யுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

மதுரைக்கு வருவதை நான் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உண்டு, ‘மதுரையை வெறுக்க இருபது காரணங்கள்’என ஒரு நீண்ட கட்டுரையே எழுதலாம். முதல்காரணம் உடைந்து சரிந்து சிரியப்போர்க்களம் போல காணப்படும் அதன் தெருக்களும் மையச்சாலைகளும். இரண்டாவது காரணம் எங்குமுள்ள புழுதி. கடைசியான காரணம் உணவகங்களில் கைகழுவுவதற்காக வைத்திருக்கும் அண்டாநீரில் கையை உள்ளே விட்டு அலம்பிக்கொண்டு போகும் வழக்கம். அதற்கு முந்தைய காரணம், போஸ்டர்களில் தெரியும் அரிவாள். ஆகவே கடைசிக்காரணத்திற்கு நான் பொதுவாக எதிர்வினை ஆற்றுவதில்லை.

ஆனால் மதுரையில் இனிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அலெக்ஸின் நினைவுகள். மதுரைக்கு நான் செல்லும்போதெல்லாம் எனக்கு அறை ஏற்பாடுசெய்பவர் நண்பர் டாக்டர் ரவி. மதுரை இம்முறை வெயில் இல்லாமல், நிலம் கொஞ்சம் ஈரமாக இருந்தது. அமெரிக்கன் கல்லூரிக்கு நேர் எதிரிலேயே விடுதி. திண்டுக்கல்லில் இருந்து கிளம்பி பேசிக்கொண்டே காரில் வந்தோம். வரும் வழியில் மழைமுகில்கள் திரண்ட வானம். வெயில் ஒளி அடங்கி மென்மையாக இருந்தது

நண்பர்களுடன் சென்று அபியைச் சந்தித்தோம். ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அபி உற்சாகமாக இருந்தார். குர் ஆனின் புதிய பதிப்பொன்றை பிழைதிருத்தி மெய்ப்பு நோக்கி கொண்டுவரும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார். பெரிய பணிகளின் முதன்மை பயன் என்னவென்றால் அவை நம் அன்றாடத்தை சிறப்புற ஆக்கிவிடுகின்றன, நம் பொழுதுகள் பயனுறுகின்றன என்னும் நிறைவை அளிக்கின்றன என்பதுதான்.

மாலையில் நண்பர்கள் வரத்தொடங்கிவிட்டிருந்தனர். தொடர்ச்சியாக உரையாடல். பெரும்பாலும் வேடிக்கை சிரிப்பு. யுவன் மறுநாள் காலையில்தான் வருவதாகச் சொன்னான். ராஜகோபால் சென்னையிலிருந்து வந்திருந்தார். இரவு 12 மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு துயில்கையில் வழக்கம்போல சொற்கள் செறிந்து மூளை ரீங்கரித்தது.

மறுநாள் காலையில் நண்பர்களுடன் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குச் சென்றேன். காலையில் பெரிய கூட்டம் இல்லை. முகமண்டபச் சிற்பங்களுக்கு இன்னமும் கோமணம் கட்டிவிட ஆரம்பிக்கவில்லை என்பதனால் ரசிக்க முடிதது. ஒருவர் அகோரவீரபத்ரரின் உடலில் இருந்து வெண்ணையை வழித்து எடுத்துக்கொண்டிருந்தார். சுந்தரேஸ்வரரை முதலில் வணங்கிவிட்டு பின்னர் மீனாட்சியை வணங்கினோம்

காலையில் ஒரு பேராலயம் இயல்பாகவே ஒரு நிறைவை, நெகிழ்வை நம்முள் நிறைத்துவிடுகிறது. அங்கே ஒலித்துக்கொண்டிருந்த தேவாரத் தமிழ் முதன்மைக்காரணம். அங்கிருக்கும் உறைந்த காலம். நோக்கி நோக்கி நம்முள் ஆழப்பதிந்த சிற்ப உருவங்கள். கல்லில் எழுந்த அவற்றின் முடிவிலா இருப்பு.

