‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4

சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே சென்று அவனுடைய தோளில் கை வைத்து புன்னகையுடன் “மெலிந்துவிட்டாய்” என்றார். அவன் நாணத்துடன் சிரித்து தலைகுனிந்து “போர் நாட்களில் மலையில் இருந்தேன். போதிய உணவில்லை” என்றான். அவர் அவன் தோளில் கைவிரல்களைச் சுருட்டி இருமுறை குத்திய பின் “அங்கும் வேட்டையாடி உண்டிருப்பாயே” என்றார். அவன் சிரித்தபோது சிறுவனாக மாறிவிட்டிருந்தான். அவர் அவன் உடலின் நெஞ்சக்கூட்டுக்குள்ளேயே அடங்கும் உடல்கொண்டிருந்தார். ஆனால் உணர்ச்சிகள் உடலசைவுகள் வழியாக அவர் பேருருக்கொண்டு தந்தையாக அவன் சிறுமகவாக மாறிவிட்டிருந்தான்.

“இருக்கிறாரா?” என்று விதுரர் கேட்டார். “ஆம், எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று அவன் சொன்னான். “அவர் உடல்நிலை எவ்வண்ணம் உள்ளது?” என்றார் விதுரர். “நலம், காலையில் உள்ளமும் நிகர்நிலையில் உள்ளது” என்று அவன் சொன்னான். விதுரர் தலைகுனிந்து கைகூப்பியபடி குடிலுக்குள் நுழைந்தார். சங்குலனின் முகத்தில் விதுரருக்கு மட்டுமாக எழுந்த அப்புன்னகை அக்கணமே மறைந்து அவன் முகம் சிலையென்று ஆவதை சகதேவன் கண்டான். அவன் சென்று தன் பீடத்தில் அமர்ந்துகொள்ள சகதேவன் திரும்பி தாழ்ந்த குரலில் சஞ்சயனிடம் “உண்மையில் இரும்புப் பாவை என்பது இவன்தான்” என்றான். சஞ்சயன் இதழ் மட்டும் விரிய விழிகளுக்குள் புன்னகைத்தான். சகதேவன் “அவர் தனக்கு நிகராகப் போரிடும்பொருட்டு உருவாக்கிக் கொண்ட பாவை” என மீண்டும் சொன்னான்.

குடிலுக்குள் திருதராஷ்டிரர் மஞ்சத்தில் தலையணைகளை அடுக்கி அதில் சாய்ந்தவராக கால் நீட்டி அமர்ந்திருந்தார். வெண்ணிற மேலாடை தோளிலிருந்து வழிந்து நீண்டு அப்பால் கிடந்தது. கைகளைக் கோத்து மடியில் வைத்து தலையைத் தாழ்த்தி உதடுகளை இறுக்கி காலடியோசைகளை கேட்டுக்கொண்டிருந்தார். சற்று அப்பால் தாழ்ந்த பீடத்தில் காந்தாரி அமர்ந்திருந்தாள். பக்கத்து அறையிலிருந்து சத்யசேனை கதவுப் படலை திறந்து எட்டிப்பார்த்தாள். விதுரரின் காலடி ஓசைக்கு ஏற்ப உடலில் மெய்ப்பு அலைகளைக் கொண்டபடி விழிக்குமிழ்கள் உருள திருதராஷ்டிரர் முனகினார். அவருடைய பெரிய கரிய உடலில் மயிர்ப்புள்ளிகள் தோன்றி அமைவதை தொலைவிலிருந்தே சகதேவன் கண்டான்.

