ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி

 

இரு காந்திகள்.

இன்றைய காந்திகள்

சுதந்திரத்தின் நிறம்

காந்திகிராம் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவின் ஊழியரகத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே சென்று வருகிறோம். ஊழியரகம் காந்திகிராம் பல்கலைக் கழகத்துக்கும் முன்னரே கட்டப்பட்டது. ஜெகந்நாதனும், இந்தியா வந்து குடியேறி தன்னலமற்ற காந்தியப் பணியாற்றிய அமெரிக்க மிசனரியான கெய்த்தானும் சேர்ந்து அருகிலிருந்த மலையிலிருந்து பெரும் கற்களைத் தாமே சுமந்து வந்து கட்டிய கட்டிடம் இது. கஃபார் கான் முதல் மார்டின் லூதர் கிங் வரை பலரும் வந்து சென்ற இடம். தமிழகத்தின் சர்வோதய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் களமாக இருந்த இடம். இன்றும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து காந்தி மீதும், கிருஷ்ணம்மாள் குடும்பத்தின்மீதும் பற்று கொண்ட பலரும் தொடர்ந்து வந்து செல்லும் இடம். சுதந்திரத்தின் நிறம் என்று இப்புத்தகத்தின் மூலத்தை இத்தாலிய மொழியில் எழுதிய லாரா கோப்பா அத்தகைய ஒருவர். இதை ஆங்கிலத்தில் பதிப்பித்த டேவிட் ஆல்பர்ட் இன்னொருவர். டேவிட் கடந்த நாற்பது ஆண்டுகளாக அனேகமாக ஒவ்வொரு ஆண்டும் இவர்களைக் காண இந்தியா வந்துகொண்டிருப்பவர். அவர்களது மூத்த மகன் என்றுதான் எல்லாக் கூட்டங்களிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்.

 

ஆண்டுதோறும் ஜெகந்நாதன் நினைவுநாளன்று நடைபெறும் சர்வோதய தினத்தன்று நாகப்பட்டினம் பகுதியிலிருந்து வரும் கிராமத்து மக்கள் நிறைந்திருக்க ஜெகந்நாதன் விருதுகள் வழங்கப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்கள் குக்கூ சிவராஜ், தன்னாட்சி நந்தக்குமார் ஆகியோருக்கும் ராஜேந்திரன், சுந்தரராஜன் போன்ற மூத்த சர்வோதய ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. அப்போதுதான் குக்கூ இளைஞர்கள் பலரும் முதன்முதலாக ஊழியரகத்துக்கு வந்தனர். அவர்க

ளை அழைப்பதில் நானும் ஒரு சிறுபங்காற்றினேன் என்பதை இன்று நிறைவுடன் நினைத்துக்கொள்கிறேன்.

 

 

நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவின் போது குக்கூவோடு இணைந்து பணி செய்யும் இளைஞர்களும் எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களும் வாசகர்களும் ஊழியரகத்தை நிறைத்திருந்தனர். பொதுவாக அமைதியாக இருக்கும் ஊழியரகம் நேற்று இளமைத் துள்ளலுடன் காணப்பட்டது. கரவொலிகளும் சீழ்க்கையொலியும் சிரிப்பொலியும் கண்ணீரும் எனப் புதுப்பொலிவுடன் விளங்கியது. ஜெயமோகன் உரையும் சிறப்பாக அமைந்தது. நண்பர் பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ நூலை வெளியிடவும் இதைவிடப் பொருத்தமான இடம் அமைந்திருக்கமுடியாது.

 

‘குக்கூ ஆசிரமத்துல இருந்து வந்த பசங்க நேத்து என்னமாதிரி வேலை செஞ்சு இந்த இடத்தையெல்லாம் சுத்தப்படுத்திட்டாங்க. நாம அந்தக் காலத்துல வேலை செஞ்ச மாதிரியே இருக்காங்க,’ என்று கிருஷ்ணம்மாள் அம்மா அவரோடு பலகாலம் பணியாற்றியுள்ள சுந்தரராஜன் அவர்களிடம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சொன்னார்.

