«

»


Print this Post

கேள்வி பதில் – 73


கனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை”.

இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

– ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். அவ்விடைகளை அது தத்துவார்த்தமாக நிறுவ முயலும். குறியீடுகள் மூலம் அன்றாட வாழ்க்கையின் பகுதிகளாக ஆக்கும்.

குறியீடுகளை மதம் மரபிலிருந்து பெற்றுக்கொள்கிறது. சிலசமயம் மறுவிளக்கம் அளிக்கிறது. குறியீடுகள் பெரும்பாலானவை நம் பழங்குடி வாழ்விலிருந்து கிளைத்தவை. பழங்குடிமனம் பிரபஞ்சத்தை, வாழ்க்கையைப் புரிந்துகொண்ட முறையின் விளைவுகள் அவை. எல்லா மதங்களிலும் பழங்குடிவாழ்க்கையின் தடங்கள் இருக்கும். நம் ஆழ்மனம் குறியீடுகளினாலானது. ஆகவே மரபால் ஆனது. ஆகவே மதத்தில் நம்மையறியாமலேயே வேரூன்றி நிற்பது. மதத்தைத் தத்துவார்த்தமாக முற்றிலும் நிராகரித்து வேரில்லை என்ற பாவனையில் வாழலாம். ஆனல் அது கலைகள் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தும் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தும் நம்மைப் பிரித்துவிடும். அதேசமயம் மதத்துடன் மரபுடன் உள்ள ஈடுபாடு சமகால வாழ்க்கையில் இருந்து பெற்ற நடைமுறைத் தெளிவுடன் ஓயாமல் மறுபரிசீலனை செய்யப்பட்டபடியே இருக்கவேண்டும்.

மாதவிடாய், பிள்ளைப்பேறு, மரணம் ஆகியவை குறித்த நம்பிக்கைகளும் குறியீடுகளும் எல்லாப் பழங்குடி மரபுகளிலும் இருக்கும். இம்மூன்றுமே புரிந்துகொள்ள முடியாதவையாக, ரத்தத்துடன் தொடர்புள்ளவையாக உள்ளன என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். பெரும்பாலான குறியீடுகளில் இம்மூன்றில் ஒன்றின் தாக்கம் இருக்கும் என்று சொல்பவர்கள் உண்டு. குமரிமாவட்டச் சூழலை வைத்துப் பார்த்தால் பருவமாற்றம், வேளாண்மை ஆகியவற்றின் முக்கியமான உருவகங்கள் எல்லாமே இம்மூன்றுடன் தொடர்புள்ளவை. மரங்கள் பூத்தல், உழுதுபோட்ட மண்ணில் சேறுகலங்கி நொதி வருதல் ஆகியவற்றுக்கெல்லாம் மாதவிடாய் சார்ந்த உருவகங்கள் சொல்லப்படுகின்றன.

இந்தியாவில் இம்மூன்றை ஒட்டியும் தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதைக் காணலாம். ஒரு மரணம் நடந்தால் அந்த வீட்டுக்குப் போய்வந்தவர்கள் எல்லாமே தீண்டப்படாதவர்களாக ஆகி தீட்டுக் கழிக்கவேண்டியிருக்கிறது இன்னமும். பிணம் அகற்றப்படுவதுவரை தென்னாடு உடையவன் ஆனாலும் அவனது இடப்பாதியானாலும் ஆலயத்தைத் திறக்க முடியாது. இறந்துபோனவர்களின் உதிர உறவுள்ளவர்களுக்கு, குறிப்பிட்ட நாள் வரை ஆலயங்களுக்கோ மங்கல நிகழ்வுகளுக்கோ செல்ல முடியாது. குமரி மாவட்ட வழக்கில் இது ‘துட்டி விலக்கு’. இது ஆண்களுக்கும்தான். அதைப்போல பிள்ளைப்பேறு நடந்த வீட்டுக்குப் போனாலும் தீட்டு உண்டு. அதன்மூலம் ஆண்கள் உட்பட குறிப்பிட்ட உறவினர்களுக்கு ஆலயவிலக்கு உண்டு. இது இங்கே ‘வாலாய்மை விலக்கு’ எனப்படுகிறது. எனக்குத்தெரிந்து இது அனைவராலும் இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாதவிடாயின் விலக்கும் இப்படிப்பட்டதே. அது வீட்டுவிலக்கு எனப்படுகிறது. அதேமனநிலையின் நீட்சிதான் இதுவும். இதைமட்டும் பிரித்தெடுத்து பெண்களூக்கு எதிரான பெருங்கொடுமை என்று சொல்ல முடியாது. இது நம் பழங்குடி மரபின் ஒரு நிழல். அது நம்பிக்கை ஆதலினால் மெல்ல மெல்லத்தான் நீங்கும். நேற்று இவ்விஷயத்தில் காட்டப்பட்ட தீவிரம் இன்று இல்லை, இன்று பெண்கள் மூன்று நாள் ஒதுங்கியிருப்பது ஆசாரம் மிக்க குடும்பங்களில்கூட இல்லை. கல்யாணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில்கூட விலக்கு இல்லை. ஆலயங்களின் விலக்குகளும் மாறும், மாறவேண்டும். இந்துமதத்தில் எந்த ஆசாரமும் புனிதமானவை அல்ல.