சஞ்சயன் அருகணைந்து “அமைச்சர் விதுரர் தங்களைக் காணும்பொருட்டு வந்திருக்கிறார், பேரரசே” என்றான். திருதராஷ்டிரர் ஒன்றும் கூறவில்லை. விதுரர் அருகணைந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார். திருதராஷ்டிரர் கைநீட்டி அவரை வாழ்த்தவில்லை. யானைமூச்சென பெருமூச்சு மட்டும் எழுந்தது. விதுரர் அவர் வாழ்த்தை எதிர்பார்க்காமல் எழுந்து சென்று காந்தாரியின் கால்களைத் தொட்டு வணங்கினார். காந்தாரி தன் வலக்கையை அவர் தலையில் வைத்து “சிறப்புறுக! நிறைவுறுக!” என்று வாழ்த்தினாள். சிற்றறையில் இருந்து வந்து நின்றிருந்த இளைய அரசியரை அணுகி மூப்பு முறையில் அவர்களை கால்தொட்டு வணங்கினார் விதுரர். அவர்கள் காந்தாரியைப் போலவே அவரை வாழ்த்தினர். சத்யசேனை மெல்ல விசும்பினாள். காந்தாரி திரும்பி கட்டப்பட்ட கண்களால் அவளை நோக்க சத்யவிரதையும் விசும்பி பின் தன் வாயை கைகளால் அழுத்திக்கொண்டாள். அரசியர் அனைவருமே விழிநீர் வடித்துக்கொண்டிருந்தனர்.

விதுரர் கைகளைக் கட்டியபடி திருதராஷ்டிரர் முன் நின்று “இன்று முழுக்க பணிகள் உள்ளன, மூத்தவரே. நீர்க்கடனை முறைப்படி ஆற்றி நிறைவு செய்யவேண்டிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இங்கு அமைச்சர்கள் பலர் வந்துவிட்டனர். அவர்களில் பலர் இளையோர். அவர்களுக்கு கற்றுத்தர வேண்டியிருக்கிறது” என்றார். “பிறர் எங்கே?” என்றார் திருதராஷ்டிரர். “ஓர் அரசர் நீங்கினால் அவருடைய அமைச்சர்கள் பணிநீங்குவது மரபு. பெரும்பாலும் அனைவருமே கானேகிவிட்டார்கள்.” திருதராஷ்டிரர் “ஆம், அறிந்தேன்” என்றார். அவர் ஏதோ எண்ணிக்கொண்டிருக்க முகம் ஒருகணம் கடும் சினம் கொண்டதுபோல், பின்னர் துயிலில் ஆழ்ந்ததுபோல், பின்னர் அழுகையில் இழுபட்டதுபோல் தோன்றியது.

விதுரர் “தங்களிடம் வாழ்த்துச்சொல் பெற்று திரும்ப வேண்டும் என்று எண்ணினேன். நேற்றே வந்துவிட்டேன். தாங்கள் துயின்றிருப்பீர்கள் என்று கூறினார்கள்” என்றார். “துயிலா?” என அவர் புன்னகைத்தார். “அல்லது ஒருவேளை இப்போதும்கூட துயின்றுகொண்டிருக்கிறேன் போலும்” என்று தனக்குத்தானே என கூறினார். கைகளை வீசி “எல்லாம் கனவு” என்றார். விதுரர் மறுமொழி ஏதும் கூறவில்லை. திருதராஷ்டிரர் எண்ணியிராத கணம் வெடித்தெழுந்து உரத்த குரலில் “செல்க! செல்க! உன்னை இங்கு யார் அழைத்தார்கள்? இங்கு எதைப் பார்க்க வந்தாய்?” என்றார். விதுரர் கைகள் கூப்புவதுபோல் நெஞ்சில் படிந்திருக்க நின்றார். “செல்க! நிற்காதே, செல்க!” என்று திருதராஷ்டிரர் மீண்டும் கூச்சலிட்டார். விதுரர் “திரும்பிவர எண்ணவில்லை. வராமலிருக்க இயலவில்லை” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். தொண்டை அடைப்பதுபோல கனைத்துக்கொண்டே இருந்தார். பலமுறை கனைத்த பிறகு சற்றே அமைதியடைந்தார்.