நாங்கள் செல்லும்போதே விழா தொடங்கிவிட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டுச் செல்ல சற்று பிந்தியது. கல்லூரி முதல்வர் விழாவை தொடங்கிவைக்க சமயவேல் தொடக்கப்பேருரையை ஆற்றி யுவன் மீதான விவாதங்களை தொடங்கினார். நான்கு அரங்குகள். சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள். குசும்புகளுக்கு ஒரு சிறு அரங்காவது ஏற்பாடு செய்திருக்கலாம்.

இத்தகைய அரங்குகளுக்குரிய பயன் என்னவென்றால் ஓர் எழுத்தாளரைப்பற்றி ஒட்டுமொத்தமான ஒரு சித்திரம் அமைவதுதான். அனைத்துக்கோணங்களிலும் பேசப்படுவதற்கான வாய்ப்பு. யுவனைவிட மூத்த படைப்பாளிகள், யுவனின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், அடுத்த தலைமுறை படைப்பாளிகள் முன்வைக்கும் கருத்துக்கள் ஒன்றின் இடைவெளியை ஒன்று நிரப்பி ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய கருத்துரையாக மாறுகின்றன.

இத்தகைய பல கருத்தரங்குகள் வழியாகத்தான் கேரளத்தில் எல்லாம் படைப்பாளிகள் குறித்த ஒருமித்த நோக்கு உருவாகிறது. அதுவே சுருங்கி ஒட்டுமொத்த மதிப்பீடாக நிலைகொள்கிறது. இது யுவனுக்கு அமைக்கப்படும் முதல் கருத்தரங்கு என நினைக்கிறேன். இதுவே நல்லதுதான். ஆ.மாதவனுக்கு எழுபது கடந்தபின் விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது. தனக்காக கூட்டப்பட்ட முதல் இலக்கியக்கூட்டம் அது என அவர் மேடையில் சொன்னார்.

எவருமே செயற்கையான, மிகையான ‘ஆய்வுகளை’ செய்யவில்லை என்பது மிக்க ஆறுதல் அளித்தது. கல்வித்துறை ஆய்வாளர்கள் இல்லை என்பதே காரணம் என நினைக்கிறேன். எல்லா கருத்துரைகளும் வெவ்வேறு கோணங்களை திறப்பனவாக அமைந்தன. சிலர் எழுதிவைத்து வாசித்தனர். சுரேஷ் பிரதீப், சுனீல் போன்றவர்கள் தேர்ந்த பேச்சாளர்களாக ஆகிவிட்டிருப்பது தெரிந்தது. ராஜகோபாலன் என்றுமே சிறந்த பேச்சாளர், அவருடைய தொழில் அது.

நிகழ்ச்சியில் நிறைவுரை என்னுடையது. முந்தைய நாள் எனக்கு கடலூரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஒரு புத்தர்சிலை பரிசளித்தார். அதைப் பெற்றதுமே யுவனுக்கு அளிக்கலாம் என தோன்றியது. உடனடியாக அப்படித் தோன்றுவது என்பது ஒரு நிமித்தம். பல புத்தர் ஆலயங்களுக்கு நாங்கள் இருவரும் இணைந்தே சென்றிருக்கிறோம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

என் உரை இறுதியானது. பொதுவாக கருத்தரங்குகளின் முதலுரை, நிறைவுரை இரண்டுக்கும் சில நிபந்தனைகள் உண்டு .இரண்டுமே விரிவாக அமையக்கூடாது. முதலுரை விவாதத்திற்கான புள்ளிகளை தொட்டுக்காட்டவேண்டும், விரித்துரைத்துவிடக்கூடாது. சமயவேல் அதை சிறப்பாகவே செய்தார். நிறைவுரை விவாதித்ததன்மேல் ஒரு முழுமைநோக்கை மட்டும் உருவாக்கவேண்டும், விவாதித்தவற்றை திரும்பச் சொல்லக்கூடாது. அதோடு பேச்சுக்களைக் கேட்டுச் சலித்து அமர்ந்திருப்பவர்களுக்கு மேலும் சலிப்பூட்டவும்கூடாது.

