கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…

ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் சினிமா கட்டுரைகளை அனேகமாக அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.தியோடர் பாஸ்கரின் தமிழ் சினிமா வரலாறு, வளர்ச்சி சம்பந்தமான நூல்களையும் வாசித்துள்ளேன். சொல்லப்போனால் தமிழ் வணிக சினிமாவின் போக்குகளான புதியன எதையும் சொல்லாமல் பொது புத்தியின் ஆழத்தில் படிந்திருக்கும், வெளிப்படுத்தும் ரசனையை மட்டுமே முன்னிறுத்துவது (சங்கர் படத்தில் வரும் லஞ்சம், ஊழல், அதிகாரிகள் மட்டுமே திருந்தவேண்டும், சில சமயம் மக்களும் திருந்தவேண்டும், சர்கார் படத்தில் வந்த இலவச காழ்ப்பு, அமெரிக்க கனவு, சமீப காலமாக வந்துக்கொண்டிருக்கும் இயற்கை விவசாய படையெடுப்பு, அரசியல்வாதிகளை முழு முடாள்களாகவே காண்பிப்பது  என), விவாதத்தன்மை அற்று ரசிக்க மட்டுமே அழைப்பது, ஆராயும் தன்மை அற்று  நேரடியாக விழுமியங்களை முன்வைப்பது என அதன் கூறுகளை தங்களின் கட்டுரைகளின் வழியே அறிந்தேன்.

நீங்கள் எழுதிய தமிழ் சினிமாவின் ‘நகைச்சுவை’ கட்டுரை முக முக்கியமானது. அதேப் போல வங்காள சினிமா, ஹிந்தி சினிமாவின் ஆதிகத்தால் காணாமல் ஆக்கப்பட்டதற்கு காரணம் அங்கே அவர்களுக்கென தனியான வணிக சினிமா இல்லாதது தான் என்று தாங்கள் சுட்டி கூட்டிய கட்டுரையும் முக்கியமானதே.

தமிழ் வணிக சினிமாவை அனுகும் விதமும் கலைப் படத்தை அனுகும் விதமும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்துக் கூறியுள்ளீர்கள். சமீபத்தில் அசுரன் படத்தைப் பற்றிய தங்களின் பதிவும் அதன் நீட்சியே. இன்றைய சூழலில் தமிழ் சினிமாவின் முக்கியமான கதை சொல்லியான வெற்றிமாறன், வெக்கையை அசுரனாக மாற்றி அதை வணிக ரீதியாகவும் வெற்றியடைய செய்திருப்பதே பெரிய பாடமாக உள்ளது. இது தான் லிமிட், இன்னும் கொஞ்சம் யதார்த்த தளத்திருக்கு சென்றாலும் வணிக வெற்றி உறுதி இல்லை, இப்படி சொன்னால் தான், சமூக பிரச்சனைகளை இப்படி பயன்படுத்தினால் தான் வெற்றியடையும் என்று செய்துக் காட்டியுள்ளார்.

நேற்றுக் கூட மலையாள படம் ஜல்லிக்கட்டுவை நண்பர்களோடு பார்த்த போது, அப்படம் அவர்களை பெரியதாக கவரவில்லை என்று கலாய்த்தார்கள் (அப்படம் உண்மையிலே நல்லப்படமா இல்லை மோசமன படமா என்பது வேறு, ஆனால் விவாதிக்க கூட முனையவில்லை).அனைத்தும் புரிகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் தமிழ் வணிக சினிமாவின் யதார்த்தத்தை நீங்கள் சொல்லும் தோறும் அதே நேரம் அவநம்பிக்கையும் விதைகிறதே. உங்கள் நோக்கம் அதுவல்ல என்றாலும் யதார்த்தத்தின் மறுப்பகமாக அதுவும் எதிரொலிக்கிறதே. தமிழ் சினிமாவில் எதேனும் சிறிய அசைவை செய்ய முடியுமா என்று விழையும் நபர்களுக்கு இந்த யதார்த்த காட்டுரைகள் ஒரு படி மேலே சென்று demotivation ஆக தோன்றுகிறதே. தமிழ் சினிமாவில் புதிய முயற்சிக்கு இடமே இல்லை,சிக்காலான கதாப்பாத்திரங்களுக்கோ இடமே இல்லை என அறைகூவல் விடுவதாகவும் அமைந்துவிடுகிறதே.