“நீ கிளம்பும்போது உண்மையில் ஓர் அகநிறைவை அடைந்திருந்தேன். எனக்குத் தெரிந்திருந்தது, இவையனைத்தும் இவ்வண்ணமே நிகழும் என்று. அதை அறியாத தந்தையர் இங்கு எவருமில்லை. ஆகவே அதற்குமுன் நீ கிளம்பியது நன்றென்றே எண்ணினேன்” என்றார். “ஆம், நான் கிளம்பியது மீளாமல் சென்று மறையும்பொருட்டே. ஆனால் நான் வந்தாகவேண்டும், உங்களிடம் இருந்தாகவேண்டும்” என்றார் விதுரர். “என்னுடனா?” என்று திருதராஷ்டிரர் தலை திருப்பினார். “எனக்காகவா திரும்பி வந்தாய்?” விதுரர் “ஆம் மூத்தவரே, உங்களால்தான். அந்தப் பற்றினால்தான் நான் எங்கும் செல்ல முடியாமல் ஆகியது” என்றார். “இல்லையெனில் எங்கு சென்றிருப்பாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “தொலைவு, நெடுந்தொலைவு” என்றார் விதுரர். “எங்கு என்று எனக்குத் தெரியாது. ஆனால் நெடுந்தொலைவாக அன்றே சென்றிருக்கக்கூடும்.”

திருதராஷ்டிரர் இரு கைகளையும் கோத்துக்கொண்டார். தலையை குனிந்து சில கணங்கள் அமர்ந்திருந்த பின் “சொல்க, நீ எதை அடைந்தாய்?” என்றார். விதுரர் ஒன்றும் சொல்லவில்லை. “இளையோனே, நீ செய்த ஊழ்கம் என்ன?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் புன்னகைத்து “அகன்றிருப்பதனால் பரப்பு மட்டுமே குறைகிறது என அறிந்தேன். பரப்பு குறைகையில் கூர்மை மிகுகிறது” என்றார். திருதராஷ்டிரர் அதை புரிந்துகொள்ளாமல் தலையை அசைத்தார். பின்னர் “அஸ்தினபுரியின் அந்த கைவிடுபடைகள் அனைத்தும் பொறிகளிலிருந்து எழுந்துவிட்டன, அறிவாயா?” என்றார். விதுரர் திடுக்கிடுவதை சகதேவன் கண்டான். அவர்களுக்குள் என்ன அறியாச் சொல் பரிமாறப்பட்டது என வியந்தான். “நீ சென்று அந்தக் கைவிடுபடைகளை பார்க்கலாம். நாணும் வில்லும் தளர்ந்து அவை அந்த மேடைகளில் அமைந்திருப்பதை நான் எண்ணிக்கொண்டேன்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் பெருமூச்சுவிட்டார். “நன்று, நீ அஸ்தினபுரிக்குச் செல்லாதொழிவதே உகந்தது” என்றார்.

விதுரர் மீண்டும் பெருமூச்செறிந்தார். “அவை நெடுங்காலமாக நின்றிருந்தன” என்ற திருதராஷ்டிரர் “அந்தக் கைவிடுபடைகளால் கொல்லப்பட்டவர்கள் எவர் என்று நான் எண்ணிக்கொள்வதுண்டு. அவர்களின் முப்பாட்டன்களின் காலத்தில் அவை அமைக்கப்பட்டிருக்கக் கூடும்…” என்றார். அவர் புன்னகைத்து தலையைச் சுழற்றி “அவற்றை அமைத்தவர்களின் கொடிவழியினர்தான் கொல்லப்பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டேன். பொருளில்லாத கீழ்மைதான். ஆனால் அப்படி எண்ணவே தோன்றியது” என்றார். விதுரரிடமிருந்து ஆழ்ந்த மூச்சொலி வெளிப்பட்டது. திருதராஷ்டிரர் “சரி விடு. அதைப்பற்றி நாம் எண்ணவேண்டியதில்லை. அதை நான் உன்னிடம் சொல்லியிருக்கக் கூடாது” என்றார். விதுரர் “ஆம்” என்றார்.

