‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 3

திருதராஷ்டிரரின் குடில் முன் சஞ்சயன் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் வருவதைக் கண்டு புன்னகையுடன் அருகணைந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைகளை வைத்து வாழ்த்திய விதுரர் “எப்படி இருக்கிறார்?” என்றார். சஞ்சயன் “உடல்நிலை நலமாகவே இருக்கிறது” என்றான். சகதேவன் “மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றுதானே கேள்விப்பட்டேன்” என்றான். சஞ்சயன் “ஆம், அதை மகிழ்ச்சி என சொல்லலாம் என்றால் நேற்று மாலைவரைகூட மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்” என்றான்.

விதுரர் “சொல்க!” என்றார். “நீங்கள் அவரை சந்திக்க வந்திருக்கிறீர்கள்” என்றான் சஞ்சயன். “அவர் நிலையை அறிந்தபின் சந்திக்கிறேன்” என்றார் விதுரர். சஞ்சயன் “அதை நான் விளக்க முடியாது. நிகழ்ந்தவை என்ன என்று மட்டும் சொல்கிறேன்” என்றான். விதுரர் இயல்பாக நடந்து பக்கவாட்டிலிருந்த சஞ்சயனின் குடிலை நோக்கி சென்றார். சஞ்சயன் அவர் பின்னால் வந்தான். அவர் அங்கிருந்த மூங்கில் பீடத்தில் அமர்ந்துகொள்ள அவன் முன்னால் நின்றான். சகதேவன் அருகே சென்று நின்று அவர்கள் இருவரின் முகங்களையும் மாறிமாறி நோக்கினான்.

சஞ்சயன் “இங்கே அரசரும் இளையோரும் வந்து வாழ்த்துச்சொல் பெற்றுச் சென்றதை அறிந்திருப்பீர்கள். அந்நாளில் அக்கணங்களுக்கு முன்புவரை அவர் கொந்தளித்துக்கொண்டுதான் இருந்தார். சினமும் பழிவெறியும் ஒரு கணம் மீதெழும். மைந்தர் வாழவேண்டும், குடிசெழிக்கவேண்டும் என்னும் விழைவு அதை வெல்லும். அவர் எந்நிலையில் இருக்கிறார் என்பதை எவராலும் சொல்ல முடிந்ததில்லை. சுழற்காற்றில் அலையும் காற்றுத்திசைகாட்டிபோல விண்ணால் ஆட்டுவிக்கப்படுகிறார் என்று நான் எழுதிக்கொண்டேன்” என்றான்.

ஆனால் அன்று பாண்டவ உடன்பிறந்தார் ஐவரும் வந்து பணிந்து வாழ்த்துச்சொல் பெற்றபோது அவரிடமிருந்து தந்தையே மேலெழுந்தார். தன்னை ஒரு பெருந்தந்தை, குலமூதாதை என அவர் கண்டுகொண்டார். அது அவரை விடுதலை செய்தது. அனைத்து உளக்கசடுகளும் அகன்று தெளிந்தார். பேரன்பு நிறைந்தவராக ஆனார். அவர்கள் சென்றபின் அந்த இரும்புப் பாவையை அவரிடம் அளித்தார்கள். உண்மையில் அதை அவரிடம் அளிக்கும் எண்ணம் இளைய யாதவருக்கு இருக்கவில்லை. அதை திரும்பக்கொண்டுசெல்லவே அவர் சொல்லியிருந்தார். ஆனால் பேரரசர் அதை நினைவுகூர்ந்து அதை கொண்டுவரும்படி சொன்னார்.

நான் அப்போது அவர் அருகே இருந்தேன். “அது எதற்கு இப்போது?” என்று கேட்டேன். “அதை கொண்டு வா” என்று அவர் சொன்னபோது முகம் மலர்ந்திருந்தது. உளக்கிளர்ச்சி கொள்ளும்போது தலையை உருட்டியபடி உதடுகளை மெல்வது அவர் வழக்கம். “என் மைந்தனின் உடல் அது… என் மைந்தனைத் தழுவும் உணர்வு நான் அடைந்தது” என்றார். “அது பீமசேனனின் உடலுருவில் அமைக்கப்பட்டது அல்லவா?” என்றேன். “அது அவன் உடலும்கூடத்தான். அவர்கள் வெவ்வேறல்ல… கொண்டுவருக!” என்றார். அருகே இருந்த பேரரசி “அப்பாவையா? அது அவனைப்போலவா உள்ளது?” என்றார். அவர் முகமும் மலர்ந்திருந்தது.