ஒரு புனைகதையாளனாக யுவன் என்னும் ஆளுமையை வரையறைசெய்துகொள்வது எப்படி என்னும் கோணத்தில் பேசினேன். கூடுமானவரை உற்சாகமான சூழலை உருவாக்கும் நோக்குடன் அமைந்த உரை. யுவனைப்பற்றிய சில படிமங்கள் உருவாகி வந்தன. எனக்கு இன்று கருத்துக்களை விட படிமங்களே சிறந்த இலக்கிய விமர்சன கருவிகள் என்று படுகிறது

யுவன் ப்டைப்புக்களின் ஒன்றாத உணர்வுநிலை, கதைகளைச் சிதைத்துச்செல்லும் கூறுமுறை, ஒருங்கிணைந்த பெரிய கதைமாந்தர்கள் இல்லாமல் மானுடரை திரளாகவே முன்வைக்கும் முறை ஆகியவற்றைப்பற்றிய பலகோணங்களிலானான அவதானிப்புக்களை அங்கே பேசியவர்கள் முன்வைத்தனர். அவை அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது அவருடைய படைப்புக்களில் இருக்கும் கலைத்துச்செல்லும் நோக்கு, விலகிச்செல்லும் உளநிலை. அவற்றின் ஊற்றுமுகம் என்ன, அதற்கு இலக்கியத்திலுள்ள இடம் என்ன என்பதை சார்ந்தே என் உரையை அமைத்துக்கொண்டேன்.

 

இது ஆசிரியன் என்னும்  ஆளுமையை புனைவிலிருந்து உருவாக்கிக்கொள்ளும் முயற்சி. அந்த ஆளுமை புனைவுகளால் யுவன் சந்திரசேகரால் உருவாக்கப்படுவதே ஒழிய யுவனின் ஆளுமை அல்ல. அது இப்புனைவெழுத்தாளனாக ஆகும் முறை குறித்த விமர்சன மரபு வேறு. அது வாழ்க்கைவரலாற்று விமர்சனம் என்னும் பேரில் தனியாக செயல்படுகிறது. இப்படி ஓர் ஆசிரியனை நாம் உருவாக்கிக்கொள்கையில் அவருடைய அனைத்துப்படைப்புக்களையும் தொகுத்து நோக்க ஒரு பொதுச்சரடைக் கண்டடைகிறோம்.

நண்பர் பா.வெங்கடேசனை பார்த்தேன். அறையில் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். சமயவேல், சுரேஷ்குமார இந்திரஜித் என மதுரையின் இலக்கிய முகங்களைச் சந்தித்தது நிறைவளித்தது. முன்பு சரவணன் சந்திரனுடன் என் இல்லத்திற்கு வந்திருந்த இளங்கோவன் என்னும் எழுத்தாளடமும் பேசமுடிந்தது. அன்றும் பேச்சு முடிந்து படுக்க பன்னிரண்டு மணி ஆகியது. நீண்ட ஒற்றை நாள் என தோன்றியது இந்த நாற்பத்திரண்டு மணிநேரமும்

மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு நான் 1991ல் முதல்முறையாக உரையாற்றும்பொருட்டு வந்தேன். அன்று அங்கே மாணவர்களாக இருந்தவர்கள் மனுஷ்யபுத்திரனும் சு.வேணுகோபாலும். மீண்டுமொருமுறை வந்தபோது அங்கே ஸ்டாலின் ராஜாங்கம் மாணவர். பெரும்பாலும் கருத்தரங்குகளில் பேசுவதற்காகவே வந்திருக்கிறேன். அலெக்ஸ் ஏற்பாடு செய்த ஒரு கூட்டமும் அங்கே நிகழ்ந்துள்ளது. இதுவும் ஓர் இனிய நிகழ்ச்சி. இதனூடாக அமெரிக்கன் கல்லூரியை நிறைவாக நினைவுகூரமுடியும் என்று தோன்றியது.

முந்தைய கட்டுரைநீ மதுபகரூ…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40