திருதராஷ்டிரர் தன் கைகளை நீட்டி துழாவ விதுரர் முழந்தாளிட்டு அமர்ந்து தன் தலையை அங்கு வைத்தார். தலைமேல் திருதராஷ்டிரரின் பெரிய கைகள் அமைந்தன. குழலை வருடி கழுத்தை வளைத்து இழுத்து தன் மடிமேல் அமைத்துக்கொண்டு “நீ வந்திருக்க வேண்டியதில்லை. மீண்டு இங்கே வந்திராவிடில் இவ்வளவு பெரிய இழப்பையும் துயரையும் நீ அறிந்தே இருக்கமாட்டாய்” என்றார். “ஆனால் நான் வந்தாகவேண்டும்” என்று விதுரர் சற்றே உடைந்த குரலில் சொன்னார். “இதுவரை நான் ஒருகணம்கூட அகன்றதில்லை. உடனிருந்திருக்கிறேன். உடலாலும் உள்ளத்தாலும்” என்றார். அவரை தோள் சுழற்றித் தூக்கி தன் நெஞ்சோடணைத்தபடி திருதராஷ்டிரர் விழிநீர் வழிய உடல் குலுங்க அழத்தொடங்கினார்.

சகதேவன் எழுந்து வந்த நீள்மூச்சை அடக்கி பின்னடைந்து குடிலிலிருந்து வெளியே செல்லலாம் என்று முயன்றான். ஓரடி பின்னெடுத்து வைத்தபோது அங்கிருந்து செல்ல முடியாதென்று உணர்ந்து அங்கேயே நின்றான். அவ்வுணர்ச்சிகளுக்கு அப்பால் நிற்பவன்போல் சஞ்சயன் தோன்றினான். காந்தாரியின் கண்களில் கட்டப்பட்டிருந்த இளநீலத் துணி நனைந்து விழிநீர் வழிந்தது. திருதராஷ்டிரர் ஓசையின்றி அழுதுகொண்டிருந்தார். மழைக்காலத்தில் மண்ணும் விண்ணும் குளிர்ந்த பின் எழும் மழைபோல ஓசையே இல்லாமல். அலைவின்றி, எழுவதோ வீழ்வதோ நிகழாமல், பளிங்குத் திரையென அசையாது நின்றுகொண்டிருக்கும் மழை. நிரைமழை எனப்படும் அதில் விண்ணும் மண்ணும் ஒன்றாகி தங்களை முற்றுமாக மறந்துவிடுகின்றன. அத்தனை நீண்ட பொழுது ஒருகணமும் குறையாது ஒரு அழுகை நிகழமுடியுமென்பதை சகதேவன் உணர்ந்ததில்லை. விதுரரும் அவ்வழுகையில் மூழ்கி முற்றழிந்து பிறிதெங்கோ இருந்தார்.

பின்னர் அவனுக்கு விந்தையானதோர் எண்ணம் ஏற்பட்டது. திருதராஷ்டிரரும் விதுரரும் மட்டுமே ஒரு கண்காணா வட்டத்திற்குள் சென்றுவிட்டதாக. அதற்கு வெளியேதான் அவனையும் சஞ்சயனையும்போல காந்தாரியும் நின்றிருப்பதாக. பின்னர் திருதராஷ்டிரர் மெல்ல தணிந்தார். இரு கைகளாலும் கன்னங்களைத் துடைத்தபடி “நீ இங்கு வந்திருக்கவேண்டியதில்லை. இங்கு வந்து இத்துயரனைத்தையும் நீ அடையவேண்டியதுமில்லை” என்றார். “நான் துயரடைவதில் ஓர் அறம் இருக்கிறது. எங்கெங்கோ தருக்கியிருந்தேன். வஞ்சங்களையும் கீழ்மைகளையும் என் அகத்தில் சேர்த்துக்கொண்டிருந்தேன். என் பொருட்டு நீ இத்துயர் அனைத்தையும் அடைவதில் எப்பொருளுமில்லை.” விதுரர் “என்றும் தங்கள் பொருட்டே துயருறுகிறேன், மூத்தவரே” என்றார்.

