குருதி- கடிதம்

குருதி [சிறுகதை]

அன்புள்ள ஜெ வணக்கம்.

உங்கள் கதையின் பாத்திரங்கள் உருவமாக சொல்லாக செயலாக உணர்வாக உயிபெற்று வந்து, மனமுடையவர்களா வாழ்ந்து, வாசகனை வாழவைத்துவிட்டு செல்கின்றனர்.

சேத்துக்காட்டார் தனது பேத்திதலையில் கைவைத்து ஆசிர்வதிக்கும்போது அவர் நம்முன் நம்முள் ஒருத்தராக வந்து நின்று மனம்படும் பாட்டை காட்டி தன் இருப்பை நம் மனத்திற்குள் ஆழ நின்று நெஞ்சம் நெகிழவைக்கின்றார்.

எட்டு ஆண்டுகள் காத்திருந்து நாயக்கர் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று நிற்கும்போது அவர் வெறும் கதை மாந்தர் இல்லை. ஓடுக்கப்பட்டு அழுத்தப்படும் மனிதர்களின் முகவரியாய் எழுந்துவரும் தீப்பொறி. மொத்த காட்டையே உண்டு எழுந்து நிற்கும் அக்கினிகாடு. எரியாத மரம்கூட அந்த தீச்சுடர்ப்பட்டு ஒளிர்ந்து எரிமரம் என்று நிற்கும். அவர் அருகில் இருக்கும்போது சுடலை அப்படிதான் ஆகின்றான்.

பஸ்ஸில் போகும்  சுடலை, தன் மாரில் சொட்டும் நீரை தன்கண்ணீர் என்று நினைத்துக்கொள்வதும். அவன் தன் கேவல் ஓலியை வேறு யாருடைய கேவலோ என்று நினைப்பதும் வெறும் கதை பாத்திரத்தின் செயல் அல்ல. நூல் அறுந்து வெட்டிவெளியில் துடிக்கும் பட்டம்போல மனம் அறுந்த மனிதன் வாழ்க்கையின் திசையற்ற நிலையில் சிக்கி தவிக்கும் பரிதாபம்.

குருதி கதை குருதி சிந்துவதைப்பற்றி சொல்வதுபோல் தோன்றினாலும், தன் வழிவந்த குருதி இந்த மண்ணில் நின்று நிலைத்து வாழ்வதைப்பற்றி சொல்கிறது.

சேத்துக்காட்டார் பாத்திரம் வன்மத்தை வஞ்சத்தை துரோகத்தை பழிவாங்குதலை வாழ்தலின் அர்த்தமாக கொள்ளவேண்டும் என்பதுபோல் காட்டினாலும், இந்த மண்ணில் வன்மம் வஞ்சம் துரோகம் பழிவாங்குதலைத்தாண்டி வாழவேண்டும் என்று காட்டுகின்றது. எட்டு ஆண்டுகள் பழிக்கு பழி தீர்க்க காத்திருக்கிறார். ஜெயிலில் தனது வயலில் உழைப்பதுபோலவே உழைக்கிறார். விடுதலைக்கு பின்பு தனியிடத்தில் வாழ்ந்தாலும் சுடலைபோல என்ன வாழ்க்கை எதற்கு வாழ்கிறோம் என்று நினைக்காமல், போதைக்கு அடிமையாகாமல் வாழ்கிறார். சேத்துக்காட்டார் வாழ்தலின் சுவையிலேயே வாழ்கிறார். மற்றவர்கள் வாழவேண்டும் என்றுதான் கொலைசெய்கிறார். அவரை பொறுத்தவரை அவர் செய்தது கொலை இல்லை அறம்.

மண்ணில் பிறந்த எல்லா உயிரும் இறந்துவிடும். இறப்பு என்பது நிச்சம். ஆனால் வாழ்ந்து பார்க்கவேண்டும், அந்த வாழ்க்கை சுவையில் களிக்கவேண்டும் என்பதை  நோக்கமாக கொள்ளவேண்டும் என்று காட்டுகின்றார்.

தக்காளி தோட்டத்திற்கு காவலுக்கு இருந்த பெரியமகன் வெட்டப்பட்ட பின்னும், அழிக்கப்பட்டதுபோக ஒடிந்து கிடக்கும் தக்காளி செடியை எழுப்பி குச்சிவைத்து கட்டி தண்ணீர் பாச்சி  உயிர்ப்பிக்கறதுதான் வாழ்க்கை என்பதை சொல்லாமல் செய்து காட்டுகின்றார்.

பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டிய நேரத்தில் எட்டுவருடம் கழித்து ஏன் சேத்துக்காட்டார் நாயக்கர்களை வெட்டி ஜெயிலுக்குபோகவேண்டும்? இது அறியாமையால் செய்தது இல்லை, ஆணவத்தால் செய்தது இல்லை, ஆசையால் செய்தது இல்லை. மனிததரத்திற்காக செய்தது.