தமிழ் சினிமா என்றுக் கிடையாது, எந்தக் கலை, சமூக, அரசியல் சம்பந்தமான யதார்த்தத்தைச் சொல்லும் கட்டுரைகள் ஏதோ ஒரு வகையில் புதிய முயற்சிக்கு சவால் விடுவதையும் தாண்டி,  முடியாது என்று அறை கூவல் விடுவதாகவும் அமைந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. யதார்தக் கட்டுரையின் விந்தையா அல்லது அதன் நோக்கமே இது தானா, முழுமையாக அறிந்து மேலே செல்லச் சொல்வது?

அன்புடன்

ஆனந்த்ராஜ்

***

அன்புள்ள ஆனந்த்ராஜ்,

உங்கள் கடிதத்தின் உணர்வுகள் புரிகின்றன. என் கருத்துக்களை வணிகசினிமாவின் உலகைச் சேர்ந்த ஒருவனின் கவலைகள், புரிதல்களாக எடுத்துக்கொண்டால் போதும். உலகமெங்குமே கலைப்படம் என்பது மையப்பட ஒழுக்குக்கு எதிரானவையாக, மாற்றானவையாக, மீறிச்செலவையாகவே உள்ளன. பெரும்போராட்டங்களுடன் மட்டுமே அவை நிகழ்கின்றன. இங்கே அவற்றை சாதிக்கவிருப்பவர்கள் அதற்கிருக்கும் தடைகளைக் கடந்துசென்று அதை வெல்பவர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நான் தடைகளை பற்றி பேசுவதில்லை. சூழலைப்பற்றியே பேசுகிறேன். பெரும்பாலும் மிக எளிமையான அடிப்படைகள்கூட புரிந்துகொள்ளப்படாமலிருக்கையிலேயே ஏதேனும் சொல்கிறேன். நான் சினிமா பற்றி பேச பொதுவாக விரும்புவதில்லை.

என் இலக்குகள் எவையும் கலைப்படம் சார்ந்தவை அல்ல. நான் வணிகசினிமாவுக்கு எழுதுபவன். இன்றைய சினிமாவுக்கு ஒர் எழுத்தாளனின் பங்களிப்பு மிகச்சிறியது – அதற்கு நிகழ்ச்சிகளின் ஓர் ஒழுக்கை உருவாக்கிக்கொடுப்பதும் கதைக்கட்டுமானம் என்னும் அமைப்பை அளிப்பதும் மட்டுமே அவன் பணி. அந்த ஒழுக்கும் அமைப்பும் ஒரு முன்வரைவு மட்டுமே. கடைசியில் படத்தொகுப்பினூடாக உருவாகி வரும் இன்னொன்று உண்டு. அதுவே படத்தில் இறுதியாக எஞ்சும் ஒழுக்கும் அமைப்பும்.

ஆகவே எந்த எழுத்தாளனும் சினிமாவின் ‘ஆசிரியர்’ என சொல்லிக்கொள்ள முடியாது. ஆகவே அதில் என் முத்திரை இருக்க முடியாது. அந்நிலையில் எந்தச் சினிமாவையும் நான் உரிமைகொண்டாட முடியாது. இக்காரணத்தாலேயே சினிமாவுடன் எனக்கு உணர்வுரீதியான ஈடுபாடு இல்லை. அது என் களம் அல்ல, என் தொழில் மட்டுமே.

சினிமா என்பது இயக்குநரின் கலை. என் சினிமா என்று ஒன்று உருவாகவேண்டும் என்றால் அதை நான் இயக்கவேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. அதற்குரிய காட்சியாக்கத் திறன், ஒருங்கிணைப்புத்திறன் ஆகியவை என்னிடம் இல்லை. இனி அவற்றை நான் உருவாக்கிக்கொள்ளவும் இயலாது. ஆகவே நான் சொல்வன அனைத்துமே வணிகசினிமாவின் தளத்தில் நின்றபடிக் கூறுவன மட்டுமே.