திருதராஷ்டிரர் தலையைத் தாழ்த்தி இரு கைகளிலும் நெற்றியைத் தாங்கி அமர்ந்து உடலை இறுக்கிக்கொண்டார். தலையின் எடையை தாளாதவர்போல் மேலும் தழைந்தார். மெல்லிய குரலில் “நீ இளையோனைப் பார்த்தாயா?” என்றார். விதுரர் “ஆம்” என்றார். அவர்கள் இருவரும் சில கணங்கள் சொல்லின்மையில் அமர்ந்திருந்தனர். திருதராஷ்டிரர் “நான் அவனை பார்த்தேன்” என்றார். விதுரர் “ஆம்” என்றார். “நேற்றிரவு… நேற்றிரவு அவன் என்னை…” என்றபின் தலைதூக்கி “சஞ்சயா!” என்றார். “பேரரசே!” என்றான் சஞ்சயன். “எங்கே அந்தப் பாவை?” என்று அவர் கேட்டார். “அதை சங்குலன் அறிவான்” என்று சஞ்சயன் சொன்னான். “அதை கொண்டுவருக! எங்கிருந்தாலும் அது இங்கு வந்தாகவேண்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “பேரரசே, அது நேற்று…” என்று சஞ்சயன் சொல்லத்தொடங்க “அதை கொண்டுவருக!” என்றார். சஞ்சயன் தலைவணங்கி அறையைவிட்டு வெளியே சென்றான்.

திருதராஷ்டிரர் விதுரரின் கைகளை பற்றிக்கொண்டு “நேற்றிரவு… நேற்றிரவு நான் அவனை பார்த்தேன்” என்றார். விதுரர் ஒன்றும் கூறவில்லை. திருதராஷ்டிரர் “தெய்வங்களே!” என்று முனகியபடி நிமிர்ந்து கைகளை பின்னால் ஊன்றி மஞ்சத்தில் சாய்ந்தமர்ந்தார். தலையை மேல் நோக்கி தூக்கி விழியற்ற குருதிக்குழிகள் துள்ள “தெய்வங்களே! மூதாதையரே!” என்றார். விதுரர் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்றார். “இல்லை! ஓய்வு? ஓய்வென ஒன்று எனக்குண்டா? இனி என் உள்ளம் அமையும் தருணம் அமையுமா?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் ஒன்றும் கூறவில்லை. “இளையோனே, சொல்! என் நெஞ்சு ஆறுமா? துயர் மீண்டு ஒருநாளேனும் இனி நான் உயிருடன் இருப்பேனா?” என்றார். விதுரர் அதற்கும் மறுமொழி கூறவில்லை.

திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து வெடிப்போசை எழுப்பியபடி எழுந்தார். விதுரருக்கு மேல் பெருமரமென ஓங்கி நின்றார். தன் பெரிய கைகளை அவர் தோளில் ஊன்றியபடி குனிந்து “சொல்! ஒருகணமேனும் இனி எனக்கு இயல்பு வாழ்க்கை உண்டா? இருத்தலில் இன்பத்தை இனி எப்போதேனும் நான் அறிவேனா?” என்றார். விதுரர் “மெய் சொல்வதென்றால், இல்லை” என்றார். “சிறிய இடைவேளைகளில் உளமயக்கென வந்து செல்லும் இனிமைகள் இருக்கலாம். அவை துயரை பெருக்கிக்கொள்ளும்பொருட்டு எழுபவை மட்டுமே. ஒருபோதும் இனி நிறைவும் இன்பமும் இல்லை” என்றார். திருதராஷ்டிரரின் கைகள் அவர் தோளிலிருந்து விலகின. அவை உரசும் ஒலியுடன் இரு பக்கமும் தழைந்தன. பின்னர் அவர் பின்னடைந்து மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தார். அவர் எடையில் மஞ்சம் முனகலோசை எழுப்பி அசைந்தது.

