திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்

திண்டுக்கல் காந்திகிராமம் காந்தியப் பல்கலைக்கு நான் வருவது மூன்றாவது முறை . இன்றைய காந்தி வெளியான நாட்களில் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் ஆதரவில் மார்க்கண்டன் அவர்களால் அழைக்கப்பட்டு உரையாற்ற வந்திருக்கிறேன். அதற்கு முன்னர் 2004ல் பார்வையாளனாக வந்தேன். இம்முறை குக்கூ நண்பர்களின் அழைப்பு. கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘ ‘ மற்றும் நண்பர் பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதி என் தளத்தில் வெளியான இன்று காந்தியவழியில் பெரும்பணியாற்றிய ஆளுமைகளைப் பற்றிய நூலான ‘இன்றைய காந்திகள்’ ஆகிய இருநூல்களின் வெளியீட்டுவிழா.

நான் 17 ஆம் தேதியே ரயிலில் திண்டுக்கல் வந்துவிட்டேன். ஸ்டாலின் வந்து அழைத்துச்சென்றார். காந்திகிராமம் விருந்தினர் அறையில் தங்கினேன். காலையில் எழுந்து டீ குடிக்க சாலைக்குச் செல்லும்போது பாலா சென்னையில் இருந்து பேருந்தில் வந்து நின்றிருந்தார்.முதல்முறையாக திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் மழையில் மண் குளிர்ந்திருப்பதைப் பார்க்கிறேன்.ஒரே மழையிலேயே மரங்களின் பசுமையின் ஒளி மிகுந்துவிடுகிறது. பறவைக்குரலகள் மாறிவிடுகின்றன

பார்த்த கணம் முதல் பாலாவுடன் பேச ஆரம்பித்துவிட்டேன். பாலா காந்திய இயக்கங்களைப் பற்றி ஒரு தலைமைத் தொழில் நிர்வாகியின் கோணத்தில் பேசினார். உலகின் மிக வெற்றிகரமான, மிகப்பெரிய முதலீடும் நிதிச்சுழற்சியும் கொண்ட தொழில் நிறுவனங்களில் முதல்சில இடங்களுக்குள் இந்தியாவில் காந்திய அடிப்படையில் செயல்படும் கூட்டுறவு அமைப்புக்கள் பல உள்ளன என்றார். அவை லாபகரமானவை என்பது மட்டுமல்ல, லாபம் நேரடியாக அடித்தள மக்களுக்குச் செல்லும்வகையில் அமைந்தவையும்கூட. அவையே  இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் காலகட்டத்தில் இங்கே நிலவிய கொடிய வறுமையை வென்று நாம் இன்றைய நிலையை அடைய அடித்தளமாக அமைந்தவை. அப்படி பத்து நிறுவனங்களைப்பற்றி அடுத்த நூலை எழுதும்படி கேட்டுக்கொண்டேன்.

எட்டரை மணிக்கு ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும், பாரியும், ஈஸ்வரமூர்த்தியும், திருப்பூர் ராஜமாணிக்கமும், நாமக்கல்லில் இருந்து வரதராஜனும் மகேஷும் வந்துவிட்டார்கள். ஈரோட்டில் இருந்து விஜயராகவன் வந்திருந்தார். குக்கூ சிவராஜ் அவர்களை நீண்ட இடைவேளைக்குப்பின் நேரில் பார்த்தேன். குக்கூ நண்பர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். காந்திய அமைப்பின் விழா என்றால் முதியவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் சில காந்தியர்களுக்கே இருந்திருக்கும். கூச்சலும் சிரிப்புமாக இளைஞர்களால் ஆனதாக இருந்தது கூட்டம்

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனை நான் 1988 ல் பார்த்திருக்கிறேன். முப்பதாண்டுகள் கடந்தும் பெரிய வேறுபாடு இல்லாமல் இருக்கிறார். சலிப்பே இல்லாதா செயலூக்கம். சமூகக் கோபம், அதேசமயம் கசப்புகளும் விரக்தியும் இல்லை. செய்துவிடலாம் என்னும் உளநிலை அவ்வண்ணமே நீடிக்கிறது.அவர்களைச் சூழ்ந்து ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது இன்று. முப்பது வயதுக்குள் இருப்பவர்கள். நேர்நிலை நோக்கு கொண்ட இலட்சியவாதிகள். வாழ்க்கையை தங்கள் இலட்சியங்களின்படி அமைத்துக்கொண்டவர்கள். சட்டையை உரித்து உரித்து புதுப்பிறவி எடுக்கும் நாகம் போல அவர் தன் சொற்களைக்கேட்டு உடன்வரும் நான்காவது தலைமுறையை வந்தடைந்துவிட்டிருக்கிறார்