எத்தைனை பெரிய விலங்காக இருந்தாலும் பயம் காட்டினால் ஓடிவிடும். காரணம் எல்லா உயிர்களுக்கு உள்ளும் பயம் இருக்கிறது. பயத்தாலேயே அனைத்து உயிர்களும் அடுத்த உயிர்கள்மீது நம்பிக்கை அற்று, அந்த நம்பிக்கை இன்மையின் காரணத்தால் பயத்தை நீக்குவதாய் நினைத்து, எதிரிகளை உருவாக்கி அந்த எதிரிகளாலும் பயத்தோடேயே வாழ்கின்றது. உயிர்களின் பெரும் பயம் உயிர் பயம். உயிரை  வாங்குவதால் மரணத்தின்மீது பயம். எனவே மரணபயமே பெரும் பயமாக உயிர்களை வதைக்கிறது. சேத்துக்காட்டாருக்கு மரணபயத்தை காட்டிய நாயக்கருக்கு பயந்துகொண்டு சேத்துக்காட்டார் ஓடியிருந்தால் அவரும் விலங்குதான்.   விலங்குகள் எப்போதும் நிலத்தில் இருக்கின்றன. ஆனால் நிலம் அற்று இருக்கின்றன. ஒவ்வொரு பயத்திற்கும் ஓடிகொண்டே இருக்கின்றன. விலங்குபோல் அவர் பயத்திற்காக ஓடாமல், எங்கே இழந்தாரோ  அங்கேயே தேடுகின்றார். எவர் அழித்தனரோ அவரை அழிகின்றார். இந்த ரௌத்திரம், இந்த அஞ்சாமை, மனிதனை விலங்கு தளையில் இருந்து உயர்த்தி மனிததரத்தில் வைக்கிறது.

மனிததரம்,பெரும் பணிவு, பெரும் அன்பு பெரும் கருணைக்கு தடையாக இருக்கும் பேராணவத்திற்கு எதிராக தன் மறுப்பக்கத்தை காட்டியே தீரவேண்டிய நிலையில் உள்ளது. கரியில் இருந்து தீ பிறப்பதுபோல,அந்த மறுப்பக்கத்தின் விலங்கு வேட்டையிலிருந்தே  பெரும்மனித முகம் காட்சிக்கொடுக்கிறது. இல்லை என்றால் பெரும் பணிவு, பெரும் அன்பு, பெரும் கருணை, பெரும் தியாகத்திற்கான அர்த்தங்கள் வரலாறுகள் ஆகாமலே போய்விடும்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. –என்கிறார் திருவள்ளுவர்.

எட்டு ஆண்டுகளாய் காத்துத்கிடந்து சேத்துக்காட்டார் கொலை செய்வதாய் சட்டம் சொல்கிறது. ஆனால் அவர் கொல்வது மனித விலங்கை, மனிதனுக்குள் இருக்கும் அன்பற்ற தன்மையை, வஞ்சத்தை, கொடுமையை, விலங்குதனத்தை. சட்டத்தால் அதை புரிந்துக்கொள்ளமுடியாது. அறம் அதை புரிந்துக்கொள்ளும்.

இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்னால் வீட்டிற்கு வரும் திருமணபத்திரிக்கையின் பின்புறம்  மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீ்ட்டார் உறவினர் வரிசையில் யாராவது ஒருவர் பெயராவது பெரும்நிலக்கிழார் என்ற வாசகத்தோடு இருக்கும். இன்று அது கேம்ப் சிங்கப்பூர் சௌதி துபாய் குவைத் என்று மாறியுள்ளது. பெரும்நிலக்கிழார் என்ற வாசகமே இல்லை என்றுகூட சொல்லலாம்.

பெரும்நிலக்கிழார் என்ற சொல் மாறிவிட்டதே தவிர அந்த தோரணை ஆசை    வேறு வடிவம்பெற்று வெளிப்படுத்த முடியாத பணத்தொகையின் வடிவாக உள்ளது. வீடு மனை வண்டி வாகனம் என்று உள்ளது. பார்க்கிற வீட்டை எல்லாம் வாங்கவேண்டும். கிடைக்கிற மனையை எல்லாம் வாங்கவேண்டும். ஏன் இத்தனை வண்டி வாகனம் என்ற காரணமே தெரியாமல் வாங்கவேண்டும். காரணம் மனிதன் மனிதனை சமமாக உட்காரவிடக்கூடாது என்ற எண்ணதில் அலைகிறான்.

அநாதி காலத்தில் இருந்தே மனிதனிடம் இந்த அங்காரம் இருக்கும்போல. தனக்கு நிகராக தன்னைவிட உயர்ந்தவனாக ஒரு மனிதன் இருந்தால் இவனுடைய அகங்காரம் எங்கோ முனை உடைகிறது. வலி ஏற்படுகிறது. அதற்காகவே மனிதன் தன் அகங்காரத்தின் கூரை தீட்டிக்கொண்டே இருக்கிறான்.  அந்த அங்காரகூரின் கூர்மையை அடுத்தவர்மீது காட்டி அடுத்தவர்களுக்கு ஏற்படும் வலியில் இருந்து தனது கூரின் கூர்மையை கண்டு களிக்கிறான்.