“அந்தச் சிறிய உவகை கூரியது. நம்பிக்கை அளிப்பது. சற்றுநேரம் அன்னை என தூக்கி இடையில் வைத்துக்கொள்வது. அதன் உச்சியை விரைவில் சென்றுசேர்ந்துவிட முடியும்” என்றார் விதுரர். “ஆனால் அது உடனே குற்றவுணர்ச்சியை உருவாக்கும். மேலும் துயரத்தை இழுத்துக்கொண்டுவரும். திமிறித் தவிக்காமல் துயரை அடையும்பொருட்டு உள்ளம் அதை உருவாக்குகிறது.” திருதராஷ்டிரர் உறுமலோசைபோல் முனகினார். “ஏனென்றால் துயரிலேயே உங்கள் இருத்தல் பொருள்கொள்கிறது. துயரின்மையில் நீங்கள் நின்றிருக்க நிலமே இல்லை” என விதுரர் தொடர்ந்தார். “இந்த ஊசலில் இருந்து இனி ஒருகணமும் வெளியேற இயலாது.” பெருமூச்சுடன் “ஆம்!” என்று திருதராஷ்டிரர் கூறினார். அவர்கள் அமைதிக்கு திரும்பினர். இளைய அரசியர் விழிநீர் வடித்தபடி மேலும் பின்னடைந்து சுவருடன் ஒட்டிக்கொண்டனர்.

திருதராஷ்டிரர் “இளையோனே, மானுடர் அனைவரும் காலத்தில் ஒழுகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்களே? ஆகவே இங்குள்ள எதையும் நம்மால் உறுதியாக பற்றிக்கொள்ள முடியாதென்றும் இங்குள்ள எதுவும் நிலையாக நம்முடன் இருக்கப்போவதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளதே” என்றார். “ஒவ்வொன்றும் அகன்று செல்லும் இந்த வெளியில் நான் மட்டும் இங்கே இவ்வுணர்வு வெளியில் அசையாமல் நின்றிருப்பேனா என்ன?” விதுரர் “ஆம், மூழ்கியவை இடம்பெயர்வதில்லை” என்றார் விதுரர். “இனி உங்களுக்கு காலம் என்பதும் இல்லை. இங்கு இவ்வண்ணமே இனி எப்போதும் இருப்பீர்கள்.” திருதராஷ்டிரர் “எப்போதும் என்றால்?” என்று கேட்டார். “நெடுநாட்களா? இன்னும் எத்தனை நாட்கள்?” விதுரர் “அதை நான் எவ்வண்ணம் சொல்லமுடியும்?” என்றார்.

திருதராஷ்டிரர் திரும்பி சகதேவனை பார்த்தார். “இங்கு சகதேவன் இருக்கிறான். அவன் சொல்லட்டும்” என்றார். “இல்லை, நான்…” என்றபடி சகதேவன் அறையை விட்டு வெளியே சென்றான். திருதராஷ்டிரர் உரக்க “மைந்தா, அருகே வா” என்றார். “வேண்டாம், தந்தையே” என்று சகதேவன் சொன்னான். “இது என் ஆணை! அருகே வா!” என்று சொன்னார் திருதராஷ்டிரர். சகதேவன் தயங்கிய காலடி எடுத்து அவர் அருகே வந்தான். அவர் தன் கைகளை நீட்ட மேலும் அருகே சென்று அவர் காலடி தொட்டு வணங்கினான். அவர் தன் பெரிய கையை அவன் தலையில் வைத்து, பின்னர் தோள்களை வளைத்து தன் உடலோடு சேர்த்துக்கொண்டார்.

அவர் உடலிலிருந்து எழுந்த உப்புமணம் அவனுக்கு எப்போதுமே உளநிறைவை அளிப்பது. சிறு மைந்தன் என்றாகி அவர் உடலுடன் ஒட்டிக்கொள்வதுபோல் அமர்ந்தான். அவர் கைகள் அவன் தலைமயிரை, செவிகளை, தோள்களை, நெஞ்சைத் தொட்டு வருடி அலைந்தன. தொண்டையை கனைத்துக்கொண்டு “மைந்தா, கூறுக! இத்துயர் இன்னும் எத்தனை நாள்? நான் இருக்கப்போவது எத்தனை காலம்?” என்றார். “அதை நான் எவ்வண்ணம் கணிப்பேன்?” என்றான் சகதேவன். “கூறுக, உன்னால் கணிக்க முடியும்! எனது நாளும் விண்மீனும் உனக்குத் தெரியும். இங்கேயே களம் வரைந்து கணித்து சொல்க!” என்றார் திருதராஷ்டிரர். சகதேவன் விதுரரை பார்க்க அவர் “கணித்துக் கூறுக! இத்தருணத்தில் அது ஒன்றே மூத்தவருக்கு ஆறுதலை அளிப்பது” என்றார்.