நான் அது அவர்களுக்கு நல்ல உளநிலையை உருவாக்கும் களிப்பாவையாக அமையும் என எண்ணினேன். கலிங்கச் சிற்பிகளை வரச்சொல்லி அதை மீண்டும் பொருத்த முடியுமா என்று பார்த்தேன். அது எளிதில் பொருந்தும்படி சமைக்கப்பட்டது. ஆகவே அரைநாழிகைக்குள் அதை முன்பென அமைத்துவிட்டார்கள். பேரரசரிடம் அதை கொண்டு சென்றபோது அது வரும் ஒலியிலேயே உணர்ந்துவிட்டார். பாய்ந்தெழுந்து ஓடிவந்து இரு கைகளாலும் அதை அள்ளி எடுத்து நெஞ்சோடணைத்து வெறிகொண்டு முத்தமிட்டார். கண்ணீருடன் “மைந்தா! மைந்தா!” என்று புலம்பினார். அதை அணைத்துச் சுழற்றியபடி நடனமாடினார்.

என்ன வியப்பென்றால் அப்பாவையை தழுவியும் வருடியும் பேரரசியும் மகிழ்ந்ததுதான். அவர்கள் அதை தங்கள் மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சினார்கள். அழுகையும் கண்ணீரும் மறைந்தபின் சிரிப்பும் களிப்பும் வெளிப்பட்டது. அதை அவர்கள் மைந்தன் என்றே எண்ணினர். அதனுடன் உரையாடினர். ஊடியும் நகையாடியும் அதனுடனேயே இருந்தனர். அதுவும் நன்றே என நான் எண்ணினேன். அது அவர்களின் துயரத்தை தணிக்குமென்றால் ஆகுக என கருதினேன். அவ்வண்ணம்தான் இருந்தது, நேற்று அந்திவரை.

நேற்று அந்தியில் அவர்கள் இருவரும் குடிலுக்குள் மஞ்சத்திற்கு சென்றபோது இருவருக்கும் நடுவே அந்தப் பாவை இருந்தது. ஒவ்வொரு நாளும் அவ்வாறுதான் அவர்கள் இரவு உறங்குகிறார்கள். அது அவர்களுக்கு நடுவே படுத்திருக்கையில் ஏறத்தாழ பேரரசரின் அளவுக்கே பெரிதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் அதை நடத்தும் முறையில் நாமே அறியாது அது ஒரு கையளவு சிறிய குழவி என எண்ணத்தலைப்படுவோம். அதற்கு மரவுரிப் போர்வையை மெல்ல இழுத்து போர்த்துகையில் அரசியின் கையிலிருக்கும் அந்த மென்மையை, முகத்திலிருக்கும் கனிவைக் காண்கையில் அந்தப் பாவையும் அதை உணர்கிறதோ என்று தோன்றும்.

அமைச்சரே, அது உண்மையில் என்ன என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. தொலைவிலிருந்து பார்க்கையில் அவர்கள் அதை கொஞ்சி மகிழும்போது அதுவும் அவர்களுடன் விளையாடுகிறதோ என்ற எண்ணத்திலிருந்து அகல முடிவதில்லை. அவர்கள் அதை கைகளால் வருடுகையில் மெல்ல உடலை ஒடுக்கி கருக்குழவிபோல் சுருண்டு அவர்களிடம் ஒண்டிக்கொள்கிறது. அவர்கள் அதன் தலையை மடியில் வைத்து அமர்ந்துகொள்கையில் கால் மேல் கால் போட்டபடி அவர்களின் கைகளை எடுத்து விரல்களால் பற்றி நெஞ்சோடு வைத்துக்கொண்டு மென்மொழி பேசுவதுபோல் தோன்றுகிறது. குழவியரும் சிறுவரும் கொள்ளும் உடலசைவுகள் அனைத்தும் அதில் கூடுகின்றன.