சேத்துக்காட்டார் உழைக்கிறார் உருவாக்குகிறார் அவ்வளவுதான். ஆனால் ஊர் பெரிய மனிதர்களுக்கு ஏன் அது குமச்சளை ஏற்படுத்துகிறது. வெள்ளையும் சொல்லையுமா வந்து சரிக்கு சமமாக உட்கார்ந்துவிடுவானோ என்ற பயத்தால் ஏற்படுகிறது. அது அர்த்தமற்ற பயம்தான். அறியாமை பயம்தான்.அந்த பயத்தை ஆணவத்தை எடுத்து போர்த்திக்கொள்வதன் மூலம் வெளிக்காட்டாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள். தனக்கும் கீழே, தன் காலுக்கும் கீழே மனிதனை வைக்கும் ஆணவத்தின் வெளிப்பாடு.

இது ஏதோ நம் மண்ணில் மட்டும் இருக்கும் வெளிப்பாடு இல்லை. மண் உள்ள இடத்தில் எல்லாம் மனிதன் இப்படிதான் இருக்கிறான்.

இங்கு ஒரு கம்பெனி ஓனர் குழந்தை இல்லாமல் இறந்துபோக அவருடைய தம்பி(ஒரு பாட்னர்) கம்பெனியை வாங்க முயல்கிறார். அவரை வாங்கவிடாமல் மற்றொரு பாட்னர் தடுக்கிறார். இவர் கம்பெனிக்கு சின்னமுதலாளிபோல, தூரத்து உறவு. தம்பி கம்பெனியை வாங்கிவிட்டால் தனக்கு இருக்கும் சின்னமுதளாலி வேலை போய்விடுமே என்ற பயம். பல சிக்கல் பல போராட்டம். நீதி மன்றம் கம்பெனியை விற்று   கம்பெனி ஓனர் மனைவிக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று உறுதியாக கூறியதன்பேரில். ஓனர் தம்பி ஒதுங்கிக்கொள்ள அவருடைய மகன்  கம்பெனியை வாங்குகிறார். வாங்கியவன் சின்ன முதலாளியாக இருந்தவருக்கு சேரவேண்டிய பணத்தை ஒரு ட்ரெலிபேக்கில் அள்ளிவந்து அவர் முன் கொட்டி எண்ணிக்கொள் என்றான். அத்தனையும் ஐந்து ரியால் பத்து ரியால் நோட்டுகள். என்ன ஒரு ஆணவம்.  என்று சின்னமுதலாளி நினைத்து இருப்பார். ஆனால் அவர்தான் அந்த ஆணவத்தை அவனுக்குள் சிறுக சிறுக விதைத்தவர் என்பது அவருக்கு புரிந்திருக்குமா?  அவரால் சில நிமிடங்கள் பேசமுடியவில்லை. பணத்தோடு கம்பெனியை விட்டுப்போனவர் வேறு ஒரு மனிதராக மாறிவிட்டார். அவர் நின்ற நிலம் அவரை விட்டுப்போய்விட்டது. அவர் உட்கார்ந்த இடத்தில் அவருக்கு கீழே நின்றவன் உட்கார்ந்துவிட்டான். காந்தம் தொடும் இரும்பை காந்தமாக்குவதுபோல, ஆணவம் தொடும் மனிதனை ஆணவமாக்குகிறது. கொலை தொடும்மனிதனை கொலைகாரனாக்குகிறது. அறம் செய்ய விரும்பு என்று ஔவை அன்னை சொல்வது எத்தனை உண்மை.

நிலம்தான் எல்லா உயிர்களை பிறப்பிக்கிறது. நிலம்தான் எல்லா உயிர்களையும் விழுங்கிவிடுகிறது.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில் –என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் செய்க பொருளை என்றுதான் சொல்கிறார். ஆனால் மனிதன் பிடுங்குக பொருளை என்று எண்ணிக்கொள்கிறான்.

சேத்துக்காட்டார் கொலைகாரன் ஆனதற்கும், சுடலை குடிகாரன்ஆவதற்கும் அவர்கள் காரணம் இல்லை. சட்டம் அவர்களை அப்படிதான் பார்க்கும். கண்ணால் காண்பதும் பொய். சட்டம் கண்கட்டி நீதி வழங்கினாலும் அது கண்ணால் கண்டதைத்தான் சாட்சியாக ஏற்றுக்கொள்கிறது.

மனிதன் வாழவைப்பது மூலமே மனிதனாகிறான். சேத்துக்காட்டார் தக்காளி செடியை மட்டுமல்ல சுடலையையும் வாழவைக்கிறார். அவர் விவசாயம் செய்யக்கூடியவர் பயிர்வாழ களைபிடுங்குவது தவறில்லை என்று நினைத்திருப்பார். சட்டம் என்ன செய்தான் என்று சாட்சியை நம்புகிறது. அறம் எதற்காக செய்தான் என்று நியதியை நம்புகிறது.

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்.

***

முந்தைய கட்டுரையுவன் என்னும் கதைசொல்லி
அடுத்த கட்டுரைகூடல்நாதனின் தாலாட்டு