ஆனால் தொடர்ச்சியாக மலையாளக் கலைப்பட உலகுடன் தொடர்பில் இருக்கிறேன். அப்படங்களைப் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அங்கே கலைப்பட இயக்கம்- இடைநிலைப் பட இயக்கம் நிகழ்வதைக் கொண்டு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். நம்மிடையே இருக்கும் குழப்பங்கள் சிலவற்றை தெளிவாக்குவதே நோக்கம்.

[ஆனால் உறுதியாக சினிமாவுக்குள் இல்லாத எவருடைய எக்கருத்தையும் பொருட்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் இத்தகைய எந்த ஒரு கருத்து வந்தாலும் ஓரளவு சினிமாக்களை பார்த்து, வெறும் அரட்டையாகவே சினிமாவை அறிந்திருப்பவர்களும், சினிமாக்கோட்பாடுகளை அங்கிங்காக வாசித்துக் குழப்பிக்கொண்டிருப்பவர்களும் விரிவாகப் பேச முன்வந்துவிடுவார்கள். இங்கே எல்லாரும் பேசவிரும்புவது சினிமா பற்றிட்தான். அவர்களுக்கும் நடைமுறைக்கும் எத்தொடர்பும் இல்லை. அவர்கள் கூறுவனவற்றுக்கு காலப்பொருத்தமும் அறிவார்ந்த மதிப்பும்கூட இருப்பதில்லை.

முதல் கேள்வி, கலைப்படம், இடைநிலைப் படம், வணிகப்படம் என மூன்றுவகை உண்டா?  ‘அப்படியெல்லாம் இல்லை, நல்லபடம் மோசமான படம் என்றுதான் வேறுபாடு’ என்று ஒரு குரல் அடிக்கடி கேட்கும். அது அமெரிக்க சினிமாக்கூற்று ஒன்றின் எதிரொலி. ஏன் அப்படிப்  பிரிக்கவேண்டும், நல்லபடம் மோசமான படம் என பிரிப்பது யார்? சினிமாக்கள்எந்த வேறுபாடும் இல்லை என்றே சொல்லிவிடலாமே என்றுதான் நான் அதற்கு மறுமொழி சொல்வேன்

மேலே சொன்ன வேறுபாடுகள் சினிமாவின் பார்வையாளர்களின் தரம், சினிமா தன் முதலீட்டை திரும்ப எடுக்கும் முறை ஆகிய இரண்டின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை. சினிமா எந்நிலையிலும் ஒரு நிகழ்த்துகலை. இலக்கியம்போல ஆவணக்கலை அல்ல. அதன் பார்வையாளர்கள் உடனடியாக வந்தாகவேண்டும். இலக்கியம்போல வழிவழியாக வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆகவே தன் பார்வையாளர்கள் எவர் என அது முன்னரே முடிவுசெய்துகொள்ளவேண்டும். அதனடிப்படையிலேயே அதன் முதலீடு முடிவெடுக்கப்படும்.

எந்தக் கலைக்கும் அதை ரசிக்க ஒரு பயிற்சி தேவை. இலக்கியம் இசை ஓவியம் அனைத்துக்கும் அவ்வாறே. சினிமா ஒரு கலைவடிவம் என்னும் நிலையில் அதைப்பார்க்கும் பயிற்சியைக் கோருகிறது. அப்பயிற்சி என்பது இரன்டு அடிப்படைகள் கொண்டது. ஒன்று, முந்தைய பெரும்படைப்புக்களைப் பார்த்தல். சினிமா என்னும் கலையின் அழகியலைக் கற்றுக்கொள்ளுதல். சினிமாவைப் பார்க்கும் பயிற்சிகொண்ட ரசிகர்களுக்காக எடுக்கப்படும் படமே கலைப்படம்

சினிமாவை பார்க்கும் பயிற்சி கொண்ட ரசிகர்கள் மட்டுமே பார்க்கமுடியும் என்னும் நிலையில் உள்ள ஒரு படம் சில ஆயிரம் பார்வையாளர்களையே சென்றடைய முடியும். எனவே அது பலகோடி ரூபாய் மதிப்பில் உருவாக இயலாது. இந்தியாவின் எல்லா கலைப்படங்களும் மிகமிகக்குறைவான முதலீடு கொண்டவை.அவற்றின் வெற்றிதோல்விகள் கணிக்கப்படுவது அவற்றை எத்தனைபேர் பார்த்தார்கள் என்பதனாலோ எத்தனை பணம் ஈட்டியது என்பதனாலோ அல்ல. அவற்றை பார்த்தவர்கள் எவர், அவர்களில் அது செலுத்திய செல்வாக்கு என்ன என்பதன் அடிப்படையில்தான்.