இது என் விழிமயக்காக இருக்கலாம். ஆனால் மெய்யாகவே அதில் ஏதோ உள்ளது. பொருட்களில் கூடும் தெய்வங்கள் எவையோ அதில் கூடியுள்ளன. அது மறைந்த அரசரின் எஞ்சும் இருப்போ என நான் எண்ணியதுண்டு. ஆனால் அவர் உயிருடன் இருந்தபோதுகூட அதில் ஏதோ குடியிருந்தது. அவருடன் இணைநின்று போரிட்டது அதுதான். அவர் மறைந்தபின் குருக்ஷேத்ரத்தில் எழுந்து நின்றிருந்தது. இப்போது மைந்தனென, மகவென மாறி இங்கிருக்கிறது. நலம் நாடுவதா அன்றி வஞ்சம் கொண்டு பலி கோருவதா என்று அதை இன்று வகுக்க இயலவில்லை. அது தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டே இருப்பதுதான் தெய்வங்களின் இயல்புபோலும்.

அதன் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இரும்புப் பாவைமுகம். தசையென நெகிழாதது. உள்ளிருந்து எந்த ஒளியையும் வெளிக்கொணராதது. தலைக்கவசம் இட்டு ஒருவர் முன் வருகையில் அவரது முகம் மறைந்துவிடுவதை கண்டிருப்போம். ஆனால் தலைக்கவசமிட்ட ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அத்தலைக்கவசமே அவரது முகமாக மாறுவதை உணர்கிறோம். அது அவரது உணர்வுகளை காட்டத்தொடங்குகிறது. அதை நோக்கி நாம் அனைத்தையும் பேசத்தலைப்படுகிறோம். அதைப்போலத்தான் அந்தப் பாவையை அரசர் துரியோதனன் என்றே நானும் எண்ணினேன். அவ்வாறே அதை நடத்தினேன். அதன் முன் பணியாது ஒரு சொல்லும் நான் உரைத்ததில்லை. பொறுத்தருள்க அரசே என்று சொல்லாமல் அதை தொட்டதுமில்லை.

நேற்றிரவு சங்குலன் கதவை மூடி வெளிவரும்போது நான் வெளியே நின்றிருந்தேன். அவன் என்னைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கி அங்கிருந்த தாழ்வான பீடத்தில் அமர்ந்துகொண்டான். நான் என் மரவுரியை போர்த்திக்கொண்டு இக்குடிலுக்கு மீண்டேன். இரவு மட்டுமே நான் அரசரிடமிருந்து விலகியிருக்கிறேன். அதுவும் இப்போது அவர் பேரரசியுடன் இருப்பதால். அஸ்தினபுரியில் பெரும்பாலான இரவுகளில் நான் அவர் அருகிலேயே தரையில் படுத்துக்கொள்வது வழக்கம். அவர் இல்லாதபோதும் அவர் இருப்பை எப்போதும் உணர்பவன் நான்.

மஞ்சத்தில் படுத்து கண்களை மூடியபடி ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி எண்ணினேன். அவரிடம் மறுநாள் சொல்லி முடிக்கவேண்டியவற்றை. சொல்லத் தவறியவற்றை. பெரும்பாலான இரவுகளில் அவ்வண்ணம் விழிமூடி படுத்திருக்கையில் நான் அவரிடம் சொல்லாது தவிர்த்த சொற்களை உள்ளிருந்து வெளியே எடுப்பேன். அவ்விருளுக்குள் ஒவ்வொன்றாக வெளியே விடுவேன். அவை பறந்தும் தவழ்ந்தும் அவரை சென்றடைந்துவிடும் என்பதைப்போல். அவர் துயின்றபின் அவர் உள்ளத்துள் புகுந்து அங்கிருக்கும் என்பதுபோல். மறுநாள் காலையில் அவர் என்னிடம் பேசும்போது முந்தைய இரவில் நான் வெளிவிட்ட சொற்களுக்கான மறுமொழிகளும் உடன்பாடுகளும் இருப்பதை பார்த்திருக்கிறேன். நாங்கள் விழித்திருக்கையில் பேசுவது குறைவு. துயிலினூடாகவே கைமாறும் சொற்கள் மிகுதி.