 

‘செய் அல்லது செத்து மடி’ என்ற காந்தியின் வாசகத்தை அம்மா அடிக்கடி சொல்வார். நாங்கள் சர்வோதய தின நிகழ்ச்சிகளை நடத்துவது எப்படி என்று திட்டமிடும் போதெல்லாம், அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு இறுதியில் எப்போதும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவது குறித்தே பேசுவார். அதற்கு பணம் சேர்க்க வேண்டும், மக்களுக்கு போர்வைகள் சேர்க்கவேண்டும், ஆளுனரைப் பார்க்க வேண்டும், ஆட்சியரைப் பார்க்கவேண்டும், அனுமதியும் நிதியும் வாங்கவேண்டும் என்று உண்மையான செயல்திட்டங்களைப் பற்றியே அவரது கவனம் இருக்கும். நேற்றும் அவரது பேச்சை செய் அல்லது செத்து மடி என்ற ஒற்றை வரியிலேயே அடக்கலாம்.

 

2012ல் அவரை முதன்முதல் சந்தித்தபோது என் கரத்தைப் பற்றிக்கொண்டு வாஞ்சையுடன் பேசினார். இன்றுவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அதே அன்புடன்தான் கரங்களைப் பற்றிக் கொள்கிறார். அவரது குளிர்ந்த ஸ்பரிசம் ஒவ்வொரு முறையும் உடலுள் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது.

 

விடைபெறச் செல்லும் போது உறங்கிவிட்டிருந்தார். அவரது மகள் சத்யா, ‘சொல்லாமல் போய்விட்டால் அம்மா நிச்சயம் வருத்தப்படுவார்,’ என்று கூறி அவரை எழுப்பிவிட்டார். உடனே விழித்து, உறக்கம் கலைந்த சலிப்பு ஒரு கணநேரமும் தோன்றாமல், எழுந்து அமர்ந்து வழியனுப்பினார். ‘நித்யாவும் மகிழ்மலரும் ஏன் வரவில்லை, வாரம் ஒருமுறையேனும் மகிழோடு ஸ்கைப்பில் உரையாட வரவேண்டும், அம்மா கேட்டுக்கொண்டே இருக்கிறார்,’ என்றார் சத்யா அக்கா. நான் மிகவும் மதிக்கும் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி அவர்களது அற்புதமான குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம் என்ற உணர்வுதான் இப்போது மேலோங்குகிறது. இது எங்களுக்கு மட்டும் கிடைக்கும் தனி வரவேற்பல்ல; அவரோடு பழகும் ஒவ்வொருவருக்கும் அவரிடம் கிடைக்கும் அளவற்ற அன்பு. தம்மை நெருங்கிவரும் எல்லாரையும் தமது குடும்பத்தில் ஒருவராய் இணைத்துக் கொள்வதிலும் இவர்கள் காந்தியின் வாரிசுகளாகவே இருக்கிறார்கள்.

 

செயல் தரும் உற்சாகமே அம்மாவை இந்த வயதிலும் ஓடவைக்கிறது. சென்ற ஆண்டு சற்றே உடல்நலம் தளர்ந்திருந்தவர் கஜா புயலுக்குப் பின் மீண்டும் வீடுகள் கட்டும் பணி துரிதமடைந்ததால் துடியாகப் பயணம் செய்யத்தொடங்கிவிட்டார். இத்தனை இளைஞர்களுக்கு அவர் எந்தளவு ஊக்கம் தந்தாரோ அதைவிடப் பன்மடங்கு ஊக்கத்தை அவர்களது உற்சாகத்திலிருந்து அவர் அள்ளியெடுத்திருப்பார் என்பதை உறுதியாகக் கூறுவேன்.

 

இதைச் சாத்தியப்படுத்திய நண்பர் சிவராஜுக்கும் குக்கூ நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். இப்புத்தகமும் இதை வெளியிடும் நிகழ்வை ஒரு திருவிழாவாக்கியதும் அடுத்த தலைமுறைக்கு கிருஷ்ணம்மாவையும் சர்வோதயத்தையும் காந்தியையும் கடத்திச் செல்வதற்குப் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

 

கண்ணன் தண்டபாணி- முகநூலில்

முந்தைய கட்டுரைகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்
அடுத்த கட்டுரைசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்