரான பெருங்கொடுமை என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வதற்கு ஒருவகையான முற்போக்குத்தீவிரபாவனை வேண்டும். நம் சூழலில் படிப்பு, சிந்தனை இரண்டும் இல்லாதவர்களின் வழி அது. இங்கே எங்கும் செல்லுபடியாகும் கள்ளநோட்டு.

இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் நம் பழங்குடி மரபின் ஒரு நிழல். அது நம்பிக்கை ஆதலினால் மெல்ல மெல்லத்தான் நீங்கும். நேற்று இவ்விஷயத்தில் காட்டப்பட்ட தீவிரம் இன்று இல்லை, இன்று பெண்கள் மூன்று நாள் ஒதுங்கியிருப்பது ஆசாரம் மிக்க குடும்பங்களில்கூட இல்லை. கல்யாணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில்கூட விலக்கு இல்லை. ஆலயங்களின் விலக்குகளும் மாறும், மாறவேண்டும். இந்துமதத்தில் எந்த ஆசாரமும் புனிதமானவை அல்ல. அதற்காகக் குரல்கொடுப்பது பிழை அல்ல ஆனால் அதற்கு வரலாற்றுணர்வும் பண்பாட்டின் வளர்ச்சிப்போக்கைப் புரிந்துகொள்வதற்கான அறிவும் வேண்டும்.

மேலும் ஒன்றுண்டு. இந்துமதம் ஒட்டுமொத்தமாக மாதவிடாயை அசுத்தம், தீட்டு என்றெல்லாம் விலக்கி வைக்கவும் இல்லை. சக்தி வழிபாட்டில் அது புனிதமாகவே எண்ணப்படுகிறது. நமது பல அம்மன் ஆலயங்களில் அம்மன் மாதவிடாய் அடைவதை பட்டாடை அணிவித்து மங்கல நிகழ்வாக மாதம்தோறும் கொண்டாடும் வழக்கமும் உண்டு. கேரள பகவதி ஆலயங்கள் பலவற்றில் அம்மன்பூப்புச் சடங்கு உண்டு. மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடம் இந்த வழிமுறையை நவீனப்படுத்திக்  கொண்டுள்ளது. மாதவிடாய்க்காலம் மேலும் புனிதக் காலமாக கருதப்படுகிறது அங்கே. அது சாக்த மரபைச்சேர்ந்த முறை.

அதேசமயம் மதங்களில் பெண்களுக்கு இரண்டாமிடம் அளிக்கப்பட்டிருக்கும் உண்மையை நாம் மறைக்க வேண்டியதில்லை. இதில் இந்து கிறித்தவம் இஸ்லாம் உட்பட எந்த மதமும் விலக்கல்ல.   பல மதங்களில் இன்றும் பொதுவழிபாட்டிடங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மதகுருக்களாக பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பெண்புனிதர்களே இல்லாத மதங்களும் உண்டு.பெண்கள் தலைவர்களாக வரமுடியாத மதங்கள் உண்டு.

தாய்வழிபாட்டுக்கு முக்கிய இடமளிக்கும் இந்துமத அமைப்புக்குள்தான் ஒப்புநோக்க பெண்களின் இடம் அதிகம். அதாவது இந்துமதத்துக்குள் பெண்களின் இடம் தத்துவார்த்தமாக அடையப்பட வேண்டிய ஒன்றல்ல. ஞானிகளும் மதநிறுவனத்தலைவர்களுமாக பெண்களின் ஒரு நீண்ட நிரையை இந்துமதத்திற்குள் எவரும் காணலாம். ஆண்டாள்  முதல் அமிர்தானந்தமயி வரை உதாரணமாகச் சொல்லலாம். பெண்களின் இடம் நடைமுறையில் ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து மீறிச்சென்று அடையப்படவேண்டிய ஒன்று. அம்மாற்றம் உறுதியாக நிகழ்ந்துவருவதையே காண்கிறேன்.

அவ்வகையில் கனிமொழியின் கவிதை இச்சூழலில் உருவாகும் ஒரு குரலை எழுப்புகிறது. ஒரு பெண்ணின் எளிமையான ஆதங்கத்தை முன்வைக்கிறது. நடைமுறை மாற்றங்களுக்கான ஓர் அறைகூவல் அது. ஆனால் அது கவிதை என்ற முறையில் ஆழமாகச் செல்லவில்லை. எளிய கருத்து மட்டுமே. கவிதை வரலாற்றையே எளிதாக உள்ளடக்கிக் கொண்டு பேசும் ஒரு தரிசனமாகவே இருக்கும். இப்படி அன்றாட அரசியலை மேடைகளில் இருந்து பெற்றுக்கொண்டு சொல்லிவைக்கும் ஒற்றைப்படை வேகமாக இருக்காது.

 

====================================================================================================

மரத்தடி இணையதாளம் 2004ல் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களில் ஒன்று. எதிர்முகம் என்றபேரில் நூலாக வெளிவந்துள்ளது

முதற்பிரசுரம்  Mar 28, 2004 

 

முந்தைய கட்டுரைகணினியில் எழுதுவது…
அடுத்த கட்டுரைவெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018