அந்த அரைத்துயிலில் நான் அவரை மிக அருகில் எனக் கண்டேன். எனக்கு அம்முகத்தோற்றம் ஒரு பதற்றத்தை அளித்தது. பாண்டவ ஐவர் முன் அவர் பெருந்தந்தை என எழுந்த அத்தருணத்தில் அவருடன் இருந்தேன். உளம் நெகிழ்ந்து விழிநீர் சிந்தினேன். அவர் சென்றடைந்த அனைத்து உச்சிகளுக்கும் நானும் சென்றேன். அப்போதும் அந்தப் பேரரசர் நான் அறிந்தவரல்ல என்று தோன்றிக்கொண்டுதான் இருந்தது. இப்போதும் அந்த ஐயம் நீடிக்கிறது. சினவெறி கொண்டு கைகளை அறைந்துகொண்டு உறுமி கொந்தளித்து சுழன்று வரும் பேரரசரை கண்டிருக்கிறேன். அப்போதும் இதே உணர்வுதான், அது அவரல்ல பிறிதொன்று என்று. இவ்வாறும் அவ்வாறும் வெளிப்படும் இவ்விருவருக்கும் அப்பால் பிறிதொருவர் உண்டு என நான் எண்ணிக்கொள்கிறேன். அவ்வாறு ஒருவரை உருவாக்காமல் அவருடன் என்னால் இருக்க இயலாது.

அவர்களுக்கு நடுவே அந்தப் பாவை படுத்திருப்பதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். அது ஒரு தெய்வம் எனில் இப்போது எப்படி உணரும்? எவ்வாறு அது அவர்களை எண்ணும்? அங்கிருந்து எழுந்து இருளில் பேருருக்கொண்டு நின்று அவர்களை பார்த்துக்கொண்டிருக்கும் என எண்ணிக்கொண்டேன். இல்லை, அது வெறும் பொருள். மானுடரைக் கண்டு மானுடரைப்போல் உருவாக்கப்படுபவை பாவைகள். அவை மானுடருக்குரிய நிலையழிவுகள் ஏதும் இல்லாதவை என்பதனாலேயே அவை மானுடரைவிட மேம்பட்டவை ஆகிவிடுகின்றன. மானுடர் பிற மானுடரை என பாவைகளை எண்ணத்தலைப்படுகிறார்கள். பிற மானுடரை எப்போது அச்சத்துடனும் ஐயத்துடனுமே அவர்கள் அணுகுகிறார்கள் என்பதனால் பாவைகளையும் அவ்வாறே கருதுகிறார்கள். பாவைகளின் இரக்கமற்ற பிழையின்மையினால் அவர்களின் அச்சம் மேலும் மேலும் என பெருகுகிறது.

அது மானுடன் அல்ல. அது வெறும்பொருள். ஆனால் மானுடருடன் அவர்களைச் சூழ்ந்திருக்கும் அனைத்துப் பொருட்களும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளிலும் ஒரு தெய்வம் உள்ளது. நம் காலைக் கிழிக்கும் கூழாங்கல், நாம் தலையில் இடித்துக் கொள்ளும் நிலைப்படி, நாம் கைநீட்டுகையில் சற்றே அகன்றுவிடும் கைப்பிடி அனைத்திலும் நம்முடன் விளையாடும் தெய்வங்கள் உள்ளன. இந்தப் பாவையில் இருக்கும் தெய்வம் எது? என்றேனும் எவரேனும் அதை முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா என்ன? ஏதேனும் தெய்வத்தை மானுடர் அவ்வாறு அறிந்து முழுமையாக வகுத்துள்ளார்களா? மானுடர் வகுத்துக்கொள்ளாதவற்றையே தெய்வம் என்று உணர்கிறோமா?

நான் துயின்றுவிட்டிருந்தேன். பின்னிரவில் கூச்சல்கள் கேட்டு எழுந்து வெளியே சென்றேன். பேரரசரின் குடிலின் கதவைத் திறந்து சங்குலன் உள்ளே செல்வதை கண்டேன். நானும் உடன் உள்ளே சென்று பார்த்தபோது பேரரசரை சங்குலன் தன் இரு பெரிய கைகளால் பற்றி இறுக்கி அள்ளித் தூக்கி அப்பால் கொண்டு செல்வதைக் கண்டேன். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அப்பாவையை அதன் பின்னரே கண்டு திடுக்கிட்டு பின்னடைந்தேன். அது இரு கைகளையும் விரித்து மற்போரிட சித்தமாக நின்றிருந்தது. சங்குலன் அவரை கொண்டு சென்று குடிலுக்குப் பின்னால் இருந்த வாயிலினூடாக அப்பால் மறைந்தான். அது தன் இரு கைகளையும் அறைந்தபடி விழியற்றதுபோல் தலையைச் சுழற்றியபடி குடிலை சுற்றி வந்தது.