சகதேவன் சூழ நோக்கி அப்பாலிருந்த சிறு குச்சியொன்றை எடுத்துக்கொண்டு வந்தான். குடிலுக்குள் தரையில் செம்மண் கருங்கல்லால் அறைந்து இறுக்கப்பட்டிருந்தது. அவன் அதில் அக்குச்சியால் கீறி பன்னிரு களத்தை வரைந்தான். அதற்குள் ராசிகளுக்குரிய எண்களையும் குறிகளையும் எழுதினான். கண்மூடி ஊழ்கத்தில் அமர்ந்து மெல்ல ஒவ்வொரு ராசியிலும் சுட்டுவிரல் தொட்டு எண்ணிச் சென்றான். பின்னர் விழிதிறந்து பதற்றத்துடன் எழுந்து “நான் அரசியை மறந்துவிட்டேன். பேரரசி, தங்கள் ஆணையின்றி இதை செய்யக்கூடாது. தாங்களும் அவருடன் பிணைந்தவர் என்பதை அறிந்திருப்பீர்கள்” என்றான். “எனது ஆணையும் கூட, நோக்குக! இன்னும் எத்தனை இரவுகளை நான் கடக்கவேண்டும்?” என்றாள் காந்தாரி.

காந்தாரியின் உடன்பிறந்த அரசியர் வந்து அவளுக்குப் பின்னால் நின்றனர். அவர்கள் அனைவர் முகங்களும் ஒன்றுபோலிருந்தன. விழிகள் அனைத்தும் சிவந்து தசை தளர்ந்து நோயுற்றிருந்தன. அனைவருமே கைகளை மார்பில் கட்டியிருந்தனர். உதடுகள் சுருங்கி குவிந்து முதுமை கொண்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தனர். சகதேவன் மீண்டும் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ராசிகள் ஒவ்வொன்றாக கையைத் தொட்டு நகர்த்திகொண்டு சென்று பின் விழி திறந்தான். அவன் நோக்கில் அவர்கள் மிக அகன்று வெறும் விழிகளெனத் தெரிந்தனர். “இன்னும் ஓராண்டு” என்று சகதேவன் சொன்னான். “எப்போது?” என்று மீண்டும் கேட்டார் திருதராஷ்டிரர். “ஆண்டு நீர்க்கடன் முடிந்தபின் சில நாட்களில்” என்றான். “எங்கு?” என்று அவர் மீண்டும் கேட்டார். “வடகிழக்கே ஒரு காட்டில். அதை நான் கண்டேன்” என்றான்.

திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “எவ்வண்ணம்? நோயுற்றா?” என்று கேட்டார். “அனல்” என்று சகதேவன் சொன்னான். அவர் புன்னகைத்து “நன்று, அனல் நன்று!” என்றார். “இளையோனே, அனலைப்போல் என்னை அறிந்த பிறிதொன்று உண்டா?” என்று விதுரரிடம் கேட்டார். விதுரர் “ஆம், மூத்தவரே. அனல் நன்று” என்றார். திருதராஷ்டிரர் சிரித்தபடி திரும்பி காந்தாரியிடம் “அனல்! பெரும்பாலும் அது காட்டெரி” என்றார். சகதேவன் காந்தாரியின் முகம் மலர்வதை பார்த்தான். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளைய அரசியர் அனைவரின் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் அடையும் உணர்வென்ன என்று அவனால் உணரமுடியவில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்கள்போல், இழந்த அனைத்தையும் மீளப் பெற்றவர்கள்போல் அவர்கள் உவகை கொண்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பற்றிக்கொண்டனர்.