வரலாற்றில் இடம்பெறும் மானுடர் சிலரே. அவர்களை வரலாற்றில் நிலைநிறுத்தும் அந்த பண்புக்கூறு காலப்போக்கில் திரண்டு ஒரு கட்டத்தில் அவர்களாகவே ஆகிவிடுகிறது. அவர்களின் உடலே அவர்களாகிவிடுகிறது. அவர்கள் ஆலயக்கருவறைச் சிலைபோல ஒரு படிமமாக ஆகிவிடுகிறார்கள். கிருஷ்ணம்மாளின் தோற்றமே இன்று அவர் எண்ணுவது இயல்வது அனைத்தையும் உணர்த்தப்போதுமானது

ஊழியரகத்தின் கூடத்தில் சூழ்ந்திருக்கும் புகைப்படங்களில் கிருஷ்ணம்மாள் அவர்களின் வாழ்க்கை. வரலாற்று மாமனிதர்களுடன் அவர்கள் இருக்கும் காட்சிகள். காந்தி, வினோபா முதல் மார்ட்டின் லூதர்கிங் வரை. அவரே ஒரு வரலாறுதான் . மனிதர்கள் அனைவருமே வரலாற்றில்தான் இருக்கிறார்கள். ஆனால் சிலருடைய விசையும் ஈர்ப்பும் பலமடங்கு. அவர்கள்மேல் மேலும் மேலும் மானுடர் வந்து சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒரு வரலாற்று அசைவாக மாறிவிடுகிறார்கள்.

அவர்கள் இருவகை. எதிர்மறைப்பண்பு கொண்டவர்கள், அழிவுவிசைகள் கூட இதேயளவுக்கு ஆற்றல் கொண்டவர்களாக, வரலாற்று மனிதர்களாக திகழ்வார்கள். அமெரிக்காவின் அட்லாண்டாவில் மானுட உரிமைப்போராட்டம் பற்றிய சர்வதேச அருங்காட்சியகத்தில் உலகின் மாபெரும் மானுட உரிமை அழிப்பாளர்களின் அட்டைவெட்டுச் சிலைகளைப் பார்த்தேன். ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட், இடி அமீன் எனச்செல்லும் அப்பட்டியலில் அத்தனைபேரும் வரலாற்று விசைகளே. அவர்கள் உருவாக்கிய அழிவால் அவர்களை நாம் எதிர்மறை விசை என நினைக்கிறோம். வரலாற்றின் நெசவில் அவர்களும் சரடுகள் அவ்வளவுதான்

இன்னொன்று, நான் இதை திரும்பத்திரும்ப எழுதிவருகிறேன். இளம் வயதில் இலட்சியவாதம் நம்மை வந்தடைகிறது. இலட்சியநோக்கு சூழ இருக்கும் சமூகத்தீங்குகள், அநீதிகள், ஒழுங்கின்மைகள் குறித்த ஒவ்வாமையை உருவாக்குகிறது. ஆகவேதான் நாம் செயல்படத்தொடங்குகிறோம். எதிர்ப்பு இன்றி செயல்பாடு இல்லை. ஆனால் அந்த எதிர்ப்பு கருதுகோள்கள் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும். நாம் எதிர்ப்பனவற்றை விட மேலானவர்களாக நம்மை நாமே நிலைநிறுத்திக்கொள்வதாக இருக்கவேண்டும் . அதுவே காந்திய வழி

நம் எதிர்ப்பு நம்மிடம் சினமாக கசப்பாக திரளும் என்றால், நம் செயல்பாடுகள் எதிர்மறைத்தன்மை கொண்டவையாக ஆகும். நாம் வசைபாடிகளாக மாறுவோம். ஒரு கட்டத்தில் செயலுக்குரிய நம்பிக்கையும் ஊக்கமும் இல்லாமலாகும். வெறும் வசைபாடிகளாக மட்டுமே உருவெடுப்போம்.  காலப்போக்கில் நாம் முழுக்கசப்பு நிறைந்தவர்களாக ஆவோம். முற்றாக நம்பிக்கையிழந்து வெறுமையில் சென்றமைவோம். இளையதலைமுறை வாழ்க்கையைக் கொண்டாடுவது. ஆகவே அவர்கள் கசப்புகளை ஏற்பதில்லை. நம் வசைபாடலில் ஒரு ஆற்றல் இருக்கும்வரை அவர்களில் எதிர்மறை நோக்கு உடையவர்கள் நம்முடன் இருப்பார்கள்.பின்னர் விலகிச்செல்வார்கள். நாம்  கைவிடப்பட்டவர்களாக ஆவோம்.