நான் அதன் பின்னரே மஞ்சத்தில் அமர்ந்திருந்த பேரரசியைக் கண்டேன். அரசியின் விழிகள் அதை நோக்குவதுபோல் தெரிந்தது. அது சுழன்று வரும்போது அவர் தலைதிருப்பவில்லை. உறைந்ததுபோல் இரு கைகளையும் மடியில் கோத்து மஞ்சத்தில் அமர்ந்திருந்தார். எனினும் அதன் அசைவுகள் அனைத்தையும் அவர் உணர்ந்திருப்பார் என்று அவருடைய உடல்மெய்ப்பாடுகளிலிருந்து தோன்றியது. நான் அந்தப் பாவையை பற்றிநிறுத்த வேண்டுமென்று விரும்பினேன். எக்கணமும் அது தன் இரும்புக் கைகளால் பேரரசியை தாக்கிவிடக்கூடும் என்று தோன்றியது. அறைக்குள் அது கைநீட்டி துழாவியது.

அந்தப் பாவைக்கு நன்கு நோக்குணர்வு உண்டென்றும், அதைவிட மிகுதியாக செவியுணர்வு உண்டென்றும் அறிந்திருந்தேன். அப்போது அது விழியற்றதாகத் தோன்றியது ஏன் என வியந்தேன். அவரால் உடைக்கப்பட்டபோது அதன் விழிகள் பழுதுபட்டிருக்கலாம். ஆனால் முந்தையநாள் அதன் விழிகளை நான் பார்த்திருந்தேன். அவர்களுடன் அது இருந்தபோது நான் உள்ளே நுழைந்த அசைவைக் கண்டு சீற்றத்துடன் திரும்பி நோக்கியது. அதன் உணர்வுகள் என நான் கண்டுகொண்டவை முழுக்க அந்த விழியசைவுகளில் இருந்தே. அது கைகளை அறைந்துகொண்டது. உறுமியபடி நிலத்தை ஓங்கி மிதித்தது.

சங்குலன் கதவைத் திறந்து உள்ளே வந்து இயல்பாக நடந்து அதை அடைந்தான். அவனைக் கண்டதும் அது திகைத்து பின்னடைந்து அவனை போருக்கு அழைப்பதுபோல கைகளை விரித்தது. அவன் அதன் இரு கைகளையும் பற்றிச் சுழற்றி நிலத்தில் இட்டான். அது திமிறி எழ முயல தசைபுடைத்த தன் பெரும் கைகளால் அதைப் புரட்டி இரும்புக் கைகளை மடித்து பின்பக்கம் கொண்டுவந்து சேர்த்து தன் தலையில் சுற்றியிருந்த தலைப்பாகைத் துணியால் இறுகக் கட்டினான். அதைத் தூக்கி உருட்டி அப்பால் இட்டான். அது உறுமியபடி துள்ளி எழ முயல அவன் அதை அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டான். அது மெல்ல அடங்கி செயலிழந்தது.

அதற்குள் தோளால் உந்திக் கதவைத் திறந்து உள்ளே வந்த பேரரசர் “கொல் அவனை! கொல் அவனை!” என்று கூவினார். அவரது இரு கைகளும் பின்பக்கம் கட்டப்பட்டிருந்தன. “எங்கே? எங்கே அவன்?” என்று கேட்டபடி குடிலுக்குள் சுழன்று வந்தார். சங்குலன் எழுந்து அவரை மீண்டும் பிடித்துத் தூக்கி மஞ்சத்தில் அமர வைத்து “அமர்க!” என்றான். அவர் “விலகுக! அறிவிலி! விலகிச்செல்! இக்கணமே அவனை கொல்ல வேண்டும். எங்கே அவன்?” என்றபடி எழ முயல அவன் அவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.