வணிகப்படம் என்பது சினிமாவை ஒரு பொதுக்கேளிக்கை வடிவம் என்னும் அளவில் வரையறை செய்துகொண்டது. ஆகவே எது மக்களுக்குப் பிடிக்குமோ அதை அளிப்பது. எது மக்களுக்குப் பிடிக்கும் என்பதை முந்தைய வெற்றிதோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டே இருப்பது. அவற்றின் முதலீடு என்பது ஒரு தொழில் முதலீடு. விற்பனை, லாபம் ஆகியவற்றின் அடிப்படையிலானது

இவ்விரண்டுக்கும் நடுவே செயல்படுவது இடைநிலை சினிமா. கலைப்படங்கள் உருவாக்கிய அழகியலை கேளிக்கை சினிமாவின் வணிகக்கட்டமைப்புக்குள் நின்று அடைய முயல்வது. தேர்ந்த பார்வையாளர்களுக்காக எடுக்கப்படுவதனால் கலைப்படத்தில் எல்லாவகை சோதனைகளையும் செய்யமுடியும். அவ்வாறு கலைப்படம் அடைந்த அழகியல்கூறுகளில் சிலவற்றை பொதுரசிகர்களுக்காக மறு ஆக்கம் செய்து அளிக்கிறது இடைநிலை சினிமா. அதனூடாக வணிகசினிமாவை கலையுடன் நெருங்கச் செய்கிறது. கலையை மக்கள்மயமாக்குகிறது.

உதாரணங்கள் சொல்கிறேன். செர்ஜியோ லியோன் இயக்கிய The Good, the Bad and the Ugly ஒரு வணிகப்படம். ஆனால் அது அந்த வகைமையில் ஒரு செவ்வியல் படைப்பு. அதன் அழகியல் என்பது தொழில்நுட்பம் வழியாகச் சென்றடையும் விந்தைகளால் ஆனது. இரு உதாரணங்கள். அக்லி துப்பாக்கிக்கடையில் சென்று துப்பாக்கி வாங்கும் காட்சி. விலையை வாங்குபவன் ஏற்றிக்கொண்டே செல்கிறான். விற்பவன் பதறிப்பதறி ஒப்புக்கொகிறான். இறுதியில் தெரிகிறது, அது வாங்குபவன் விற்பவனை சுடாமலிருக்கும்பொருட்டு பேசப்படும் விலை என. இது திரைக்கதை தொழில்நுட்பம் மட்டுமே. மனஉறுதிகள் மோதிக்கொள்வதை சித்தரிக்கும் காட்சிகள் பல அவற்றிலுள்ளன.மிக அண்மைக்காட்சியில் இருந்து மிகவிரிவுக் காட்சிக்கு நேரடியாக வெட்டும் இலக்கணமீறல்களால் ஆன அழகியல் உள்ளது. இதெல்லாமே வணிகசினிமாவின் அழகியலுக்குள் அடையப்படுபவை.

டேவிட் லீன் இயக்கிய Doctor Zhivago இடைநிலை சினிமா. அதன் கட்டமைப்பும் உணர்வுநிலைகளும் வணிகசினிமாக்களுக்குரியவை. ஆனால் அது தன் காலகட்டத்தின் கலைப்படங்கள் அடைந்த அழகியல்வெற்றிகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஷிவாகோ லாராவுடன் சென்று தங்கும் பனியுறைந்த இல்லம் ஓர் உதாரணம். அது வணிகசினிமாவின் உணர்வுநிலைக்குள் அமைக்கப்பட்ட அரிய கலைத்தருணம். ருஷ்ய தொன்மங்களில் நரகம் என்பது பனியுறைந்த நிலம். அவர்கள் செல்வது மிகமிக அழகான ஒரு நரகத்திற்கு.