பெரும்பாலும் மார்க்ஸியர்கள் அவ்வாறு ஆகிவிட்டிருப்பதை, வெறுமையின் தனிமையின் சிற்றறைக்குள் முதுமையில் சிக்குண்டிருப்பதை கண்டிருக்கிறேன். காந்தியர்களிடம் பெரும்பாலும் அந்த வெறுமை திரண்டிருப்பதில்லை. ஒரே சமயம் மூத்த மார்க்ஸியர் ஒருவரையும் காந்தியர் ஒருவரையும் சந்தித்துவிட்டு நித்யாவிடம் அதைப்பற்றி பேசியிருக்கிறேன். இந்த செயல்முறை வேறுபாட்டை நித்யா சுட்டிக்காட்டினார். கசப்பு வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான எச்செயல்பாடும் வெறுமையையே எஞ்சவைக்கும். எதிர்ப்புச்செயல்பாடும்கூட நம்பிக்கையின் கனிவின் அடிப்படையிலேயே நிகழ்ந்தாகவேண்டும்.

இந்நிகழ்வில் வாடிப்பட்டியைச் சேர்ந்த பொன்னுத்தாய் அம்மாவின் பள்ளி கௌரவிக்கப்பட்டது. அவருடைய பேரர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. அவர்களில் ஒருவர், அரசன், ரவி கே சந்திரனின் உதவியாளர், இப்போது தனியாகப் படம் செய்யத் தொடங்கியிருக்கிறார். முன்பு அலெக்ஸுடன் என் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார்.[பொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது] பொன்னுத்தாய் அம்மாள் இன்னொரு கிருஷ்ணம்மாள். அவரது பள்ளி பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் அவருடைய நூலில் எழுதியிருக்கிறார்.நம் நாயகர்களின் கதைகள்

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனைச் சந்தித்தது எ நம்பிக்கைகளை மீண்டும் உறுதிசெய்தது. படைப்பூக்கம் கொண்ட செயல்பாடு, ஒவ்வொரு நாளையும் கொண்டாட்டமாக ஆக்கிக்கொள்ளும் செயல்தளம் வழியாக மட்டுமே அர்த்தமுள்ள பொதுவாழ்க்கை அமைய முடியும். இன்றும் அவரிடம் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது அதனால்தான். இந்நாள் என் நம்பிக்கைகளையும் உறுதிசெய்கிறது என எண்ணிக்கொண்டேன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் ‘இன்றைய காந்திகள்’ நூலை பாலா வெளியிட்டார். ‘லாரா கோப்பா’ எழுதிய கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறான ’சுதந்திரத்தின் நிறம்’ நூலை நான் வெளியிட்டேன். நான் காந்தியின் பங்களிப்பைப்பற்றிப் பேசினேன். நிறையப்பேசிய பின்னரும் புதிய அனுபவங்கள் வழியாகப் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. பேச்சினூடாகவே சிலவற்றைக் கண்டடையவும் இயல்கிறது.

விழாவுக்குப்பின் குக்கூ நண்பர்கள் உட்பட காந்திய இளைஞர்களைச் சந்திப்பது உள்ளம் நிறையச்செய்யும் அனுபவமாக அமைந்தது. குறிப்பாக திருப்பரங்குன்றம் சந்திப்பில் கண்ட பல குக்கூ நண்பர்களுக்கு இளமகுழந்தைகள் பிறந்திருக்கின்றன. குழந்தைகளைக் கையில் வாங்குவது ஒரு பெரும்பரவசம். ஒரு பக்கம் தொண்ணூறு அகவை கடந்த மாபெரும் இலட்சியவாதி. மறுபக்கம் பிறந்து நான்குமாதமான குழந்தை. நடுவே ஒரு மின்கம்பி போல நான். என் வழியாக கடந்துசெல்லும் ஆற்றலை நானே கைநடுங்க உணர்ந்தேன்.

***

புகைப்படத்தொகுப்பு

முந்தைய கட்டுரைவாசல்பூதம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்