அந்த ஓசை கேட்டு என் உடல் உலுக்கிக்கொண்டது. கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது அவன் அவரை அறைவதை முன்பும் பலமுறை நான் கண்டதுண்டு. அது இரு மல்லர்களுக்கு போரில் நிகழும் தாக்குதல் என்றே எப்போதும் எனக்குத் தோன்றியிருக்கிறது. அறைபட்டதும் அவர் தன் தலையைத் தாழ்த்தி பற்களைக் கடித்துக்கொண்டு உடற்தசைகள் இறுகி நெகிழ்ந்து உருள திமிறினார். பின்னர் ஒரு கணத்தில் தளர்ந்து உறுமல்போல் ஒலியெழுப்பி அழுதபடி சரிந்து மஞ்சத்தில் விழுந்தார். சங்குலன் அவர் கைகளைக் கட்டியிருந்த மேலாடையை அவிழ்க்க அவர் தன் இரு கைகளாலும் தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கூவி அழுதார். முகம் தலையணையில் அறைய மஞ்சத்திலேயே குப்புற விழுந்தார்.

அந்தப் பொழுது முழுக்க வெறுமனே நோக்கியபடி பேரரசி அமர்ந்திருந்தார். பேரரசியின் கூரிய நோக்கை நான் முன்னரும் உணர்ந்திருந்தபோதும்கூட அதுபோல எப்போதும் அறிந்ததில்லை. அந்தக் காட்சியே ஒரு கனவோ எனத் தோன்றியது. பேரரசியின் முகம் ஒரு பளிங்குப் பாவை போலிருந்தது. இவர்கள் அனைவருக்குமே பாவை என ஆகும் உளநிலை உண்டு. பேரரசர் கருங்கல் சிற்பம் என ஆவார். துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல கௌரவ நூற்றுவரும் அமர்ந்த இடத்திலேயே அசைவிழந்து கல்லென ஆகும் கலை அறிந்தவர்கள்.

நான் குடிலின் படலை மெல்ல சார்த்தி வெளியே வந்தேன். என் குடிலுக்கு வந்து மஞ்சத்தில் அமர்ந்துகொண்டு கண்களை மூடி பேரரசரின் முகத்தை நினைவில் கொண்டுவர முயன்றேன். அமைச்சரே, அத்தருணத்தில் ஒன்று தோன்றியது. அப்போது அங்கே மஞ்சத்தில் படுத்து அழுதுகொண்டிருக்கும் பேரரசர்தான் மெய்யானவர் என்று. ஆனால் அவரை நானோ பேரரசியோ அணுக இயலாது. அவரை அணுகக்கூடியவன் சங்குலன் மட்டுமே.

சங்குலன் வெளிவந்து மீண்டும் தன் தாழ்ந்த மஞ்சத்தில் கால் நீட்டி அமர்ந்து கைகளை மடியில் கட்டி சுவரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். நான் இங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் சில கணங்களிலேயே துயின்று நீள்மூச்செறியத் தொடங்கினான். அவன் மூச்சொலியைக் கேட்டபடி நான் இங்கு அமர்ந்திருந்தேன். நெடும்பொழுது நான் துயிலவில்லை. என்னை அந்நிகழ்வு உலைத்துவிட்டது. அவ்வண்ணம் ஒரு நிகழ்வு உருவாகக்கூடும் என எண்ணியிருந்தேன். அது உருவானபோது வெறுமையை அடைந்தேன்.

என்ன நிகழ்ந்தது என்று இன்று காலை பேரரசியிடம் கேட்டேன். பேரரசி தனக்குத் தெரியவில்லை, பேரரசர் சொன்னதைத்தான் தன்னால் சொல்ல முடியும் என்றார். நள்ளிரவில் அந்தப் பாவை எழுந்து பேரரசரை கொல்ல முயன்றது. அவர் மேலேறி அமர்ந்து கால்களால் அவர் உடலை கவ்விக்கொண்டு கழுத்தை நெரித்து இறுக்கியது. அவர் அதை முழு உடல் விசையாலும் உந்தி அப்பாலிட்டு எழுந்து தாக்கினார். அவர்கள் இரு இணைமல்லர்கள்போல் போரிட்டுக்கொண்டனர். அதன் அடிகளை பேரரசரால் தாள முடியவில்லை. இருமுறை அது பேரரசரைத் தூக்கி அப்பால் வீசியது. அது அவரை கொன்றிருக்கும். அவரது அலறல் கேட்டு சங்குலன் உள்ளே வந்து அவரை காப்பாற்றினான் என்றார்.