ஓர் ஒப்பீட்டுக்காக தர்கோவ்ஸ்கியின் sacrifice என்னும் சினிமாவைச் சுட்டிக்காட்டுவேன். அது கலைப்படம். மிகமிக மெல்ல நகர்வது. பெரிய நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. ஆனால் அதில் கதைநாயகனின் இல்லம் எரிந்தமையும் ஒரு காட்சி உள்ளது. பார்க்கும்போது பொறுமையிழக்கச் செய்வது. ஏனென்றால் பலநிமிடநேரம் ஓடும் காட்சித்துளி அது. ஆனால் முப்பதாண்டுகளாகியும் எனக்கு கனவு என நினைவில் இருக்கிறது. அது அளித்த உணர்வுநிலைகளை நான் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்துகொண்டே  இருக்கிறேன். சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்தபோது பொன்மாளிகை என்னும் ஜென் ஆலயத்தை ஒரு பிக்ஷு எரித்துவிட்டார் என்னும் செய்தி சாக்ரிஃபைஸ் படத்தை நினைவில் எழச்செய்தது

ஏன் இந்த வேறுபாடு தெரியவேண்டும்? தெரியாவிட்டால் ஒவ்வொன்றையும் நாம் அணுகுவதில் அவற்றுக்குரிய அபத்தம் உருவாகும். குட் பேட் அக்லி படத்தை பார்க்கும் ஒருவர் அதில் பலவகையான  ‘தர்க்கப்பிழைகளைச்’ சுட்டிக்காட்ட முடியும். பாலைவனத்தில்  ‘குட்’ கதாபாத்திரத்தை கட்டி இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். அத்தனை தொலைவு அத்தனை வெப்பத்தில் வெந்து நலிபவன் எப்படி உடனடியாக போரிடமுடிந்தது, ஓய்வெடுக்கவேண்டாமா என்று கேட்டாலே போதும். சமீபத்தில் The Revenant என்ற படத்தைப் பார்த்துவிட்டு ஒரு நண்பர் இதே கேள்வியைக் கேட்டார். பனிவெளியில் சாகக்கிடந்தவன் எப்படி ஓய்வெடுக்காமல், ஆடைகூட மாற்றாமல் அடுத்த சண்டைக்குப் போகிறான்?

இதேபோன்ற ‘புத்திசாலித்தனமான’ கேள்விகளுடன் வணிகசினிமாவை அணுகுவதே இங்கே நல்ல சினிமா ரசிகனின் அடையாளமாக கருதப்படுகிறது. நண்பர்கள் நடுவே இப்படிப் பேசுபவர்கள் அறிவுஜீவிகளாகக் கருதப்படுவார்கள். இது சினிமா ரசனையைப் பொறுத்தவரை அசட்டுத்தனத்தின் உச்சம். குட் பேட் அக்லி ’காமிக்ஸ்’ கதைகளின் இலக்கணத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. காமிக்ஸ் கதைகள் சாகசம் என்னும் ஓர் உணர்வை மிகைப்படுத்தி உருவாக்கப்பட்டவை. அதில் வரும் சாகசவீரர்கள் மானுட சாத்தியத்தை மீறிய ஆற்றல்கொண்டவர்கள்தான்.

முதிராச்சிறுவர்களுக்கான கலைவடிவம் காமிக்ஸ்.அவர்களின் பகற்கனவிலிருந்து உருவானது. அந்த எல்லையை அது மெல்லமெல்ல விரித்துக்கொண்டு மானுட உளவல்லமையை, சூழ்ச்சித்திறனை, மனித இயல்புகளிலுள்ள நிலையின்மையை, பேராசையை, அறத்தின்மேல் கொள்ளும் உறுதிப்பாட்டை எல்லாம் பேசும் கலைவடிவமாக ஆகியது. அதுவே குட் பேட் ஆண்ட் அக்லியின் அடிப்படை புனைவுமுறை. அதில் கதைநாயகன் எல்லையற்ற ஆற்றல்கொண்டவன்தான்.

த ரெவெனெண்ட் நாட்டார்மரபிலிருந்து எழும் கதை. நாட்டார் மரபிலுள்ள செவிவழி சாகசக்கதைகளின் அழகியலை அது முதல் காட்சியிலேயே வெளிப்படுத்திவிடுகிறது. அக்கதைநாயகன் திகழும் அந்த சாகச உலகம் நாட்டார் வீரகதைகளால் ஆனது. அங்கே சாகசமே முக்கியமானது. கதைநாயகன் என்ன சாப்பிட்டான், எங்கே தூங்கினான், சாகசம் நடுவே ஒன்றுக்கு வந்தால் என்ன செய்வான் போன்ற கேள்விகளுக்கு அங்கே இடமே இல்லை.