காந்தாரி “ஓர் ஆண்டு எனில் பன்னிரு மாதங்கள். நானூறு நாட்கள்கூட இல்லை” என்றாள். “ஓராண்டெனில் எவ்வாறு நானூறு நாட்களாகும்? நானூறுக்கு குறைவாகவே நாட்கள்… இல்லையா, மைந்தா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “ஆம், நானூறு நாட்கள் இல்லை. குறைவாகவே” என்று சகதேவன் சொன்னான். “நன்று, மைந்தா. இந்நீண்டநாட்களில் என் செவியில் விழுந்த இன்சொல் இது. நீடுவாழ்க!” என்று திருதராஷ்டிரர் அவன் தலைமேல் கைவைத்து மீண்டும் வாழ்த்தினார். விதுரர் “அவ்வண்ணமே ஆகுக, மூத்தவரே!” என்றார். பின்னர் மீண்டும் தலைவணங்கி “நாங்கள் விடைகொள்கிறோம். எங்கள் பணிகள் மிகுந்துள்ளன” என்றார்.

“இளையோனே, இங்கு நீர்க்கடன் முடிந்த பின்னர் நீ கிளம்பலாம்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “ஆம், அவ்வண்ணம்தான் நான் எண்ணியிருக்கிறேன்” என்று விதுரர் கூறினார். “கிளம்புகையில் இதை எண்ணிக்கொள். என்னை முற்றிலும் கைவிட்டுச் செல்லும் உரிமையை நான் உனக்கு அளிக்கிறேன். என்னை மறந்துவிடுவதே நீ இனி செய்ய வேண்டியது” என்றார். விதுரர் “ஆம், அது ஒன்றே எஞ்சியுள்ளது” என்றார். பெருமூச்சுடன் “ஆனால் என்னால் அது இயலுமா என அறியேன்” என்றார். திருதராஷ்டிரர் உரக்க “மறந்துவிடுக, இங்கு நாம் இருவரும் சந்திப்பது இன்றே இறுதியாகட்டும்!” என்றார். “நாளை நீர்க்கடனின்போது நீ என் அருகில் இருக்கலாகாது. இந்நீர்க்கடன்கள் எதையும் நீ இயற்ற வேண்டாம். இவ்வனைத்திலிருந்தும் நீ விடுதலைகொள்க!” என்றார். விதுரர் உதடுகளை இறுக்கிக்கொண்டார்.

“இப்புவியில் உடன்பிறந்தார் என்று நாம் வாழ்ந்தது இன்றுடன் நிறைவுறுகிறது. என்றும் எனக்கினியவனாக இருந்தாய். ஒருகணமும் ஒரு செயலாலும் எனக்கு நீ உவப்பற்றவனாக ஆகவில்லை. மூத்தவன் என்று அமர்ந்து உன்னை வாழ்த்துகிறேன். இனி இது ஒன்றே உனக்கு நான் அளிக்கக்கூடியது” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் அவர் கால்களைத் தொட்டு வணங்க அவர் விதுரரின் தலைமேல் கைவைத்து “உளம் அமைக! மெய்மையின் ஒளி உன்னை தொடுக! விண்புகுந்து நிறைவுறுக!” என்றார். விதுரர் குனிந்து காந்தாரியின் கால்களைத் தொட்டு மீண்டும் வணங்க அவள் “அவ்வண்ணமே ஆகுக!” என்றாள்.

கைகளைக் கூப்பியபடி பின்னடி எடுத்து வைத்து விதுரர் விலகிச்சென்றார். சகதேவன் அவரைத் தொடர்ந்து வெளியே சென்றான். வாயிலுக்கு வெளியே சங்குலன் அந்த இரும்புப் பாவையுடன் வருவதை அவன் கண்டான். அது அவனுக்கு இணையாகவே நடந்து வந்தது. அதன் விழிகள் ஒளிகொண்டிருந்தன. புன்னகைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது அதன் முகம்.

முந்தைய கட்டுரைகலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2
அடுத்த கட்டுரைகுருதிப்புனல் வாசிப்பு