மேலும் ஒன்றுண்டு. இந்துமதம் ஒட்டுமொத்தமாக மாதவிடாயை அசுத்தம், தீட்டு என்றெல்லாம் விலக்கி வைக்கவும் இல்லை. சக்தி வழிபாட்டில் அது புனிதமாகவே எண்ணப்படுகிறது. நமது பல அம்மன் ஆலயங்களில் அம்மன் மாதவிடாய் அடைவதை பட்டாடை அணிவித்து மங்கல நிகழ்வாக மாதம்தோறும் கொண்டாடும் வழக்கமும் உண்டு. மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடம் இந்த வழிமுறையைக் கொண்டுள்ளது. மாதவிடாய்க்காலம் மேலும் புனிதக் காலமாக கருதப்படுகிறது அங்கே. அது சாக்தேய மரபைச்சேர்ந்த முறை.

அதேசமயம் மதங்களில் பெண்களுக்கு இரண்டாமிடம் அளிக்கப்பட்டிருக்கும் உண்மையை நாம் மறைக்க வேண்டியதில்லை. இதில் எந்த மதமும் விலக்கல்ல. மிக உச்சகட்டம் சமண மதம், அதில் பெண்களுக்கு வீடுபேறுக்கே உரிமை இல்லை. பல மதங்களில் இன்றும் வழிபாட்டிடங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மதகுருக்களாக பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பெண்புனிதர்களே இல்லாத மதங்களும் உண்டு. பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது

தாய்வழிபாட்டுக்கு முக்கிய இடமளிக்கும் இந்துமத அமைப்புக்குள்தான் ஒப்புநோக்க பெண்களின் இடம் அதிகம். அதாவது இந்துமதத்துக்குள் பெண்களின் இடம் தத்துவார்த்தமாக அடையப்பட வேண்டிய ஒன்றல்ல. கார்க்யாயனி, ஆண்டாள் முதல் அமிர்தானந்தமயி வரை உதாரணமாகச் சொல்லலாம். பெண்களின் இடம் நடைமுறையில் ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து மீறிச்சென்று அடையப்படவேண்டிய ஒன்று. அம்மாற்றம் உறுதியாக நிகழ்ந்துவருவதையே காண்கிறேன்.

அவ்வகையில் கனிமொழியின் கவிதை அவசியமான ஒரு குரலை எழுப்புகிறது. ஒரு பெண்ணின் எளிமையான ஆதங்கத்தை முன்வைக்கிறது. நடைமுறை மாற்றங்களுக்கான ஓர் அறைகூவல் அது. ஆனால் அது கவிதை என்ற முறையில் ஆழமாகச் செல்லவில்லை. எளிய கருத்து மட்டுமே. கவிதை வரலாற்றையே எளிதாக உள்ளடக்கிக் கொண்டு பேசும். ஒற்றைப்படை வேகமாக இருக்காது.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/127

1 ping

  1. கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம் | jeyamohan.in

    […] கேள்வி பதில் – 73 கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் […]

Comments have been disabled.