நாம் இங்கே செய்துகொண்டிருக்கும் சினிமா ஆராய்ச்சிகள் பெரும்பாலும் இத்தகையவைதான். தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் பார்க்கும்போது ‘என்னடா கதையே இன்னும் தொடங்கலை?”என்று பொறுமையிழப்பதும் இதன் பகுதியே. இதைவிட முக்கியமான பிழை என்பது டாக்டர் ஷிவாகோவின் பிரம்மாண்டமான அழகையும் அதன் கம்பீரமான ஒழுக்கையும் ரசித்து அதை தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் படத்தைவிட மேலாகத் தூக்கி வைப்பது.

டாக்டர் ஷிவாகோ போரிஸ் பாஸ்டர்நாக்கின் புகழ்பெற்ற நாவலின் அழகிய திரைவடிவம். அதில் விரியும் நிலக்காட்சிகளும், பனிவெளியின் குரூர அழகும், போர்க்களச் சித்தரிப்பும் எல்லாம் கனவுநிகர்த்தவை. ஒருபோதும் அவற்றை ஒரு கலைப்படத்தில் பார்த்துவிடமுடியாது. கிரெம்ளின் மாளிகை பகுதியையே ஐஸ்லாந்தில் ‘செட்’ அமைத்து எடுத்த படம் டாக்டர் ஷிவாகோ. கலைப்படங்களுக்குரிய படிமத்தன்மையும் காட்சியொருமையும் கொண்டது. ஆனால் சாக்ரிஃபைஸ் படத்திற்குப்பின் தர்கோவ்ஸ்கி என்னும் ‘ஆசிரியன்’ இருக்கிறான். அவன் உருவாக்கும் தரிசனம் ஒன்று உள்ளது. அதை நாம் எதிர்கொள்ளலாம், விவாதிக்கலாம், மறுக்கலாம். அது நம் வாழ்க்கைப்புரிதலைச் சீண்டுகிறது, மறுஆக்கம் செய்கிறது. டேவிட் லீன் உருவாக்கிய படம் நம்மை பாஸ்டர்நாக்கின் தரிசனம் நோக்கியே கொண்டுசெல்கிறது. திரைஆசிரியன் என ஒருவன் அப்படத்திற்குப்பின்னால் இல்லை.

இதெல்லாமே நானறிந்து எழுபதுகளிலேயே பேசிப்பேசி நிறுவப்பட்டுவிட்ட எளிய கருத்துக்கள். தமிழில் சினிமா பற்றிய பெரியபேச்சுக்கள் பல இருந்தாலும் இந்த எளிமையான வேறுபாடு இல்லை. ஆகவேதான் பிகிலில் தர்க்க ஒருமை எங்கே என ஆவேசக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன.சில கலைக்கூறுகள் கொண்ட ஓர் இடைநிலைப்படம் என்று மட்டுமே கொள்ளத்தக்க 96 என்னும் படம் ஒரு கலைச்சாதனை என கருதப்படுகிறது. அதைப்பற்றி புத்தகங்கள் எழுதப்படுகின்றன

இங்கே தரமான கலைப்படங்கள் உருவாக தடையாக இருப்பவை இந்த வகையான மழுங்கல்கள். தமிழில் பேசப்படும் பேச்சின் 99 சதவீதம் சினிமா குறித்தே. ஆனால் அத்தனை பேச்சும் இம்மழுங்கல்களையே முன்வைக்கின்றன. தரமான கலைப்படங்கள் வருவதற்குத் தடையாக உள்ளது முதன்மையாக இதுவே. உலகமெங்கும் கலைப்படம் என்பது அதுகுறித்த ஒரு பொது உரையாடல் வழியாக, அதன்விளைவான ரசனையுருவாக்கம் வழியாகவே நிறுவப்பட்டது. மலையாளக் கலைப்பட இயக்கத்தை உருவாக்கிய அடூர் கோபாலகிருஷ்ணன் முதலில் அதற்கான ஓர் அறிவியக்கத்தையே கட்டியெழுப்பினார்.

[மேலும்]

***

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2

முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42