சகதேவன் “அவர் மிக எளிதில் அதை உடைத்ததை நான் பார்த்தேன். அவர் தோள்களுக்கு அது இணையே அல்ல. அது துரியோதனன் தனக்கு நிகரான மல்லனாக உருவாக்கியது. மூத்தவர் பீமசேனன் வடிவில் அதை அமைத்தார் என்றும் மேலும் மேலும் மேம்படுத்தி அதை தன் வடிவிலேயே ஆக்கிக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் இருவருமே பேரரசரைவிட மிகச் சிறிய உடல் கொண்டவர்கள்” என்றான். விதுரர் “அது பேரரசரின் உடலையும் தான் எடுத்துக்கொண்டிருக்கலாம்” என்றார். “அது எங்ஙனம்?” என்றபின் “அது இயல்வதா என்ன?” என்று சகதேவன் கேட்டான். “அது தன் எதிரியின் ஆற்றலை கற்றுக்கொண்டு நிகரானதாக ஆகும் நுட்பம் கொண்டது” என்று விதுரர் சொன்னார்.

“அவ்வாறெனினும்கூட அவர்கள் ஒருமுறைகூட பொருதவில்லையே? அவர் அதை கொஞ்சி வருடி உவகைகொண்டபடி அல்லவா இருந்தார்?” என்று சகதேவன் கேட்டான். புன்னகையுடன் எழுந்துகொண்டு “நான் மூத்தவரை சந்திக்கிறேன்” என்று விதுரர் சொன்னார். சஞ்சயன் “அவர் பலமுறை நீங்கள் வந்துவிட்டீர்களா என்று கேட்டார். நேற்றே நீங்கள் வந்துவிட்டதை சொன்னேன். அழைத்து வரவா என்று கேட்டேன். வேண்டாம், அவனே வரட்டும் என்றார்” என்றான். விதுரர் “அவர் இன்று காலை எப்படி இருக்கிறார்?” என்றார். “நேற்று நிகழ்ந்தவற்றுக்குப் பின் அவர் சோர்வுற்றிருப்பார் என்றே எண்ணினேன். அவ்வண்ணமே இருக்கிறார். காலையில் எழுந்து அவரோ அரசியோ ஒரு சொல்கூட பேசிக்கொள்ளவில்லை” என்றான் சஞ்சயன்.

விதுரர் நடக்க சகதேவன் அவருக்குப் பின்னால் சென்றான். “இந்நாட்களில் நீ விந்தையான எதையாவது பார்த்தாயா அவரிடம்?” என்றார் விதுரர். “விந்தையா? இங்கே நிகழ்வன அனைத்துமே விந்தைதானே?” என்றான் சஞ்சயன். “நீ எண்ணாதது, முன்னர் நீ காணாதது” என விதுரர் மீண்டும் கேட்டார். “பல உள்ளன. எதை சொல்வேன்?” என்றான் சஞ்சயன். பின்னர் “இன்று காலை ஒரு புதிய பேச்சு எழுந்தது” என்றான். “சொல்க!” என விதுரர் சொன்னார்.

“இன்று காலை அவர் மறைந்த அரசியின் பெயரை சொன்னார்” என்றான் சஞ்சயன். “யார்?” என்றார் விதுரர். “இளைய அரசி சம்படையின் பெயரை சொன்னார்” என்றான் சஞ்சயன். “அவர் மறந்தும் ஒருமுறைகூட அப்பெயரை சொன்னதில்லை.” விதுரர் “அவர் என்ன சொன்னார்?” என்றார். “சம்படை என்றும் மட்டும் சொன்னார். தலைகுனிந்து அமர்ந்திருந்தார். தனக்குள் என ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொல் என்ன என நான் விழிகளால் அறிந்தேன். இளைய அரசி சம்படையின் பெயர்” என்றான் சஞ்சயன்.

விதுரர் அவனை புரியாதவர்போல சில கணங்கள் நோக்கி நின்றார். பின்னர் நடந்தார். சகதேவன் “அரசி சம்படைக்கு இங்கே நீர்க்கடன்கள் தேவை இல்லை அல்லவா? அவருக்குரிய அனைத்தும் பல்லாண்டுகளாக செய்யப்படுகின்றன” என்றான். விதுரர் ஒன்றும் சொல்லவில்லை. “அரசி விண்புகுந்திருப்பார்” என்றான் சகதேவன். விதுரர் தனக்குள் என “சிலர் விண்புகுவதே இல்லை” என்றார்.

முந்தைய கட்டுரைகலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…
அடுத்த கட்டுரைநீ மது பகரூ – கடிதம்